• சகோதரி சாந்தி பொன்னு •
(மே – ஜுன் 2024)

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன் (ஒசி.4:6).

சகோதரி சாந்தி பொன்னு

புத்தக அலுமாரியைச் சுத்தம் செய்தபோது, ஒரு மூலையில் மறக்கப்பட்டுப் போன ஒரு தொகை புகைப்பட அல்பங்களைக் கண்டு, ஆவலுடன் எடுத்தேன். ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருந்தது. பழைய நினைவுகள் ஒவ்வொன்றும் புதுப்பிப்பட்டவையாக மனதில் ஓடின. சில படங்களில் இருக்கிறவர்கள் யார், அந்த சந்தர்ப்பங்கள் எவை என்று விளக்குவதற்கு வீட்டிலுள்ள மூத்தோர் தேவைப்பட்டார்கள். சில படங்கள் பல முக்கிய விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவந்தன. நான் கவனிக்காமல் விட்டுவிட்ட சில காரியங்களையும் அவை எனக்கு உணர்த்தின. மாத்திரமல்ல, அன்றைய நாட்களில் நான் செய்த தவறுகள் பாவங்களைக்கூட சில புகைப்படங்கள் என் கண்கள் முன்னே நிறுத்தின. இது மெய்யாகவே நடந்த ஒரு சங்கதி. இத்தனை காலமும் இவற்றை மறந்துவிட்டதற்காக என்னை நானே நொந்துகொண்டேன். அப்போதே உணர்த்தப்பட்டவற்றை சரிசெய்யவும் முடிவு எடுத்தேன்.

இன்று கர்த்தருடைய வார்த்தைகளும் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு மறக்கப்பட்டுப் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிற விதமாகவே பல காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது. பவுல் சிரச்சேதம் பண்ணப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர், ஏறத்தாழ கி.மு. 66 அல்லது 67ல் எழுதிய அவரது கடைசி நிருபம் என்று நம்பப்படுகிற தீமோத்தேயுவுக்கு எழுதிய 2ம் நிருபத்தில் மிகுந்த மனப்பாரத்துடன் அவர் எழுதிய வார்த்தைகளில் ஒன்று, “சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதை களுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும்.” (2தீமோ.4:4,5). இது இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறதா?

நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர்

இயேசு தாம் உலகில் வாழ்ந்திருந்தபோது கற்பிக்கவேண்டிய சகலத்தையும் கற்பித்து, வாழவேண்டிய சகல வழிகளை வாழ்ந்தும் காட்டிவிட்டார். ஆனால் அவர் போனபிற்பாடு, ஆடுகளைத் திருடுகிற கள்ள ஓநாய்கள் வரும் என்று முன்னரே எச்சரித்த ஆண்டவர், “நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவா.14:25,26) என்று இன்று நம்மை நடத்துகின்ற பரிசுத்த ஆவியானவரை நமக்கு வாக்களித்தார். அப்படியே பெந்தெகொஸ்தே நாளன்று பகிரங்கமாகவே சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். இன்றும் கர்த்தருடைய பிள்ளைகள் நம்முடன் பரிசுத்த ஆவி யானவர் நமக்குள்ளே வாசம்பண்ணி நம்முடன் கூடவே இருக்கிறார்.

இந்த பரிசுத்த ஆவியானவர் பற்றி, “பரிசுத்த ஆவியானவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவா.16:8) என்றும், “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவா.16:13) என்றும், இன்னும் பல காரியங்களையும் நமது ஆண்டவர் போதித்திருக்கிறார். இப்படியிருக்க இன்று கர்த்தருடைய சத்தியம் தடுமாறி நிற்பது என்ன? செழிப்பு உபதேசங்களும், திரிபுபட்ட உபதேசங்களும் இன்று அதிகரிப்பதும் ஏன்? சுய இச்சைகளை நிறைவேற்றத் துடிக்கின்றவர்கள் கர்த்தருடைய பிரமாணங்களைத் தூக்கி எறிவதும் ஏன்? திருமணங்கள் தள்ளாடி நிற்பதும் ஏன்? கர்த்தருடைய வார்த்தை மறக்கப்பட்டுப்போய், அந்த வார்த்தைகளைக் கொண்டே வேறே உபதேசங்கள் முளைத்தெழுந்து வியாபித்து வளருகின்றனவோ என்ற ஐயம் தோன்றிவிட்டது. அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் எங்கே? நாம் அவரைத் தள்ளிவைத்துவிட்டோமா?

