• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(மே – ஜுன் 2024)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

கிறிஸ்தவர்களது மார்க்க நூலான வேதாகமம் சாதாரணமானதொரு புத்தகம் அல்ல. இது மற்றைய மத நூல்கள் அனைத்தையும் விட வித்தியாசமான ஒரு புத்தகமாகும். ஏனென்றால் மனிதனை சிருஷ்டித்த தெய்வம் அவனோடு தொடர்பு கொண்டு, அவனோடு பேசிய விஷயங்களே வேதாகமத்தில் உள்ளன.

உண்மையில் தமிழ் மொழியில் “வேதாகமம்” எனும் பதமானது, “இறைவனிடமிருந்து மனிதனுக்கு வந்தெய்திய அறிவு” அல்லது, “தேவனிடமிருந்து மனிதன் அறியப்பெற்றது” எனும் அர்த்தத்தைத் தருவதாயுள்ளது. வேதாகமத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையான “பைபிள்” (Bible) “புத்தகம்” என பொருள்படும் “பிப்லொஸ்” (Biblos) எனும் கிரேக்கச்சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். எனினும் புத்தகமென்றால். “கடவுளால் தரப்பட்டுள்ள புத்தகம்” எனும் கருத்திலேயே கிரேக்கச்சொல் உபயோகிக்கப் பட்டுள்ளது.

அதேபோல் வேதாகமத்தைக் குறிக்கும் மற்றுமொரு ஆங்கில பதமான “ஸ்கிரிப்ச்சர்” (Scripture) எனும் பதம் “எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை” எனும் அர்த்தம் கொண்டது. எனவே. வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். எனவே. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது? எதற்காக எழுதப்பட்டுள்ளது? எவ்வாறு எழுதப்பட்டுள்ளது? எனும் சில அடிப்படைக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய்வோம்.

1.வேதாகமத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?

முதலாவதாக, வேதாகமத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். உண்மையில், வேதாகமத்தில் பலதரப்பட்ட விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்தோடு வேதாகமத்தை தனி ஒரு புத்தகம் என்றும் கூறமுடியாது. இதில் 66 புத்தகங்கள் உள்ளன. “66 புத்தகங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு நூலகமாகவே வேதாகமம் உள்ளது.” (ஸ்டொட்) இந்த 66 புத்தகங்களும் இரு பெரும்பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளன. முதலாவது பகுதி “பழைய ஏற்பாடு” என்றும், இரண்டாவது பகுதி “புதிய ஏற்பாடு” என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாவது பகுதியில் 39 புத்தகங்களும் இரண்டாவது பகுதியில் 27 புத்தகங்களும் உள்ளன. எனினும் இவ்விரு பகுதிகளையும் நம்மால் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது. ஏனென்றால் இரு பகுதிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புற்றுள்ளது. எனவே, “வேதாகமம் பழைய புதிய ஏற்பாடுகள் என இரண்டாக பிரிந்திருக்கின்றதென சொல்வதைவிட, பழைய புதிய ஏற்பாடுகள் எனும் இரு பகுதிகளும் வேதாகமம் எனும் புத்தகத்தில் ஒன்றாக இணைந்துள்ளன என்று சொல்வதே பொருத்தமானது.” (பிளஞ்சார்ட்) வேதாகமத்தில் இவ்வாறு இரு ஏற்பாடுகள் இருக்க காரணம் ஒன்று, இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகுக்கு வருவதற்கு முன் தேவன் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையையும், மற்றது இயேசுகிறிஸ்து இவ்வுலகுக்கு வந்ததின் பின் அவருக்கூடாக தேவன் மக்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் பற்றி எடுத்துரைப்பதேயாகும். ஆனால், ஒரு ஏற்பாடு இல்லாத நிலையில் மற்றது பூர்த்தியற்றதாகவே இருக்கும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாகவே புதிய ஏற்பாடு உள்ளது.

வேதாகமத்தின் இரு ஏற்பாடுகளிலுமுள்ள 66 புத்தகங்களும் ஒரே மாதிரியான புத்தகங்கள் அல்ல, அவை வித்தியாசமான விஷயங்களைக் கொண்டுள்ளன. பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களையும் சரித்திர புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள், தீர்க்கதரிசனப் புத்தகங்கள் என மூன்றாக பிரிக்கலாம். வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமம் முதல் எஸ்தர் வரையிலான 17 புத்தகங்களும் சரித்திரப் புத்தகங்களாகும். இதற்கு அடுத்ததாக உள்ள யோபு முதல் உன்னதப்பாட்டு வரையிலான 5 புத்தகங்களும் சங்கீதப் புத்தகங்களாகும். இதனைத் தொடர்ந்து வரும் ஏசாயா முதல் மல்கியா வரையிலான மீதமுள்ள 17 புத்தகங்களும் தீர்க்கதரிசன புத்தகங்களாகும்.

