Dr.தியோடர் எச்.எஃப்.
(மார்ச்-ஏப்ரல் 2022)

Dr.தியோடர் எச்.எஃப்.

2. மனச்சாட்சியின் காலம்

மனச்சாட்சியின் காலம் மனிதனின் வீழ்ச்சியிலிருந்து, நோவா காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்துடன் முடிவடைகிறது (ஆதி.3:2-8;19). இக்காலத்தில் ஆதாமின் சந்ததியார் அவரவர் மன விருப்பப்படி நடந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் சட்டங்களோ, மனிதனின் அரசாங்கமோ இல்லை. கொலைபாதகர்கள் தண்டிக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே சட்டம் இயற் றிக்கொண்டு தன் சட்டத்தின்படியே வாழ்ந்தான். அவனது மனச் சாட்சியின்படி மனம் போனபடி வாழ்ந்தான். எனினும் மனிதனின் மனச்சாட்சி பரிசுத்த ஆவியானவரினால் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியாது.

மனிதனின் நிலை

நன்மை தீமை அறியும் அறிவு

ஆதாம் பாவத்தில் வீழ்ந்தபொழுது அவன் நன்மை, தீமை இன்னதென்று அறியத்தக்கவனானான். இந்த அறிவு அனைத்து மனுக்குலத்திற்கும் கடத்தப்பட்டது (5:3).

1. தான் அறிந்த அனைத்து நன்மையான காரியங்களைச் செய்வதே தலையாய கடமை.

2. அவன் செய்யும் நற்காரியங்கள் அவனை தேவனுடன் ஒப்புரவாகச் செய்வதற்காக அல்ல, இரத்தத்தின் மூலமாகவே ஒப்புரவாகுதல் நிறைவேற முடியும். இரத்த பலிகளின் மூலமாகவே மனி தன் தேவனண்டை கிட்டிச்சேர முடியும். இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பில்லை (எபி.9:22). இதுதான் தேவன் நியமித்த நியமனம். ஆதி.4:4இல் முதல்முறையாகக் குறிப்பிடப்பட்டது போல ஒருபோதும் மாற்ற இயலாத நிலையான பிரமாணம்.

3. மனிதனை வழிநடத்த மனச்சாட்சி போது மானதாகவோ, இன்றும் அந்த மனச்சாட்சி நம்மை வழிநடத்த தகுதியானதாகவும் இல்லை. நம் மனச்சாட்சியின்படி நாம் நடக்கும்பொழுது, நமது சொந்த நியாயத்தின்படியும். நம்முடைய சுய பெலத்தைச் சார்ந்தே நடக்க விரும்புவோம். ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நாம் நம் வாழ்க்கையை ஒப்புவித்து, நமது செயல்களை அவர் வழிநடத்தவும், அவருடன் நாம் நடக்கவும், முயற்சிக்க வேண்டும். அப்பொழுது அவரே நம்முடைய தேற்றரவாளனாக வழிநடத்துவார். (யோவான் 14:26; 16:13).

பின்மாற்றம்

இக்காலத்தில் மனிதர்களின் வீழ்ச்சி ஒரு நீண்ட காலமான ஒரு தொடர் நிகழ்ச்சியாக நிகழ்ந்தது. இவ்வீழ்ச்சி தனி மனிதனைத் தாக்கி, அவனின் வாழ்வில் நிகழ்ந்து, பின் அது குடும்பங்களையும் பின் சமுதாயத்தையும் இறுதியில் தேசம் முழுவதையும் வீழ்ச்சியுறச் செய்து, தேவனை தேசமே மறந்துவிடச்செய்தது. நோவாவின் குடும்பத்தைச் சேர்ந்த எட்டுபேரைத் தவிர பிற மக்கள் தேவனை அறிகிற அறிவை இழந்துபோனார்கள்.

1. ஆதாம் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் மனிதனின் யோசனையிலும் சிந்தனையிலும் பகுத்துப்பார்க்கும் நிலை தோன்ற ஆரம்பித்தது. இவ்வாறு இருவித நற்செய்திகள் (சமுதாயம் மற்றும் இரத்தபலி) உருவாகியது (ஆதி.4:2-15). ஆதாம், ஏவாளுக்குப் பிறந்த இரு பிள்ளைகளிடமிருந்தும் கண்டிப்பான மதவாதக் கொள்கையும், நவீன பண்பாடுகளும், கோட்பாடுகளும் உருவாகியது. இவ்வாறு பின்மாற்றம் தனிமனிதனில் துவங்கியது.

a) ஆபேல் பாவநிவாரண பலியாக மிருகத்தின் இரத்தத்தைச் செலுத்தினான். இதில் நற்செய்தியின் சத்தியமாக தேவனுடைய கிருபையைப் பார்க்கிறோம்.

b) காயீன் தான் பாவி என்று உணராதவனாக நன்றிபலியைச் செலுத்தினான். இங்கு சமுதாய சம்பந்தமான ஓர் நற்செய்தியைப் பார்க்கிறோம்.

