பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2022)

தானியேல்

5 ஆம் அதிகாரம்

Dr.உட்ரோ குரோல்

தேவன் தம்முடைய மேலான அதிகாரத்தை மீண்டுமாக நிலைநிறுத்தியதை இவ்விதழில் நாம் காண்போம். தானியேல் ஐந்தாம் அதிகாரத்தில் தன்னை யாரும் வெல்லமுடியாது என்று எண்ணியிருந்த மற்றுமொரு அரசனைப்பற்றி நாம் வாசிக்கிறோம். பாபிலோனிய சேனைகளால் சிறைபிடிக்கப்பட்டு வந்த இளைஞரான தானியேல், தன் விசுவாசத்தில் உறுதியாய் நின்றவரும், மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், அரசாங்க பணியில் உயர் பதவியை வகித்தவருமாய் இருந்தார். ஆனாலும், அங்கு அவருடைய விசுவாச வாழ்க்கை எளிதாய் இருக்கவில்லை. அதற்கு சோதனைகள் வந்தன. ஆனாலும் அவர் அதில் உறுதியாய் நின்றார். பழைய ஏற்பாட்டில் தானியேல் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு சிறந்த தீர்க்கதரிசியாய் விளங்கினார்.

தானியேல் புத்தகத்தின் முதல் நான்கு அதிகாரங்களும் நேபுகாத்நேச்சார் அரசரைப் பற்றியது. 5ஆம் அதிகாரம் பெல்ஷாத்சார் என்று அரசனைப் பற்றி விளக்குகிறது. இவர் ஒரு வித்தியாசமான அரசர். இவரது சரித்திரத்தை நாம் சற்றே கவனிப்போம். பாபிலோனிய அரசர்களில் பலர் தேவனால் ஆச்சரியமான வகையில் சந்திக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு அது புரிந்திருக்கவில்லை. உதாரணமாக நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவரது மகன் ஏவில் மெரொதாக் ஆட்சிக்கு வந்தார். இவரைப்பற்றி 2 இராஜாக்கள் 25ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இவரை நெரிகிலைசர் என்பவர் கி.மு.560ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கொலை செய்தார். இவர் நேபுகாத்நேச்சாரின் மகளைத் திருமணம் செய்திருந்தார். அதாவது, ஏவில் மெரொதாக் என்பவரின் சகோதரியின் கணவனை நெரிகிலைசர் கொலை செய்தார்.

மேலும் கி.மு.556இல் மே மற்றும் ஜூன் ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே ஆண்ட அவரது இளைய மகன் லாபிஷ் மார்டக் என்பவரையும் கொன்றார். இதன்பிறகு நபோனிடஸ் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால், பாபிலோனியாவின் தலை நகரான பாபிலோனில் வாழ அவருக்கு விருப்பமில்லை. சுமார் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் தனது மகனான பெல்ஷாத்சாரை உடன் அரசராக்கினார். அதாவது பெல்ஷாத்சார் தனது தகப்பனான நபோனிடஸின் இணை ஆட்சியாளரானார். தானியேல் 5:1இல் பெல்ஷாத்சார் என் னும் ராஜா என்று வாசிக்கிறோம்.

எனவே, சில தலைமுறைகள் கடந்து சென்றுவிட்டன. சிறைபிடிக்கப்பட்டு வந்த இளைஞனான தானியேலும் வயது சென்றவராகிவிட்டார். காலங்கள் கடந்து போயின. இந்த பாபிலோனிய அரசர் பெல்ஷாத்சார் ஆயிரம் பிரபுக்களுக்கு பெரிய விருந்து அளித்தார். ஆதிகாலத்தில் இவ்வித விருந்து அளிக்கும்படியான இடம் இருந்திருக்குமா என சிலர் சந்தேகப்படுகின்றனர். ஒரு சிலர் இது உண்மையல்ல என்றனர். ஆனால், அகழ்வாராய்ச்சியாளர்கள் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாபிலோனைக் கண்டுபிடித்தனர். பாரசீக வளைகுடாப் போரின்பொழுது ஈராக்கின் படைகள் பாபிலோனைக் காப்பாற்றுவதை ஒரு முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஏனெனில் அதிபர் சதாம் உசேன் பாபிலோன் நகரத்தை மீண்டும் எழுப்பிக்கட்ட ஓர் எண்ணம் கொண்டிருந்தார். இன்றைய ஈராக் படைகள் அக்காலத்து பெல்ஷாத்சாரின் படைகளுக்கு சமம்.

