சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2022)

இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது; நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார் (2தீமோத்.4:8).


சகோதரி சாந்தி பொன்னு

“என் மரணவேளையிலும் என் தேவன் என்னில் மகிமைப்படவேண்டும்.” ஒரு மூத்த சகோதரி தனக்காக ஜெபிக்கின்ற ஒரே முக்கிய ஜெபம் இதுவே என்றார். “வருத்தப்படுக்கை இன்றி, எவருக்கும் தொந்தரவு இன்றி என்னை எடுத்துக்கொள்ளும்” என்பதுவே அநேகமானவரின் ஜெபம். ஆனால், இவருடைய இந்த விருப்பத்தைக் குறித்துக் கேட்டபோது, “நீதியுள்ள நியாயாதியாகிய கர்த்தர் அந்நாளிலே” (2தீமோ.4:8) என்னில் மகிழ்ந்திருக்கும்படி தினந்தோறும் அவர் வெளிச்சத்தில் நான் வாழவேண்டும் என்பதே இந்த ஜெபத்தின் உள்ளான நோக்கம் என்பதைத் தேவன் அறிவார். அப்போது, என் சரீர மரண நாளும் அவருக்கே சாட்சியாக அமையும் என்று நான் விசுவாசிக் கிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

நிச்சயமான ஒன்று!

உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு முடிவு உண்டு. இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து வருடந்தோறும் நினைவுகூருகின்ற நாம், நமது சரீர மரணமும் ஒரு கட்டாய நிகழ்வு என்று சிந்திக்கவே விரும்புவதில்லை. வேதாகமத்திலே பலவிதமான மரணங்கள் குறித்து பதியப்பட்டுள்ளது. இளவயது மரணம், முதிர்வயது மரணம், அகால மரணம், மதிகெட்ட மரணம் என்றும், ஏனோக்கு, எலியா என்பவர்களுடைய அற்புதமான முடிவும், மோசேயின் ஆச்சரியமான மரணம் கூட எழுதப்பட்டுள்ளது. தங்கள் விருத்தாப்பியத்திலே மரித்த மூதாதையர்களின் மரணம் நமக்குச் சாட்சியாகவே உள்ளது.

அன்று இயேசுவையோ, இரட்சிப்பையோ அறிந்திராத இந்த பழைய ஏற்பாட்டுப் பக்தர்களைக் குறித்து, “தேவன் அவர்களுடைய தேவனென்னப் பட வெட்கப்படுகிறதில்லை” என்ற எபிரெய ஆசிரியரின் குறிப்பு (11:16) நம்மைச் சிந்திக்கவைக்கட்டும். அவர்களும் இந்தப் பாடுள்ள உலகில்தான் வாழ்ந்தார்கள், அவர்களுக்கும் பாடுகள் சோதனைகள் வந்தன. ஆனாலும் அவர்கள், தேவனைப் பற்றிக்கொண்டிருந்து, சமாதானத்துடன் மரித்தார்களே!

மரணம் சாட்சி சொல்லுமா?

என்றாலும், இஸ்ரவேலர் பலருடைய மரணங்கள் நமக்கு எச்சரிப்பாகவே இருக்கிறது. இந்த வரிசையில் தென் ராஜ்யமாகிய யூதாவை ஆண்ட ஒரு ராஜாவின் மரணத்தைக் குறித்த குறிப்பு மிக முக்கியமானது. இவன் பெயர் யோராம். கர்த்தரையே நோக்கியிருந்த யோசபாத் ராஜாவின் மகனே இந்த யோராம். ஆனால் இவனுடைய மரணத்தைக் குறித்து, “விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்” (2நாளா.21:20) என்று எழுதப்பட்டிருப்பது நம்மைச் சிந்திக்கவைக்கட்டும். அவனுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அவனுடைய மரணம் சாட்சி பகர்ந்தது.

கர்த்தருடைய பிரமாணங்களை மீறி, பாகாலையும் விக்கிரகங்களையும் சேவித்து, மக்களையும் தேவனைவிட்டு வழிவிலகப்பண்ணி, தேவனுக்குப் பிரியமில்லாமல் வாழ்ந்த ராஜாக்களின் மரணவேளைகளின் துக்க சங்கதிகள் ஏராளம். புதிய ஏற்பாட்டில்கூட அனனியா சப்பீராளின் மரணத்தையும் நாம் மறக்கக்கூடாது.

