ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 31 புதன்
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன் (சங்.89:1) தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பார்த்து இம்மாதம் முழுவதும் எந்தவொரு குறைவுமில்லாமல் நடத்திவந்த தேவாதிதேவனின் கிருபைகளை எண்ணிப் பாடி மகிமைப்படுத்துவோம்.
சுக்கான் யார் கையில்?
தியானம்: 2022 ஆகஸ்ட் 31 புதன் | வேத வாசிப்பு: யாக்கோபு 3:1-12

கப்பல்களை … நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும் (யாக். 3:4-5).
புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு தாய் தனது பிள்ளைகளுடன் ஒரு சபையில் சேர்ந்துகொண்டாள். பின்பு ஒருநாள் அவளைச் சந்தித்து விசாரித்தபோது, ஆலயத்துக்குப் போவதை நிறுத்திவிட்டதாகக் கூறினாள். “கிறிஸ்தவர்கள் புதிதாகச் சேர்ந்த நம்மை நல்ல வார்த்தைகளால் நடத்துவார்கள் என்ற எண்ணம் தவறாகிவிட்டது” என்று அவள் வேதனைப்பட்டாள். கிறிஸ்துவைப் பிரஸ்தாபப்படுத்தும் அதே நாவு கிறிஸ்துவிடம் வருகிறவர்களைத் திசை திருப்புகிறது என்பது துக்கமல்லவா!
திருச்சபையின் ஆரம்ப நாட்களிலும் மக்கள் இதுபோன்ற பல பிரச்சனைகள் மத்தியில் கடந்து சென்றதாலேயே யாக்கோபு, சிதறியிருந்த பன்னிரண்டு கோத்திரங்களும் அறியும்படி, சொல்லிலும் செயலிலும் கிறிஸ்துவுக்குப் பிரியமாய் வாழுவது எப்படி என்று ஆலோசனை வழங்கினார். அப்போது யாக்கோபு நமது நாவுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து தனது நிருபத்தை எழுதியிருப்பதை நாம் கவனிக்கலாம். நமது சரீரத்தின் அவயவங்களில் மிகவும் சிறியதும், முக்கியமானதுமாகிய, இந்த நாவை ஒரு பெரிய கப்பலின் சிறிய சுக்கானுக்கு ஒப்பிட்டு எழுதியிருப்பதை நாம் வாசிக்கிறோம். கப்பல் எவ்வளவு பெரிதாயிருந்தாலும் கடுங்காற்றில் அடிபட்டாலும் கப்பலின் மாலுமி எங்கே போகவேண்டும் என்று நினைக்கிறானோ, அந்தத் திசைக்குக் கப்பலைத் திருப்ப அவன் உபயோகிப்பது ஒரு சிறிய சுக்கானைத்தான். பெரிய கப்பலைத் திசைதிருப்பப் பயன்படும் சுக்கான் எப்படி மாலுமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அப்படியே நமது வாழ்வின் ஓட்டத்தைத் திசை திருப்பும் சிறிய அவயவமான நாவின் கட்டுப்பாடும் நமது கரத்திலேதான் இருக்கிறது என்பதை யாக்கோபு தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆகவே, பிரியமானவர்களே, நமது நாவில் எழும் வார்த்தைகளைக் குறித்து ஜாக்கிரதையாயிருப்பது எத்தனை அவசியமான ஒன்றாகும்! வார்த்தை ஒருவனை உருவாக்கும். அல்லது, அது அழிக்கும். நாவு ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் வழிநடத்தி ஒன்று சேர்க்கும். அல்லது, ஆத்துமாக்களை கிறிஸ்துவை விட்டு வழிவிலகச் செய்யும். நாவினால் ஒருவனை ஆசீர்வதிக்கவும் முடியும். அல்லது, சபிக்கவும் முடியும். இரண்டையும் ஒரே நாவினால் செய்யமுடியாது.
தேவபிள்ளையே! கிறிஸ்துவுக்குள் வாழுகிறேன், பிறரையும் கிறிஸ்துவண்டை வழிநடத்துகிறேன் என்று கூறுகின்ற நமது நாவு, கட்டுப்பாட்டில் உள்ளதா என்று சிந்திப்போம். தேவனைத் துதிக்கும் அதே நாவு பிறரைச் சபிக்கிறதா? நமது நாவுகளை தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் ஒப்புக்கொடுப்பதே நமக்குப் பாதுகாப்பு!
ஜெபம்: பிதாவே, என் வாழ்க்கைக் கப்பலின் சுக்கானாகிய என் சிறிய நாவை உமது கட்டுப்பாட்டில் இன்றே ஒப்புவிக்கிறேன். நீரே அதை இயக்கும். ஆமென்.