• எம்.எல்.பிரான்சிஸ் •
(மே – ஜுன் 2024)

யோவான் 13-ஆம் அதிகாரத்தில் இயேசு தன் பிரிவு குறித்துப் பிரஸ்தாபித்தார். அவர் போகும் இடம் எது என்பது சீடர்களுக்குத் தெளிவில்லாத கேள்வியாகவே இருந்தது. அவ்வதிகாரம் காட்டிக் கொடுப்பவன் கதையோடு தொடங்கி மறுதலிப்பவன் கதையோடு முடிவடைகிறது. இயேசு தங்களோடு இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கவே சீஷர்கள் பயப்பட்டனர். அவர்கள் மிகுந்த கவலைக்குள்ளானார்கள். யோவான் 14:1-3 வேதபகுதியில் இயேசு அவர்கள் கவலையைப் போக்கி, பயத்தை நீக்கி, அவர்களது விசுவாசத்தை தட்டி எழுப்பி, நித்தியத்தின் நிச்சயத்தை வாக்குப்பண்ணுகிறார். இதை ஆராய்வதே இச்செய்தியின் நோக்கமாகும்.

அன்று அந்த சீடர்களுக்கு இருந்த கவலையும் பயமும் இன்றும் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படும் பலருக்கு இருக்கவே செய்கிறது. நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதெல்லாம் நடந்துவிடுவதில்லை. நடக்கக்கூடாது என்று பயப்படுகிற காரியங்கள் நடந்துவிடுகின்றன, அதனால் அவர்களுக்கு கவலை வரவே செய்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் வாட்டுகிறது. இப்படியான நிலையிலுள்ளோருக்கு கிறிஸ்து கூறிய அமிர்தமான ஆறுதல் அளிக்கும் வார்த்தைகள் நன்மை பயக்கும் என நான் நம்புகிறேன். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்று இயேசு தொடங்குகிறார். இவ்வார்த்தையை அவரே கொஞ்சம் தீட்டி, சிறிது கூட்டி, “உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக!” (வசனம் 27) என்று பின்னர் கூறியுமுள்ளார். கலங்கிய இருதயங்களும் பயத்தால் பீடிக்கப்பட்ட நெஞ்சங்களும் நிறைவாயுள்ள இக்கால கட்டத்தில் நம்மை தெம்பூட்டும் அர்த்தமுள்ள வார்த்தைகளாய் இவை அமையட்டும்.

இருதயம் பயப்படாதிருக்க வழிவகை சொல்லாதிருந்தால் இயேசுவின் வார்த்தை அதிகம் எடுபட்டிருக்காது. ஆனால், இயேசுவோ பொருத்தமாக, கவலை போக்கும் அரியமருந்தாக விசுவாசத்தை முன்வைக்கிறார். முதலாவது, “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்” என்றும் அடுத்தாற்போல் “என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள்” என்றார் நாம் விசுவாசிக்கவேண்டிய மையப்பொருளாய் பிதாவும் இயேசுவும் வருவதோடு நில்லாது இருவரும் இணைபிரியாதபடி பிணைக்கப்பட்டுள்ளனர். நம் விசுவாசம் தனித்து பிதாவிலோ (தேவனிலோ) அல்லது தனித்து இயேசுவிலோ இருந்தால்மட்டும் போதுமாகாது. இருவரிலும் நமது விசுவாசம் இல்லாவிடில் அது விசுவாசமாகாது. சில பிரிவினர் தனித்து தேவனில்மட்டுமே விசுவாசமாயிருக்கின்றனர். அது முழுமையாகாது. வேறு சில பிரிவினர் இயேசுவில்மட்டும்” என்று விசுவாசத்தை அவரோடு நிறுத்துகின்றனர். இவர்களும் தவறுசெய்கின்றனர் என்பது இயேசுவின் கட்டளையால் தெளிவாகிறது.

விசுவாசம் முக்கிய இடத்தை வகித்து அது பிதாவிலும் குமாரனிலும் நிலைகொள்ளும்போது பயம் பறந்துபோவதையும், கவலை அகன்று போவதையும் முதல் வசனம் நமக்குக் காட்டுகிறது. இது அதன் “இல்லாமற் செய்யும்” (Negative) பயனைச் சுட்டிக் காட்டுகிறது. தொடர்ந்து 2ஆம் 3ஆம் வசனங்கள் விசுவாசம் முன்னெடுத்துச் செல்லும் (Positive) பலா பலனை விளக்குகின்றன. இயேசுவின் நிரத்தர வீடான பிதாவின் வீடு நமக்குரிய வீடாகின்றது. அவ்வீட்டிற்கு இயேசு முதலில் செல்வார். அவர் தனக்கு மட்டுமல்ல. தனக்குரியவர் அனைவருக்கும் அங்கே இடமுண்டு என்பதையும் குறிப்பிடுகிறார். “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு” என்றார். ஆனால், அதற்கு ஆயத்தம் செய்யவேண்டும் என்றும் ஆயத்தம் செய்தபின்னர் தான் திரும்பவந்து (இரண்டாம் வருகை) தனக்குரியவர்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்வதாகவும் வாக்களிக்கிறார்.

