• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(மே – ஜுன் 2025)

என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். பின்பு அவர் பெத்தானியா வரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார் (லூக்.24:49,50).

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, ஆண்டவருடைய புண்ணிய நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

திருமறையிலே கிறிஸ்துவின் பரமேறுதலைக் குறித்து பல வசனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் பிறப்பு எவ்வளவு முக்கியமோ கிறிஸ்துவின் பாடுகள் எவ்வளவு முக்கியமோ கிறிஸ்துவின் அற்புதங்கள் எவ்வளவு முக்கியமோ கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எவ்வளவு முக்கியமோ கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை எவ்வளவு முக்கியமோ அதேபோல பரமேறுகிற அந்த நிகழ்வும் முக்கியமானது! ஒரு வேதபண்டிதர் எழுதும்போது இப்படி எழுதுகிறார்: பரமேறுகிற அந்த சம்பவமானது ஆண்டவராகிய இயேசுவானவர் செய்த அநேக அற்புதங்களிலே மிகச்சிறந்த உன்னதமான அற்புதமாகும் என்று எழுதுகிறார். அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப்பிரிந்து அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (லூக்.24:51). ஆகவே நம்மு டைய ஆண்டவராகிய இயேசுவானவர் தான் பரமேறுவதற்கு முன்பாக சீடர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும்போதே அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அருமையானவர்களே, யோனா மீனின் வயிற்றிலே மூன்று நாட்கள் இருந்ததை நாம் அற்புதமாக எண்ணுகிறோம். அதேபோல நோவா கட்டின அந்த பேழையிலே எல்லா மிருகங்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தது. மற்றும் எல்லா மிருகங்களுக்கு உரிய ஆகாரத்தையும் நோவா ஆயத்தம் பண்ணியிருந்தார் ஆகிய இவையாவும் நம்முடைய வாழ்க்கையிலே மிகுந்த அற்புதமாக காணப்படுகிறது.

அதேபோலத்தான் இந்த உலகத்திலே நமது ஆண்டவருடைய பரமேறுதல் மிகவும் முக்கியமானது. பரமேறுதல் மூலமாக ஆண்டவருடைய திருப்பணி நின்றுவிடவில்லை; திருப்பணி இன்னும் தொடருகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையை இந்த உலகத்திற்கு தருவதாக இயேசு வாக்கு கொடுத்ததையும், அவர் நமக்கு மத்தியஸ்தராகவும் ஆசாரியனாகவும் இருக்கிறதைக் குறித்தும், மீண்டும் ராஜாவாக நியாயாதிபதியாக வருகிறார் என்பதையும் குறித்து திருமறை நமக்குப் போதிக்கிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரமேறி சென்றதினால் நாம் அடைந்திருக்கிற மூன்று விதமான ஆசீர்வாதங்களைக் குறித்து தொடர்ந்து தியானிப்போம்.

1. கிறிஸ்துவின் வல்லமை

முதலாவது, ஆண்டவராகிய இயேசு பரமேறி சென்றதினால் வருகிற ஆசீர்வாதம் என்னவெனில், கிறிஸ்துவினுடைய வல்லமையும் அதிகாரமும் அங்கு வெளிப்படுகிறது. எபேசியர் 1:20-22 வசனங்களை வாசித்துப் பாருங்கள். எபேசியர் நிருபத்தை நிருபங்களின் ராணி என்று அழைப்பார்கள். இது திருமறையிலே உள்ள நிருபங்களிலே மிக ஆழமான கருத்துக்கள் நிறைந்த ஒரு நிருபம் ஆகும். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்ன தங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்று எபேசியர் 1:20இல் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்.

எல்லாத் துரைத்தனங்களையும் அதிகாரத்தையும் வல்லமையையும் இயேசுகிறிஸ்து தம்முடைய பாதங்களுக்கே கீழாகக் கொண்டுவந்தார் என்று பவுல் எழுதுகிறார். கிறிஸ்து பரமேறிச் சென்றதால் உண்டான முதல் ஆசீர்வாதம் என்னவெனில், கிறிஸ்துவின் வல்லமை அங்கு விளங்குகிறதை நாம் பார்க்கிறோம். கிறிஸ்துவின் வல்லமை என்றால் என்ன? அது எல்லா வல்லமைக்கும் மேலான ஒரு வல்லமையாகும்! அவர்தான் இந்த உலகத்தை ஆளுகிறவர்! அவர்தான் இந்த உலகத்தைக் கட்டுப்படுத்துகிறவர்! அவருக்கு கீழேதான் எல்லா ராஜ்ஜியங்களும் இருக்கிறது! எல்லா அதிகாரங்களும், துரைத்தனங்களும் இருக்கிறது! இயேசு கிறிஸ்து பரமேறிச்செல்லும் முன்பதாக, … அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத். 28:18) என்றார். அவரிடத்திலேமாத்திரம் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் எபேசியர் 1:20-23 வேதபகுதியிலே நாம் பார்க்கிறோம். அருமையானவர்களே, கிறிஸ்து பரமேறிச் சென்றதாலே நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் என்னவென்றால், கிறிஸ்துவினுடைய வல்லமை மற்றும் அதிகாரம் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

