வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 1 வெள்ளி

கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான் (1கொாந்தியர் 7:22).

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் (ஏசா.54:17).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 139-144 | மாலை: 1கொரிந்தியர் 11

ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 1 வெள்ளி

கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார் (சங்கீதம் 72:12).

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் (ஏசா.54:17) என்ற வாக்கைப் பெற்றவர்களாய் இம்மாதத்திற்குள் பிரவேசித்து நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எதிராய் வரும் எல்லா சத்துருவின் போராட்டங்களினின்றும் ஜெயம் பெற்று வாழ தேவகிருபை வேண்டி ஜெபிப்போம்.

பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்!

தியானம்: 2023 செப்டம்பர் 1 வெள்ளி | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 4:23-27

YouTube video

“உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள் நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களை செய்வார்” (யோசுவா 3:5).

கடந்த எட்டு மாதங்கள் நம்மை பாதுகாத்து போஷித்து வழிநடத்தின தேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். இப்புதிய மாதத்தில் வாசகர்கள் அனைவரையும் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற தேவன்தாமே சகலவித நன்மைகளினாலும் சுகத்தினாலும் ஆசீர்வதித்தருள மன்றாடுகிறோம். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் (ஏசா-54:17) என்ற வாக்கின்படி தம்முடைய பிள்ளைகளுக்கு எதிராக இருக்கின்ற சகல சத்துருவின் கிரியைகளிலும் இருந்து கர்த்தர் பாதுகாப்பாராக!

யோபு தன்னுடைய கால்களைக் குறித்துக் கூறியதை தியானிப்போம். “நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடு செய்யத் தீவிரித்ததோ… என் நடைகள் வழியைவிட்டு விலகினதும் …” என்கிறார் (யோபு 31:5-8). யோபு தனது கண்களைக் குறித்து மட்டுமல்ல, தனது கால்களைக் குறித்தும் தேவனுக்கு முன்பாக தீர்மானம் செய்தவனாக இருந்தான். யோபு எத்தனையோ விதமான பாடுகளின் மத்தியிலும் தன் கால்களை மாயைக்கு விலக்கி தன்னைக் காத்துக் கொண்டான். அத்துடன் அவன் கால் கபடு செய்வதற்கு தீவிரிக்காதபடி கர்த்தருடைய சமுகத்தில் தன்னைக் காத்துக்கொண்டான். எந்தச் சூழ்நிலையிலும் தான் நடக்கவேண்டிய வழியைவிட்டு விலகாதபடி காத்துக்கொண்டான்.

இதைப்போன்று ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய சமூகத்தில் ஒவ்வொரு அவயவங்களையும் பாதுகாக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இன்று கிறிஸ்தவர்கள் வாழ்க்கையில் பாடுகள் வேதனைகள் வந்ததும் உத்தமத்தை விட்டுவிலகி தங்கள் கால்களை மாயைக்கு ஒப்புக் கொடுத்து மாயையின் வழியில் நடக்க தொடங்கிவிடுகின்றனர். இதனால் நடக்கவேண்டிய பாதையை விட்டு அவர்கள் கால்கள் விலகி பொய் வழியைத் தெரிந்துகொள்கிறார்கள்.

அருமையானவர்களே! உங்கள் கால்கள் எப்படியான பாதையில் நடக்கின்றது? எத்தனை தடவைகள் மாயையான மனிதர்களை நோக்கி நம் கால்கள் நடந்திருக்கின்றன? மாயையான அன்பை, செல்வத்தை, புகழை நோக்கி நம் கால்கள் தீவிரித்து ஓடியிருக்கிறது? கர்த்தர் நமக்கென்று நியமித்த பாதையைவிட்டு எத்தனை தடவைகள் நம் கால்கள் வழிவிலகி நடந்திருக்கிறது? இவற்றையெல்லாம் ஆராய்ந்து தேவசமுகத்தில் நாம் மன்னிப்பு கேட்டு நம் கால்கள் விலகி நடவாதபடி, நம் நடைகளைக் காத்துக்கொள்ளும்படி ஜெபித்து புதிய தீர்மானத்துடன் கடந்துபோவோம்.