இதே போல, புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களையும் 3 பகுதிகளாக பிரிக்கலாம். புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயு முதல் அப்போஸ்தலர் வரையிலான முதல் 5 புத்தகங்களும் சரித்திரப் புத்தகங்களாகும். இதில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு புத்தகங்களும் சுவிசேஷ புத்தகங்கள் அல்லது நற்செய்தி புத்தகங்கள் என அழைக்கப்படுகிறது. அதற்கடுத்த புத்தகமான ரோமர் முதல் யூதா வரையிலான 21 புத்தகங்களும் சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களாகவும், கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனப் புத்தகமாகவும் உள்ளது.

பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமம் பிரபஞ்சத்தின் சிருஷ்டிப்புடன் ஆரம்பமாகிறது. தேவனே அனைத்தையும் சிருஷ்டித்துள்ளார் என்பது முதலிரண்டு அதிகாரங்களிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் பாவத்தில் விழுந்தமையால் (3ம் அதிகாரம்) அவனிலிருந்து வந்த மனுக்குலம் முழுவதுமே பாவிகளான மனிதரைக் கொண்டுள்ளது. 4ஆம் அதிகாரம் முதல் 11ஆம் அதிகாரம்வரை பாவத்தின் விளைவுகளைப் பற்றி நாம் வாசிக்கலாம். பாவத்தில் வீழ்ந்த மானிட சமுதாயத்தை மீட்க சித்தங்கொண்ட தேவன், “ஆபிரகாம்” எனும் மனிதனைத் தெரிந்தெடுத்து அவன் மூலமாக தமக்கென ஒரு ஜாதியை ஏற்படுத்தினார். ஆபிரகாமினுடைய அழைப்பு கிட்டத்தட்ட கி.மு.2000 அளவில் நடைபெற்றதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஆதியாகமத்தின் 12ம் அதிகாரத்தில் இருந்து கடைசிவரை, ஆபிரகாமின் சந்ததியாரான ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்போருடைய வாழ்வுச்சரிதை சித்தரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேல் எனும் மறுநாமமுள்ள யாக்கோபினுடைய 12 பிள்ளைகளுமே தேவன் தெரிந்தெடுத்த இஸ்ரவேல் ஜனங்களின் பிதாக்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் பஞ்சம் காரணமாக எகிப்து தேசத்திற்கு சென்றனர். இச்சமயம் யோசேப்பு எகிப்தின் அரசாட்சியில் முக்கிய மனிதனாக விளங்கினான். ஆதியாகமம் யோசேப்பின் மரணத்தோடு முற்றுப்பெறுகிறது.

மோசேயினுடைய மரணத்தின் பின் அவனு டைய உதவியாளனான யோசுவா என்பவன் இஸ்ரவேல் மக்களுக்கு தலைமை தாங்கினான். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டன. எகிப்திலிருந்து வந்தவர்களில் யோசுவா, காலேப் என்பவர்கள் தவிர மற்ற அனைவரும் மரித்துவிட்டனர். இப்போது அவர்களுடைய பிள்ளைகளே யோசுவாவின் தலைமையில் வாக்குத்தத்த நாட்டிற்குள் சென்றனர். வேதாகமத்தின் ஐந்தாவது புத்தகமான யோசுவா, இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு வாக்குத்தத்த நாட்டைக் கைப்பற்றி அதைத் தமது 12 கோத்திரங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டனர் என்பதை அறியத்தருகிறது. ஆறாவது புத்தகமான நியாயாதிபதிகள், இஸ்ரவேல் மக்களது 200 வருட கால சூழ்நிலையைப் பற்றிய சரித்திரத்தை அறியத் தருகிறது. இக்காலத்தில் 12 நியாயாதிபதிகள் காலத்துக்கு காலம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்தனர். இதற்கு அடுத்த எட்டாவது புத்தகமான ரூத், மேசியாவின் மூதாதையான ரூத் எனும் மோவாபியப் பெண்ணினுடைய சரிதையைக் கொண்டுள்ளது.

