ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 22 வெள்ளி

இஸ்ரவேல் புத்திரர் … நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து … பரிபூரணமாய்க் கொடுத்தார்கள் (2நாளா.31:5) என்ற வாக்கைப்போல சத்தியவசன ஊழியத்தின் வானொலி, தொலைகாட்சி ஊழியத்திற்கு ஆதரவாளர் காணிக்கைகளை தாராளமாக மனப்பூர்வமாக ஜெபத்தோடு கொடுத்த ஒவ்வொருவரையும் பரலோக தேவன் நிறைவாய் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

வாழ்வளிக்கும் வார்த்தை

தியானம்: 2022 ஜூலை 22 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 8:1-11

YouTube video

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோவான் 8:11).

“நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே.” நான்கு சொற்கள்தான், ஆனால், நறுக்கென்று இருதயத்தை ஊடுருவிக் குத்துகின்ற சொற்கள். மன்னிப்பளிக்கும் இயேசுவின் நல்வார்த்தைகளை நாம் கிரகித்துக்கொள்வது அவசியம். “நான் நல்லவள் அல்ல என்ற சிந்தனையினால் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் ஒரு விபசாரியும் அல்ல, திருடோ, கொலையோ செய்ததுமில்லை. ஆனால், என் வாழ்க்கை சரியில்லை, நான் தகுதியற்றவள் என்ற எண்ணம் என்னைக் குத்திக்குதறின. எல்லாரும் என்னை வெறுத்து ஒதுக்குவதுபோன்ற ஒருவித பிரமை. “உன் சிருஷ்டிகரைப் புறக்கணித்து வேறு காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தால் அதுவும் விபசாரத்திற்கு ஒப்பானது” என அறிந்திருந்தேன். ஒருநாள், “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்று சொன்ன இயேசுவைத் தேடினேன். அவரது இந்த வார்த்தையை எனதாக்கினேன். அன்று நான் பெற்ற சமாதானம், விடுதலை சொல்லிடமுடியாது. “விபசாரப் பெண்ணுக்கு வாழ்வளித்த அதே ஆண்டவர், அப்படிப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கும் பாத்திரமாக எனக்கும் வாழ்வளித்திருக்கிறார்” என்ற சாட்சிக்காக நாமும் தேவனைத் துதிப்போமா!

விபசாரத்தில் கண்டுபிடிக்கப்படுகிறவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது நியாயப்பிரமாணம். இந்தப் பெண்ணும் பிரமாணத்தின்படி கொல்லப்பட வேண்டியவள்தான். ஆனால், அவளைப்பிடித்து வந்தவர்கள் யார்? தாங்களை பரிசுத்தவான்கள் என்று பெருமைபாராட்டும் வேதபாரகரும் பரிசேயருமே; பொது மக்களும் கூடவே இருந்தனர். இவர்களது நோக்கமேவேறு. “அவர்மேல் குற்றஞ் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு… இயேசுவைச் சோதிக்கும்படி” இந்த திருக்கான அவர்களது தீய சிந்தனையை இயேசு அறிந்திருந்தார்! அக்கூட்டத்திலிருந்த எத்தனைபேர் அவளுடன் பாவத்தில் ஈடுபட்டிருந்தார்களோ நாமறியோம், எனினும், அவளைப் பிடித்தபோது அவளுடனிருந்த ஆண் எங்கே? என்பதை உணர்த்திய ஆண்டவர், இப்பிரச்சனைக்கு அற்புதமாய் தீர்ப்பளித்தார். “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” என்றார். இயேசுவின் இந்த வார்த்தையால் இருதயத்தில் குத்துண்டனர்;. தமது மனச்சாட்சியினாலேயே கடிந்துகொள்ளப்பட்டு போய்விட்டார்கள். இப்போது, கர்த்தர் அவளிடம், “நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே” என்றார்.

பிரியமானவர்களே, தேவவார்த்தை இருதயத்தை ஊடுருவிச் செல்லவல்லது. ஆனால், அதற்கு யார் யார் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள் நிச்சயம் வாழ்வு பெறுவார்கள். பாவிகளை நேசிக்கும் இயேசு பாவத்தை விரும்புவதில்லை. பாவத்தை மன்னித்து வாழ்வளிக்க ஆயத்தமாயிருக்கிறார். இயேசுவின் வார்த்தை எந்த வொரு மனிதனுடைய வாழ்வையும் மாற்றியமைக்க வல்லது. ஒருவரை நாம் நியாயந்தீர்ப்பது இலகு; ஆனால், கர்த்தரோ வாழ்வளிக்கவே வந்தார். அவரை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு பாவியையும் அவர் தள்ளிவிடவேமாட்டார்.

ஜெபம்: மன்னிப்பை அருளும் தேவனே, உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய என்னை அர்ப்பணிக்கின்றேன். இயேசுவே, என்னை மன்னித்து புதுவாழ்வு தந்தருளும். ஆமென்.