ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 31 புதன்
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன் (சங்.89:1) தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பார்த்து இம்மாதம் முழுவதும் எந்தவொரு குறைவுமில்லாமல் நடத்திவந்த தேவாதிதேவனின் கிருபைகளை எண்ணிப் பாடி மகிமைப்படுத்துவோம்.
சுக்கான் யார் கையில்?
தியானம்: 2022 ஆகஸ்ட் 31 புதன் | வேத வாசிப்பு: யாக்கோபு 3:1-12

கப்பல்களை … நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும் (யாக். 3:4-5).
புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு தாய் தனது பிள்ளைகளுடன் ஒரு சபையில் சேர்ந்துகொண்டாள். பின்பு ஒருநாள் அவளைச் சந்தித்து விசாரித்தபோது, ஆலயத்துக்குப் போவதை நிறுத்திவிட்டதாகக் கூறினாள். “கிறிஸ்தவர்கள் புதிதாகச் சேர்ந்த நம்மை நல்ல வார்த்தைகளால் நடத்துவார்கள் என்ற எண்ணம் தவறாகிவிட்டது” என்று அவள் வேதனைப்பட்டாள். கிறிஸ்துவைப் பிரஸ்தாபப்படுத்தும் அதே நாவு கிறிஸ்துவிடம் வருகிறவர்களைத் திசை திருப்புகிறது என்பது துக்கமல்லவா!
திருச்சபையின் ஆரம்ப நாட்களிலும் மக்கள் இதுபோன்ற பல பிரச்சனைகள் மத்தியில் கடந்து சென்றதாலேயே யாக்கோபு, சிதறியிருந்த பன்னிரண்டு கோத்திரங்களும் அறியும்படி, சொல்லிலும் செயலிலும் கிறிஸ்துவுக்குப் பிரியமாய் வாழுவது எப்படி என்று ஆலோசனை வழங்கினார். அப்போது யாக்கோபு நமது நாவுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து தனது நிருபத்தை எழுதியிருப்பதை நாம் கவனிக்கலாம். நமது சரீரத்தின் அவயவங்களில் மிகவும் சிறியதும், முக்கியமானதுமாகிய, இந்த நாவை ஒரு பெரிய கப்பலின் சிறிய சுக்கானுக்கு ஒப்பிட்டு எழுதியிருப்பதை நாம் வாசிக்கிறோம். கப்பல் எவ்வளவு பெரிதாயிருந்தாலும் கடுங்காற்றில் அடிபட்டாலும் கப்பலின் மாலுமி எங்கே போகவேண்டும் என்று நினைக்கிறானோ, அந்தத் திசைக்குக் கப்பலைத் திருப்ப அவன் உபயோகிப்பது ஒரு சிறிய சுக்கானைத்தான். பெரிய கப்பலைத் திசைதிருப்பப் பயன்படும் சுக்கான் எப்படி மாலுமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அப்படியே நமது வாழ்வின் ஓட்டத்தைத் திசை திருப்பும் சிறிய அவயவமான நாவின் கட்டுப்பாடும் நமது கரத்திலேதான் இருக்கிறது என்பதை யாக்கோபு தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆகவே, பிரியமானவர்களே, நமது நாவில் எழும் வார்த்தைகளைக் குறித்து ஜாக்கிரதையாயிருப்பது எத்தனை அவசியமான ஒன்றாகும்! வார்த்தை ஒருவனை உருவாக்கும். அல்லது, அது அழிக்கும். நாவு ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் வழிநடத்தி ஒன்று சேர்க்கும். அல்லது, ஆத்துமாக்களை கிறிஸ்துவை விட்டு வழிவிலகச் செய்யும். நாவினால் ஒருவனை ஆசீர்வதிக்கவும் முடியும். அல்லது, சபிக்கவும் முடியும். இரண்டையும் ஒரே நாவினால் செய்யமுடியாது.
தேவபிள்ளையே! கிறிஸ்துவுக்குள் வாழுகிறேன், பிறரையும் கிறிஸ்துவண்டை வழிநடத்துகிறேன் என்று கூறுகின்ற நமது நாவு, கட்டுப்பாட்டில் உள்ளதா என்று சிந்திப்போம். தேவனைத் துதிக்கும் அதே நாவு பிறரைச் சபிக்கிறதா? நமது நாவுகளை தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் ஒப்புக்கொடுப்பதே நமக்குப் பாதுகாப்பு!