தேவனுடைய பார்வையும் உலக கண்ணோட்டமும்:

இன்னுமொரு பக்கத்தில், உலக கண்ணோட்டத்தில் எதிர்மறையான சிந்தனையைத் தூண்டக் கூடியதாக தேவபிள்ளைகள் பலரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இவர்கள் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள் (எபி.11:36,37). தேரிலே கட்டப்பட்டு வீதியிலே இழுத்துச் செல்லப்பட்டு மரித்தார்கள், உயிரோடே தோலுரிக்கப்பட்டார்கள், உயிரோடே எரியூட்டப்பட்டார்கள். வேதாகம காலத்திற்குப் பின்னரும், பல பரிசுத்தவான்கள், மிஷனெரிகளின், தேவ ஊழியரின் மரணங்களும் அவற்றின் பிரதிபலிப்புகளும் உலகையே திகைக்க வைக்கிறது. மூப்பெய்தி இயற்கை மரணத்தைச் சந்திக்காத இவர்களை உலகம் சபிக்கப்பட்டவர்கள் என்று முத்திரையிடலாம்.

ஆனால், இவர்கள் வாழ்வில் தேவநோக்கம் நிறைவேறி, தேவநாமம் மகிமைப்பட்டதை உலகம் அறியுமா? தேவநாம மகிமைக்கு முன்பாக உலகம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

பரிசுத்த யோவானின் சீஷரும், இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் சிமிர்னா சபையின் பிஷப்புமாக இருந்த பொலிகாப் அவர்கள் கிறிஸ்துவில் கொண்டிருந்த விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததால் எரியூட்டப்பட வேண்டுமென்ற தீர்ப்பு ரோம சாம்ராஜ்யத்தினால் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 86. இந்த வயதின் காரணமாக கிறிஸ்துவை மறுதலிப்பதற்கு அவருக்கு ஒரு தருணம் கொடுக்கப்பட்டது. அப்போது அவர், “இந்த 86 வருடங்களாக நான் சேவித்தவரை, எனக்கு ஒரு தீமையும் செய்யாதவரை, என் ராஜாவை என் இரட்சகரை நான் எப்படிப் பழித்து மறுதலிப்பேன்” என்றார். அக்கினியில் எரியூட்டப்படுவாய் என்று சொன்னபோது, பொலிகாப் அவர்கள், “நீ இந்த அக்கினியைக் காட்டி என்னைப் பயமுறுத்துகிறாய். இந்த அக்கினி ஒரு மணி நேரத்தில் அணைந்துவிடும். ஆனால், நித்திய ஆக்கினைக்குரிய நியாயத் தீர்ப்பின் அக்கினி தேவனை மறுதலிக்கிறவர்களுக்காக வைக்கப்பட்டிருப்பதை நீ அறியாய். நீ செய்ய விருப்பதைச் செய்” என்றார். அவரை மரத்தோடு சேர்த்துக்கட்டி, அவர் ஜெபித்து ஆமென் சொன்னதும் நெருப்பைக் கொளுத்திவிட்டார்கள். ஆனால், அக்கினி அவரை எதுவும் செய்யவில்லையென்றும், அதைக் கண்ட போர்ச்சேவகன் கூரிய ஆயுதத்தால் அவரைக் குத்திக் கொலை செய்தான் என்றும், பின்னர் கிறிஸ்தவ நண்பர்கள் அவரது சரீரத்தை அடக்கம் செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆம், உலகம் அவரைக் குற்றவாளியாக கொன்றது; ஆனால், தன் மரணத்திலும் அவர் தேவனை மகிமைப்படுத்தினார்; அதற்கு தேவனுக்குள் அவர் வாழ்ந்த வாழ்வே காரணம்.

இன்றும் தேவபிள்ளைகள் வியாதிப்பட்டு, மாறாத புற்றுநோயினால் அவஸ்தைப்பட்டு, இந்தக் கோவிட் கொள்ளைநோயினால் நோய்வாய்ப் பட்டபோதும் மரித்தபோதும்கூட இவர்கள் உலகுக்குக் கேள்விக்குறியானார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்த மரணங்களுக்குப் பின்னே உள்ள மகிமையை இந்த உலகத்தால் உணரமுடியாது.