என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் (சங்.17:5).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, கடந்த நாட்களில் என் கால் விலகிய காரியங்களுக்காக மன்னிப்பு கேட்கின்றேன். தொடர்ந்து என் கால்கள் மாயையை பின்பற்றாதபடிக்கும் உம் வழிகளை விட்டு விலகி நடக்காதபடிக்கும் என் கால்களுக்கும் காவல் வையும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காகவும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வதற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் இடைவிடாது மன்றாடுவோம். அதைத் தொடர்ந்து அரியானா மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களினாலே பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அங்கு கர்த்தர் சமாதானத்தை நிலவச்செய்யவும் மற்ற இடங்களிலும் இப்படிப்பட்ட கலவரங்கள் பரவாதபடி தேசத்தின் அமைதிக்காக சமாதானத்திற்காக தொடர்ந்து நாம் பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு அச்சுத்தாளின் கடுமையான விலை ஏற்றத்தினால் இருமாத வெளியீடுகளின் ஆண்டு சந்தா உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் கேட்கிறோம். சத்திய வசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள். இந் நிகழ்ச்சிகளின் மூலமாக அநேகமாயிரமான ஆத்துமாக்கள் சந்திக்கப்படுவதற்கும் நிகழ்ச்சிகள் தடைகளின்றி ஒளிபரப்பு ஆவதற்கும் வேண்டிக்கொள்ளுங்கள்.

இவ்விதழில் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். அக்டோபர் மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் எழுதிய தியானங்கள் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

மதிப்பிடும் தேவன்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1சாமுவேல் 2:1-10

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? (1சாமுவேல் 2:3).

அன்னாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்மணி. ஆனால் அவள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டாள். அன்னாளுக்குக் குழந்தையில்லாததால், அவளுடைய கணவனின் இரண்டாவது மனைவி பெனின்னாள் பரியாசம் பண்ணி அவளை அழவைப்பாள். பிரதான ஆசாரியனான ஏலியும் அவள் குடித்திருக்கிறாள் என எண்ணினார். யோசேப்பு, தாவீது, எரேமியா, பவுல் போன்ற தேவபக்தர்களைப்போலவே இவளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாள். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கூட “சாத்தானுடன் தொடர்புடையவர்” என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் ஆண்டவர், அன்னாளின் விண்ணப்பத்தைக் கேட்டு அவளுக்கு ஓர் ஆண் மகனை அருளினார். அவனுக்கு சாமுவேல் என பெயரிட்டு ஆசரிப்புக் கூடாரத்தில் தேவபணி செய்ய ஒப்படைத்தாள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் சாமுவேல் ஒரு வல்லமையான தீர்க்கதரிசியாக விளங்கினார். மக்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளும் நேரங்களில் அன்னாளின் இந்த மகிழ்ச்சியான துதிப்பாடலின் வரிகள் நம்மை ஆறுதல் படுத்தி உற்சாகப்படுத்துகின்றன.

தேவன் சகலத்தையும் அறிவார்:

மற்ற மனிதர்கள் சிந்திப்பதையும் அவர்களது சொற்களையும் தேவன் அறிவார். உங்களுடைய சிந்தனையையும் சொல்லையும் அவர் அறிவார் (சங்.139: 1-6). ஒவ்வொருவருடைய இருதயத்தில் இருப்பதையும் அவர் அறிவார் (அப்.1: 24). “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபி.4:13). நம்முடைய இருதயத்தையே நாம் அறிய மாட்டோம் (எரே.17:9). ஆண்டவருக்காக தான் மரிக்கவும் ஆயத்தம் என்று பேதுரு எண்ணியிருந்தார். ஆனால், தான் அவரை மூன்றுமுறை மறுதலித்ததை அறிந்து வருத்தம் கொண்டார். மக்கள் உங்களைப் பற்றி பொய் சொல்வார்களானால் கவலைப்படாதீர்கள். உங்கள் பரலோக தகப்பன் உண்மையை அறிவார்; ஒருநாளில் உண்மையை வெளிப்படுத்துவார்.

தேவன் மக்களையும் அவர்களது செயல்களையும் மதிப்பிடுபவர். மனம் மாறியவர்கள் கணிக்கப்பட்டு அவர்கள் கவனிக்கப்படவேண்டும் என்று நற் செய்தியாளர் டி.எல்.மூடி அடிக்கடி கூறுவார். நம்முடைய ஆண்டவரும் மக்கள் சொல்வதையும் செய்வதையும் அளவிடுகிறார். கீழ்மக்கள் மாயையும், மேன் மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள் (சங்.62:9). “மாயை, மாயை, எல்லாம் மாயை” என்று பிரசங்கி சொல்லுகிறான். Hevel என்ற எபிரெய சொல்லை 83 முறை பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் இங்கு பயன் படுத்தியுள்ளார். அதற்கு “மாயை, ஒன்று மில்லாமை, பயனற்றது” என்று பொருள் கூறலாம்.

