ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 14 புதன்
…கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா.41:17) இன்றைய சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் தேவஆவியானவர் பிரசன்னமாகி ஏறெடுக்கப்படும் ஜெப விண்ணப்பங்களுக்கு தமது சித்தத்தின்படி ஆசீர்வாதமான மறுஉத்தரவுகளை அருளிச் செய்திட பாரத்துடன் ஜெபிபோம்.
ஜனங்களுக்குப் பயந்ததினால்…
தியானம்: 2022 செப்டம்பர் 14 புதன் | வேத வாசிப்பு: தானியேல் 6:10-14

அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால்… (எஸ்றா 3:3).
இலங்கை தேசத்தில், ஒரு மிஷனரி சுவிசேஷப் பணி ஒன்றை ஆரம்பித்த புதிதில், எந்த விதத்திலும் பணியைத் தொடருவதற்கோ, தேவனை ஆராதிப்பதிற்கான கட்டிடம் ஒன்றை அந்த இடத்தில் கட்டுவதற்கோ அனுமதிக்க முடியாது என்று உள்ளுரிலுள்ள பிரமுகர் ஒருவர் சவாலிட்டுச் சென்றாராம். சொன்ன மாதிரியே மாறிமாறி பலவிதமாக எதிர்ப்பைக் காட்டிக்கொண்டேயிருந்தார் அந்த மனிதன். இது ஊழியர்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்தது. இதன் விளைவாக மிஷன் தலைமை அலுவலகமும் பணித்தளத்தை மூடிவிடும்படி சொன்னார்கள். இன்று அதே இடத்தில் ஒரு ஆலயமும் கட்டப்பட்டு, தேவனை ஆராதிக்கிற ஒரு கூட்டமும் கூடிவருகின்றது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
தேவனுடைய வேலையாக, தேவனே அழைத்து நம்மை அனுப்புவாரானால் அங்கே எழும்புகின்ற எதிர்ப்புகளுக்கு நாம் பயப்படலாமா? ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவனுடைய உந்துதலால் கோரேஸ் ராஜாவே அனுமதி கொடுத்திருக்க, எருசலேமுக்குச்சென்ற யூதர்கள், வேலையைச் செய்ய ஆயத்தமாகும்போது அத்தேசத்து ஜனங்களுக்கு பயப்படலாமா? ஏன் பயந்தார்கள் என்பதற்கான விளக்கம் அந்த இடத்தில் கூறப்படாவிட்டாலும், இரண்டு முக்கிய காரியங்களை நாம் இங்கு கவனிக்கவேண்டும். முதலாவது, வேலை செய்ய ஆரம்பிப்பதற்குச் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டதே தவிர, வேலை நிறுத்தப்படவில்லை. அதாவது சற்று சிந்தித்து தாமதித்தே செயற்பட்டார்கள். இரண்டாவது, அவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி தேவனுக்கேற்ற விஷயங்களில் தவறாது செயற்பட்டார்கள். அதிலே அவர்கள் தளர்ந்து போகவில்லை.
தேவனுடைய தீர்க்கதரிசியான தானியேலுடைய வாழ்க்கை நமக்கு ஒரு சவாலாக அமையட்டும். பத்திரத்திற்குக் கையெழுத்து வைக்கப்பட்டது என்று அறிந்தபோதிலும், தான் முன் செய்துவந்தபடியே, மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபித்தார். கர்த்தரை ஆராதிக்கிற விஷயத்திலே எவருக்கும் பயமில்லாமல் செயற்பட்டார். கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அவர் மனுஷருக்குப் பயப்படும் பயமாக மாற்றிப்போடவில்லை. இன்றைக்கும் ஆண்டவரைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்கள் தமது குடும்பத் திற்கும் சமுதாயத்திற்கும் பயப்படவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுவதுண்டு. அவர்களது நிலைமையில் நியாயமும் இருக்கலாம்.
பிரியமானவர்களே, இப்படியான சூழ்நிலைகளில் நாம் ஞானமாகவே செயற்படவேண்டும். கர்த்தருக்கு மாத்திரம் பயந்து அவருடைய வழிநடத்துதலை அறிந்து செயற்படுவோமானால், எதிர்ப்புகள் வந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை. கர்த்தர் பார்த்துக்கொள்வார். கிறிஸ்தவ வாழ்வு என்பது, கிறிஸ்துவோடு சேர்ந்து வாழும் வாழ்வாகும். இதை உணர்ந்து தேவனுடைய ஒத்தாசையோடு முன்செல்வோமாக.
ஜெபம்: எங்களைப் பெலப்படுத்தும் தேவனே, கிறிஸ்தவன் என்று தைரியமாக வெளிப்படையாக வாழவும் செயற்படவும் எனக்குள் இருக்கும் தடைகளை களைந்து போடவும் அதை மேற்கொண்டு வாழவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.