உலகம் உள்ளவரை …

பிரியமானவர்களே, விழுந்துபோன இந்த உலகம் உள்ளவரைக்கும், இந்த மாம்ச சரீரத்தில் நாம் வாழும்வரைக்கும் துன்பம், வியாதி, வேதனை, உபத்திரவம், பாவசோதனை, சரீரமரணம் யாவுக்கும் நாம் முகங்கொடுத்தேயாக வேண்டும். அதுவல்ல காரியம்; இவற்றின் மத்தியிலும் நாம் தேவனை எப்படி மகிமைப்படுத்துகிறோம் என்பதே காரியம். தன்னைப் படைத்து உருவாக்கி வாழ வைத்த தேவனுடன் உறவின்றி பிரிந்துபோனவன் இந்த உலகின் சோதனைகளைச் சந்திப்பதற்கும், கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு ஆத்தும இரட்சிப்பை அடைந்த தேவபிள்ளை இவற்றின் மத்தியிலும் தேவனை மகிமைப்படுத்துவதும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டதாகும்.

தேவனுக்குப் பிரியமாக வாழுவதற்கும், பரிசுத்த வழியில் நிலைநிற்கும்படிக்கும் ஏதுவான அற்புதமான நிருபங்களை எழுதுவதற்குப் பரிசுத்தாவியானவர் உபயோகித்த பவுலின் மரணம் கூட, உலகிற்குக் கேள்விக்குறிதான். ரோமாபுரியில் சிறைவைக்கப்பட்டிருந்த அவர் சிரைச்சேதம் செய்யப்பட்டதாக அறிகிறோம். அவரது அந்த இறுதி சம்பவம் வேதாகமத்திலே பதியப்படவில்லை. ஆனால், அவருடைய நிருபங்களில் முக்கியமாக தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபமானது, இதுவே அவர் எழுதிய இறுதி நிருபமாகக் கருதப்படுகிறது, பவுலின் மன உணர்வுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அவர் தேவனை சந்திக்க ஆயத்தமாயிருந்தது தெளிவு.

இல்லாவிட்டால், “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளில் அதை எனக்குத் தந்தருளுவார்” என்றும், “எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” என்றும் உறுதியாகவும் வைராக்கியத்துடனும் எழுதியிருப்பாரா! ஆம். கர்த்தருடைய நாள், அந்நாள், அதுவே பவுலின் எதிர்பார்ப்பும் எதிர்நோக்குமாக இருந்தது. அதனால்தான் அவரது வாழ்வு, கர்த்தருக்கே கீழ்ப்படிதலும், பிரியமும் நிறைந்ததாக, “அந்நாளுக்கான” ஆயத்தமாகவும், தேவனை மகிமைப்படுத்துவதாகவும் இருந்ததை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

முதலாவது இரத்தச்சாட்சி!

புதிய ஏற்பாட்டிலே முதலாவது இரத்தச் சாட்சியாக மரித்த ஸ்தேவானுடைய மரணம் அற்புதமானது (அப்.7). பரிசுத்த ஆவியினாலும், விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவனாய், ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தவனே ஸ்தேவான். கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக நின்ற இவனைப் பிடித்து, இவனுக்கு எதிராக பொய்சாட்சிகளை நிறுத்தி, அவனது பேச்சுக்கு எதிர்பேச முடியாதிருந்த அவர்கள் மூர்க்கமடைந்தார்கள். அவனோ பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு, மரணம் தனக்கு நிச்சயம் என்று அறிந்திருந்தும், தான் கண்டதை அறிக்கை பண்ணத் தயங்கவில்லை. அவர்களோ அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி கல்லெறிந்தார்கள்.

“கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்றும், கல்லெறிகள் மத்தியிலும் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே. இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்” என்றும் சத்தமிட்டுச் சொல்லி நித்திரையடைந்தான் ஸ்தேவான். இவனுடைய மரணம், பிதாவிடம் தமது ஆவியை ஒப்புக்கொடுத்து, “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்கள்” என்று ஜெபித்த ஆண்டவர் இயேசுவின் சாயலை வெளிப்படுத்தியது எப்படி? கர்த்தருடைய நாமம் இவன் மரணத்தில் மகிமைப்பட்டது எப்படி? அவனுடைய வாழ்வு தேவனை மகிமைப்படுத்துவதாக இருந்ததே அந்த இரகசியம்.