பாபிலோனிய அரசர் இப்பெரிய பட்டணத்தில் வாழ்ந்தார். இந்நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய விருந்து சாலையைக் கண்டுபிடித்தனர். அது 55 அடி அகலமும் 165 அடி நீளமும் இருந்தது. இது நிச்சயமாகவே ஆயிரம் பேருக்கு விருந்தளிக்கும் இடமாக இருந்திருக்கும். எனவே ஆயிரம் பேர் அங்கு கூடியிருந்ததில் சந்தேகமேயில்லை.

ஆயிரம் பிரபுக்களுடன் அரசரும் அவ்விருந்தில் திராட்சரசம் குடித்தார். தானியேல் திராட்ச ரசத்தால் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்ற கொள்கையில் இருந்தார் என நாம் பார்த்தோம். ஏனெனில் யூதமக்கள் திராட்ச ரசத்துடன் 3:1 என்ற விகிதத்துடனோ 10:1 என்ற விகிதத்துடனோ தண்ணீரைக் கலந்தே அருந்துவார்கள். ஆனால், பாபிலோனியர்கள் அத்திராட்ச ரசத்துடன் எதையுமே கலக்கமாட்டார்கள். எனவே அங்கே நடந்த களியாட்டங்களை நாம் கற்பனை செய்துகொள்ளலாம்.

இங்கே பெல்ஷாத்சார் அரசரின் அலட்சியமும் அந்நாளில் காணப்பட்டது. ஏனெனில் அப்பட்டணத்தைப் பெர்சியப்படை முற்றுகை போட்டிருந்தது. அவர் பாதுகாப்பாக உள்ளே இருப்பதாலும் தனது வீரர்கள் வலிமை வாய்ந்தவர்கள் என்பதாலும் அவர் அலட்சியமாயிருந்தார். தனது மக்கள் கோட் டைக்கு வெளியே காத்திருக்கும் பெரிய பயமுறுத்தலை மறக்கவேண்டும் என்பதற்காக அப்பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணியிருக்கலாம். பெர்சிய படையின் பலத்தை அவர் குறைத்து மதிப்பிட்டிருந்தார். ஏனெனில் அன்று இரவே பெர்சியர்கள் பாபிலோனியப் படையை வென்றனர்.

பெல்ஷாத்சார் தேவனுடைய வல்லமையையும் அற்பமாகவே எண்ணியிருந்தார். “ஏனெனில் பெல்ஷாத்சார் திராட்ச ரசத்தை ருசித்துக் கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத் நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான் (வச.2).”

நேபுகாத்நேச்சார் ஒரு பெருமை மிக்க அரசர். அவரது வழித்தோன்றலான பெல்ஷாத்சாரும் பெருமை கொண்டவராய் இருந்தார். உலகத்தின் இராணுவ பலத்தையும் உன்னதமான தேவனுடைய வல்லமையையும் அவர் அலட்சியம் செய்தவராய் இருந்தார். அங்கேயிருந்த ஆண்களும் பெண்களும் குடித்து வெறித்திருந்த அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான். அவர் மட்டுமல்ல; அவ்விருந்து சாலையிலிருந்த அனைவரும் அதனைக் கண்டனர். மனித விரல்கள் சாந்து பூசிய சுவரிலே எழுதிற்று.

இங்கே ஒரு அரசன் “தானே அனைத்துக்கும் தலைவன்” என்று நம்பினார்; அது உண்மையல்ல; தான் செய்யும் செயல்களை ஒருவராலும் செய்யமுடியாது என்றும் நினைத்தார். வெளியே நிற்கும் பெர்சியப் படைகள் வெளியேதான் இருக்கும்; அவைகளால் உள்ளே வரமுடியாது; என இறுமாப்பாய் இருந்தார். அதுவும் நடக்கவில்லை; மேலும் தேவனுடைய ஆலயத்தின் பரிசுத்தமான பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை உபயோகித்ததன் மூலம் தேவனையும் அவமதித்தார்.