இஸ்ரவேல் மறந்த நியாயப்பிரமாணம்

இந்தத் தவறைத்தானே அன்றைய இஸ்ர வேலும் செய்தார்கள். கர்த்தர் மோசேயை அழைத்து தேவஜனம் பின்பற்ற வேண்டிய கற்பனைகளை தமது விரலினாலே எழுதிக் கொடுத்ததும், மக்களோ கன்றுக்குட்டிக்கு முன்பாக ஆர்ப்பரித்ததைக் கண்டு கோபங்கொண்ட மோசே அதை உடைத்துப்போட்டதும், பின்னும் கர்த்தர் மோசேயை அழைத்து அந்த சாட்சிப்பிரமாணத்தை பலகைகளில் எழுதுவித்ததும், அதை மோசே ஐனங்களுக்கு வாசித்துக் காட்டியதும், அந்த சாட்சிப்பிரமாணத்தை கர்த்தர் சொன்னபடியே பெட்டியை அமைத்து அதிலே வைத்ததும், அந்த உடன்படிக்கைப் பெட்டியிலிருந்து கர்த்தர் அவர்களுக்கு உத்தரவு கொடுத்து நடத்தியதும், இவை யாவும் நாம் அறிந்ததே. இந்த உடன்படிக்கைப் பெட்டி அவர்களுடன் வனாந்தர வழி முழுவதும் வந்தது. மோசேக்குப் பின்னர் யோசுவா காலத்திலும் யோர்தானைக் கடந்தபோது ஆசாரியர் இந்தப் பெட்டியைச் சுமந்து கொண்டுதான் யோர்தான் நதிக்குள் கால் வைத்தார்கள்.

இதன் பின்னர் நியாயா.20:28ல் ஆசாரி யனாகிய ஏலியின் நாட்களில் ஏலியின் மகன்களதும் இஸ்ரவேலரினதும் மடமைத்தனத்தினால் இந்தப் பெட்டி பெலிஸ்தர் வசமானது (1சாமு.4:11). “தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால் மகிமை இஸ்ரவேலைவிட்டு விலகிப் போயிற்று” (1சாமு.4:22). கர்த்தருடைய பெட்டிக்கு ஈடு கொடுக்கமுடியாத பெலிஸ்தர் அதை திருப்பி இஸ்ரவேலுக்குள் அனுப்பிவிட்டார்கள். அது அபினதாபின் வீட்டிலே இருபது வருடங்கள் இருந்தது. இஸ்ரவேலர் கர்த்தரை நினைத்து புலம்பினார்கள் (1சாமு.7:2).

சவுலின் நாட்களில் இப்பெட்டிக்கு என்ன நடந் தது, சவுல் இப்பெட்டியை என்ன செய்தார் என்பது அறியப்படவில்லை. தாவீது ராஜா அதை மீண்டும் எடுப்பித்தான். அப்போது நடந்த சங்கதிகளை 1நாளா.13:1-14வரை வாசிக்கலாம். தாவீது தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரம் போட்டு, அதை அந்தக் கூடாரத்தின் நடுவே வைத்து, பலிகளைச் செலுத்தினான். பின்னர் சாலொமோன் ஆலயத்தைக் கட்டிமுடித்த பின்னர், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேரூபீன்களுடைய செட்டைகளின் கீழே வைத்தார்கள். அந்தப் பெட்டிக்குள் மோசே வைத்த இரண்டு கற்பலகைகள், மன்னா, ஆரோனின் துளிர்த்த கோல் என்பன இருந்தது. கர்த்தருடைய ஆலயத்தை மேகம் நிரப்பினது. கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று என்று வாசிக்கிறோம்.

கர்த்தருடைய பெட்டிக்கு நடந்தது என்ன?

சாலொமோனின் நாட்களுக்குப் பின்னர் இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாக உடைந்து, வட தென் ராஜ்யங்களாகி, இரண்டு ராஜ்யங்களிலும் ராஜாக்கள் ஆளுகை செய்த காலங்களில், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாத, தீய வழியில் தாமும் நடந்து மக்களையும் நடப்பித்த இந்த ராஜாக்களின் நாட்களில் இந்தப் புத்தகம் மறக்கப்பட்டுப்போனது.

