சத்திய வசனம் பங்காளர் மடல்

மே-ஆகஸ்ட் 2021

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே நம்மை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரான இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்..

2021 ஆம் ஆண்டை ஆரம்பித்த நாம் ஏழு மாதங்களை கடந்துவர தேவன் நமக்கு கிருபை செய்துள்ளார். நாம் கடந்து வந்த பாதையில் நமது தேசத்தில் நேர்ந்த சம்பவங்களையும் நிகழ்வுகளையும் நோக்கும்போது நாம் மனங்கலங்காமலோ வேதனையடையாமலோ இருந்திட முடியாது. ஏனென்றால் உருமாறிய கொரோனா வைரஸினால் ஏற்பட்ட கோரதாண்டவம் மக்களை கதிகலங்க வைத்து விட்டது. மனிதனுடைய வாழ்வு எவ்வளவு நிலையற்றது என்பதை நாம் உணரமுடிகிறது. நமது குடும்பத்திலோ நமது உறவினர் குடும்பத்திலோ நமது திருச்சபைகளிலுள்ள குடும்பத்திலோ அல்லது நமது நெருங்கின நண்பர் குடும்பத்திலோ ஒரு மரணமாவது நேரிடாமல் இல்லை. நமது விசுவாச பங்காளர்களின் குடும்பங்களிலும் நேர்ந்த மரணங்களுக்காக மிகவும் மனம் வருந்துகிறோம். நமது ஜெபங்களைக் கேட்டு சுகமடைந்தவர்களுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம். கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்திருக்கின்ற நிலையில் நாம் மனந்தளராமல் தேவசமுகத்தில் நின்று தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் மன்றாடுவோம். ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும் (எரே.9:1).

2021 மே மாதத்திலிருந்து தொடர்ந்து நடைமுறையில் இருந்த பொது முடக்கத்தினால் மே-ஜுன் இதழ் வெளியிட இயலவில்லை. தற்போது மே-ஜுன் மற்றும் ஜூலை-ஆகஸ்டு ஆகிய இதழ்களை இணைத்து ஒரே இதழாக கூடுதல் பக்கங்களோடு தயாரித்துள்ளோம் என்பதை பங்காளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். சத்தியம் டிவி நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாதத்திலிருந்து மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதைத் தெரியப்படுத்துகிறோம். சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை You-Tube இல் Sathiyavasanam TV என்ற சேனலில் காணலாம். மேலும் ஜூலை மாதம் 15ஆம் தேதியிலிருந்து வியாழக்கிழமைதோறும் மாலை 6.00 மணிக்கு நம்பிக்கை டிவியில் புதிய நிகழ்ச்சியொன்றை ஆரம்பிக்க தேவன் கிருபை செய்துள்ளார். இந்நிகழ்ச்சிகளில் குடும்பமாக பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள்.

இவ்விதழில் பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காய் என்ற தலைப்பில் Rev.நாட் க்ராபோர்டு அவர்களுடைய கட்டுரையும், தேவனுடைய கூடார மறைவு என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய ஆறுதலான செய்தியும், ஆச்சரியப்படத்தக்க … இரட்சிப்பின் பண்புகள் என்ற தலைப்பில் Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்களது கட்டுரையும், தானியேலின் நாட்குறிப்பு என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய கட்டுரையும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற கட்டுரையின் இறுதிபாகமும் வெளிவந்துள்ளது, மேலும் திரு.பவானி மகேந்திரன் அவர்கள் எழுதிய விசாரிக்கப்பட வேண்டிய நகரம் என்ற தலைப்பிலான கட்டுரை, வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய தடுப்பூசிகளும் தடுமாறும் விசுவாசிகளும் என்ற கட்டுரை, சகோ.ஜெகராஜ் பெர்னாண்டோ அவர்கள் எழுதிய தேவனின் சரித்திரத்திற்கு முடிவில்லை என்ற கட்டுரை, திரு.ஜே.சி.ரைய்ல் அவர்கள் எழுதிய மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனின் ஆறு அடையாளங்கள் என்ற கட்டுரை ஆகியனவும் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரைகள் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்