2. குடும்பங்களில் பின்மாற்றம்

a) காயீன் சுயநலத்தையும், சுயவளர்ச்சியை யும் கடைப்பிடித்து வாழ்ந்தான் (வச.16).

b) சேத் தேவனுக்கு பயப்படுதல், கீழ்ப்படிதல் ஆகிய நற்பண்புகளைப் பின்பற்றி நடந்தான் (வச. 26). சமுதாயத்தில் பிரிவினை ஏற்படும்வரை குடும்பத்தில் இது தொடர்ந்து நிகழ்ந்தது. இறுதியாக தேசமனைத்தும் காயீனின் வழியைப் பின்பற்றியது.

3. தேவகுமாரர், மனுஷகுமாரத்திகளைத் திருமணம் செய்துகொண்டதாலும் தேவபக்தியுள்ள ஜனங்கள் தேவபக்தியற்ற ஜனங்களிடமிருந்து தங்களை பிரிக்கத் தவறியதினிமித்தமும் பின்மாற்றம் தொடர்ந்து நடைபெற்றது. இதன்விளைவாக தேசமே சீர்கெட்டு பாழ்பட்டது (6:1-5).

இவ்வாறு நோவாவின் குடும்பத்தைத்தவிர முழுஉலகமும் சீர்கெட்டுப்போய்விட்டது. இதிலிருந்து நாம் பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய திருச்சபை உலகத்தின் ஆசை, இச்சைகளை விரும்புவதால் மிகவும் சீர்கெட்டுப் காணப்படுகிறது. இதன்விளைவாக தேவனுடைய வல்லமை இழந்துவிட்டது. தேவனுடைய கட்டளையின்படி உலகத்தால் தன்னை கறைப்படுத்தாமல், வேறு பிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக உலகத்தோடு இரண்டறக் கலந்து சீர்கேடடைந்து காணப்படுகிறது.

எஞ்சியுள்ள ஓர் சிறுகூட்ட நீதிமான்கள்

சீர்கேடும், தேவபக்தியில்லாத காலக்கட்டங்களிலும் தேவன் தமக்கென விசுவாசத்தில் நிலைத்திருக்கும் ஒரு சிறுகூட்ட மக்களை எப்பொழுதும் தமக்கென பிரித்தெடுத்து வைத்திருப்பது ஓர் மறுக்கமுடியாத உண்மை.

1. ஏனோக்கு தேவனோடு நடந்த ஓர் மனிதனாவான்.

தேவனோடு நடக்கும் உண்மையுள்ள ஓர் திருச்சபைக்கு அவன் ஓர் அடையாளமாகக் காணப்படுகிறான். உலகம் நியாயத்தீர்ப்படைவதற்கு முன் ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது போல, மகாப் பெரிய கொடூரமான நியாயத்தீர்ப்பை உலகம் சந்திக்கும் முன் திருச்சபையும் மருரூபமடைந்து எடுத்துக்கொள்ளப்படும் (வெளி.3:7-13)

2. நோவாவும் தேவனோடு சஞ்சரித்தான்.

உபத்திரவகாலத்தில் இப்பூமியில் எஞ்சியுள்ள யூதர்கள் உயிர் காக்கப்பட்டதற்கு அடையாளமாக நோவா காணப்படுகிறார் (7:1-8) .

இவ்வாறு இந்த இரு மனிதர்களும், எஞ்சியுள்ள விசுவாசமுள்ள மக்களுக்கு மிகச்சிறந்த அடையாளமாகக் காணப்படுகிறார்கள். இன்றைக்கும் திருச்சபையில் நவீன கொள்கைகளினாலும், உலகத்தாலும் தங்களைத் கறைப்படுத்திக் கொள்ளாத ஒரு சிறுகூட்ட விசுவாசிகள் காணப்படுகிறார்கள். மாம்ச இச்சைகளில் சிக்குண்டு அலையாதபடி பரிசுத்தமாய் இவர்கள் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். யூதமார்க்கத்தினரிலும் பாகாலுக்கு முழங்கால்படியிடாதபடி ஒரு சிறுகூட்ட மக்கள் தங்களை பரிசுத்தமாகக் காத்துக்கொண்டனர் (ரோமர் 11:4). அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பழைய ஏற்பாட்டில் தாங்கள் அறிந்துகொண்ட தேவனை புறக்கணிக்கவில்லை. பெருவெள்ளம் ஏற்பட்டபொழுது நோவா காக்கப்பட்டதுபோல, உபத்திரவ காலத்தில் 1,44,000 யூதர்களை முத்திரையிடப்பட்டவர்களாக பாது காத்து வழிநடத்துவார் என்று வெளிப்படுத்தல் 7ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

பாதுகாப்பான பேழை (ஆதி.6:14 -7: 1-24).

நோவாவின் காலத்தில் விசுவாசமுள்ள எஞ்சியுள்ள ஒரு சிறு கூட்டத்திற்கு பாதுகாப்பான ஓர் பேழை இருந்தது. ஏனோக்கு தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டான். நோவாவும் அவன் குடும்பத்தினரும் கொப்பேர் மரத்தினால் செய்யப்பட்ட பேழை ஜலப்பிரளயத்தில் மிதந்த பொழுது, அதில் வைத்து அந்த நியாயத்தீர்ப்பின் காலத்தில் காக்கப்பட்டனர், கடைசி காலங்களில் திருச்சபை எடுத்துக்கொள்ளப்படும். மற்றும் எஞ்சியுள்ள 1,44,000 யூதர்கள் உபத்திரவ காலத்தில் காக்கப்படுவார்கள்.

1. ஜலப்பிரளயம் என்ற நியாயத்தீர்ப்பிலிருந்து நோவாவின் குடும்பத்தினர் காக்கப்பட்ட பேழையில் பூசப்பட கீல் பயன்பட்டது (ஆதி.6:14).

பழைய ஏற்பாட்டில் தேவனுடைய நியாயத் தீர்ப்பிலிருந்து பாவநிவாரணம் அடைந்ததற்கு உதாரணமாக இந்தக் கீல் காணப்படுகிறது. மனச்சாட்சியின் காலத்தில் பேழைக்குள் நுழைந்த அனைவருக்கும் தேவனுடைய கிருபையின் கரம் நீட்டப்பட்டது. ஆனால் எட்டுப் பேர் மாத்திரம்தான் பேழைக்குள் நுழைந்து கிருபை பெற்றனர். அவர்கள் காக்கப்பட்டார்கள்.

பாவநிவிர்த்தி என்ற பதத்திற்கு எபிரெய மொழியில் மூடுவது என்று பொருள்படும். பலி செலுத்தும் ஒவ்வொரு மனிதனின் பாவமும் அதனால் மூடப்பட்டு, தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு பலி செலுத்துபவரின் பாவத்திற்கான தண்டனை பலியின்மீது சுமத்தப்பட்டு, பலி செலுத்தியவன் பாவநிவிர்த்தி அடைந்து பாவத்திலிருந்து விடுதலைபெற முடியும். ஆனால், உண்மையில் ஓர் மிருகத்தின் இரத்தம் ஒரு மனிதனின் பாவத்தை நிவிர்த்தி செய்ய முடியாது (எபி.10:11). ஆனால், அந்த மிருகம் பலிசெலுத்தப்படுவது என்பது இயேசு சிலுவையில் தன்னை மாபெரும் பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுப்பதற்கு முன்னடையாளமாகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த மனச்சாட்சியின் காலத்தில் வாழ்ந்த மக்களின் பாவத்தை, கிறிஸ்து பலியாக ஒருமுறை பலியிடப்படுவதற்கு முன்னடையாளமாக மிருகங்கள் பலி செலுத்தப்படுவதை ஏற்றுக்கொண்டு அவர்கள் பாவத்தை மன்னித்தார்.

2. ஜலப்பிரளயம் ஏற்படுவதற்கு கடைசி ஏழு நாட்களில் அனைத்து மிருகங்கள் ஜீவராசிகள் அனைத்திலும் ஆணும், பெண்ணுமாக ஜோடி, ஜோடியாக பேழைக்குள் செல்லவைத்தது தேவன் காண்பித்த ‘காலங்களின் அடையாளமாக’ கருதப்படுகிறது.

3. நோவா தேவன் கூறிய அனைத்தையும் விசுவாசித்து, கீழ்ப்படிந்து பேழைக்குள் சென்றான். நோவா யார் என்பது இங்கு முக்கியமல்ல. அவன் பெருவெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்டான் என்பதுதான் இங்கு நாம் கவனிக்கத்தக்க ஒன்று. இக்காலத்திலும் இரட்சிப்பு நமக்கு வருகிறது. விசுவாசம் கிறிஸ்துவண்டை நம்மை வழிநடத்துகிறது. இவ்வாறு கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள். இவ்வாறு நோவா பேழைக்குள் பாதுகாக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பிற்கு விலக்கிக் காக்கப்பட்டதுபோல, நம்முடைய ஜீவனும் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருப்பதால், வரப்போகிற நியாயத்தீர்ப்பிற்கு விலக்கி காக்கப்படுவோம் (யோவான் 5:24; ரோமர் 8:1; கொலோ. 3:3,4, வெளி.3:9,10).

தேவனுடைய நியாயத்தீர்ப்பே இறுதியானது. ஆனால், நியாயத்தீர்ப்பிற்கு முன் தேவன் மனிதனுக்கு தம்முடைய கிருபையை ஈவாக வழங்கியிருக்கிறார். நோவாவின் காலத்தில் தேவன் கிருபையால் தம்முடைய இரட்சிப்பை வழங்கினார் (ஆதி. 7:23). இதேபோன்று தேவன் தமது கிருபையை இன்றைய காலத்தில் மனுக்குலத்திற்கு வழங்குகிறார் (எபிரேயர் 2:3 ; 3:7-19).

விசுவாசமும் உத்தமமுள்ளதேவனுடைய சாட்சிகள்

தேவனுக்கென்று எப்பொழுதும் விசுவாசமுள்ள ஒரு சிறுகூட்ட மக்கள் மாத்திரம் அல்ல, அவருக்கென்று ஓர் விசுவாசமுள்ள சாட்சிகளும் இருப்பார்கள்.

ஏனோக்கு தன்னுடைய தலைமுறையில் வாழ்ந்த மக்களுக்கு விசுவாசமுள்ள சாட்சியாக வாழ்ந்தான் (ஆதி.5:22-24).

1. ஏனோக்கு வரவிருக்கும் நியாத்தீர்ப்பைப் பற்றி மக்களுக்கு பிரசங்கித்தான் (யூதா 14,15).

2. ஏனோக்கு காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார், உலகம் காணாத வகையிலும் கேள்விப்படாத வகையிலும் திருச்சபையும் இரகசியமாக எடுத்துக்கொள்ளப்படும்.

நோவா மற்றுமோர் விசுவாசத்தை உபதேசித்தவன் (எபிரேயர் 11:7).

1. அவன் விசுவாசத்தை மக்களுக்கு அறிவித்தான். அவனுடைய கிரியைகளல்ல; இந்த விசுவாசமே அவனை இரட்சித்தது.

2. பிரளயத்திற்கு முன்போ, அல்லது அதற்கு பின்போ நோவா பாவம் செய்யாத மனிதனல்ல, தேவன் தமக்கும் தனது சிருஷ்டிகளுக்கும் இடையே உள்ள ஐக்கியத்தை உறுதியாய் வைத்துக்கொள்ள இரத்த பலியை அனுமதித்தார். இந்த பலிகளின் மூலம் நோவா தேவனை விசுவாசத்தோடு பின்பற்றினான் (ஆதி.8:20).

தேவன் நமக்குத் தரும் இன்றைய அழைப்பு

நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே பிந்திய காலங்களிலும் நடைபெறுகிறது (மத்.24:37).

நோவாவின் காலத்தில் எவ்விதம் அவிசுவாசம் பெருகியிருந்ததோ, அதைவிட இன்றைய காலத்தில் அவிசுவாசம் அதிகமாய்ப் பெருகிக் கிடக்கிறது.

எனவே தேவன் இயேசு வருகையின் இறுதி காலத்திற்கான அடையாளங்களை கவனித்து அறியவேண்டுமென்று நம்மை அழைக்கிறார் (மத்.24: 33). நாம் வாழும் இக்காலத்தில் நிகழும் அடையாளங்களை நாம் மிக எளிதாக இனங்கண்டு கொள்ள முடியும்.

நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பேழை உருவாக்கப்பட்டபொழுது அதை விசுவாசித்து அதில் நுழைபவர்கள் பிழைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது.

இன்று கிறிஸ்துதான் அந்த பாதுகாப்பான பேழை. அவரண்டை வந்து, மறுபிறப்படைந்து அவரைப் பற்றிக்கொள்ளுகிறவன் இரட்சிப்படைகிறான் (யோ.10:9, 11:25,26. ரோமர் 8:1).

இந்த வேதப்பகுதியை நீங்கள் ஆராய்ச்சி செய்யும்பொழுது, நோவா பேழைக்குள் பாதுகாப்பாக இருந்ததுபோல, தேவனுடைய கரத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை நீங்கள் உணருகிறீர்களா?

கிறிஸ்துவுடன் நீங்கள் ஐக்கியமாகும் பொழுது இயேசுகிறிஸ்து என்னும் பேழைக்குள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan