ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 30 சனி
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:4) இம்மாதத்தில் நாம் நடந்து வந்த வழிகளில் எல்லாம் நமது துணையாளராக, நமக்கு பரிகாரியாக, நம்மை ஆறுதல்படுத்துகிறவராக, தேற்றுகிறவராக அருகிலே நிழலாய் இருந்து பாதுகாத்த வந்த கர்த்தாதி கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லி … அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது (லூக்.22:40,44).
மன்னித்து மறந்துவிடு!
தியானம்: 2023 செப்டம்பர் 30 சனி | வேத வாசிப்பு: மத்.5:22-26 மாற்கு 11:25,26
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (எபேசி. 4:32).
முதிர்வயதான ஜாண்; மரணத் தருவாயிலிருந்தார். உயிரோடிருக்க அநேக நாட்கள் இல்லை என்பதை அறிந்து எல்லாக் காரியங்களையும் சரி செய்துகொள்ள விரும்பினார். ஆனால் ஏதோ அவர் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவருடைய மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பிலிப் என்பவருடன் அவர் பேச்சு வார்த்தையில்லாமல் இருந்தார். ஜாண் அடிக்கடி அற்ப காரியங்களுக்காக பிலிப்புடன் வாக்குவாதம் பண்ணுவார். கடைசியிலே அவர்களுடைய நட்பு முறிந்துவிட்டது. மரிக்குமுன் இப்பிரச்சனையைத் தீர்த்துவிட வேண்டும் ஒப்புரவாகிவிட வேண்டும் என்று நினைத்து பிலிப்பை அழைத்து வரச் சொன்னார். பிலிப் மிகவும் அன்புடன், அவரைப் பார்த்து வருவதற்கு இணங்கினார்.
பிலிப் வந்தவுடன் ஜாண் அவரைப் பார்த்து “நம் இருவருக்குமிடையில் மனஸ்தாபத்துடன் நித்தியத்திற்குள் பிரவேசிக்க எனக்கு பயமாயிருக்கிறது. ஆகையால் நான் உன்னுடன் ஒப்புரவாக விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு. தன் கையை நீட்டி பிலிப்புடைய கையைப் பிடித்துக் கொண்டு. “நான் உன்னை மன்னித்து விடுகிறேன், நீயும் என்னை மன்னிப்பாயா?” என்று கேட்டார். எல்லாம் நல்லவிதமாக முடிந்தது. இருந்தபோதும் பிலிப் விடைபெற்று புறப்பட்டுச் செல்லும்போது, ”பிலிப், நான் மட்டும் சுகமடைந்துவிட்டால். இதெல்லாம் கணக்கில் கிடையாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்” என்று ஜாண் சத்தமாக சொன்னார்.
ஆம் பிரியமானவர்களே, நாமும் மன்னிப்பதற்கு அடையாளமாகப் புன்னகை புரிகிறோம். ஆனால் சில வேளைகளில் ஒருவரிடம் ஒருவர் நாமும் இவ்விதமாக நடந்துகொள்கிறோம். அடிக்கடி நம் மன்னிப்பு ஆழமற்றதாக இருக்கிறது. தேவன்மீது இருக்கும் பயத்தினால், நம் மனச்சாட்சி உறுத்திக் கொண்டிருப்பதனால் அல்லது நம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக, “மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிடுகிறோம். ஆனால், சிறிய உரசல் உண்டாகுமேயாகில் உடனே பழைய காரியங்களை கிளப்பிவிடுகிறோம். மற்ற வர்களை மன்னிப்பது தெய்வீக சுபாவமாகும். யோசேப்பு தனது சகோதரர்களை மனப்பூர்வமாக மன்னித்தார். தனக்கு இழைக்கப்பட்ட தீங்கையும் துரோகங்களையும் தேவன் அதை நன்மையாக முடியப்பண்ணினார் என்று தனது சகோதரர்களிடம் கூறுவதைப் பார்க்கிறோம் (ஆதி.50:20).
உங்களைத் துன்பப்படுத்தியவர்களை, உங்களைக் குறித்து அவதூறாக பேசியவர்களை உதட்டளவில் மாத்திரம் மன்னித்திருக்கிறீர்களா? அல்லது மனப்பூர்வமாக மன்னித்து மறந்துவிட்டீர்களா? அல்லது கசப்பின் வேர் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கிறதா என்பதை இன்று நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
ஜெபம்: எங்கள் பாவங்களையெல்லாம் எங்களுக்கு மன்னித்த ஆண்டவரே! எங்களைத் துன்பப்படுத்தியவர்களையும் மனப்பூர்வமாக மன்னித்து. மறந்துவிடக்கூடிய தூய உள்ளத்தை எங்களுக்குத் தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 29 வெள்ளி
துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் (நீதி.15:26).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 30,31 | மாலை: எபேசியர் 1
ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 29 வெள்ளி
கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மனநலம் பாதிக்கப்பட்டோர்களின் காப்பகம், முதிர்வயதுள்ளவர்களின் பாதுகாப்பு இல்லங்களில் பணிபுரிபவர்களுக்காகவும், அரசாங்கத்திலிருந்து இவர்களுக்குரிய உதவித் தொகை கிடைக்கப்பெற்று சிறப்புற நடைபெறுவதற்கு ஜெபிப்போம்.