அவருக்கு கீழேத்தான் எல்லா அதிகாரங்களும் இருக்கிறது. அவருக்கு மேலான அதிகாரம் ஒன்றுமில்லை; அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறவராக ஆளுகிறவராக காணப்படுகிறார். அதாவது, God control everything என்று சொல்லலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்கிற ஒரு பெரிய விஞ்ஞானி இருந்தார். அந்த விஞ்ஞானியினிடத்திலே ஒரு முக்கியமான கேள்வி கேட்கவேண்டும் என்றனர். அதாவது, இந்த உலகமானது சிநேகிக்கக் கூடிய ஒன்றா? எனக் கேட்டார்கள். அப்போது அவர் சொன்னார்: உண்மையாகவே சிநேகிக்கக் கூடியதுதான்; ஏனென்றால் கிறிஸ்து இந்த உலகத்தை ஆளுகிறதினாலேயும் எல்லா காரியங்களும் அவருக்குக் கீழாக இருப்பதினாலும் உலகம் சிநேகிக்கக்கூடியதுதான் என்று சொன்னார்.

எனவே அருமையானவர்களே, கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்தும் அதிகாரத்தைக் குறித்தும் சந்தேகப்படாதிருங்கள். அவர் சகல அதிகாரமும் பெற்றவராக பிதாவின் வலது பாரிசத்தில் உட் கார்ந்து இருக்கிறார்.

2. கிறிஸ்துவின் வாக்குத்தத்தம்

இரண்டாவது ஆசீர்வாதம் என்னவெனில், பரிசுத்தஆவி பொழிந்தருளப்படுதலைக் குறித்த வாக்குத்தத்தம்! யோவான் 16:7ஆம் வசனத்தை வாசித்துப் பாருங்கள். “நான் உங்களுக்கு உண்மையை சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” என்று இயேசு சொன்னார். அப்படியானால் கிறிஸ்து பரமேறின பின்புதான் அங்கு பரிசுத்த ஆவியினுடைய நிறைவு பொழிந்தருளப்படுகிறது. நான் போனால்தான் பரிசுத்த ஆவியானவர் வருவார் என்று இதைத்தான் ஆண்டவராகிய இயேசு மிகத் தெளிவாகச் சொன்னார்.

அருமையானவர்களே, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரமேறியது அவர் உயிர்த்தெழுந்த நாளுக்கு பிற்பாடு 40வது நாள் ஆகும். அதற்குப் பின்வந்த பெந்தெகொஸ்தே நாளில் அதாவது, ஐம்பதாவது நாளிலே ஆவியானவர் ஊற்றப்படுகிறார்.

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் இயேசு (அப்.1:8). அப்படியானால், வேத வசனத்தின் அடிப்படையிலே பரிசுத்த ஆவியானவர் வரும்பொழுதுதான் நாம் பெலனடைகிறோம், அவருக்கு நாம் சாட்சியாய் மாறுகிறோம்.

அருமையான என் சகோதர சகோதரிகளே, பரிசுத்த ஆவியானவருடைய நிறைவு வந்தபோதுதான் பேதுரு பலப்பட்டார். மறுதலித்த பேதுரு அன்று ஆவியின் நிறைவை பெற்றபடியினால் அங்கே திருச்சபை நடத்துகிற தலைவராய் மாறினார். அப்போஸ்தலர் 4:13ஆம் வசனத்தைப் பாருங்கள்: பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். இதற்கு காரணம் என்ன? பரிசுத்தாவியின் பெலத்தினாலே அவர்கள் நற்செய்தியை அறிவித்தனர். ஆவியானவருடைய நிறைவினாலே அவர்கள் ஆண்டவருக்காக பாடுபட்டனர். மரணத்தை அவர்கள் எளிமையாக சந்தித்து ஆண்டவரைக் கனப்படுத்தினர். ஆவியானவருடைய பெலத்தினாலே தடைகளை உடைத்து நற்செய்தியைப் பரப்பினார்கள். சபை இல்லாத இடங்களில் சபைகளை உருவாக்கினார்கள். கிறிஸ்து பரமேறிச் சென்றதால் நாம் பெற்ற முதல் ஆசீர்வாதம் வல்லமை என்று பார்த்தோம். இரண்டாவது ஆசீர்வாதம் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதைக் குறித்த வாக்குத்தத்தம். நான் போவேனேயானாகில் தேற்றரவாளன் உங்களிடத்தில் வருவார் என்று சொன்னாரே; அந்த வாக்குத்தத்தம் யோவான் 16:7ஆம் வசனத்தின்படி அது நிறைவேறியது.