ஆண்டவர் இயேசுவின் மரணமும், வெளிப்பட்ட மகிமையும்:

இயேசுவைப் பிடித்து, அடித்து, சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து தொங்கவிட்டபோது, சாபக்கேடான ஒருவராகவே இந்த உலகம் அவரைக் கண்டது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான், மரிக்கிறான்; ஆனால் கிறிஸ்துவோ, மரிப்பதற்காகவே பிறந்தவர். இந்த சிலுவை மரணத்தின் சிறப்பு என்னவெனில், இந்த மரணம் அநாதியாய் தீர்மானிக்கப்பட்ட ஒன்று (1பேதுரு 1:20). உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்க வந்த தேவாட்டுக்குட்டி என்பதை உணராமல் மக்கள் அவரைச் சபிக்கப்பட்டவராக சிலுவையில் நோக்கினர். ஆனால் அங்கே தானே, பிதாவின் மகிமை குமாரனில் விளங்கியது. இல்லையானால் நூற்றுக்கதிபதியே தேவனை மகிமைப்படுத்தியிருப்பானா? (லூக்.23: 47).

இயேசு தமது நீண்ட ஜெபத்திலே, “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்” என்றார். இயேசு பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்தியது எப்படி? “நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்” என்று ஜெபித்ததைக் கவனிக்கவும். மேலும், பிதாவுக்குப் பிரியமானவைகளையே இயேசு எப்போதும் செய்ததால் பிதா அவரைத் தனியேயிருக்கவிடவில்லை (யோ வான் 8:29). இதனாலேயே சிலுவையில் தொங்கியவேளையில் இயேசுவால் “முடிந்தது” என்று சொல்லக்கூடியதாக இருந்தது. பிதாவுக்குப் பிரியமாய் நடந்து, பிதாவின் சித்தத்தைப் பூரணமாக நிறைவேற்றியே இயேசு பிதாவை மகிமைப்படுத்தினார் என்பதை இந்த வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

ஒரு தடவை கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புகிறதைக் கேள்விப்பட்ட இயேசு, “பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” (யோவான் 12:28) என்று ஜெபிக்கிறார். “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று” (யோவான் 12: 28). ஆம், தேவன் அவரை மூன்றாம் நாள் மரணத்தினின்று எழுப்பினார். கிறிஸ்து தமது மகிமையில் உயிர்த்தெழுந்தார். அந்த மகிமை உலகில் வெளிப்பட்டது. உலகக் கண்ணோட்டத்தில் இயேசுவின் மரணம் சாபக்கேடாகத் தெரிந்தாலும், இயேசு சிலுவையில் மகிமையடைந்தார் என்பது சத்தியம். அந்த மகிமை உயிர்த்தெழுதலில் வெளிப்பட்டது. இன்று, கிறிஸ்து, இராஜாதி ராஜாவாக தமது இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக பிதாவின் வலது பாரிசத்தில் தமது மகிமையில் வீற்றிருக்கிறார்.

இயேசுவை நான் எப்படி அறிந்திருக்கிறேன்:

ஆக, இன்று நாம் கிறிஸ்து இயேசுவை எப்படி அறிந்திருக்கிறோம்? இன்னமும் சிலுவையில் மரித்த ஒருவராகவா? அல்லது, உயிர்த்தெழுந்த அவரை அவருடைய மகிமையில் அறிந்திருக்கிறோமா? “தாம் நமக்குத் தந்தருளின கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக” என்றும், “அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக” என்றும் சொல்லி, “மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று” நாம் அறியும்படிக்கு நமக்குப் பிரகாசமான மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று தான் வேண்டிக்கொள்வதாகவும் பவுல் எபேசியருக்கு எழுதியது இதையேதான். இந்த மகிமையின் மகிமையை நாம் உணர்ந்திருக்கிறோமா?

இந்த மகிமை என்பது என்ன? “தேவன் எப்படி இருக்கிறாரோ, அதுவே அவர் மகிமை” என்று ஒருவர் எளிமையாக இதை விளக்கினார். தேவனுடைய அழகு, கனம், மேன்மை அதிகாரம் இவற்றை உறுதிப்படுத்துகின்ற அவரது பூரணமான குணாதிசயம், இப்படிப் பலவாறாக இதைச் சொன்னாலும், இந்த தெய்வீகத் தன்மை மனித அறிவுக்கு அப்பாற்பட்டதுவே! அக்கினி ஸ்தம்பமாகவும் மேஸ்தம்பமாகவும் மகிமை வெளிப்பட்டபோது இஸ்ரவேலர் ஆச்சரியப்பட்டனர். சீனாய் மலையிலே தேவமகிமையின் பிரசன்னத்தைக் கண்டு பயந்தனர். சிவந்த சமுத்திரத்தில் வல்லமை விளங்கியபோது திகைத்தனர். ஆசரிப்புக் கூடாரத்தில் மகிமை இறங்கியபோது மண்டியிட்டு வணங்கினர். கர்த்தருடைய மகிமையைத் தரிசனமாகக் கண்ட ஏசாயா, முகங்குப்புற விழுந்தான்.

