வாழ்வின் ஒரே நோக்கம்!
தியானம்: 2025 அக்டோபர் 1 புதன் | வேதவாசிப்பு: ரோமர் 8:28-32

அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29).
நம்மை இதுவரை பாதுகாத்து வழிநடத்தின தேவன் இப்புதிய மாதத்தையும் காண செய்தபடியால் அவரைத் துதிப்போம். வாசகர்கள் அனைவரின் குடும்பத் தேவைகள் சந்திக்கப்படவும் கைகளின் பிரயாசங்களை தேவன் ஆசீர்வதிக்கவும் ஊக்கமாக ஜெபிக்கிறோம். என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமியா 33:3) என்று வாக்களித்தவர் நம்மை கைவிடாமல் வழிநடத்துவார்.
‘மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.’ இன்றும் ஏராளமானோருடைய பிரச்சனையும் இதுதான். நாமும்கூட பல சந்தர்ப்பங்களிலே எல்லாமே பொய் என்று சொல்லிவிடுகிறோம். நமது சூழ்நிலை அப்படி நினைக்கவும் சொல்லவும் செய்கிறது. வாழ்வே வெறுத்து, கடவுள் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று கேட்குமளவிற்கு சிலசமயம் மனமொடிந்து போகிறோம். திகைக்க வைக்கும் வியாதி, நம்பிக்கைத் துரோகம், மலிந்துவிட்ட மரணம், தொலைந்திடும் உறவு; இப்படிப்பட்டதான நெருக்கடிகளுக்குள் அகப்படுகிறவர்களால் கேள்விகளை எழுப்பாமல் இருக்கமுடியாதுதான். அதற்காக அன்றைய பிரசங்கியைப்போல தேவபிள்ளைகளாகிய நாமும் இந்தச் சூழ்நிலைகளில் இன்று தடுமாறலாமா?
நம்மில் பலர் அறிந்ததொரு உதாரணம் இது. தன் வேலையை மகனின் தொந்தரவின்றி செய்வதற்காக, ஒரு உலக வரைப்படத்தை துண்டுதுண்டாகக் கிழித்துவிட்டு, திரும்பவும் ஒன்றுசேர்க்கும்படி மகனிடம் கொடுத்தார் அப்பா. இதனைப் பொருத்துவது சிறுவனுக்குக் கடினம் என்பது அப்பாவின் எண்ணம். ஆனால் ஒரு ஐந்து நிமிடத்துக்குள், “முடிந்தது” என்ற சத்தம்கேட்டு திடுக்கிட்டார் அப்பா. அவ்வளவு சீக்கிரத்தில் எப்படி முடித்தாய் என்றார் அப்பா. “அப்பா, இத் துண்டுகளின் மறுபக்கத்தில் ஒரு மனிதனின் பகுதிகளைக் கண்டேன். மனிதனைச் சரியாகப் பொருத்தினேன்; உலகப்படம் வந்துவிட்டது” என்றான் மகன். மனிதன் சரியானால் உலகம் சரியாகும் என்பது உண்மைதான். ஆனால் மனிதன் சரியாக, அவன் தன்னை, தன் நோக்கத்தைத் தானே அறியவேண்டுமே!
தேவபிள்ளையே, சூழ்நிலைகளையும் சூழ இருக்கிறவர்களையும் நோக்குவதால்தான் அநேக குழப்பங்களுக்கு பதில் கிடைப்பதில்லை. முதலாவது நம்மையும் நமது பார்வையையும் சரிப்படுத்தவேண்டும். அதற்கு நமது வாழ்வின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தேவகுமாரனுடைய சாயலுக்கு நாம் ஒப்பாக வேண்டும் என்பதுதான் நம்மை படைத்தவருடைய ஒரே நோக்கம் என்பதை வேதாகமம் நமக்குத் தெளிவாகப் போதித்திருக்கிறது. நமது ஒவ்வொரு அசைவும் மூச்சும் அந்த ஒரே நோக்கத்தையே வெளிப்படுத்தவேண்டும்.
ஜெபம்: அன்பின் தேவனே, இந்த புதிய மாதத்தை எங்களுக்கு ஆசீர்வதித்தருளும். எங்களை முன்னறிந்து, பேர் சொல்லி அழைத்து குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்காகவே தெரிந்துகொண்டீர். இம்மகா நோக்கம் நிறைவேற எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.