வேதாகமத்தின் ஒன்பதாவது புத்தகமான முதலாம் சாமுவேல், நியாயாதிபதிகளின் இறுதிக் காலத்தில் இருந்து இஸ்ரவேல் மக்களுடைய சரித்திரத்தை ஆரம்பிக்கின்றது. இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்த சாமுவேலினுடைய பேச்சுக்கு செவி கொடாத இஸ்ரவேல் மக்கள், மற்றைய நாட்டினரைப்போல் தங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என கேட்டமையால் தேவன் சவுல் என்பவனை அவர்களுக்கு இராஜாவாக கொடுத்தார். இவனே இஸ்ரவேலின் முதலாவது இராஜா, இவன் கி.மு. 1050இல் இஸ்ரவேலின் அரசனாகி 40 வருடங்கள் ஆட்சி செய்தபோதிலும் இவனது அரசாட்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனால் தேவன் இவனுக்குப் பதிலாக தாவீதை கி.மு.1010இல் இஸ்ரவேலின் அரசனாக்கினார். தாவீதும் இஸ்ரவேலை 40 வருடங்கள் ஆண்டான். தாவீதினுடைய ஆட்சி காலத்தைப் பற்றியே வேதாகமத்தின் பத்தாவது புத்தகமான இரண்டாம் சாமுவேல் அறியத்தருகிறது. தாவீதுக்குப் பின் கி.மு.970இல் அவனுடைய மகனான சாலொமோன் ஆட்சிப் பொறுப்பேற்று 40 வருடங்கள் அரசாண்டான். இவனது ஆட்சிக்காலம் பற்றி பதினோராவது புத்தகமான முதலாம் இராஜாக்கள் புத்தகத்தின் முதற் பகுதியில் வாசிக்கலாம்.

சாலொமோனுடைய ஆட்சிக்குப் பிறகு அதாவது, கி.மு.930 இல், இஸ்ரவேல் இராஜ்யமானது இரண்டாகப் பிரிவடைந்தது. இஸ்ரவேலின் 12 கோத்திரத்தில் 10 கோத்திரங்கள் “யெரொபெயாம்” என்பவனுடைய தலைமையின் கீழ் வட இராஜ்யம் என்றும், மீதமுள்ள 2 கோத்திரங்களும் சாலொமோனுடைய மகனான “ரெகொபெயாம்” இன் தலைமையின் கீழ் தென் இராஜ்யம் என்றும் பிரிவடைந்தது. இதன்பின் வட இராஜ்யம் இஸ்ரவேல் என்றும். தென் இராஜ்யம் யூதா என்றும் அழைக்கப்படலாயிற்று. முதலாம் இராஜாக்கள் 12ஆம் அதிகாரம் முதல், இதற்கடுத்த 12வது புத்தகமான இரண்டாம் இராஜாக்கள் முழுவதும் பிரிவடைந்த இவ்விரு இராஜ்ங்களினதும் சரித்திரத்தைப் பற்றி வாசிக்கலாம். இதேசமயம் இதற்கடுத்த 13ம் 14ம் புத்தகங்களான முதலாம் இரண்டாம். நாளாகமப் புத்தகங்கள், இரண்டாம் சாமுவேல் முதலாம் இரண்டாம் இராஜாக்கள் புத்தகங்களின் சரித்திரத்தையே கொண்டுள்ளன.

பத்து கோத்திரங்களைக் கொண்ட வட இராஜ்யமான இஸ்ரவேல் கி.மு.722இல் அசீரியர்களினால் கைப்பற்றப்பட்டு மக்கள் சிதறடிக்கப்பட்டனர். இத்தோடு இந்த இராஜ்யத்தின் சரித்திரமும் முடிவடைந்துவிடுகிறது. ஆனால் தென் இராஜ்யமான யூதா கி.மு. 586இல் பாபிலோனியரினால் கைப்பற்றப்பட்டு மக்கள் பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டாலும் கூட, கி.மு.538இல் ஒரு பகுதியினர். செருபாபேல் என்பவனுடைய தலைமையில் தம் சொந்த நாட்டுக்கு சென்றனர். அதன் பின் கி.மு.458 இலும் 445 இலும் எஸ்றா. நெகேமியா என்போரது தலைமையில் ஏனையோர் நாடு திரும்பினர். இச்சரித்திரம் பற்றி வேதத்தின் 15ம் 16ம் புத்தகங்களான எஸ்றா / நெகேமியா என்பன அறியத்தருகின்றன. பழைய ஏற்பாட்டின் 17 வது சரித்திர புத்தகமான எஸ்தர், பேர்சிய அரசியாக இருந்த ஒரு யூதப் பெண்ணுடன் சம்பத்தப்பட்ட சரித்திரத்தைக் கூறுகிறது.

