கர்த்தரைத் துதித்தல்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : 1 நாளாகமம் 23: 1- 32
“நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து … ” (1நாளா.23:30).

தாவீது அரசர் தனது வாழ்நாளில் பல ஆண்டுகள் நாடோடியாக அலைந்து திரியநேரிட்டது. எனவே அவர் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கென ஒரு நிலையான ஸ்தலத்தைக் கட்ட விரும்பினார். ஆனால் தாவீது யுத்த மனிதராய் இருந்ததினால் அந்த வாய்ப்பினை தேவன் அவருக்குத் தர விரும்பவில்லை. எனவே தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்குக் கட்டளைகொடுத்தார். (1நாளா.22:6).

தேவனுடைய ஆலயத்தைக் கட்டு வதில் உறுதியாயிருந்த தாவீது அதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொடுத்தார். கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்கள், ஆணிகளுக்குத் தேவையான இரும்பு மற்றும் கட்டிட வேலையாட்களையும் நிபுணர்களையும் சேகரித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனைத் துதிக்க ஒரு பாடகர் குழுவினை அமைத்தது அவருடைய சிறந்த பங்காக அமைந்தது. லேவியரின் பிரபுக்களுடன் மூன்று குடும்பத்தினரை ஆலயத் திருப்பணிக்கென தனியாகப் பிரித்து வைத்தார். அவர்கள் வெறும் பாடகர்கள் மாத்திரமல்ல; தீர்க்கதரிசிகளாகவும் இருந்தனர். மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்து வைத்தார்கள் (1 நாளா.25:1).

தலைமுறை தலைமுறையாக இந்த பாடும் பொறுப்பு தகப்பனிடமிருந்து மகனுக்குச் செல்லவேண்டுமென்றும் கட்டளையிட்டார். இவர்கள் யாரெனில் கெர்சோனியனான பெரகியாவின் குமாரன் ஆசாப். இவர் தலைமைப் பாடகரும் இவரது குமாரர்கள் அரசர் கட்டளைப்படி நின்றுகொண்டு தீர்க்க தரிசனம் உரைப்பார்கள். கோகாத்தியரின் குடும்பத்திலிருந்து ஏமானின் குமாரர்கள், அரசரின் கர்த்தருடைய வாக்கை உரைக்கும் தீர்க்கதரிசியாயிருந்தனர். மெராரியின் குடும்பத்தைச் சார்ந்த எதித்தூனின் குமாரர்கள் சுரமண்டலம் இசைத்து இறைவாக்குரைத்து ஆண்டவரின் மகிமையைப் பாடினார்கள். குறிப்பிட்ட சங்கீதங்களின் தலைப்புகளில் இந்த பாடகர் தலைவர்களின் பெயர் காணப்படுகிறது.

1 நாளாகமம் 23 – 25 வரையுள்ள அதிகாரங்களில் ஆலயத்துக்கும் அதன் ஊழியங்களுக்கும் பாடுபவர்கள் ஏராளமாய் இருந்தனர் எனக் காண்கிறோம். இம்மூன்று குடும்பத்தைச் சார்ந்த பாடகர்கள் 288 பேர். இவர்கள் பன்னிரண்டு பேர்களாகப் பிரிக்கப்பட்டு இருபத்து நான்கு குழுவினராக செயல்பட்டனர். இசைக் கருவிகளுடன் யேகோவா தேவனைத் துதித்துப் பாடும் முக்கியமான செயலில் ஈடுபட்ட நான்காயிரம் லேவியரை தாவீது ஏற்படுத்தினார். ஆறாயிரம் பேர் தலைவர்களாகவும் மணியக்காரர்களாகவும் இருந்தனர். வாசல் காப்பவர்களாக நான்காயிரம் பேரும் மீதமுள்ள இருபத்து நான்காயிரம் லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களாகவும் இருந்தனர்.

இவர்களுடைய வேலை நமக்கு சாதாரணமாகத் தோன்றினாலும் அவர்களுக்கு அது சாதாரணமானதல்ல; கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியர்களுக்கு உதவியாக நிற்பதும் பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த பணிமுட்டுகளை சுத்தம் பண்ணுவதும், சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்குத் தேவையானவற்றை ஆயத்தம் செய்வதும், ஓய்வு நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் கர்த்தருக்குச் சர்வாங்க தகன பலிகள் செலுத்த உதவுவதும் அவர்களுடைய பணியாயிருந்தது.

அனைத்துக்கும் மேலாக நாள் தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதிப்பதே அவர்களுடைய மேலானதும் மகிழ்ச்சியைத் தரும் காரியமாயிருந்தது. அதிகாலையில் லேவியர்கள் எழுந்து தேவனைத் துதிப்பதை ஆரம்பித்து வைப்பார்கள். அது முக்கியமான பொறுப்பு மாத்திரமல்ல, ஆழமான பொருள் நிறைந்ததுமாகும். கோராகின் புத்திரரின் எஸ்ராகியனான ஏமானின் போதக சங்கீதமான 88ம் சங்கீதம் அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் யேகோவாவைப் போற்றி துதிக்கும் பாடலுக்கு ஓர் உதாரணமாகும். நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும் (வச.33).

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து தேவனைத் துதித்தலுடன் ஆரம்பிப்பது நமக்கும் கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். தாவீதின் பாடகற் குழுவினர் செய்ததுபோல நாமும் உண்மையுடன் இதனை பயிற்சி செய்வோம். அதிகாலையில் எழும்பி தேவனைத் துதிப்பதில் காணப்படும் உண்மைத்துவம் அந்த நாளை நமக்கு ஓர் ஆசீர்வாதமான நாளாக்கித் தரும்.

அதிகாலைப் பாடல்:

தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா!
தேவரீர்க்கெந்நாளும் சங்கீதம் ஏறுமே!
தூய தூய தூயா மூவரான ஏகா!
காருணியரே, தூயதிரியேகரே!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை