ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 30 வெள்ளி
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறு உத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர் (சங்.138:3) இவ்வாக்கைப் போலவே இம்மாதத்திலே கர்த்தர் நம்முடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டு, நம்முடைய சரீர பிரகாரமான, ஆவிக்குரிய எல்லா நன்மைகளாலும் நிறைத்து வழிநடத்தினார். முழு உள்ளத்தோடு கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் (மத்தேயு 6:6).
யார் பெரியவர்?
தியானம்: 2022 செப்டம்பர் 30 வெள்ளி | வேத வாசிப்பு: செப்பனியா 3:15-17;ஏசாயா 12:6

இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவரா யிருக்கிறார் (ஏசாயா 12:6).
நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் என் குடும்பத்திலும் கர்த்தர் பெரியவராயிருக்கிறார் என உங்களால் தைரியமாகக் கூறமுடியுமா? யோசுவாவின் வாழ்க்கையில் கர்த்தரே பெரியவராக இருந்தார். அதனால்தான் யோசுவா “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15) என இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக தைரியமாகக் கூறினார்.
இன்றைக்கு நாம் பார்க்கிறோம்; சிலரின் வாழ்க்கையில் பணமே பெரியதாக விளங்குகிறது. பணமே அவர்களை ஆட்சி செய்கிறது. சிலர் வாழ்க்கையில் கல்வி, வேலை, நண்பர்கள் என அவைதான் அவர்களுக்கு பெரிதாக விளங்குகிறது. இதனால்தான் அவர்கள் கர்த்தருக்கு கொடுக்கவேண்டிய நேரங்களையெல்லாம் படிப்பிலும், வேலையிலும், நண்பர்களுடனும் செலவிடுகிறார்கள். கர்த்தரையோ அற்பமாக எண்ணி கர்த்தரின் காரியங்களைப் பின்னாக ஒதுக்கி விடுகிறார்கள்; கர்த்தருக்கு கொடுக்கவேண்டிய கனத்தைக் கொடுக்கத் தவறி விடுகிறார்கள். குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்கு பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டை பண்ணுகிற உங்களை கேட்கிறார்? (மல்கியா 1:6).
அன்பான தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் தனி ஜெபமும், வேத வாசிப்பும் உண்டா? குடும்பமாக சேர்ந்து ஜெபிக்கின்றோமா? கர்த்தரை நமது வாழ்க்கையின் மையத்தில் வைத்து, அவரைக் கனப்படுத்தி, அவருக்குப் பயந்து ஜீவிக்கிறோமா? பிள்ளைகளுக்கு வேதவசனங்களைப் போதிக்கிறோமா? என்பதை நாம் ஆராய்ந்து பார்போம். “என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன். அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்” (ஓசியா 8:12) என கர்த்தர் வேதனையோடு கூறுகிறார். கர்த்தரின் வேதத்தை ஆராய்ந்து அவரின் மகத்துவங்களை அறிந்துகொள்ள வாஞ்சிக்கிறவர்களாக இருக்கவேண்டும். கர்த்தரின் வேதம் நம் வாழ்வின் பிரதானமாக விளங்கவேண்டும். இல்லாவிடில் நாம் அவரை அசட்டை பண்ணுகிறவர்களாக இருப்போம். கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணுகிறவர்கள் அறுப்பண்டு போவதோடு அவர்கள் அக்கிரமம் அவர்கள்மேல் இருக்கும் என்று தேவன் அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை மோசேயின் மூலமாக எச்சரிப்பதை எண்ணாகமம் 15:31இல் வாசிக்கிறோம். அவர் நம் மத்தியிலும் நமது குடும்பத்திலும் வாசம் பண்ண விரும்புகிறார். அதற்கு இடங்கொடுப்போம். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய் (செப்.3:15).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் உம்மையே கனப்படுத்தி உம்மை என் வாழ்க்கையில் பெரியவராக்கிக்கொள்ள எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 29 வியாழன்
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம் (சங்.132:7).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 30,31 | மாலை: எபேசியர் 1
ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 29 வியாழன்
அவருடைய (கர்த்தர்) வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே (ஏசா.42:24) என்ற வாக்குப்படியே கர்த்தருக்கு தங்கள் வாழ்வை ஒப்புக் கொடாமலும், உலககாரியங்களிலே தங்கள் நேரங்களை செலவழித்துப் போடுகிற கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழவும் பாரத்துடன் ஜெபிப்போம்.
எழுதியவை வீண்போகாது!
