பாவத்தின் தன்மை
தியானம்: 2021 ஏப்ரல் 20 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 13:16-30
பிசாசானவன் அவன் இருதயத்தைத் துண்டினபின்பு…. (யோவா.13:2)
அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதும் இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்துப் புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள் (ஆதி.3:6). பாவம், பார்ப்பதற்கு இன்பமாகவேத் தோன்றும். அதில் ஈடுபடும்போதும் சந்தோஷமாகவே இருக்கும். முடிவிலோ கட்டுவிரியன்போலக் கடிக்கும். நம்மைப் பாதாளத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். பாவம் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ளும். பாவத்திற்கு இடம் கொடுத்தால் அது நம்மைத் தனக்கு அடிமையாக்கிவிடும்.
யூதாஸின் நடவடிக்கைகளைச் சற்றே கண்ணோக்குவோம். அவன் எப்போதும் பணப்பையுடன் திரிவதால் ஒருவேளை அவனுக்குப் பண ஆசை இருந்திருக்கலாம். அத்தோடு இயேசுவின் பாதத்தில் மரியாள் ஊற்றிய நறுமண தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்றுத் தரித்திரருக்குக் கொடுத்திருக்கலாமே; வீணாக ஏன் இயேசுவின் பாதத்தில் ஊற்றவேண்டும் என ஆலோசனை கூறியவனும் இதே யூதாஸ்தான் (யோவா.12:5). இவனுக்கிருந்த இந்த அளவுக்கதிகமான பண ஆசையை பிசாசானவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி யூதாஸின் இருதயத்தைத் தூண்டினான் (யோவா.13:2). அவன் அத்தூண்டுதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இடம் கொடுத்ததால் சாத்தான் அவனுக்குள் புகுந்துவிட்டான் (லூக்.22:3)
அன்பானவர்களே இவ்விதமாகத்தான் பாவம் நம்மை அடிமைகளாக்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது நமது வாழ்வைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவரும். இதற்கு மூலகாரணமானவன் சாத்தானே. நமது பெலவீனங்களை அவன் அறிந்து அதனூடாக நம்மை வீழ்த்த முயற்சிப்பான். அதற்கு நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். பாவம் என்று தெரிந்ததும் அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். அதாவது பிசாசு கொண்டுவரும் ஆசைகளுக்கும், பாவ சோதனைகளுக்கும் நாம் எதிர்த்து நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும் (யாக்.4:7). எதிர்த்து நின்றால் அவன் நம்மைவிட்டு ஓடிவிடுவான். “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு” (2தீமோ.2:22) என்று பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதுகிறார். ஆகவே, பாவம் நம்மைப் பிடிக்கும் தன்மை கொண்டதால், அதற்கு விலகி ஓடுவதே அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கச் சிறந்த வழியாகும். நமது பெலவீனங்களை எண்ணிப்பார்க்காமல், நமக்குள்ளே இருக்கும் பெலத்தை எண்ணிப்பார்த்தால், பாவம் நமக்கு முன்னே நடுங்கும்.
ஜெபம்: பாவத்திலிருந்து என்னை மீட்க பாருலகைத் தேடி வந்த என் அன்பின் ஆண்டவரே, பாவத்தை இனங்கண்டு அதை முளையிலேயே கிள்ளி எறிந்து, பரிசுத்தமாய் வாழ எனக்கு உதவி செய்வீராக. ஆமென்.