வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 1 வெள்ளி

நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே (ரோமர் 8:37).

பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் (எரே. 1:8).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 21-23 | மாலை: அப்போஸ்தலர் 7:41-60

ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 1 வெள்ளி

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள் (கொலோசெயர் 4:2).

…உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும் (ஏசா. 58:8) நம்முடைய பெலனாகிய கர்த்தர் இப்புதிய மாதத்தை ஆசீர்வதித்து தரவும் கைகளின் பிரயாசங்களில் கூடஇருந்து வழிநடத்தவும் நமது குடும்பத்திலும் தேசத்திலும் தேவசமாதானம் நிலைத்திருப்பதற்கும் ஜெபிப்போம்.

யார் மறந்தாலும்…

தியானம்: 2022 ஜூலை 1 வெள்ளி | வேத வாசிப்பு: ஏசாயா 51:1-16

YouTube video

“…நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15).

கடந்த மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்து போஷித்து வழிநடத்தின தேவனை ஸ்தோத்தரிப்போம். “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்” என்ற வாக்கின்படி இந்த புதிய மாதம் முழுவதும் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துவார்.

பிரியமானவர்களே, வாழ்க்கையில் துன்ப துயரங்கள் அதிகரிக்கும்போது, சூழ்நிலைகள் மாறும்போதும் தனிமை ஆட்கொள்ளும்போதும் அல்லது இழப்புகள் ஏற்படும்போதும் யாராவது நம்மைப் பார்த்து, “நீ பயப்படாதே. நான் உன்னை மறப்பதில்லை. எந்தச் சூழ்நிலையிலும், எந்தத் துன்பவேளையிலும் உன் அருகில் இருந்து உதவி செய்வேன்” என்று கூறினால் என்ன செய்வோம்? அவர்களை நம்புவோம்; உள்ளத்தைத் திறந்து அவர்களோடு பேசுவோம் அல்லவா!

பலவிதமான சோதனைகளாலும் வேதனைகளாலும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வாலிப சகோதரனைப்பார்த்து, ஒரு தேவ ஊழியன், “தம்பி பயப்படாதே, எந்தவேளையிலும் நான் உன்னோடுகூட இருந்து உனக்கு உதவி செய்வேன்” என்று கூறி, அவனைக் கவனித்து வந்தார். ஆனால், சடுதியாக அந்த தேவஊழியன் வெளிநாடு செல்லவேண்டி வந்தது. இதையறிந்த வாலிபன் மிகவும் துக்கப்பட்டான். பலவழிகளிலும் உடைபட்ட அவன் உள்ளம் இன்னும் அதிக வேதனையால் நிறைந்தது. ‘வெளிநாடு சென்ற இந்த ஊழியன் என்னை மறந்துவிடுவாரோ’ என்று ஏங்கி அழ ஆரம்பித்தான். இதை அறிந்த அந்த ஊழியன் அவனை அழைத்து, “தம்பி, நீ இன்னுமா என்னை நம்பவில்லை. பயப்படாதே, நான் எங்கே இருந்தாலும் ‘உன்னை மறப்பதில்லை’ உன்னோடு என் தொடர்பு எப்போதும் இருக்கும் என்று ஆறுதல் கூறிச்சென்றுவிட்டார். நாட்கள் நகர்ந்தன. அவர் கூறியதுபோலவே, கடிதத் தொடர்புகொண்டார். நாட்கள் நகர்ந்தன. ஆனால், முன்புபோல கடிதங்கள் வர வில்லை. இறுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் வேதனையடைந்த அந்த வாலிபன் ஒருநாள், ‘இவ்வுலகிலே யாரைத்தான் நம்புவது? என்னை மறக்காமல் உதவி செய்ய இவ்வுலகிலே யாரும் உண்டோ?’ என்ற கேள்வியோடு, கண்ணீரோடு ஆலயத்தில் அமர்ந்திருந்தவேளை, தேவன் அவனோடு பேச ஆரம்பித்தார். அந்த நாளில் அவனுக்குக் கிடைத்த வாக்குத்தத்தம் “நான்; உன்னை மறப்பதில்லை” என்பதே. வாக்குத்தத்தத்தை இறுகப்பற்றிக்கொண்டு, கர்த்தருக்குள் வளர ஆரம்பித்தான். நாட்கள் செல்லச்செல்ல, வாக்குமாறாத கர்த்தர் அவன் அறியாத அநேகரை எழுப்பி, இக்கட்டுகள், கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்திலுமிருந்து அவனை விடுவித்தார். எத்தனை மகிழ்ச்சி!