3. கிறிஸ்துவின் பிரசன்னம்

மூன்றாவதாக, இயேசுவின் பரமேறுதலினால் நாம் பெற்ற ஆசீர்வாதம் அவருடைய பிரசன்னம் (Presence of God). அருமையானவர்களே, பூமியில் இருந்த நாட்களிலே அவருடைய பணி குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் இருந்தது. மனிதகுமாரனாய் தேவகுமாரனாய் நடமாடியபோது ஒரே இடத்தில்தான் இயேசுவானவர் திருப்பணி செய்தார். ஆனால், அவர் பரமேறின பிற்பாடு, பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக இன்றைக்கு உலகத்தினுடைய எல்லாப் பகுதிகளிலும் அவரது பிரசன்னம் வெளிப்படுகிறது. அவருடைய வல்லமை காணப்படுகிறது.

மார்ட்டின் லூத்தர் 1523ஆம் ஆண்டில் “பரமேறின பிற்பாடு இயேசுவானவர் அனுப்பின பரிசுத்த ஆவியினுடைய வல்லமையினாலே இன்றுவரையிலும் அவருடைய பிரசன்னத்தை நாம் ஒவ்வொரு இடங்களிலேயும் உணர்கிறோம்” என்று இதைக் குறித்து எழுதுகிறார். இன்றைக்கு ஆள்தத்துவத்தில் அல்லது நேரடியாக அவரை நாம் தரிசிக்காவிட்டாலும் ஆவியானவர் மூலமாக அவருடைய பிரசன்னம், வல்லமை, அவருடைய செயல், அவருடைய வழிநடத்துதல் ஆகிய யாவற்றையும் அறிந்துகொள்கிறோம். “அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்” (மாற்கு 16:20).

இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற சகோதர சகோதரிகளே, ஆவியானவர் மூலமாக செயல்படுகிற அவரது பிரசன்னத்தை இன்றைக்கும் உணர்ந்து அதை அனுபவித்து வருகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்! இயேசு பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறதினாலே நமக்காக பல காரியங்களை செய்துவருகிறார். இன்றைக்கு ஆண்டவருடைய பிரசன்னத்தை நாம் உணருகிறோம். அவர் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து எனக்காக உங்களுக்காக அவர் பிதாவினிடத்தில் பிரார்த்தனை செய்கிறவராக இருக்கிறார்; நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் பரிந்துபேசுகிற ஒரு பெரிய பிரதான ஆசாரியராக இருக்கிறார். யூத மார்க்கத்திலே ஒரு பிரதான ஆசாரியன் ஐனங்களுக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிற மனிதனாய் கிருபாசனத்தண்டைக்கு செல்வான்.

ஆனால், நம்முடைய ஆண்டவரோ நமக்காக அவர் பிரதான ஆசாரியராய் பிதாவினுடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து ஜெபிக்கிறார். எனக்காக யார் ஜெபிப்பார்கள்? என்று அடிக்கடி நானும் எண்ணுவது உண்டு. எங்களுக்காக யார் ஜெபிப்பார்கள்? என்று பலர் என்னிடத்தில் அங்கலாய்ப்பதும் உண்டு. நான் அவர்களிடத்தில் சொல்வது என்னவென்றால், யார் உங்களுக்காக ஜெபிக்கிறார்களோ இல்லையோ, யார் உங்களுக்காக வேண்டுதல் பண்ணுகிறார்களோ இல்லையோ, ஆண்ட வராகிய இயேசுவானவர் பரமேறிய பிற்பாடு பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து பிரதான ஆசாரியரைப்போல உங்களுக்காக ஜெபிக்கிறார்; அவர் பரிந்து பேசிவருகிறார். ஏன் நீங்கள் கலங்குகிறீர்கள்? உற்சாகமாய் இருங்கள் என்று நான் அவர்களை உற்சாகப்படுத்துவேன்.

“மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லமையுள்ளவராயுமிருக்கிறார்” (எபி.7:25).

உங்களுக்குத் தெரியுமா? 

நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல; நடப்பது ஒவ்வொன்றிலும் தேவதிட்டம் சரியாக நிறைவேற நாம் ஏதுவாயிருக்கிறோமா என்பதில்தான் நாம் கவனமாயிருக்க வேண்டும்.