ஜெபம்: பிதாவே, என் வாழ்க்கைக் கப்பலின் சுக்கானாகிய என் சிறிய நாவை உமது கட்டுப்பாட்டில் இன்றே ஒப்புவிக்கிறேன். நீரே அதை இயக்கும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 30 செவ்வாய்
நியாய பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக. (யோசு. 1:8)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 120-131 | மாலை: 1கொரிந்தியர் 9
ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 30 செவ்வாய்
… அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் (ஏசா.65:24) என்ற வாக்குப்படியே சகலவற்றையும் கேட்டு கவனித்திருக்கிற ஆண்டவர் பலவிதமானத் தேவைகளோடு, எதிர்பார்ப்புகளோடு நீண்ட நாட்களாக ஜெபித்துவருகிற தம்முடைய ஜனத்திற்கு கர்த்தர் மனஉருக்கமாய் இரங்கி அவர்களது தேவைகளைச் சந்தித்திட மனவேண்டுதல்களை நிறைவேற்றிட ஜெபிப்போம்.
பயமுறுத்தலா? பயப்படாதே!
தியானம்: 2022 ஆகஸ்ட் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: தானியேல் 3:13-26

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், …. விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை … (தானியேல் 3:17,18).
இரட்சிப்பின் நற்செய்தியானது உலகெங்கும் அறிவிக்கப்படவேண்டும் என்பது தேவகட்டளை. அந்த நற்செய்தியை அறிவிக்கிறவர்களும், ஏற்றுக்கொள்கிறவர்களும் இன்றும் பல இன்னல்களையும் துன்பங்களையும், சிலசமயம் மரணத்தைக் கூட சந்திக்கவேண்டியதிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தேவனுக்காக வைராக்கியமாக இருப்பதை இந்த உலகம் ஏற்காது.
அன்று தானியேலின் காலத்தில் நடந்ததும் அதுதான். நேபுகாத்நேச்சார் அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான பொற்சிலையைப் பண்ணுவித்து தூரா என்னும் சமபூமியிலே அதை நிறுத்தி, எல்லா மக்களும் அதைப் பணிந்து வணங்கவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். ஆனால், பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படியாக ராஜாவினால் ஏற்படுத்தப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற யூதர்கள் அந்தச் சிலையை விழுந்து வணங்கவில்லை. இது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. ராஜா அவர்களை மறுபடியும் விசாரித்து, மீண்டும் தருணம் கொடுத்தான். மேலும் அவர்கள் சிலையை வணங்காவிட்டால் அவர்கள் எரிகிற அக்கினிக்குள் போடப்படுவார்கள் என்றும் பயமுறுத்தினான். அப்போது அவர்கள் கூறிய பதில்தான் இன்றைய தியான வசனம். இதன் விளைவாக அவர்கள் எரிகிற அக்கினிக்குள் போடப்பட்டார்கள். ஆனால், அவர்களோடு நான்காவது மனுஷனாக தேவசாயலுள்ள ஒருவரும் அக்கினிக்குள் உலா வருவதை ராஜா கண்டு ஆச்சரியப்பட்டான். அக்கினி அவர் களை எதுவுமே செய்யவில்லை. இதைக் கண்ட ராஜா, அவர்களை வெளியே அழைத்து, அவர்களுடைய தேவனே உண்மையுள்ள தேவன் என்று அறிக்கை செய்தான்.
தேவபிள்ளையே! கிறிஸ்துவுக்காய் நாம் நிற்கும்போது இந்த உலகம் நம்மை அழித்துப்போட வகைபார்க்கும்; அதைத் தவிர்க்கமுடியாது. குடும்பத்தில், சமுதாயத்தில், அரசாட்சியில், எப்பக்கத்திலிருந்தும் பயமுறுத்தல் வரத்தான் செய்யும். அதற்காகப் பயப்படவேண்டிய அவசியமில்லை. நாம் ஆராதிக்கிறவரும், சேவிக்கிறவருமான தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், எரிகிற அக்கினியிலிருந்து தமது பிள்ளைகளை சாட்சியாக மீட்டவர், இன்று நம்மைக் கைவிடுவாரா? வாழ்வோ, சாவோ எதுவுமே அவருக்குச் சாட்சியாக வாழும் வாழ்விலிருந்து நம்மை வீழ்த்திப்போட இடமளிக்கக்கூடாது. ஆகவே, தேவனுக்காக வாழ்வதிலோ, நற்செய்தியை எடுத்துக் கூறுவதிலோ ஒருபோதும் பின்வாங்கிவிடாத படி, தேவபெலத்தை நாடி ஜெபிப்போமாக. அக்கினி போன்ற சோதனையிலும் நம்மோடு இருப்பவர் ஆண்டவர்! மரண நேரத்திலும் அவரே நமக்கு அருகில் நிற்பார்!!
ஜெபம்: அன்பின் பிதாவே, எந்தப் பயமுறுத்தல் வந்தாலும், உமக்காக வாழவும் நற்செய்தியை அறிவிப்பதில் பின்வாங்காதிருக்கவும் உமது பெலன் தாரும். ஆமென்.