தேவபிள்ளையே, கலங்காதே. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் தந்து தேவன் உன்னைத் தாங்குவார். மனிதன் உன்னை மறந்து விடலாம். ஆனால், தேவன் மறப்பதில்லை. எப்போதும் உன் அருகிலேயே இருப்பார். ஆகவே அவரையேப் பற்றிக்கொண்டு, உன் உள்ளத்தை அவரிடம் ஊற்றிவிடு.

ஜெபம்: யார் மறந்தாலும், என்னை மறவாது, இறுதிவரை என்னைத் தாங்கி வழிநடத்தும் என் ஆண்டவரே, உம்மை நன்றியோடு துதிக்கிறேன். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்ட் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விதழைத் தயாரித்து அனுப்பிவைப்பதற்கு தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். தினசரி தியானங்களை தியானபுத்தகத்தில் மட்டுமல்லாமல் சத்தியவசன இணையதளம், வாட்ஸ் ஆப், Youtube (Audio version) ஆகியவற்றிலும் வெளியிட்டு வருகிறோம். இதன்வாயிலாக அநேகர் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைந்து வருகின்றனர். இத்தியானங்களை தங்கள் உறவினர், சபை விசுவாசிகள், குடும்ப நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம்.

இப்புதிய கல்வியாண்டில் பிரவேசித்திருக்கும் சத்தியவசன பங்காளர்கள், சந்தாதாரர்கள், வாசகர்கள் குடும்பத்தின் பிள்ளைகளுக்காகவும் மேற்படிப்பில் இணைவதற்காக பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிற பிள்ளைகளுக்காகவும் தேவனிடத்தில் பாரத்தோடு ஜெபிக்கிறோம். தேவன்தாமே பிள்ளைகளது படிப்பின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்துவார். தங்களது ஜெப விண்ணப்பங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறீர்கள். உங்களுக்காக பாரத்தோடு ஜெபிக்கிறோம். தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு அநேக ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் அளித்து வருகிறதை அறிந்தும் ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம்.

இவ்விதழில் ஜூலை மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், ஆகஸ்ட் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். நாம் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் வளர இத்தியானங்கள் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிகாலை வேளையில்… பகுதியில் வெளிவந்த Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய செய்திகள் முடிவடைந்துள்ளது. தற்போது Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து அளித்துள்ள தியான செய்தியானது இனி தொடர்ந்து வெளிவரும். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதுகிற தேவபிள்ளைகளுக்கு ஆண்டவர் நல்ல சுகம் பெலன் ஆரோக்கியத்தைத் தந்து, கிருபை வரங்களினால் நிரப்பி அநேகமாயிரமான மக்களுக்கு பிரயோஜனமாக எடுத்து பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.

கே.ப.ஆபிரகாம்

சாத்தானை முறியடிப்போம்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்ட் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 7:1-21


அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை … என்றது (ஆதியாகமம் 3:4).


தேவன் தாம் உருவாக்கின நம்முடைய ஆதி பெற்றோரை ஏதேன் என்னும் ஓர் அழகிய தோட்டத்தில் வைத்தார். அங்கே அவர்களுடைய சகல தேவைகளும் சந்திக்கப்பட்டன. தேவனோடு ஐக்கியம் கொள்ளவும், உறவாடவும் அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தன. எப்பொழுதும் எதிர்த்து நிற்கும் எதிரியான சாத்தானும் அவர்களைத் தாக்குவதற்கு ஆயத்தமானாான். இந்த நிகழ்விலிருந்து அவனைத் தோற்கடிக்கத் தேவையான அறிவுரைகளைப் பெற்றுக்கொள்கிறோம்.

