Dr.கிறிஸ்டியன் வெய்ஸ்
(மார்ச்-ஏப்ரல் 2022)
யோவான் 13:21-27:
21. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.
22. அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்தார்கள்.
23. அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
24. யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டினான்.
25. அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கின பின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

Dr.கிறிஸ்டியன் வெய்ஸ்
வேதத்தின் இப்பகுதி நமக்கு அநேக குழப்பமான கேள்விகளை எழுப்பக்கூடும். போஜனம் பண்ணும்போது யோவானால் எப்படி இயேசுவின் மார்பில் சாய்ந்துகொள்ள முடிந்தது? பலர் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கும்போது எப்படி ஒருவர் மாத்திரம் அநேகர் மத்தியில் அடுத்தவர் மார்பில் சாயமுடியும்? இயேசு குறிப்பிடும் அந்தத் துணிக்கை எது? “அந்தத் துணிக்கையைத் தோய்த்து” என்பதன் பொருள் என்ன?
மேற்கண்ட காட்சியையும் அதன் தொடர் நிகழ்ச்சிகளையும் நாம் நன்கு விளங்க வேண்டுமாயின், கீழ்திசை நாடுகளின் பழக்க வழக்கங்களையும், முறைமைகளையும் நாம் அறிந்தவர்களாய் இருக்கவேண்டும். நாம் இப்போது பின் பற்றும் முறையில் கீழ்திசை நாடுகளில் இருக்கைகள் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் கூடார வாசிகளான கிழக்கத்தியக் கிராம மக்கள் ஒரு தாழ்வான மேஜையைக் சுற்றி வந்த விருந்தினர்களுடன் வட்டமாக அமர்ந்துகொள்வார்கள். தரை விரிப்பாக பாய்களோ அல்லது ஜமுக்காளங்களோ விரிக்கப்பட்டிருக்க அதன் மேல் தங்களது நீண்ட அங்கிகள் கால்களை மறைக்கும்படி அமர்ந்திருப்பார்கள்.
உணவு வைக்கப்பட்ட தட்டு மாத்திரமே நடுவில் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தட்டு வைக்கப்படுவதில்லை. உணவு வைக்கப்பட்ட ஒரு பெரிய தட்டு பாரம்பரிய வழக்கத்தின்படி நடுவில் இருக்க, சுற்றி அமர்ந்துள்ள ஒவ்வொருவரும் அதில் ஏகமாக எடுத்துப் புசிப்பர். கிண்ணங்கள், கத்திகள், சிறு கரண்டிகள் ஏது மிராது. மேற்கத்திய கலாச்சாரத்தில் இன்று காணப்படும் இவைகள் எல்லாம் சமீபகால உபகரணங்களாகும்.
பட்டணங்களில் திண்டுகளிட்ட ஹாலில் மேஜையைச் சுற்றி அமர்ந்து உண்ணுவர். இருப்பினும் உணவு அகலமான பெரிய பாத்திரத்தில் நடுவில் வைக்கப்பட்டிருக்கும். எல்லோரும் அதினின்றே எடுத்துச் சாப்பிடுவர். ஒருவரோடு அமர்ந்து உண்பது என்பது மேல் திசை நாடுகளைவிட கீழ் திசை நாட்டில் அதிக நெருக்கத்தையும் அன்புப் பிணைப்பினையும் காட்டும்.
செல்வந்தர் வீடுகளில் சமயச் சடங்கு நடக்கும் நாட்களில் U வடிவமான மேஜையே பயன் படுத்தப்படும். திறந்திருக்கும் வாய்ப்பகுதியினின்று உணவு பரிமாறப்பட, மற்ற மூன்று புறங்களிலும் இணைக்கப்பட்ட இருக்கைகள் மேல் அமர்ந்து உண்ணுவர். இருக்கையின்மேல் இடப்புறம் இருக்கும் கைப்பிடியின் மேல் சாய்ந்து கொண்டு கால்களை மடித்து அமர்ந்த நிலையில் அவர்கள் உண்ணுவர் (நமது ஆலயங்களில் சிலர் ஆராதனை மற்றும் ஜெபவேளைகளில் மண்டியிட்டு பின் ஒரு பக்கமாக சாய்ந்து கால்களை மடித்த நிலையிலே இருப்பதைப்போன்று). பின்புறம் முதுகிற்கு சிறிய மெத்தைகள் வைக்கப்படுவதால் வசதியாக சிரமமின்றி அமர்ந்துகொள்வர். இப்படி எல்லோரும் அமர்ந்துகொள்வதால் இரண்டாவது அமர்ந்திருப்பவர் தலையும், முதலாவது அமர்ந்திருப்பவர் மார்பும் அருகில் நெருங்கியிருக்கும். அவர் ஏதாவது இரகசியமாகப் பேசவேண்டுமாயின் தன் தலையைச் சாய்த்து முதலில் அமர்ந்திருப்பவர் காதுக்கு மாத்திரம் கேட்கத்தக்கதாக மெல்லிய குரலில் பேசலாம். அன்பின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் இந்த ‘மார்பில் சாய்தல்’ கீழ்திசை நாட்டில் வித்தியாசமானதொன்றில்லை.