ராஜ்யம் உடைந்து யெரொபெயாம் வட ராஜ்யத்தைச் சொந்தமாக்கியபோது, அவன் இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைச் செய்வித்து, மக்கள் எருசலேமுக்குப் போகாதபடி, இந்தக் கன்றுக்குட்டிகளை வணங்கும்படி மக்களைத் தூண்டி, பெத்தேலிலே தான் நியமித்த தேதியிலே பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடம் அமைத்து பலியிட்டு தூபங்காட்டத் துணிவுகொண்டு நிற்கையில் தேவனுடைய மனுஷன் ஒருவன் யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் ஒருவன் பிறப்பான் என்றும், அவன் இவற்றையெல்லாம் அழிப்பான் என்றும் அறிவித்தான். அதற்கான அடையாளத்தையும் கொடுத்தான். அப்படியே ஏறத்தாழ 209ஆண்டுகளின் பின்னர் எசேக்கியாவின் மகன் மனாசேயின் குமாரன் ஆமோனுக்கு யோசியா மகனாகப் பிறந்தான்.

இவை வரலாற்றுச் சுருக்கம். இந்த யோசி யாவின் நாட்கள் வரைக்கும் வட ராஜயமோ தென் ராஜ்யமோ, தேவனுடைய நியாயப் பிரமாணத்தை உடன்படிக்கையை மறந்துவிட்டிருந்தது. அவர்களுடைய காலங்கள் முழுவதும் சமாதானம் கெட்டு, பகையும் யுத்தங்களும் வியாபித்து, மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்ததன் காரணமே தேவனுடைய பிரமாணங்கள் மறக்கப்பட்டுப் போனதுதான் என்றால் மிகையாகாது. இன்று நாம் நிம்மதியற்று வாழுவதற்கு என்ன காரணம்?

மனம் உடைந்த யோசியா ராஜா

தனது எட்டாவது வயதில் ராஜாவான யோசியா தனது இளவயதிலேயே தாவீதின் வழியில் நின்று தேவனைத் தேடினான் (2இராஜா.22,23; 2நாளா.34,35ம் அதிகாரங்கள்). இதன் பலனாக அவன் யூதாவை சுத்திகரித்தான். அந்நிய மேடைகள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டது. யோசியாவைக் குறித்து முன் சொன்னபடியே யாவையும் யோசியா செய்தான். பின்னர் ஆலயம் சுத்திகரிக்கப்பட்டது. அப்போது ஆசாரியனாகிய இல்க்கியா என்பவன் கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். அதை சாப்பான் கையில் கொடுத்து அனுப்பினான். அவன் ராஜாவிடம் போய் சுத்திகரிப்புக் காரியங்களை அறிவித்ததுடன், இல்க்கியா கொடுத்தனுப்பிய புத்தகத்தைக் குறித்தும் கூறி, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். அப்போது யோசியா வெளிப்படுத்திய பதிலுரையை கவனித்திருக்கிறீர்களா? யோசியா கர்த்தரைத் தேட ஆரம் பித்ததாலேதான் அவன் கைகளுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளும் கிடைத்தனவோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

“நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, … இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதே போனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்” (2நாளா.34:19-21). யோசியா, மறக்கப்பட்டுப்போன கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டபோது, உடைந்து போனான்; வஸ்திரங்களைக் கிழிப்பது என்பது மனவேதனையின் மனந்திரும்புதலின் அடையாளம், அத்துடன் அவன் கர்த்தருக்கு முன்பாக அழுதான் (2 நாளா.34:27) என்றும் பார்க்கிறோம். அவனது உள்ளம் உடைந்தது. அதைக் கர்த்தர் கண்டார்.

