“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்” (ஆதி.1:1,25). தேவன் சர்வ அதிகாரம் மிக்கவர். அவரே சகலத்தையும் சிருஷ்டித்தவர். அவர், சிருஷ்டிகளை அப்படியே விட்டுவிடவில்லை. ஒவ்வொருமுறையும் தாம் உண்டாக்கின ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தார்; அவை நல்லது என்று கண்டார். அவர் தமக்குள் பூரண திருப்தியடைந்த பின்னரே அடுத்ததைச் சிருஷ்டித்தார். இறுதியில் தாம் உண்டாக்கின சகலத்தையும் பார்த்து, அவை “மிகவும் நல்லது” என்று உறுதிப்படுத்தினார். அதாவது பூமியும் அதிலுள்ள அனைத்தும் தேவனுக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
படைப்பாளியான தேவன் தமது படைப்புகளை விட்டுவிட்டுத் தூரம் போகிறவர் அல்ல. அத்தனை சிருஷ்டிகளிலும் மிகுந்த கரிசனை உள்ளவராயிருக்கிறார். இல்லாவிட்டால் இந்தப் பூமியைப் பண்படுத்தி அதைப் பாதுகாத்துக்கொள்ளும்படிக்கு மனிதனிடம் தமது பொறுப்பைக் கொடுத்திருப்பாரா? சகலத்தையும் நல்லது என்று கண்டவர், அவை நல்லவையாகவே இருக்கவேண்டும் என்று விரும்பினார். மனிதன் பாவத்தில் விழுந்தபோதுதானே இந்தப் பூமியும் சபிக்கப்பட்டது. தீமையும் உண்டானது. ஆனாலும் தேவன் கைவிடவில்லை. இன்றும் காட்டுப் பூவுக்கு உடுத்துவிப்பதிலும், காகங்களைப் போஷிப்பதிலும் தேவன் தமது கிருபையை விளங்கப் பண்ணிக்கொண்டே இருக்கிறாரே! அப்படியிருக்க, அவரது சாயலில் அவருக்கென்றே படைக்கப்பட்ட நம் விஷயத்தில் அவர் பாராமுகமாய் இருப்பாரா? அவர் தமக்கென்று தாமே படைத்த மனிதர்மீது கரிசனையுள்ள தேவன் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வது நல்லது.
ஆகையால், “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி.4:6,7). இந்த அற்புத செய்தியை, ஏன் நாம் பிறருக்கும் அறிவிக்கக்கூடாது? இன்று நம்மை சூழ்ந்திருக்கிற மக்கள், பலவிதமான வாழ்க்கைப் போராட்டங்களில் சிக்கித் தவிக்கின்றனர்; நாமும் கூடத்தான். ஆனால், நமக்கு ஒரு ஆண்டவர் உண்டு, அவர் பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசம் உண்டு. ஆகவே, அவரிடம் பாரங்களை இறக்கி வைப்போம்.
ஜெபம்: நல்ல ஆண்டவரே, மனுக்குலத்தின்மேல் நீர் வைத்துள்ள அன்பையும் கரிசனையையும் குறைந்தது ஒருவருக்காவது அடியேன் சொல்ல அருள் செய்யும். ஆமென்.