கனம்பண்ணும் வாழ்க்கை!
தியானம்: 2023 செப்டம்பர் 29 வெள்ளி | வேத வாசிப்பு: 1சாமுவேல் 1:1-18
அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள் (1சாமு.1:28).
அன்னாள் பிள்ளையில்லாதிருந்ததினால் அவளுடைய சக்களத்தி பெனின்னாள் அன்னாளை விசனப்படுத்துவாள். இதனால் அவள் மனமடிந்து சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். அவளுடைய கணவன் அன்னாளை சமாதானப்படுத்துவான். இத்தனை துக்கங்களின் மத்தியிலும் அன்னாள் கர்த்தரைக் கனம் பண்ணி கர்த்தருடைய ஆலயத்திற்கு வருடாவருடம் தன் கணவனோடு போய் வருவாள். இவ்வாறு அவள் கர்த்தரைக் கனம் பண்ணி அவரிடமே தன்னுடைய வேதனையை அறிக்கையிட்டு வந்ததுமட்டுமல்ல; கர்த்தரிடத்தில் ஒரு பொருத்தனையும் பண்ணினாள். கர்த்தரும் தன்னைக் கனப்படுத்தும் அன்னாளை அவளுடைய சிறுமையிலிருந்து தூக்கியெடுத்து கனப்படுத்தினார். தன்னைக் கனப்படுத்திய கர்த்தரை அன்னாள் கனப்படுத்தத் தவறவில்லை. தன் பொருத்தனையின்படி தனக்கு இருந்த ஒரே பிள்ளையைக்கூட கர்த்தரின் பணிக்கென அர்ப்பணித்துவிட்டாள். பொருத்தனை நிறைவேற்றிய அன்னாளை கர்த்தரும் கனப்படுத்தி மேலும் 3 குமாரரையும் 2 குமாரத்திகளையும் கொடுத்தார்.
ஒவ்வொரு வருஷமும் கர்த்தருடைய ஆலயத்திற்கு போகின்ற போதும் அன்னாளை, பெனின்னாள் விசனப்படுத்துவாள். இந்த விசனத்தால் அன்னாள் அழுது துக்கித்தாள். அன்னாள் தன்னுடைய வேதனைகளையும் குறைகளையும் எந்த மனுஷனிடமோ போய் முறையிடவில்லை. இறுதியில் கர்த்தருடைய ஆலயத்திற்கு சென்றாள். அங்கு கர்த்தருடைய சந்திதியில் அவள் மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி வெகுநேரம் விண்ணப்பம் பண்ணினாள். அன்னாள் தன்னுடைய காரியத்தைக் குறித்து ஏலியிடம் கூறும்போது, “என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ. நான் திராட்ச ரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன் என்றாள்” (1 சாமு.1:15).
அன்பானவர்களே! நம்முடைய வேதனைகளையும் துக்கங்களையும் யாரிடம் போய்ச் சொல்லுகின்றோம். அன்னாளைப் போல கர்த்தருடைய சந்திதிக்கு சென்று நமது இருதயத்தை ஊற்றிவிடும் அனுபவத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோமா? நாம் எத்தனையோ தடவைகள் மனிதரிடம் போய்தான் முறையிடுகின்றோம். நாம் நிந்திக்கப்படும்போதும் நமது தேவைகள் சந்திக்கப்படாத போதும் நாம் விரக்தியடைந்து ஆலயத்திற்கு செல்வதைகூட நிறுத்திவிடுகிறோம். நம்முடைய வேதனை நீங்கினாலும் நீங்காவிட்டாலும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்தக்கூடாது. அன்னாள் என்றைக்கு கர்த்தருடைய சந்நிதியில் தன்னுடைய இருதயத்தை ஊற்றி மன்றாடினாளோ அன்றே கர்த்தர் அவளுக்கு செவி கொடுத்தார். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை (1சாமு.1:18).
ஜெபம்: அன்பின் தேவனே, அன்னாளைப்போல நீண்ட நாட்களாக என் இருதயத்தை அழுத்துகிற மனபாரங்களை உம்முடைய சமுகத்தில் ஊற்றுகிறேன். என் விண்ணப்பத்திற்கு இன்று செவி கொடும். ஆமென்.