இதில் கவனிக்கவேண்டியது, கர்த்தருடைய உடன்படிக்கைப் புஸ்தகம் ஆலயத்தில்தான் இருந்தது. ஆனால் அது மறக்கப்பட்டுப் போயிருந்தது. யாரும் அதைத் தேடவுமில்லை; அதில் கவனம் வைக்கவுமில்லை. அதில் எழுதப்பட்டிருந்த தேவனுடைய பிரமாணத்தை மறந்தே போனார்கள். தேவனுடைய மக்கள் தேவனை விட்டு அந்நிய வணக்கத்திற்குள் தங்களை விற்றுப்போட்டதற்கும், தேவனைத் துக்கப்படுத்தி அவருடைய கட்டளைகளின்படி நடக்காமல் போனதற்கும் காரணம், அவருடைய வார்த்தைகள் மறக்கப்பட்டுப்போனதுதான். கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்ட ராஜா, “அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கைகளின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி…” மக்களையும் அந்த உடன் படிக்கைக்கு உட்படுத்தினான் (2நாளா. 34: 31,32). அவன் அப்படியே செய்தபடியால், “அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை” (வச.33). ராஜா தேவனிடத்தில் முகத்தைத் திருப்பியபோது மக்களும் தேவனிடம் திரும்பினார்கள் என்றால், குடும்பத்தின் தலைவன் தலைவி தேவனிடம் திரும்பினால் பிள்ளைகளும் திரும்ப மாட்டார்களா?

இன்று நமது கைகளில் பரிசுத்த வேதாகமம்!

அந்நாட்களில் மக்கள் தேவனுடைய வார்த்தைகளை ஆசாரியர் வாசிக்கக் கேட்டார்கள். ஆனால் இன்று நம்முடைய கைகளில் பரிசுத்த வேதாகமம், தேவனுடைய அன்பின் வார்த்தைகள் அடங்கிய புஸ்தகம் நமது சொந்த பாஷைகளில், ஒவ்வொருவருடைய கைகளிலும், சிலரிடம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. நாம் வேதாகமத்தை வாசிப்பதுடன், ஆலயத்தில் வாசிக்கவும் கேட்கிறோம். ஆனால், இந்த வார்த்தைகள் நமது வாழ்வில் ஏற்படுத்துகின்ற தாக்கம் என்ன? அந்நாட்களில் வேதாகமம் வாசிக்கப்படும்போது சபையார் நாம் எழுந்து நிற்பதுண்டு, அது வார்த்தைக்குக் கொடுக்கின்ற கனம். இன்று அதெல்லாம் மறக்கப்பட்டுவிட்டது. வேதாகமம் நமது கைகளில் இருந்தாலும், அதன் வல்லமை மிக்க வார்த்தைகள் நமது வாழ்வில் கிரியை நடப்பிக்க நாம் அதற்கு எவ்வளவுக்கு இடமளித்திருக்கிறோம்? அதைக் கனப்படுத்தி, வார்த்தைகளினூடாக தேவன் நம்முடன் பேசுவதை உணர்ந்து நடுங்கியிருக்கிறோம்? நம்மில் எத்தனைபேர் வார்த்தைகளின் நிமித்தம் உள்ளத்தில் குத்துண்டு கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறோம். அன்று யோசியா மறக்கப்பட்டுப் போன வார்த்தைகளை வாசிக்கக்கேட்டு கதறி அழுது, மனந்திரும்பி, உடன்படிக்கையைப் புதுப்பித்து, அதில் சொல்லப்பட்டபடியே தானும் நடந்து மக்களையும் நடத்தினான். இன்று நமது காரியம் என்ன?

மறக்கப்படுகிறதா கர்த்தருடைய வார்த்தை?

கர்த்தருடைய வார்த்தை இன்று பழகிப்போன ஒன்றாகிவிட்டதால், அந்த விதத்தில் மறக்கப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கர்த்தருடைய வார்த்தைகள் புரட்டப்படுவதும், மக்களைக் கவரும் வகையில் வார்த்தையைத் திருப்பிப்போடுவதும், இன்னும் பலவிதங்களில் கர்த்தருடைய வார்த்தை மறக்கப்பட்டுப் போகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அன்று இஸ்ரவேலுக்கு அவை கட்டளைகள்; இன்று நமக்கு கர்த்தருடைய வார்த்தை நல்ல சுவிசேஷத்தையும் உள்ளடக்கி, கிறிஸ்துவின் பாதையில் நாம் வாழவேண்டிய பாதைக்கும் வெளிச்சமாக இருக்கின்ற கிருபையின் வார்த்தைகள். அதேசமயம் பாவத்தை உணர்த்தி, நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பைத் தந்து, நித்திய வாழ்வின் நிச்சயத்தையும் வாக்களித்திருக்கும் வார்த்தைகள். இப்படியிருக்க நம்மில் பலரது வாழ்வு தடுமாறி நிற்பது ஏன்? நமக்கும் கர்த்தருக்கும், அதாவது நமக்கும் தேவவார்த்தைக்கும் உள்ள தூரம்தான் என்ன?

