வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 1 வியாழன்

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலாத்தியர் 5:25).

நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர் (சங். 90:2).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 139-144 | மாலை: 1கொரிந்தியர் 11

ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 1 வியாழன்

என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது (சங். 141:2).

…கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார் (ஏசா. 60:19) புதியமாதத்தை காணச்செய்த கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். தேவாதிதேவன் நமக்கு முன்னதாக சென்று பாதைகளைச் செவ்வைப்படுத்தி நடக்கவேண்டிய வழியை நமக்குக் காட்டுமாறு அவரிடத்தில் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

கர்த்தரின் வார்த்தை நிறைவேறும்

தியானம்: 2022 செப்டம்பர் 1 வியாழன் | வேத வாசிப்பு: 2நாளாகமம் 36:10-20

YouTube video

எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி… (எஸ்றா 1:1).

அன்பான அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசகர்களே, இப்புதிய மாதத்திற்குள் கடந்துவர தேவன் கிருபை செய்தபடியால் நம் தேவனைத் துதிப்போம். இந்த புதிய மாதத்திலும் நமது தேவைகள் அனைத்தையும் சந்தித்து நன்மையும் கிருபையும் நம்மைத் தொடர தேவன் கிருபை செய்வார். நீரே அநாதியாய் என்றென்றும் தேவனாயிருக்கிறீர் (சங்.90:2) என்ற வாக்கின்படி தேவன் என்றென்றும் நம்மோடிருந்து வழிநடத்துவார்.

காலாகாலமாக அநேக தேவனுடைய பிள்ளைகள் தமது வாயினாலே கர்த்தருடைய வார்த்தைகளை உரைக்கிறார்கள். அவற்றில் சில நிறைவேறுவதைக் காண்கிறோம். சில ஏன் நிறைவேறாமல் இருக்கின்றன என யோசிக்கிறோம். நிறைவேறாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலசமயம் மனிதருடைய கீழ்ப்படியாமையால் அவை நிறைவேறத் தாமதமாகலாம். சிலசமயம் தேவன் சொல்லாததையும் சிலர் சொல்லுவதற்கும் வாய்ப்புண்டு. எது எப்படியாயினும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாத ஒருகாரியம் உண்டு. அது என்னவென்றால், தேவன் ஒன்று சொன்னால், அவர் தாம் சொன்னதைச் சொன்னபடியே நிச்சயம் நிறைவேற்றுவார். இது வேதசத்தியம்.

யூதேயாவின் கடைசி ராஜாவான சிதேக்கியா ராஜாவைக்குறித்து இன்று வாசித்தோம். இவன் காலத்துப் பிரச்சனை என்னவென்றால், ராஜா தன்னைத் தாழ்த்தவில்லை. ஆசாரியர்களும் ஜனங்களுங்கூடக் கர்த்தருக்கு விரோதமாக நடந்து, எருசலேமின் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். அதனால் அவர்கள் தேவனுடைய சகாயத்தை இழந்ததோடு, கல்தேயருடைய ராஜாவின் கைக்கும் ஒப்புக் கொடுக்கப்பட்டனர். தேசம் பாழானது. பட்டயத்திற்குத் தப்பினவர்கள் சிறைபட்டுப் போனார்கள். சிறைப்பட்டுப்போனவர்கள் பாபிலோனிலே எழுபது வருஷங்கள் இருந்தனர், இவையாவும் எரேமியாவின் வாயினால் ஏற்கனவே உரைக்கப்பட்டதாக இருக்கிறது (எரே.25:1-11). ஆனால் கர்த்தர், இத்துடன் நிறுத்திவிடவில்லை. அந்த எழுபது வருஷங்கள் முடிந்தபின் என்ன நடக்கும் என்பதையும் எரேமியா மூலம் சொல்லி வைத்திருந்தார் (எரே. 29:4-15).

“எழுபது வருஷம் முடிந்த பின்னர் அவர்களைச் சந்தித்து, திரும்பவும் யூதாவுக்கு வரப்பண்ணுவேன்” என்று கர்த்தர் சொல்லியிருந்தார். அப்படியே பாபிலோன் தள்ளப்பட்டு, பெர்சியா ராஜ்யபாரத்தை ஸ்தாபித்த காலத்தில் யூதருக்கு அந்த எழுபது வருஷம் முடிவுக்கு வந்தது. ராஜ்யபாரங்கள் மாறும். ஆனால் கர்த்தருடைய வாக்கு ஒருபோதும் மாறாது. எரேமியா மூலம் கர்த்தர் உரைத்தபடி எழுபது வருஷம் முடிவுக்கு வந்ததும், கர்த்தர் தமது அடுத்த நடபடிக்கையை முன்னெடுக்கவும், தாம் உரைத்தபடியே கோரேஸ் ராஜாவோடு இடைப்பட்டார்.

