சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2022

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நித்திய தேவனாம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இப்புதிய வருடத்தில் இம்மாத சஞ்சிகையின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இப்புதிய ஆண்டு விசுவாசபங்காளர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களும் நன்மைகளும் பெருகுகிற ஆண்டாக இருக்க ஜெபிக்கிறோம்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து ஏற்படுத்திவரும் தாக்குதல் பாதிப்புகளுக்கு யாவரையும் கர்த்தர் விலக்கிப் பாதுகாக்கவும் ஜெபித்துவருகிறோம். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. …கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (சங்.121:4-7).

கடந்த ஆண்டு முழுவதும் பங்காளர்கள் தங்களது ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் ஊழியத்தைத் தாங்கி வந்தீர்கள். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய ஆண்டிலும் இவ்வூழியத்தின் அனைத்துத் தேவைகளையும் சந்திக்க கர்த்தர் கிருபை செய்வாராக. சத்தியவசன ஊழியத்தை தங்களது ஆவிக்குரிய நண்பர்கள் மற்றும் விசுவாசிகளுக்கும் அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம். தொடர்ந்து இவ்வூழியத்தின் மூலமாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள மறவாதீர்கள்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் You tube channel-இல் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை Audio version-ல் வெளியிட்டு வருகிறோம். மேலும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் You tube channel வழியாக வெளியிட்டு வருகிறோம். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இவ்விதழில் இயேசுவின் திருவடி சரணாலயம் என்ற தலைப்பில் நமது துன்பங்கள், பிரச்சனைகள், போராட்டங்களின் நேரங்களில் நமக்காக இயேசுவின் திருவடி சரணாலயம் எப்போதும் திறக்கப்பட்டு உள்ளது என்பதைச் சிறப்பு செய்தியாக சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இப்புதிய ஆண்டில் கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்; அவர் ஆசீர்வதிப்பார் என்ற தலைப்பில் சத்தியவசன செய்தியாளர் சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ் அவர்கள் அளித்த செய்தியும், கர்த்தர் நல்லவர் என்ற தலைப்பில் சகோ.கே.பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதிய செய்தியும் நானே வழி (இயேசு) என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தானியேல் புஸ்தகம் தொடர் வேத பாடத்திலிருந்து அழிவுக்கு முன்னானது அகந்தை என்ற தலைப்பில் சிறப்புச் செய்தியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும், இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்வின் ஆசீர்வாதத்திற்கு அதிக பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்