சத்திய வசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2022

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

மரணத்தையும் பாதாளத்தையும் வென்று உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழ் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன வெளியீடுகள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் அநேகர் ஆசீர்வாதமடைந்து வருகிறீர்கள் என்பதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நிகழ்ச்சிகளைக் குறித்த அட்டவணையை இவ்விதழின் உள்ளே வெளியிட்டுள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வேதபாடங்களினாலே பயனடைந்து வருகின்றனர். சத்திய வசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தொலைகாட்சி ஊழியப்பணிகளைத் தாங்கவும், தாங்கள் குடும்பமாக நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெறவும் அன்பாய் அழைக்கிறோம்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் You tube channel-இல் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை Audio version -ல் வெளியிட்டு வருகிறோம். மேலும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் You tube channel வழியாக வெளியிட்டு வருகிறோம். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். கனடா நாட்டிலுள்ள Back To The Bible ஊழியத்தின் இயக்குநரும், வேதபாட ஆசிரியருமான Dr.ஜாண் நியூபெல்டு அவர்கள் எழுதிய உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல் என்ற புத்தகத்தை தமிழில் வெளியிட்டுள்ளோம். அதை பங்காளர்களுக்கு கூடிய விரைவில் அனுப்பி வைப்போம்.

இவ்விதழில் நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் (இயேசு) என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும், அந்நாளிலே… என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புச் செய்தியும், ஆண்டவருடைய உயிர்த்தெழுந்த செய்தியை தியானிக்கும்படியாக பயப்படாதேயுங்கள் என்ற தலைப்பில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் வழங்கிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் மரிக்கும்போது ஐசுவரியவானாடே இருந்தார் என்ற தலைப்பில் சகோ.கே.பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதிய செய்தியும், இராப்போஜனத் துணிக்கை என்ற தலைப்பில் Dr.கிறிஸ்டியன் வெய்ஸ் அவர்கள் எழுதிய செய்தியும், Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தானியேல் புஸ்தகம் தொடர் வேதபாடத்திலிருந்து சுவரில் எழுதப்பட்ட கையெழுத்து சிறப்புச்செய்தியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும், இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களது ஆவிக்குரிய வாழ்வின் ஆசீர்வாதத்திற்கு அதிக பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்