முதல் வசனத்தில் குறிப்பிட்டபடி, விசுவாசத்தை உடையோர் மட்டுமே பிதாவின் வீட்டை சுதந்தரித்துக் கொள்வர். இவ்வுலக வாழ்வைவிட்டு விடுதலையாகி பிதாவின் வீடு சென்று நீடுழி வாழ்வர். “என் பிதாவின் வீடு” என்று பெருமிதமாக நாவுறப் பேசுகின்றார் இயேசு! தேவனோடுகூட அவர் வாழ்ந்து வந்த இடம் அது! இயேசுவின் வாழ்வோடு பிணைந்த அந்த வசிப்பிடம், நித்திய வாழ்வோடு நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே நிரந்தரமான நித்திய வீடு – அது தேவனின் வீடு!! அவ்வீடு நமக்கென்றால் அது நம் பாக்கியமே!!

“உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்” (சங்.84:4). “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” என்று 23ஆம் சங்கீதம் முடிகிறதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இயேசு பரலோகத்திற்கு, மோட்சத்திற்கு, தேவன் வாழும் இடத்திற்கு சூட்டிய பெயர் – பிதாவின் வீடு! வீடு என்ற சொல் எல்லோரும் விரும்பும் சொல். இனிக்கும் சொல் அந்த சொல்லையே இயேசு விரும்பி உபயோகித்துள்ளார். தேவன் (பிதாவும் சரி, இயேசுவும் சரி) இல்லாத இடமில்லை. எங்கும் நீக்கமற தேவன் நின்றந்திருக்கின்றார். பாதாளத்திலும்கூட ஒருவகையில் அவர் இருக்கின்றார் (சங்.139:8). இன்னோர் வகையில் தேவன் தமக்குரிய மக்களோடு சிறப்பாக பிரசன்னமாயிருக்கிறார். யாக்கோபு ஆதி.28:17 இல் தேவனின் வீடு என்று உலகில் உள்ள ஓர் இடத்தையே குறிப்பிடுகிறார். ஆலயங்கள் பல “தேவ னுடைய வீடு” என்றே அழைக்கப்பட்டிருக்கிறது, எனினும், தேவனின் வசிப்பிடமாக வாழும் நிரந்தர வீடாக, பரலோகத்தைத் தவிர வேறு இடங்களைக் கருதமுடியாது. பிதாவின் வீடு பற்றி இயேசு சொல்லும்பொழுது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி பிரகடனம் செய்துள்ளார். அவ்வீட்டில் “அநேக வாசஸ்தலங்கள் உண்டு” என்கிறார். வேண்டியளவு விஸ்தாரம் உடையதாய், பலருக்கு இடமளிப்பதாய், இடநெருக்கடியற்றதாய் அவ்விடம் அமைத் திருந்ததையே அது குறிக்கின்றது. இவ்வுலகில் வீடில்லாதோர் பலர், வீடுவாசல் இழந்து தவிப்போர் பலர், அகதிகளானோர் அநேகர். வீட்டுப்பிரச்சனை, இடப்பிரச்சனை இல்லாமல், எண்ணில டங்கா வசிப்பிடங்கள் அங்குண்டு என்பதையே “அநேக வாசஸ்தலங்கள்” குறிக்கிறது.

“அநேக வாசஸ்தலங்கள்” என்று இயேசு சொல்லிவிட்டு அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன் என்கிறார். இதிலிருந்து இதை வலியுறுத்திக்கின்றார் என்பதும், இது உண்மையில் உண்மை என்பதும் வெளியாகின்றது. ஒருசில வசிப்பிடங்கள்மட்டுமே உண்டென்றால் போட்டா போட்டியும், எப்படியாவது அவ்விடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணமும் உதிக்கலாம். ஆனால், பலரை அங்கு அழைத்து போக நாம் முயற்சிக்கலாம். “அநேக” வாசஸ்தலங்கள் அங்குண்டு என்று அறிகிறோம். பிதாவின் வீடாகிய இந்த மோட்சத்தில் இராஜகுமாரனுக்கு (இயேசுவுக்கு) மட்டுமே இடமென்றிராமல் இராஜ குடும்பம் முழுவதுக்குமே அங்கு இடமுண்டு.

இரட்சிக்கப்பட்ட கூட்டமானது எண்ணிக்கை யில் பெரிதானது என்பதை வெளி.7:9இல் “ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” என்று கூறப்படுவதிலிருந்து ஊகித்துக்கொள்ளலாம். இவர்களுக்கெல்லாம் இடமுண்டு, உங்களுக்கு இடமுண்டா? உங்களுக்கு மட்டும் அல்ல; உங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இடமுண்டா? இயேசுவில் விசுவாசம் வைத்தால், அவரை அனுப்பிய பிதாவில் விசுவாசம் வைத்தால் நிச்சயம் இடமிருக்கும். ஆம், இதுவன்றோ ஒருவனுக்கு இன்றைய எந்த சூழ்நிலையில் நின்றும் கவலையை போக்கிவிடும். தமது சீடர்களின் இருதயங்கள் கலங்காதிருக்க விரும்பிய இயேசு, உங்கள் இருதயங்களும் பயம் நீங்கி இருக்க இவற்றைக் கூறுகின்றார்.