பிரியமானவர்களே, தேவன் நமக்கு ஒரு வார்த்தையை அருளினால் நாம் அதை முழுமனதோடு நம்பவேண்டும். அது நிறைவேறக் காத்திருக்கவேண்டும். அவ்விதம் காத்திருக்கச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால், அவர் சொன்ன தமது நல் வார்த்தைகளைக் கட்டாயம் செய்து முடிப்பார்.

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் சொன்னதைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் அதை எனக்கு செய்துமுடிப்பீர் என்ற நம்பிக்கையை இன்று தந்தபடியால் ஸ்தோத்திரம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இராஜாதி இராஜாவாக சீக்கிரம் வரப்போகும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வருடத்தில் இந்நாள் வரை நம்மை வழிநடத்தி வந்த தேவனை ஸ்தோத்திரிப்போம். இந்த இதழ் அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக இருக்க தேவனிடத்தில் மன்றாடுகிறோம். இத்தியானங்கள் வாயிலாக தங்கள் வாழ்க்கையிலே அநேகர் நல்ல தீர்மானங்களை எடுக்கவும் ஆவிக்குரிய வளர்ச்சி அடைந்து வருவதையும் அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களினாலே ஆசீர்வாத நன்மைகளைப் பெற்றவர்கள் எங்களோடு பகிர்ந்துகொள்ளவும் அநேகருக்கு இவ்விதழை அறிமுகப்படுத்தி வைக்கவும் அன்பாய் வேண்டுகிறோம்.

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி வாயிலாகவும் அநேகரை சந்திக்க தேவன் கிருபை செய்துவருகிறார். இந்நிகழ்ச்சிகள் தடைகளின்றி நடைபெறுவதற்கு தொலை காட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்க அன்பாய் கேட்கிறோம். YouTube Channel இல் இடம்பெற்றுள்ள தியானங்கள் (Audio Version) மற்றும் தெலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் வாயிலாகவும் ஆசீர்வாதமடைய அழைக்கிறோம்.

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற செய்திகளடங்கிய புத்தக வெளியீடுகளை மறுபதிப்பு செய்துவருகிறோம். இப்பணிக்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட வேண்டுதல் செய்யவும். தேவன் உங்களை ஏவுவாரானால் மனமுவந்து இப்பணிகளைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் செப்டம்பர் மாத தியானங்களை சகோதரி ஜேனட் அவர்கள் எஸ்றா புஸ்தகத்திலிருந்தும், அக்டோபர் மாதத்தில் சகோ.தர்மகுல சிங்கம் அவர்கள் பல்வேறு தலைப்புகளிலும் அநேக ஆவிக்குரிய சத்தியங்களை எழுதியுள்ளார்கள். நம்மை ஜீவ பாதையில் வழிநடத்திச் செல்ல இத்தியானங்கள் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதுகிற தேவ பிள்ளைகளுக்காக ஜெபிக்க மறவாதீர்கள். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தேவன் அவர்களை ஆசீர்வாதமாக உபயோகிக்க நல்ல சுகம் பெலன் ஆரோக்கியத்தைத் தந்து, காத்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.

கே.ப.ஆபிரகாம்

சகோதர அன்பு!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 4:1-10; 1யோவான் 3:11,12

கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான் (ஆதியாகமம் 4:9).

நாம் இவ்வுலகத்தில் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றலாகப் பிறந்தோம். நமக்கு முன்பிறந்த ஒவ்வொரு குழந்தையைப்போலவே நாமும் சிலவற்றை நமது பெற்றோரிடமிருந்து பெற்றிருக்கிறோம். நம்முடைய உடற்கூறு மற்றும் மரபியல் அமைப்புகள் நமது மூதாதை யரிடமிருந்து நம்முடைய ஆண்டவரால் நமக்குத் தரப்பட்டுள்ளன (சங்கீதம் 139: 13-16). ஆனால், நாம் சுபாவப்படி கோபாக்கியினையின் பிள்ளைகளாகப் பிறந்தோம்; நாம் வளரவளர கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாக மாறினோம் (எபே.2:1-3). இயற்கையின்படி நாம் அனைவரும் பாவிகள். நாம் அவ்வாறு இருப்பதாலும் நம்முடைய செயல்களினாலும் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.

ஆனால், நாமும் மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளைகளாக விசுவாசிகளாக ஆபேலைப்போல மாறமுடியும். தான் ஒரு பாவி என்பதை அவன் ஒத்துக்கொண்டு, விசுவாசத்தினாலே இரத்தப் பலியை ஆண்டவருக்குக் கொண்டு வந்தான் (எபி.11:4). நம்முடைய பிறப்பினாலே மனிதவாழ்வைப் பெற்றுக் கொண்டதுபோல, நம்முடைய பாவங்களுக்காகத் தன்னையே பலியாக ஈந்த இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். காயீனுக்கு அந்த விசுவாசம் இல்லை. அவன் தான் ஒரு பாவியென்று அறிக்கையிடவில்லை. எனவே அவன் இரத்தப்பலியைக் கொண்டுவரவில்லை. பூமியிலே தனது சொந்தக் கைகளின் பிரயாசத்தையே கொண்டு வந்தான். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல (எபேசி. 2:8,9).