சாத்தானுக்கு இடம் கொடாதிருங்கள்:

ஏதேன் தோட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது, ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பு (2:15), அதாவது அவன் அதனைப் பாதுகாக்கவேண்டும். “ஜீவ விருட்சத்துக்குப்போம் வழியைக் காவல் செய்ய” என்ற வசனத்தில் உள்ள “காவல்” என்ற சொல்லே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதாம் தன் மனைவியுடன் இல்லாத வேளையிலே பிசாசானவன் எளிதாக ஏவாளைக் குறி வைத்துவிட்டான். “பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என்று எபேசியர் 4:27 நம்மை எச்சரிக்கின்றது. ஒரு சிறிய இடுக்கு கிடைத்தாலும் அவன் அதனூடாக நுழைந்து ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிடுவான். இன்றும்கூட அவனது கூட்டாளிகள் இரகசியமாக நம் எண்ணங்களில் நுழைந்து தொல்லைகள் தருகின்றனர் (2 தீமோ.3:6;யூதா-4). தேவையற்ற இச்சைகளை உருவாக்கிக் கொள்வதோ அல்லது இரக்கமற்ற எண்ணங்களோ தேவனுடைய சித்தத்தைச் செய்ய மறுப்பதற்கு இடமளித்துவிடும்.

சாத்தானின் சலுகைகளுக்கு மயங்காதேயுங்கள்:

பிசாசானவன் ஒரு எத்தன்; தனது இயற்கையான உருவத்தை வெளியே காட்டாத வேஷக்காரன். “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வான்” (2 கொரி.11:14) நம்மை வழி விலகச் செய்வான். தேவனுடைய வார்த்தைக்கு சந்தேகக் கேள்விகள் எழுப்பும்பொழுதும் வேத எழுத்துக்களின் ஆதாரத்தை மறுப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்தும்பொழுதும் சாத்தான் கிரியை செய்கிறான் என்று நாம் உறுதியாய்க் கூறமுடியும். நம்மையும் அவன் பார்த்து “தேவன் சொன்னது உண்டோ?” என்று தேவனுடைய வார்த்தையில் சந்தேக வினா எழுப்புவான்; பின்னர் தேவவார்த்தையை மறுதலிப்பான். பின்னர் தனது பொய்யை அதில் புகுத்துவான். ஆனால் நாமோ, “ஆம் தேவன் அவ்வாறுதான் சொன்னார்; நான் அதை மதிக்கிறேன்” என்று கூறவேண்டும். உடனடியாக தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணி அவரது ஞானத்தைத் தேடவேண்டும். நாம் அறிந்த வேதவாக்கியங்களை அவர் நமக்கு நினைவூட்டுவார். எனவே சாத்தானை எதிர்க்க ஆவியின் பட்டயத்தை நாம் உபயோகிக்க முடியும். பிசாசு இயேசுவை சோதித்தபொழுது அவரும் வேத வசனத்தையே பயன்படுத்தினார் (எபே.6:17; மத். 4:1-11). எனவே நம் இருதயத்தில் தேவ வார்த்தையை வைத்திருத்தல் மிக அவசியம்; அப்பொழுது அவனை நிச்சயமாக நாம் மேற்கொள்ள முடியும் (சங். 119:11).

