நான் அறியாத ஒரு வெற்றிடம்!

தியானம்: 2025 அக்டோபர் 15 புதன் | வேதவாசிப்பு: எபேசியர் 2:1-13

YouTube video

காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை (பிரசங்கி 1: 8).

அங்கலாய்ப்பும் மனஉளைச்சலும் ஏற்படக்கூடிய சூழ்நிலையிலேயே நாம் வாழுகிறோம். ஒரு பக்கத்தில் நாம் எதையோ சாதிக்கையில் இன்னொரு பக்கத்தில் இருமடங்கு வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடுகிறது. அந்தவேளையில் பலவிதமான கேள்விகள் நமக்குள் எழும்புகின்றன. நான் கர்த்தருடைய சித்தத்துக்குள் இருக்கிறேனா? இருந்தால் ஏன் இந்த வெறுமையும் சலிப்பும்? எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தோல்வியில் முடிந்தால், இனி என்ன செய்வது? ஒரு சகோதரி இவ்விதம் சொன்னாள்: “நான் நன்றாக உழைக்கிறேன். ஆனால், எனக்குத் திருமணமாகவில்லை. நான் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” இன்னொருவர் கேட்டார், “நான் இதுவரை சாதித்து சந்தோஷப்பட்டவை ஏராளம். ஆனால், அவற்றில் ஏதாவது முதுமையில் எனக்கு ஆறுதலைத் தருமா?” ஆம், “இனி நமக்கு என்ன நடக்கப்போகிறது” என்பதுதான் நம் எல்லாருக்குள்ளும் ஒளிந்து இருக்கின்ற ஒரு கேள்வி. இந்த நிலையில்தான் நம்மில் பலர் போராடிக்கொண்டிருக்கிறோம்! இதற்கெல்லாம் என்ன காரணம்? பிரசங்கி சொல்லுகிறார், நமது கண்களும் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. காதுகளும் கேட்டது போதும் என்று நிறுத்தி விடுவதில்லை. அதாவது நமக்குள்ளேயே நம்மையும் அறியாத, நம்மை மீறிய ஒரு வெற்றிடமிருக்கிறது. குண்டு வெடித்த இடத்திலுள்ள பெரிய கிடங்கைத் தான் நிரப்பினாலும், மனதில் தோன்றும் வெற்றிடத்தை நிரப்புவது கடினம்.

ஆனால் சாலொமோன் ராஜா, அதை நிரப்பும் வழியைக் கண்டறிந்தார். கர்த்தருக்கு சேவை செய்வதால் இந்த வெற்றிடம் யாவையும் கர்த்தருக்குள் நிரப்பலாம் என்ற உண்மையை அவர் காலம் கடந்து கண்டுகொண்டதால், அதனை நமக்கு ஒரு சவாலாக விடுக்கிறார். இந்த சவாலுக்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்; அவருக்குள்ளே உயிர்த்தெழுந்தவர்கள். முன்னே தூரமாயிருந்த நாம் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தாலே தேவனுக்கு சமீபமாயிருக்கிறவர்கள். சாலொமோனுக்குக் கிடைக்காத பெரிய பாக்கியம் இன்று நமக்குண்டு. அப்படியிருக்க ஏன் இந்தத் தடுமாற்றம்? “ஆண்டவர், தம்முடைய குமாரனை நமக்குக் கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தினார்” என்பது உண்மை. அதை அறிந்துகொண்டும், மேலும் பாவத்தோடு விளையாடும் நம்மை இன்னமும் ஆண்டவர் பொறுத்துக் கொண்டிருக்கிறாரே; அவரது அன்பை நாம் அசட்டை பண்ணலாமா?

தேவபிள்ளையே, சாலொமோனைப்போல நமது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்படி தேவன் இன்று நம்மை அழைக்கிறார். நமக்குள் இருக்கும் வெற்றிடங்களை நிரப்ப அவர் தயாராகவே இருக்கிறார்! நாம் அவரைக் கிட்டிச்சேருவோமா!

ஜெபம்: எங்கள் பரமபிதாவே, எங்கள் மனதின் வெற்றிடங்களை உமதன்பினால் நிரப்பும். தேவ அன்பை அசட்டை பண்ணுகிற பாவங்களிலிருந்தும் எங்களை இரட்சியும். இயேசுவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே. ஆமென்.