காயீன் ஒரு விசுவாசியல்ல, அவன் ஏமாற்றுக்காரன், பிசாசின் மகன். “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்” (1யோவான் 3: 11-12). இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்து விட்டு, அதற்கு பதிலாகப் போலியான மார்க்கத்தைப் பின்பற்றுபவனே பிசாசின் மகன். சாத்தானுக்கு ஒரு குடும்பம் உண்டு (ஆதி.3:15). யோவான் ஸ்நானனும் இயேசுவும் பரிசேயர்களை “விரியன் பாம்புகளே” என்று அழைத்தனர். சாத்தான் ஒரு பாம்பு (மத்.3:7-9; 12:34;23:33). இயேசு அவர்களை நரகத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிட்டார் (மத்.23:15). இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் பரிசேயர்களே. அப். பவுலும் கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களை அனுபவித்தார் (2கொரி.11:26; அப்.20:29,31; 1யோவான் 2:18-23). அனுபவமிக்க ஒரு தேவ நற்செய்தியாளர் “ஒருவரையொருவர் நேசிப்பது, விசுவாசிகளின் அடையாளம் என்றால் நம்முடைய உள்ளுர் சபையைச் சார்ந்த எவருமே உண்மையிலேயே மறுபடி பிறந்தவர்கள் அல்லர் என்று நான் எண்ணுகிறேன்” என்றார்.

“என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்ற காயீனின் கேள்விக்கு வருவோம். அதில் ஒரு சிறிய கிண்டல் மறைந்திருக்கிறதல்லவா? அவன் சகோதரன் ஒரு மந்தை மேய்ப்பவன் (ஆதி.4:2), “மந்தையைக் காக்கிறவனுக்கு நான் காவலாளியோ?” என்று அவன் கேட்டிருக்கலாம். இதற்கான பதில் “ஆம்! “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூருவதும், உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவதும் இரு பெரிய கட்டளைகள் என்றும், நம்முடைய உதவி யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களே நமக்குப் பிறன் என்றும் இயேசு கூறியுள்ளார் (லூக்கா 10: 25-37).

மனுக்குலத்தின் உறுப்பினர்களாகிய நாம், ஒருவருக்கொருவர் உதவிட வேண்டும். தேவனுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாகிய நாம் ஒருவரையொருவர் நேசித்து ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யவேண்டும் (கலா.5:13). சாத்தான் பொய்யனும் மனுஷ கொலை பாதகனுமாயிருக்கிறான் (யோவான் 8: 37-45) அவனுடைய பிள்ளையான காயீனும் தகப்பனைப்போலவே இருந்தான்.

“ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” (கலாத்தியர் 6:10).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2022)

1

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு நான் சில வாரங்களாக தொலைகாட்சியில் உங்களது சத்திய வசனம் செய்தியை கேட்டுவருகிறேன். மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது, நெகேமியா புஸ்தகத்திலிருந்து தேவவசனங்களை கேட்கிறோம். நன்றி.

Mr.P.Thiraviam,Tr. Tirunelveli.

2

அன்பார்ந்த சகோதரருக்கு, சென்றமாதத்தில் எனக்கும் எனது மனைவிக்கும் உள்ள பெலவீனங்கள் நீங்க ஜெபத்திற்காக கடிதம் எழுதியிருந்தேன். கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டார். ஆண்டவர் நல்ல சுகம் தந்து அன்றாடக கடமையை செய்யவும் தொழிலை நடத்தவும் பெலப்படுத்தியுள்ளார். தேவாதி தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்.

Mr.Johnson, Coimbatore.

3

கர்த்தருக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு. என் இதயம் நிறைந்த ஸ்தோத்திரம். 2021 நவம்பர்-டிசம்பர் மாத சத்தியவசன பத்திரிக்கையை என்னுடைய நண்பர் ஒருவருடைய இல்லத்தில் படித்து மகிழ்ந்தேன். ஆழமான கருத்துக்களைக் கண்டேன். நன்றி.

Mr.Vannakalai, Chathirapatti.

4

கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, நான் அநேக வருடங்களாக சத்தியவசன பங்காளராக உள்ளேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் உள்ள தினசரி வேதவாசிப்பு அட்டவணையைத் தவறாமல் பின்பற்றி, அநேக வருடங்களாக ஒழுங்காக வேதாகமத்தை வாசித்து முடித்துள்ளேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் சரியான வேளையில் வந்துவிடுகிறது நன்றி.

Mrs.Chandrabai Paul, Coimbatore.

5

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்த கத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இன்னும் நாங்கள் விசுவாசப் பாதையில் நிலைத்து நிற்கவும் அவர் சித்தத்தின்படி நடக்கவும், எங்களுக்காக ஜெபிக்க தயவாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Mrs.M.Samuel, Nellikuppam.