இக்கொண்டாட்டத்தின் மத்தியில் திடீரென்று அவ்விருந்து சாலையில் சாந்து பூசப்பட்ட சுவரிலே விரல்கள் தோன்றி எழுத ஆரம்பித்தது. அரசரின் அதிர்ச்சியைக் கவனியுங்கள். “அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது” (வச.6). கை விரல்கள் சுவரில் எழுதியதை அரசன் கண்டார். ஆனால், அவை எழுதியதை வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ அவரால் முடியவில்லை. கையுறுப்புகள் சுவரில் எழுதியதைக் கண்டவுடன் ராஜா சுயநினைவுக்கு வந்தார். வெளிரிய முகத்துடன் அச்சத்தால் முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. தரையில் விழுந்தார். “இந்த விரல்கள் எழுதியதை எனக்கு விளக்குவதற்கு ஒருவர் தேவை” என்று உடனடியாகக் கூறினார்.

“ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான்” இவர்கள் ஏற்கனவே இருமுறை இதுபோன்ற கட்டளைகளை ஏற்று தோல்வியுற்றவர்கள். இது மூன்றாவது முறை. மனித அறிவுக்குத் தோன்றியதையே இந்த அரசனும் செய்தார். மனித ஞானம் மனித ஞானத்தையே தேடும்.

ராஜா மந்திரவாதிகளை அழைத்தார். அவர்களுக்கு உயர்வான காரியங்களை செய்வதாக வாக்களித்தார். “இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரம் தரிக்கப்படுவான்” என்ற வெகுமதி மொர்தெகாயின் இரத்தாம்பர அரச வஸ்திரத்தை நினைவுபடுத்துகிறது; கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, என்பது ஆதியாகமம் 41 இல் யோசேப்புக்கு பார்வோன் அரசரால் தரிக்கப்பட்டதை நினைவூட்டுகிறது. “ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான்” என்பது “எனது தகப்பனான நபோனிடஸ் முதலாவதாகவும் அவருடைய இணை ஆட்சியாளரான தான் இரண்டாவதாகவும், உன்னை மூன்றாவதாகவும் வைப்பேன்; நீ இதன் பொருளைமட்டும் விளக்க வேண்டும்” என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த வேண்டுகோள் அரசரிடம் இருந்து வந்தது. ஆனால், ஒருவருக்கும் அந்த சொற்கள் விளங்கவில்லை; அதன் பொருளும் தெரியவில்லை. அவர்களுடைய மந்திரங்கள் தந்திரங்கள் யாவும் பொய்த்துப்போயின.

அரசர் மற்றும் பிரபுக்களின் சத்தங்களைக் கேள்விப்பட்ட அரசரின் தாயார் அந்த விருந்து சாலைக்கு வந்தாள். “ராஜாவே, நீர் என்றும் வாழ்க; நீர் கலங்கவும் பயப்படவும் வேண்டாம். உம்முடைய ராஜ்யத்திலே ஒரு மனிதன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது” என்று கூறினாள். தானியேலை ராஜாத்தி நினைவில் வைத்திருந்தாள்.

தானியேல் மீண்டும் அரசரின்முன் அந்த சொற்களை விளக்குவதற்கு அழைத்துவரப்பட்டான். வசனம் 16 இல் அரச இரத்தாம்பரம், கழுத்தில் பொன்சரப்பணி, ராஜ்யத்திலே மூன்றாவது இடம் என்று மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்ட அதே வெகுமதிகளை அரசர் அறிவித்தார். ஆனால், தானியேலின் மறுமொழி ஆச்சரியமாக அமைந்தது.

“உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும். அப்பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்” என்று பணிவுடன் கூறினார். பணம், புகழ், பதவி, பட்டம் இவற்றை பேராசையுடன் தேடி அலையும் இவ்வுலகில்தானே நீங்களும் நானும் வாழ்கிறோம். தேவனால் நடத்தப்பட்ட தானியேலைப்போல நாமும் வாழ வேண்டும்.