வேதம் வாசிக்கிறோம், ஜெபிக்கிறோம்; இந்த இரண்டும் நமக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் வார்த்தை நம் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? நமது வாழ்வு வார்த்தையினால் ஊடுருவக் குத்தப்பட்டு, கறைகள் அகற்றப்பட்டு, நமது சீர்கெட்ட வழிகள் உணர்த்தப்பட்டு, மனந்திரும்பி, புதிய உடன்படிக்கைக்குரிய பிள்ளைகள் நாம் என்ற உணர்வுடன் தேவனுக்குப் பிரியமாய் நடக்கவேண்டுமென்றால், மறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தேவனுடைய வார்த்தை நம் வாழ்வில் புதுப்பிக்கப்பட வேண்டும். நம்மைச் சீர்ப்படுத்தவும், நமது பாவத்தை உணர்த்தவும் மாத்திரமல்ல, நமக்கு யாவையும் போதித்து, இயேசு வாழ்ந்திருந்தபோது சொன்ன யாவற்றையும் நமக்கு நினைப்பூட்டுவதற்கு தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியானவரைத் தந்திருக்கிறாரே. அவர் நமது வாழ்வில் எங்கே?

கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் என்று சொல்லுகின்ற நாம், “…தெரிந்துகொள்ளப் பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்த ஜனமாயும் இருக்கிறோம்” (1பேது.2:9). நாம் சாதாராணமானவர்கள் அல்ல; ராஜரீக ஆசாரியக் கூட்டம். நமது வாழ்வு அதற்கேற்ப இருக்கிறதா? யோசியா ராஜாவுக்கு இருந்த உணர்வு, உடைந்த உள்ளம் நமக்கு இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம்.

இன்று அறிவும் பெருத்து, விஞ்ஞானமும் வளர்ந்து, படிப்புகள் எல்லாம் உச்சத்தை அடைந்து, பல நவீனங்கள் பெருகி, இன்று உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. ஆண்டவர் பிள்ளைகள் கூட இந்த நவீனங்களில் மயங்கி, கர்த்தருடைய வார்த்தைகளுக்குப் புதிய அர்த்தங்களைக் கற்பித்து, மனிதனின் ஆசை இச்சைகளுக்கு ஏற்ப தேவனுடைய வார்த்தைகள் புரட்டப்படுவதைக்கூட பகுத்தறிய முடியாமல் உலகம் போகிற போக்கில் போய்க்கொண்டிருக்கிறோமா? இதோ கர்த்தருடைய வார்த்தை: “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால், நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்” (ஓசி.4:6).

எவ்வளவு பயங்கரமான வார்த்தை இது? இன்று பிள்ளைகள் வாழ்வு கேள்விக்குறி யாயிருப்பதை யாரும் மறுக்கமுடியாது. அப்படியானால் அதற்கு யார் காரணம். கர்த்தருடைய வேதம் நம் வாழ்வில் நேரடியாகவோ மறை முகமாகவோ மறைக்கப்பட்டுப்போகிறதா அல்லது மறக்கப்பட்டுப்போகிறதா? அதனால்தான் நமது பிள்ளைகள் இன்று தங்களுக்கென்று வாழ்வை அமைத்துக்கொண்டு, பெற்றோர் பிள்ளைகள் உறவு தள்ளாடிநிற்கிறதோ என்பதைச் சிந்திப்போமாக. அன்றுபோல இன்று கர்த்தருடைய வார்த்தை தொலைந்துபோகவில்லை, நமது கைகளில் இருக்கிறது; அது நமது இதயத்தில் இருக்கிறதா? “சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்” என்று பவுல் சொன்ன காலம் இதுதானா? வாழ்வின் வழியாக ஒளியாக தேவனுடைய வார்த்தை இருந்தும், இன்று நம் அநேகருடைய வாழ்வு இருண்டுபோயிருப்பது என்ன? யோசியா கர்த்தருடைய பிரமாணங்கள் வாசிக்கக் கேட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு அழுது மனந்திரும்பினான். இன்று தேவனுடைய வார்த்தைக்கு நாம் கொடுக்கும் பதிலுரை என்ன? மறக்கப்படுகின்ற வார்த்தை முற்றிலும் மறக்கப் பட்டுப்போகும் முன்னதாகவே அதைத் தேடி மனந்திரும்புவோமாக.