பழைய ஏற்பாட்டின் இரண்டாவது பகுதியான கவிதைப் புத்தகங்களில் யோபு முதல் உன்னதப் பாட்டு வரையிலான 5 புத்தகங்கள் உள்ளன. இவை கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளதோடு மக்களது ஞான உபதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் முதலாவது புத்தகமான யோபு, துயரப்பட்ட ஒரு மனிதனுடைய சரிதையாகும். இதற்கடுத்துள்ள இரண்டாவது புத்தகமான சங்கீதம் ஏறக்குறைய 1000 ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட பலதரப்பட்ட கவிதைகள் பாடல்கள் என்பவற்றின் தொகுப்பு நூலாகும். யூத மக்களது பாடல் புத்தகமாக கருதப்பட்ட இது. ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது (1-41, 42-72, 73-89, 90-106, 107-150). இதற்கு அடுத்த மூன்றாவது புத்தகமான நீதிமொழிகள் நடைமுறை வாழ்வுக்கு அவசியமான ஞானபோதனைகளைக் கொண்டுள்ளது. அதேபோல நான்காவது புத்தகமான பிரசங்கி, வாழ்வின் அர்த்தத்தைப் பற்றிய அனுபவரீதியான ஞானப்போதனையைக் கொண்டுள்ளது. சங்கீதப் புத்தகங்களில் கடைசிப் புத்தகமான உன்னதப்பாட்டு மானிட காதல் வாழ்வைப்பற்றிய பாடல்களைக் கொண்டுள்ளது.

பழைய ஏற்பாட்டின் மூன்றாவது பகுதி 17 தீர்க்கதரிசனப் புத்தகங்களைக் கொண்டுள்ளது. இவை முறையே பெரிய தீர்க்கதரிசிகள் சிறிய தீர்க்க தரிசிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவு புத்தகங்களின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும். ஏசாயா முதல் தானியேல் வரையிலான 5 புத்தகங்களும் பெரிய தீர்க்கதரிசிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஏசாயா, எரேமியா என்போர் சிறையிருப்புக்கு முன்பும், எசேக்கியேல், தானியேல் என்போர் சிறையிருப்பின்போதும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஓசியா முதல் மல்கியா வரையிலான 12 சிறிய தீர்க்கதரிசிகளுள் ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா. நாகூம் ஆபகூக் செப்பனியா என்போர் சிறையிருப்புக்கு முன்பும், ஆகாய், சகரியா மல்கியா என்போர் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பின்பும் பணியாற்றியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான மல்கியாவிற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவிற்கும் இடையே 400 ஆண்டு கால இடைவெளி உள்ளது. இக்காலகட்டத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு எவ்வித தேவ வெளிப்படுத்தல்களும் கொடுக்கப்படாத போதிலும் தானியேல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின. குறிப்பாக நேபுகாத்நேச்சார் கண்ட பெரிய சிலையைப் பற்றிய தரிசனத்தின்படி (தானி. 2.8) பல ராஜ்யங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் இக்காலகட்டத்தில் கவனிக்கலாம். இதன்படி கி.மு. 605 இல் இருந்து கி.மு. 539 வரை பாபிலோனிய ராஜ்யமும், கி.மு. 539 – கி.மு. 331 வரை மேதிய பேர்சிய இராஜ்யமும், கி.மு. 331 – கி.மு. 63 வரை கிரேக்க இராஜ்யமும் புகழ்பெற்று விளங்கியது. கி.மு. 63 இல் எழுச்சியுற்ற ரோம இராஜ்யம் புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் இருந்தது. இக்காலகட்டத்தில் இஸ்ரவேல் மக்களது சரித்திரம் பற்றி இரு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட நூல்கள் மூலமாக அறிந்திடலாம்.

புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுள் மத்தேயு முதல் அப்போஸ்தலர் வரையிலான 5 புத்தகங்களும் சரித்திர புத்தகங்களாகும். இவற்றுள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எனும் முதல் நான்கும் இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி அறியத்தருகிறது. 5வது புத்தகமான அப்போஸ்தலர் கிறிஸ்தவ சபையின் தோற் றத்தையும் வளர்ச்சியையும் பற்றி கூறுகின்றன. இதனைத் தொடர்ந்துள்ள சபைகளுக்கு எழுதப்பட்ட 21 கடிதங்களில் ரோமர் முதல் எபிரெயர் வரையிலான 14 கடிதங்களும் பவுலினால் எழுதப்பட்டவை. இதனைத் தொடர்ந்து யாக்கோபினால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் பேதுருவினால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களும் யோவானினால் எழுதப்பட்ட மூன்று கடிதங்களும் யூதாவினால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் உள்ளது. புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தல் ஒரு தீர்க்க தரிசனப் புத்தகமாகும். இது இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை அறியத்தருகிறது. புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும் கி.பி.முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவைகளாகும்.

(தொடரும்)