ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 18 திங்கள்
உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னை கடாட்சித்தருளும் (சங்.69:16) இரக்கங்களின் பிதாதாமே ஒடிசா மாநிலத்தை கடாட்சித்தருளவும், கடுமையான சமயப்பற்றுகளோடு உள்ள மக்கள் இரட்சிக்கப்படவும், கடந்த நாட்களில் ஏற்பட்ட இரயில் விபத்தில் காயமாகி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் மக்களுக்காகவும், உயிர்பலியான குடும்பங்களின் சமாதானம், ஆறுதலுக்காக ஜெபிப்போம்.
வெற்றியுள்ள வாழ்க்கை!
தியானம்: 2023 செப்டம்பர் 18 திங்கள் | வேத வாசிப்பு: லூக்கா 6:45-49

“அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங்கீதம் 1:3).
கிறிஸ்தவ வாழ்க்கையானது வெற்றியுள்ள வாழ்க்கையாக இருக்கவேண்டுமேயானால் அவன் ஆவிக்குரிய பிரகாரமாக ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள அவன் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளைக் குறித்து கடந்த தியானங்களில் தியானித்தோம். இந்த ஆசீர்வாதத்தின் வெற்றியை அவனுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்வதைப் பற்றி இந்நாளில் பார்ப்போம்.
ஒரு கிறிஸ்தவன் பாடுள்ள வாழ்க்கையின் வழியாக போகும்போது, அவனுடைய வாழ்க்கை தேவவார்த்தையில் வேர்கொண்ட வாழ்க்கையாக இருப்பதால் கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலைத்திருக்கும் ஆசீர்வாதத்தை உடையவனாக இருக்கிறான். சில கிறிஸ்தவர்கள் தேவ வார்த்தையின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் பாரம்பரியங்களிலும் சபைக் கட்டுப்பாடுகளிலும் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். இன்னும் சில கிறிஸ்தவர்கள் வேதத்திலுள்ள சத்தியங்களின் அடிப்படையில் ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டாமல் கிறிஸ்தவர்களின் அனுபவங்களை சத்தியமாக மாற்றி அதனடிப்படையில் ஆவிக்குரிய வாழ்க்கைகளைக் கட்டுகின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் போராட்டங்கள் மோதுகின்றபோது ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைந்து போய் விடுகின்றனர். இதற்கு காரணம் விசுவாச வாழ்க்கையின் ஆரம்ப அஸ்திபாரம் அல்லது வேர் சரியான விதத்தில் அமையாததே.
அருமையானவர்களே! உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை எதில் கட்டப்பட்டதாக இருக்கிறது. நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டு உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டியுள்ளீர்களா? அல்லது மற்ற கிறிஸ்தவர்களின் அனுபவங்களை வைத்து உங்கள் வாழ்க்கை கட்டப்பட்டதாக இருக்கிறதா? நம்முடைய வாழ்க்கை அவ்வாறு இல்லாமல், வேத சத்தியத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதாக இருக்கவேண்டும். வார்த்தையில் வேர்கொள்ளாத வாழ்க்கை வெறும் இலைகளைமட்டும் காண்பிக்கும் மரத்தைப் போன்றிருக்கும். அவ்வாறான வாழ்க்கை போராட்டங்கள், பிரச்சனைகள் வரும்போது நிலைத்து நிற்கமுடியாமல் சரிந்து விழுந்துவிடும். எனவே நாம் தேவவார்த்தையின்படி வாழ்வோமானால் நம்முடைய வாழ்க்கை வேர்கொண்ட வாழ்க்கையாக இருப்பதுடன் நாம் செய்வதெல்லாம் வாய்க்கும்.
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் (யோவான் 15:7).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, போராட்டங்கள் பிரச்சனைகள் மத்தியிலும் கர்த்தருடைய வார்த்தையில் வேர்கொண்டதாக நிலைத்து நிற்க, உமது வார்த்தையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உமதாவியின் அருள் தாரும். ஆமென்.