தேவன் அருளிய ஈவுகளை எண்ணிப் பாருங்கள்:

தேவன் இதுவரை தராத ஒன்றை நமக்குத் தருவதாக சில சலுகைகளை அறிவிப்பதே சாத்தானுடைய சோதனையாகும். இயேசுவை பிசாசு சோதிக்கும்பொழுது, “நீர் அவருடைய நேச குமாரன் என்று தேவன் சொன்னார் அல்லவா? அவர் உம்மை நேசித்தால் நீர் ஏன் பசியாயிருக்கவேண்டும்” என்று ஆலோசனை கூறினான். சோதனைகளுக்கு எதிரான எச்சரிக்கைகளை யாக்கோபு 1:12-15 இல் நாம் வாசிக்கலாம். … சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

இதனைத் தொடர்ந்து நாம் தேவனு டைய நன்மையும் பரிபூரணமான ஈவுகளைப் பெற்றவர்கள் என்பதை நினைவூட் டிக்கொள்ள வேண்டும் (வசனம் 16-18).

… நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்.

பரலோகப்பிதாவின் சிறப்பான ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக சாத்தான் மிக மலிவான நன்மைகளை அளிப்பதே அவன் அளிக்கும் சோதனை. இயேசு பசியாறுவதற்கு அங்குள்ள கல்லுகளை அப்பங்களாக மாற்றக் கோரினான். ஆனால் இயேசுவோ அதைவிட ஊட்டச் சத்துமிக்க ஜீவஅப்பமான தேவனுடைய வார்த்தையையே விரும்பினார் (மத். 4:4).

ஏவாள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டாள் என்று 1தீமோத்தேயு 2:14 கூறுகிறது. ஆனால், ஆதாமோ தெரிந்தே பாவஞ்செய்தான்; ஏனெனில் அவன் தன் மனைவியுடன் ஒத்துப்போக விரும்பினான். அவனது பிடிவாதமான கீழ்ப்படியாமையினால் முழுமனுக்குலமும் பாவத்தில் விழுந்து நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானது (ரோமர் 5: 12-21). ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலும் சிலுவை மரணமும் நம்மை ஆக்கினையிலிருந்து இரட்சித்து நம்மை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றியது.

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக்கோபு 4:7).

தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 6:17).

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜூலை – ஆகஸ்ட் 2022)

1

கடந்த மாதம் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் ஆர்வமாக வாசிக்க தூண்டும் வகையில் தியானங்கள் இருந்தது. என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

Mr.Mani, Dindugal.

2

உங்கள் பத்திரிக்கை, காலண்டர் யாவும் கிடைக்கின்றன. மிக்க நன்றி. அண்மை யில் நீங்கள் அனுப்பிய “உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல்” எனும் மிக அருமையான ஆழ்ந்த சத்தியங்களடங்கிய புத்தகம் கிடைத்தது. நாங்கள் மீண்டும் மீண்டும் படிக்கிறோம். பயனுள்ள புத்தகமாக இருக்கிறது.

Mr.P.Vasan, Kanyakumari.

3

ஆமென் … சனிக்கிழமை காலை விடியல் உங்களது பதிவுகள் வெற்றி முழக்க மிடுகிறது. ஆசீர்வாதத்தின் வெளிச்சம் கொள்கிறது. வாழ்த்துக்கள், நன்றிகள், ..பாராட்டுக்கள்.

Bro.G.Antony.

4

Dear Brother in Christ, My best greetings to you all. I’ve just seen the Magazine called everyday with Jesus Sathiyavasanam which has published on 2012 Issue (September). Many readers had given their good reports and your Magazine Sathiyavasanam daily devotional guide which are much helpful to those who are reading. I am thankful to God for this wonderful Communication through these Magazine. God will bless you all abundantly.

Pr.Sarah Grace, Mailaduthurai.

5

Praise the Lord! Thank you very much for promptly sending, Anudinamum Christhudan and Sathiyavasanam, both bimonthly daily devotion and spiritual articles, respectively, which are enlightening our spiritual knowledge. God Bless you and your Ministry.

Bro.William Manoharan, Chennai

6

Dear Brother In Christ, Greetings in the Name of our Lord Savier Jesus Christ. I am receiving your “Anuthinamum Christhuvudan” regularly and benifited spritually. Kindly uphold me in your Prayer.

Mrs.N.Sarah Magadalene, Chennai.