ஆனால் இன்று, தேவமகிமை கிறிஸ்துவில் வெளிப்பட்டுள்ளது. “அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்கிறார் யோவான். ஆம், அந்த மகிமையை கிறிஸ்து நமக்கு, தம்முடைய சபைக்கு சிலுவையில் சம்பாதித்துக் கொடுத்துள்ளார். இதனால் கர்த்தருடைய பிள்ளைகள் தேவ சாயலாக மறுரூபமடைகிறார்கள். “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2கொரி.3:18). அந்நாளிலே, அங்கே கர்த்தருடைய மகிமை எங்கும் பிரகாசிக்கும். நகரத்துக்கு வெளிச்சம் கொடுக்க சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது; ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு (வெளி.21:23).

ஆகவே, கர்த்தருடைய பிள்ளைகள் இறுதியிலே, தேவனுடைய பரலோக பிரசன்னத்திலே முழுமையாக மகிமை அடைவோம் என்பதே நமது நம்பிக்கை. “அவர் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து. தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம்” (ரோமர் 5:2) என்றும், “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது, நீங்களும் அவரோடே மகிமையிலே வெளிப்படுவீர்கள்” (கொலோ.3:4) என்றும் பவுல் நமக்குத் தெளிவுடுத்தியுள்ளார்.

அந்நாளிலே கர்த்தர் நம்மில் மகிமைப்படுவாரா?

சரீர மரணம், அது நடந்தேறவேண்டிய ஒன்று. ஆனால், அந்த மரண நேரத்திலும் தேவனுடைய நாமத்தை நம்மால் மகிமைப்படுத்த முடியுமா என்பதே கேள்வி. மரணத்தில் தேவனை மகிமைப் படுத்தவேண்டுமென்றால் நமது வாழ்நாட்கள் முழுவதும், ஒவ்வொரு விநாடியும் நாம் தேவனைப் போற்றித் துதித்து மகிமைப்படுத்தவேண்டும். மாத்திரமல்ல, முக்கியமாக, பிறர் முன்னிலையில் தேவநாமம் மகிமைப்படத்தக்கதாக நமது வாழ்வு ஒழுக்கமுள்ள பரிசுத்த வாழ்வாக அமைய வேண்டும். அதற்கு ஒரே வழி, மொத்தமாகக் கூறினால்,கர்த்தருக்கே கீழ்ப்படிவதும், அவருக்கு மாத்திரமே பிரியமாய் நடப்பதும் மாத்திரமே அந்த வழி. அந்த ஒன்றைத்தானே கர்த்தர் நம்மிடம் கேட்கிறார். பூமிக்கு வந்த இயேசுவும் இதையே தான் செய்து, தமது வாழ்வில் பிதாவை மகிமைப் படுத்தி நமக்கு முன்மாதிரியை வைத்துள்ளார்.

103ஆம் சங்கீதத்தைப் பாடிய தாவீது, கர்த்தர் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி ஸ்தோத்திரம் செலுத்திவிட்டு, சங்கீதத்தை முடிக்கும்போது, கர்த்தரைத் துதிக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இந்த மக்கள் யார்? ஒன்று, “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்கள்”, அடுத்தது, “கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவருக்குப் பணிவிடை செய்கிற அவருடைய சர்வசேனைகள்.” ஆம். கர்த்தருடைய சித்தத்தைச் செய்கிறவர்கள் சவுரியவான்கள்; அவருக்குப் பிரியமாய் வாழுகிறவர்கள் அவருடைய சேனைகள். என்ன மகிமையான ஆசீர்வாதம்! கர்த்தருடைய நாமம் நமது வாழ்விலும் நமது மரணத்திலும் மகிமையடையும்படிக்கும், அந்நாளில் கர்த்தர் நம்மில் மகிழ்ந்திருக்கும்படிக்கும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தருக்கு மாத்திரமே பிரியமாய் வாழுவோமாக. இந்த இரண்டும் சகலத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றைத் தவிர வேறு என்னதான் வேண்டும்?

நமது அன்றாட வாழ்வு கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்போது, நமது மரணம் அவர் பார்வைக்கு அருமையாக இருக்குமல்லவா! (சங்.116:15). வாழ்வுக்கும் மரணத்துக்கும் ராஜாவான தேவன் நமது மரணத்தைப் பார்த்துக் கொள்வார் என்பதில் நமக்குச் சந்தேகம் தேவையில்லை. ஆமென்.