இதுவே கர்த்தரின் இராப்போஜனத்திற்காக கம்பளம் விரித்து ஆயத்தம் செய்யப்பட்டிருந்த பெரிய அறை. இந்நிலையில்தான் பேதுரு யோவானை நோக்கி கர்த்தரைக் காட்டிக்கொடுப்பவன் யார் என்று சைகை காட்ட முடிந்தது. யோவான் மெதுவாக “அவர் யார் ஆண்டவரே?” என்ற கேள்விக்கு இரகசியமாய் இயேசு, “இந்தத் துணிக்கையைத் தோய்த்து… அவன்தான்” என்று சொன்னார். இந்தச் செய்தி யோவான் தனக்கடுத்து அமர்ந்திருந்த சீஷனுக்குச் சொல்ல, அவன் தனக்கடுத்தவனுக்குச் சொல்ல, செய்தி பேதுருவை அடைந்தது. ஆனால் யூதாஸ்காரியோத்திற்கு ஒன்றும் தெரியாது.
இந்த விதமாக அமர்ந்திருக்கும் நிலையை லூக்.7:38 இல் தெளிவாக அறிய முடிகிறது. இயேசு விருந்திற்கு அழைக்கப்பட்டு அமர்ந்திருந்தபோது அவரது பாதங்களின் அருகே பின்னாக நின்று ஒரு ஸ்திரீ அழுதுகொண்டு அவரது பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளத் தைலத்தைப் பூசினாள் என்று பார்க்கிறோம். இயேசு சற்று உயர்ந்த ஒரு மேடையின் மேல் உள்ள திண்டின்மேல் சாய்ந்து அமர்ந்து தன் கால்களை நீட்டிக்கொண்டிருந்ததாலேயே அந்த ஸ்திரீயால் குனிந்து இவ்விதமாய்ச் செய்ய முடிந்தது.
யூதாசே கர்த்தரைக் காட்டிக் கொடுக்கும் துரோகி என்று எவ்வாறு அடையாளம் காட்டப்பட்டது என்பதைச் சிந்திப்போம். “என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்று மத்.26:23இல் கர்த்தர் சொல்லும்போது பன்னிருவரில் ஒருவனே காட்டிக்கொடுப்பான் என்று தெளிவாகிறது. ஆனால் அந்த ஒருவன் யார் என்று அப்போது சொல்லவில்லை. எல்லோரும் ஒரே பெரிய தாலம் என்னும் தட்டிலிருந்து எடுத்து உண்ணும்போதுதான் கர்த்தர் இதைச் சொல்கிறார்.
ஆனால் யோவான் 13:26இல் கர்த்தர் தன் மார்பில் சாய்ந்துகொண்டிருக்கும் யோவானிடம் இரகசியமாகக் கூறுவதைக் கவனியுங்கள்; “இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான்” என்று சொல்லி துணிக்கையைத் தோய்த்து சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். வெள்ளியினாலோ வேறெந்த உலோகத்தினாலோ ஆகிய எந்த உபகரணத்தையும் அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதால் அந்தத் துணிக்கை என்பதை நொறுக்கப்பட்ட ஒரு அப்பத் துண்டே என்பது தெளிவு. அதையே ஒரு சிறு ஸ்பூன்போலப் பயன்படுத்தி தாலத்தில் உள்ள கூட்டு, சூப் உணவை வாய்க்கு எடுத்துச் சென்று உண்டனர் என்பது தெளிவாகிறது. அப்பமானது எல்லா போஜன வேளைகளிலும், எந்த உணவோடும் சேர்த்து உண்ணப்பட்டது என்பது எனது அனுபவம். அதை அப்படிக் கையாள காலப்போக்கில் ஒருவர் கற்றுக்கொள்வார். இந்த அப்பத் துணிக்கையே கர்த்தர் சொல்லும் துணிக்கையாகும்.
கிழக்கத்திய நாடுகளில் விருந்து கொடுப்பவர் அழைக்கப்பட்டவருக்கு இப்படியாக ஒரு துணிக்கையை எடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிண்ணங்களில் உள்ள சிறந்த உணவு ஒன்றில் நனைத்து அவர் வாயில் ஊட்டிவிடுவது அவரைக் கனப்படுத்தும் செயல்களுள் ஒன்று. எனவே கர்த்தர் அப்படித் துணிக்கையைத் தோய்த்து யூதாஸின் கையில் கொடுத்தது வழக்கத்திற்கு மாறான புதுமையன்று. அப்படிச் செய்ததின் மூலம் யூதாசை, “நீ எனக்கு மிகவும் பிரியமானவன், நான் உன்னை இன்னும் நேசிக்கிறேன்” என்ப தன் வெளிப்பாடாகக் கொள்ளலாம். ஆபிரகாம் ரின்பேனி என்பவர் இதை இவ்வாறு கூறுகிறார்: “என் சீஷனாகிய யூதாசே! உனக்காக நான் பரிதாபப்படுகிறேன். நீ துரோகி என்று நிரூபித்துவிட்டாய். உன் இதயத்தில் என்னைப் புறக்கணித்துவிட்டாய். ஆனாலும், நான் உன்னை எனது சத்துருவாய் எண்ணவில்லை. நான் அழிக்க வரவில்லை; நிறைவேற்றவே வந்திருக்கிறேன்; எனவே நீ செய்வதைச் சீக்கிரம் செய்; இதோ இதுவே எனது அன்பின் துணிக்கை” என்றார்.
யூதாசிடம் தந்தது அந்தத் துணிக்கை மாத்திரம்தானா? கர்த்தர் தமது அன்பின் இதயத்தையே அதன்மூலம் அவனிடம் அளித்தார். அவன் செய்ய இருக்கும் பாவத்தின் பயங்கரத்தையும் அதன் மூலம் உணர்த்தினார். என்னே அவரது அன்பின் ஆழம்!
மொழியாக்கம்: Mr.G.வில்சன்