தானியேல் தேவனால் நடத்தப்பட்டார்; “உம்முடைய வெகுமானங்கள் உம்முடனே இருக்கட்டும். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்” என்று தாழ்மையுடன் பதிலளித்தார். அதாவது “அரசனே! அக்குப்பைகளை நீரே வைத்துக்கொள்ளும். எனக்கு அவைகள் தேவையில்லை”என்பதை நாகரிகமாகக் கூறினார்.

“பரலோகத்தில் எனக்கு பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கே பூச்சியாவது துருவாவது கெடுப்பது இல்லை; திருடர்கள் கன்னமிட்டு திருடுவதில்லை”. இவ்விதமாய் அவர் கூறவில்லை. ஆனால், தேவன் தமது மக்களுக்கு வைத்துள்ள வெகுமானங்களை அவர் புரிந்து வைத்திருந்தார். தேவன் நமக்கு வைத்துள்ள திட்டத்தை யாராலும் அழிக்க முடியாது. இவ்வுலக வாழ்வு முடிந்தபின் நித்திய பேரின்பமும், கிரீடங்களும் வெகுமானங்களும் உண்டு. எனவேதான் அவர் ராஜாவிடம், “உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; எனக்கு அவை தேவையில்லை; ராஜ்யத்தின் மூன்றாவது இடமும் எனக்கு அவசியமில்லை; நான் இங்கிருக்க விரும்பவில்லை; நான் என்னுடைய வீடாகிய எருசலேமுக்குச் செல்லவேண்டும்.” என்றார்.

ஆனால், அரசனுக்கு அவ்வெழுத்தின் பொருள் தேவைப்பட்டது; எனவே அவனது பாபிலோனிய வரலாற்றை அவருக்கு நினைவுபடுத்துகிறார். பெல்ஷாத்சாரின் முன்னோரான நேபுகாத்நேச்சாரின் வாழ்க்கையை நினைவூட்டுகிறார்.

“ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்” (வச.18) என்று கூறிய அவர் தொடர்ந்து நேபுகாத்நேச்சாரின் பெருமையையும், தன்னைத் தாழ்த்தி தேவனைத் தேடாமல் இருந்ததையும், பெரிய மரமாகிய நேபுகாத்நேச்சாரை வெட்டினார் என்றும் விவரித்தார். ஒரு மிருகத்தைப்போல காடுகளிலும் வயல்களிலும் அலைந்து திரிந்தார். அவர் சரீரம் பனியில் நனைந்தது, ஒரு மிருகத்தைப்போல புல்லைத் தின்றார். ஆட்சி தேவனுடையது என்பதை உணர்ந்துகொள்ளும் வரையிலும் அவர் பைத்தியமாக இருந்தார். இதனை அவர் வழித்தோன்றலான பெல்ஷாத்சார் அரசரும் அறிந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அதனை அறியவில்லை. எனவே 18-21 வசனங்கள்வரை தானியேல் அந்த வரலாறை பெல்ஷாத்சார் அரசருக்கு விளக்கினார்.

தானியேல் தொடர்ந்து “அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தவில்லை”(வச.22). “நேபுகாத்நேச்சார் உன்னதமான தேவனே மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்பதை அறிந்து அதை அறிக்கையிட்டபொழுது அவர் தேவனுடன் உறவுகொண்டார். தனது வாழ்வைத்தானல்ல; தேவனே கட்டுப்படுத்துகிறார், ஆட்சி தேவனுடையது என்பதை ஒத்துக்கொண்டார்.”

பின்னர் அரசரைப் பார்த்து “ராஜாவே நீர் அதைச் செய்யவில்லை. தேவனுக்கு முன்பாக உம்மைத் தாழ்த்தவில்லை” என்று தைரியமாகக் குற்றஞ்சாட்டினார். “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக்.4:10) என்று புதிய ஏற்பாடும் நமக்கு உரைக்கிறது.