தியானம்: 2022 செப்டம்பர் 29 வியாழன் | வேத வாசிப்பு: எஸ்தர் 6:1-3,10-12

நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது… (எஸ்றா 4:19).
மரித்துப்போன தாயின் பொருட்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்த வாலிப மகனின் கண்களுக்கு, தாயின் வேதாகமமும் குறிப்பேடும் அகப்பட்டன. அங்கு மிங்கும் கோடிட்டு குறிப்புகள் எழுதப்பட்ட வேதாகமத்தில் 1சாமுவேலின் முதல் இரண்டு அதிகாரங்களில் கோடில்லாத வார்த்தையே காணப்படவில்லை. ஆச்சரியத்தோடு குறிப்பேட்டைத் திறந்த மகனுக்குத் திகைப்புண்டானது. “கர்த்தாவே, பத்து ஆண்டுகளாக ஜெபித்து உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட என் மகனை உமக்கென்று நான் கொடுத்துவிட்டேன். இதை எப்படி என் மகனிடம் தெரிவிப்பேன்? அன்னாள் பாக்கியவதி. நான் யார்?” என்று பெரியதொரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அன்றைய தினமே முழங்காற்படியிட்டு தன்வாழ்வைக் கர்த்தருடைய பணிக்காக ஒப்புக்கொடுத்துவிட்டான் அந்த அன்பு மகன்.
எழுதி வைத்தவற்றைச் சோதித்துப்பார்த்த ஒரு ராஜாவைக் குறித்து நேற்று சிந்தித்தோம். எருசலேமில் வசித்த புறஜாதி மக்கள் எழுதிய மனுவின்படி, அர்தசஷ்டா ராஜா, ராஜாக்களின் நடபடிகள் புத்தகத்தைச் சோதித்துப் பார்த்தான். அதிலே எழுதப்பட்டிருந்தவைகள் மேன்மையான காரியமாக இருந்தாலும், ஆலய வேலையைத் தடுத்து நிறுத்த எண்ணிய மக்களுக்கும், தன் ராஜ்யபாரம் தளர்ந்து விடக்கூடாது என்று எண்ணிய ராஜாவுக்கும், அக்குறிப்புகள் சாதகமாக இருந்தன. பட்டணம் கட்டி எழுப்பப்படுவதற்கோ அது பாதகமாய் அமைந்தது. நன்மையாக எழுதப்பட்டவை தவறான நோக்கத்திற்குப் பயன்பட்டன.
ஆனால், எஸ்தர் நூலின் சம்பவத்திலே, அகஸ்வேரு ராஜாவுக்கு ஒருநாள் நித்திரை வராததால் கால வர்த்தமானங்களின் புஸ்தகத்தைக் கொண்டுவரச் செய்து வாசிப்பித்தான். அதிலே அகாஸ்வேரு ராஜாவின் உயிரைப் பாதுகாத்த மொர்தெகாயைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. இதன்படி, ஆமான் மொர்தெகாயையும் அவனது ஜனங்களையும் அழிப்பதற்குத் திட்டமிட்டது தெரியாமலேயே, மொர்தெகாயைக் கனப்படுத்துவதற்கு ஆமானே தெரிந்தெடுக்கப்பட்டான். ஆம், தேவனின் திட்டங்கள் எத்தனை ஆச்சரியமானது! மொர்தெகாய் செய்த நன்மையான காரியம் எழுதிவைக்கப்பட்டதால் நாட்கள் கடந்தும் அவை மறக்கப்படவில்லை.
அன்பானவர்களே, நாம் செய்கின்ற நற்கிரியைகள் மறக்கப்பட்டுப்போகின்றன என்று கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள். அவை யாவும் தேவ சந்நிதியில் ஞாபக புஸ்தகத்தில் எழுதப்பட்டு நிச்சயம் ஒருநாள் நினைவுகூரப் படும். அதே விதமாக நமக்கு நன்மை செய்கிறவர்களின் விஷயங்களையும், தேவன் நமக்குக் கற்றுத்தரும் பாடங்களையும், நற்காரியங்கள் ஒவ்வொன்றையும் நாமும் எழுதிவைப்போம். அது இன்றில்லாவிட்டாலும் ஒருநாளில் நிச்சயம் யாருக்காவது உதவும்.
ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் செய்கிற நற்கிரியைகளை யாவற்றையும் உமது புஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர். அவைகளை நினைவுகூர்ந்து எங்களை ஆசீர்வதிக்கின்றபடியால் உம்மை துதிக்கிறோம். ஆமென்.