ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 11 வெள்ளி
…உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத்.5:16) என்று ஆண்டவர் தாமே போதித்துள்ளபடி விசுவாச குடும்பங்களில் ஆவிக்குரிய வாழ்வின் பின்மாற்றத்திலிருப்பவர்கள் மனந்திரும்பவும், கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் காண்பிக்கும் நல்நடக்கையுள்ளவர்களாய் காணப்படவும், அனுதினமும் அதற்காக பிரயாசப்படுபவர்களுக்கு ஆண்டவர் ஜெயத்தையும் வெற்றியையும் தந்தருள மன்றாடுவாம்.
நான் வெளிச்சத்தின் பிள்ளையா?
தியானம்: 2023 ஆகஸ்டு 11 வெள்ளி | வேத வாசிப்பு: எபேசியர் 1:2-8

நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே (1தெச. 5:5).
முதல் மனிதன் ஆதாம் வெளிச்சத்தின் பிள்ளையா அல்லது இருளின் பிள்ளையா என்பதைக் குறித்து ஒரு பட்டிமன்றம் வைத்தால் யார் ஜெயிப்பார்கள்? ஆதாம் இருளின் பிள்ளையாக இருந்திருக்க முடியாது; ஏனெனில், தேவனே ஆதாமை உருவாக்கினார். அதிலும் தமது சாயலாகவே உருவாக்கினார். ஆனால், ஆதாம் வெளிச்சத்தின் பிள்ளையாக நடந்துகொண்டாரா? அப்படியென்றால், தேவ சமுகத்தைவிட்டு ஆதாம் ஏன் ஒளியவேண்டும்? ஏன் தன் குற்றத்தை ஏவாள்மீது போடவேண்டும்? இந்த ஆதாமை தேவன் என்ன செய்தார்? இன்று தேவன் நம்மை என்ன செய்வார்?
“நீங்கள் எல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்” என்று பவுல் எழுதுகிறார். அப்படியென்றால் இன்னும் ஏன் நமக்குள் வீண் சண்டைகள்? கோபங்கள்? ஏன் நமக்குள் பலவித மார்க்க பிரிவினைகள்? ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் இரண்டு கிறிஸ்தவர்களைக்குறித்து இவ்விதமாக வேதனைப்பட்டார். “இவனும் அவனும் ஒரே வேதத்தையே படிக்கிறார்கள். ஒரே ஆலயத்திற்குத்தான் வருகிறார்கள். ஒரே தேவனையே ஆராதிக்கிறார்கள். அவரையே வணங்குகிறார்கள். ஆயினும் ஏன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக ஜெபிக்கிறார்கள்?”. இன்று நமது நடக்கைகள் நம்மை வெளிச்சத்தின் பிள்ளைகளாகக் காட்டுகிறதா?
தேவபிள்ளையே, நாம் கிறிஸ்துவின் பிள்ளைகள் என்பது மெய்யானால், உலகிற்கு ஒளியாக வந்த அவரின் பிள்ளைகளாக அந்த வெளிச்சத்தை நாமேதான் உலகிற்குக் கொடுக்கலாமே! விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அவள் மெய்யாகவே குற்றம் சாட்டப்பட வேண்டியவள். ஆனால் இயேசுவோ, அவளுக்கு மன்னிப்பு அளித்து, அவள் வாழ இன்னும் ஒரு தருணத்தைக் கொடுத்தார். வெளிச்சம் குற்றங்களை வெளிக்கொண்டுவரும். அதற்காக, குற்றமுள்ளவன் என்று சொல்லி, அது தன் வெளிச்சத்தை அவனுக்கு மறைத்துப்போடாது. நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருந்தால் ஏன் இன்னும் நாம் காரணமில்லாமல் மற்றவர்களைக் குற்றப்படுத்துகிறோம்? நாம் வெளிச்சத்தின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு இன்னும் விழுந்துபோன ஆதாம் செய்த தவறையே நாமும் தொடர்ந்து செய்வது, ஏன்? ஒளியான தேவன் அன்று ஆதாமைத் தள்ளிவிடாமல் தோலுடையினால் அவனது நிர்வாணத்தை மூடினாரே! விபசார ஸ்திரீயின் குற்றத்தை அவளுக்கு உணர்த்தி, வாழத் தருணம் அளித்தாரே. இப்படி இருக்கும்போது, தேவனுடைய பிள்ளைகள் நாம் பிறரை குற்றப்படுத்தி நியாயந்தீர்ப்பது எப்படி? தேவனுடைய வார்த்தையால் நமது இருதயத்தை நிரப்பியவர்களாய், இருளில் இருந்த நம்மை வெளிச்சத்திலே வைத்த ஆண்டவருடைய அன்பை உணர்ந்து பிறரை நேசிப்போமாக.
ஜெபம்: பரமபிதாவே, எங்களது நடைகள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக எங்களை வெளிப்படுத்தவும், பிறரை நேசித்து வாழ்வதற்கும் எங்களைத் தாழ்த்துகிறோம். ஆமென்.