பெல்ஷாத்சார் அரசர் இரண்டாவதாக மற்றொன்றும் செய்யவில்லை. முதல்பகுதியில் அவர் செய்யாத காரியங்களையும் இரண்டாவது பகுதி அவர் செய்த காரியத்தையும் தானியேல் விளக்கினார். அதாவது, “பரலோக தேவனுக்கு முன்பாக உம்மை உயர்த்தினீர்.”

இன்றைய சமுதாயத்தில் பெருமையுள்ள மக்கள் அனைவரும், தாங்களே வல்லவர்கள், தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள்; தங்கள் வாழ்வை நடத்திவருகிறார்கள் என எண்ணி தங்களது சுயகாரியங்களை நடத்திவருகின்றனர். அவர்கள் தேவன் ஒருவர் உண்டு என்று நம்புவதில்லை. டெட் டர்னர் கூறியதைப்போன்று “நான் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கே நான் விரைந்து செல்ல விரும்புகிறேன்.” இதுதான் பெருமை. எவ்வளவு பெரிய மதியீனம்!

பெல்ஷாத்சார் அரசர் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டி தன்னை உயர்த்தினார். அழிவுக்கு முன்னானது அகந்தை என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும். பெல்ஷாத்சார் “இந்த சுவரில் என்ன எழுதியுள்ளது? இந்த சொற்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? நான் இச்சொற்களின் பொருளை அறிந்துகொள்ள ஏதேனும் வழி உண்டா எனக் கேட்டார்.

கைவிரல்கள் சுவரில் அரமேயு மொழியில் நான்கு சொற்களை விரைவாக எழுதியது. “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்”

அச்சொற்களின் தீர்க்கதரிசனங்களின் வெளிப்பாடுகளை தானியேல் கூறினார். வசனம் 25 இல் “எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்” என்று ஆரம்பிக்கிறார். அந்த எழுத்து எழுதப்பட்ட நேரத்தில் தானியேல் அங்கு இல்லை. ஆனாலும், ஒருவருக்கும் புரியாத அவ்வெழுத்துக்களை அவரால் வாசிக்க முடிந்தது. இதை எவ்வாறு அவர் அறிந்து கொண்டார்? சுவரில் எழுதப்பட்ட எழுத்தையும் அதன் பொருளையும் அவர் கூறினார். அச்சொற்களை அறிந்திருந்தாலும் அதனுடைய கருத்தினை விளக்குவதற்கு ஒருவர் தேவை. அந்த சுவரில் காணப்பட்ட அந்த நான்கு சொற்கள் “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” என்பதாகும்.

மெனே என்ற சொல் அரமேயு மொழியில் எடையைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல்லாகும். 50 சேக்கல் – அதாவது, தற்காலத்தில் அது பவுண்டைக் குறிக்கும். அதாவது “உன்னிடம் பவுண்டு, உன்னிடம் பவுண்டு உள்ளது” என்றார்.

தெக்கேல் என்ற சொல்லும் எடையைக் குறிக்கும். அது சேக்கல் அதாவது ஒரு அவுன்ஸில் 2/5 பங்காகும். மிகச் சிறிய ஓர் அளவு. அது நிறுத்தல் என்ற வினைச்சொல்லிலிருந்து வந்துள்ளது. பார்சின் அல்லது அரமேய மொழியில் உப்பார்சின் என்ற சொல் 25 சேக்கல் அல்லது 2/3 பவுண்டு எடையைக் குறிக்கும்.

தேவன் பெல்ஷாத்சாரிடம் “உன்னிடம் பவுண்டு, பவுண்டு மற்றும் 2/3 பவுண்டும் உள்ளது” என்றார். பல்பொருள் அங்காடியில் வழங்கும் சொற்கள் போலுள்ளதல்லவா? இதற்கு விளக்கம் தேவையல்லவா? கட்டாயம் வேண்டும்.

இந்த சொற்களின் அர்த்தமாவது “மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், அவருடைய நீதியின் தராசிலே நீ நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய் என்றும், உன்னுடைய பெருமைக்கு முடிவு வந்தது” என்றும் கூறினார். அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான் என்று அந்த அதிகாரத்தின் இறுதியில் நாம் வாசிக்கிறோம்.

மேதியனாகிய தரியு பெர்சிய படையின் தலைவன். மேதியர்களும் பெர்சியர்களும் இணைந்து தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டனர். தன்னை எவரும் வெல்லுவதற்கில்லை என்ற ஆணவத்தில், தனது பட்டணத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ள படைக்கும் பெல்ஷாத்சார் பயப்படவில்லை; அன்றைய இரவிலே தரியு யூப்ரடீஸ் நதியின் தண்ணீரை பாபிலோன் பட்டணத்திற்கு அடியில் திறந்து விட்டார். நதியின் உயரம் குறைந்த பின்னர் உள்ளே இருந்தவர்கள் குடிமயக்கத்திலிருந்ததால் பெர்சியப் படையினர் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் உள்ளே நுழைந்தனர். ஒரே இரவில் பாபிலோனிய சாம்ராஜ்யம் விழுந்தது.

இதைத்தான் “நீ தராசிலே நிறுக்கப்பட்டாய்; மிகவும் வலிமையுடையவன் என்ற உன் எண்ணத்தை நான் பொருட்படுத்துவதில்லை; விண்ணகமே ஆட்சி செய்கிறது” என்பது தேவனின் சொற்களுக்கு பொருளாகும். தேவன் ஒரே இரவில் ஒரு ராஜ்யத்தைக் கவிழ்க்கமுடியும்; மேலான அதிகாரம் உடைய எவரையும் கீழே தள்ளமுடியும். எனவேதான் தேவனுடைய மகிமைக்கும், விண்ணகத்தின் மேலான அதிகாரத்துக்கும் நம்மை நாம் ஒப்புவிக்கவேண்டும். ஏனெனில் தேவனே அனைத்தையும் தமது பொறுப்பில் வைத்திருக்கிறார். தேவன் செய்ய நினைத்தது எதுவோ அது தடைபடாது, நிறைவேறியே தீரும். இவ்வுலகில் தேவனுடைய ஆட்சியைத் தடுக்க சாத்தானுக்கு எந்த வழியும் கிடையாது; ஏனெனில் ஆட்சி தேவனுடையது. நமது நம்பிக்கை தேவனையும் அவரது எல்லையற்ற இறையாண்மையையும் சார்ந்துள்ளது என்பது ஓர் அற்புதமே.

தேவன் தராசிலே நம் ஒவ்வொருவரையும் நிறுத்துவருகிறார். சர்வலோக நியாயாதிபதி அவரே; அவருடைய நியாயங்கள் செம்மையானவை. நேர்மையான நீதியரசர் தரும் தீர்ப்புகள் மட்டும் வேறுபடும். நம்மைக் கண்டிக்கவோ அல்லது திருத்தவோ அவர் நியாயந்தீர்க்கிறார். பெல்ஷாசார் போன்ற மனிதர்கள் தண்டிக்கப்பட தீர்மானிக்கப்படுகிறார்கள்.

நம்முடைய ஆட்சியாளர்களும் தலைவர்களும் பெல்ஷாத்சார் போன்று பெருமையும் அதிகாரமும் உடையவர்களாயிருந்தால் நாம் தேவனுடைய இரக்கங்களுக்காக ஜெபிக்கவேண்டும். நம்முடைய எதிரிகள் போன்று இருப்பவர்களை நாம் நேசிக்கவேண்டும். தேவன் ஒரு பெரிய செங்கோலை தமது கரத்தில் வைத்திருக்கிறார் என்பதையும் அதை ஒரு நோக்கத்திற்காக வைத்திருக்கிறார் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்து போகக்கூடாது. தேவன் தமது ஊழியக்காரர்களை ராஜாக்கள் முன்பாக தைரியமாகவும் உண்மையாகவும் நிறுத்துகிறார் என்பதற்கு தானியேல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


நினைவுகூருங்கள்!

கிறிஸ்தவனுடைய ஜெபம் இரகசியமானதாக இருந்தாலும் அதன் விளைவை யாராலும் மறைக்க முடியாது!