தேவனுடைய சித்தத்தில் வாழும் வாழ்வே திடமானதும் நிறைவானதும் ஆகும். அவரது சித்தத்துக்கு வெளியே வாழும் வாழ்வு அர்த்தமற்றதும் வெறுமையானதுமே. நாம் பேசுவதற்கு முன் நம்முடைய வார்த்தைகளை சிந்தித்துக் கூறவேண்டும், ஏனெனில் தேவன் அவ்வாறே செய்கிறார். நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும் என்று சாலொமோன் எழுதியுள்ளார் (நீதி.15:28). சபையில் கூறப்படும் வார்த்தைகளையும் நாம் நிதானிக்கவேண்டும். ஏனெனில் அவை தேவனுடைய வார்த்தைக்கு ஒத்துப்போகாதிருக்கலாம் (1கொரி. 14:29). எனவேதான் ஆண்டவராகிய இயேசு: மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று எச்சரிக்கிறார் (மத்.12:36). தேவன் நமது நோக்கங்களையும்(நீதி.16:2) நம்முடைய இருதயத்தையும் (நீதி.21:2;24:12) நிறுத்துப்பார்க்கிறார். ஒருவரும் காண முடியாதவற்றையும் தேவன் காண்கிறார்; கேட்கமுடியாததையும் அவர் கேட்கிறார்.

தேவன் கனமானவற்றுக்கு வெகு மதியளிக்கிறார். தேவனுக்கு ஊழியம் செய்யும்பொழுது விலைமதிப்பற்ற மரம், மற்றும் புல் வைக்கோல் இவைகளை யல்லாது விலையுயர்ந்த தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்களை பயன்படுத்தும்பொழுது தேவன் அவற்றையும் அளவிடுகிறார்; இவ்வுலகில் இல்லையென்றாலும் மறுவுலகில் நாம் வெகு மதிகளைப் பெறுவோம் (1 கொரி. 3:12-17; எபே.6:8; கொலோ. 3:23-24).

போத்திபாரின் மனைவி யோசேப்பின் பேரில் பொய்யான குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் அடைத்தாள். ஆனால், தேவன் அவனை உயர்த்தினார். சவுல் அரசர் தாவீதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவனைக் கொல்லப் பார்த்தார். ஆனால் தாவீதின் உத்தமம் நிரூபணமானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உயிர்த்தெழுதலினாலும் மகிமையின் பரமேறுதலினாலும் நியாயப்படுத்தப்பட்டார்.

பெல்ஷாத்சார் அரசர் உலகத்தின் அளவீட்டை வைத்து தான் வல்லமையானவர் என்றும், செல்வந்தன் என்றும் எண்ணினார். ஆம்; அவை உண்மைதான். ஆனால் தேவனோ நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் (தானி.5:27) என்று அவரிடம் கூறினார். அன்று இராத்திரியிலே அவர் கொலை செய்யப்பட்டார். உலகத்தின் தராசை வைத்து உங்கள் வாழ்வை எடை போடாதீர்கள்; தேவனுடைய தராசை வைத்து உங்கள் வாழ்வை சீர்தூக்கிப் பாருங்கள். கிறிஸ்துவை முதலாவது நாம் வைத்தால் அவரையும் நமக்குத் தேவையான யாவற்றையும் நாம் பெற்றுக்கொள்வது அதிக நிச்சயம்!

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:33).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2023)

1

கிறிஸ்துவுக்குள் அன்பான சத்தியவசன ஊழியர்களுக்கு, வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். சத்தியவசன வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் மே-ஜுன் 2023 தியானங்களை வாசித்தேன். அதிக பிரயோஜனமாக இருந்தது. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்.

Mr.Antony, Vembakottai.

2

Dear Brother in Christ, I am feeling so much happy in thankful for your blessed and very excellent in so valuable all your posters. (whatsapp). Congrats.

Mr.Antony.

3

Dear Brother/Sister in Christ, Receiving the Magazines regularly and learning many things and growing in spiritual maturity. Praise be to God! Thanks a lot.

Sis.T.Vasuki Celin, Vellore.

4

Dear Brother in Christ, Every day Anuthinamum Christhuvudan Devotions very useful for our family prayer. May God bless this Ministry.

Sis.Sornakumari.

5

Beloved Brother in Christ, Greetings in Jesus Name. I am getting your Magazine, Anuthinamum Christhuvudan regularly and also in time. Your Magazine is of very useful to me for my spiritual life. May God be with you and bless you.

Bro.Mathews, Vellore.