சகோ.பழனிவேல் ஆபிரகாம்
(மார்ச்-ஏப்ரல் 2022)
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும், அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார் (ஏசா.53:9).

சகோ.பழனிவேல் ஆபிரகாம்
காலம் நிறைவேறியபோது, பிதாவின் மீட்பின் திட்டத்தை நிறைவேற்றும்படியாய் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாய் அவதரித்தார். அவர் பிறக்கும்போது ஒரு அரண்மனையிலோ, இராஜமாளிகையிலோ அல்ல, தச்சுவேலை செய்து வந்த எளிமையான குடும்பத்திலே பிறந்து வளர்ந்தார். நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்ற நிலையில்தான் அவரது வாழ்க்கை இவ்வுலகில் அமைந்தது.
அதேவேளையில் அவர் பிறந்திருந்த நேரத்தில் யூதருக்கு இராஜா எங்கே பிறந்திருக்கிறார்? என்று கிழக்கிலிருந்து ஞானிகள் தேடி வந்தனர். ஒரு அரண்மனையில் பிறந்த இராஜ குழந்தைக்கு எதைப் பரிசாக கொடுப்பார்களோ அதே மாதிரியான அன்பளிப்பாக பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும் அவருக்கு அளித்து அவரைப் பணிந்து இவர் ஒரு இராஜா என்று இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார்கள். என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது (மத்.2:6) என்பதை ஏரோது இராஜா அறிந்தவுடன் அவன் மனதிலே கலக்கமும் மூர்க்கமும் ஏற்பட்டது. உடனே அக்குழந்தையைக் கொலை செய்துவிட எத்தனித்தான்.
இவையெல்லாம் அவர் ஏழ்மையான பின்னணியில் பிறந்திருந்தாலும் அவர் அபிஷேகிக்கப் பட்ட ஒரு இராஜா என்பதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இதை பரிசுத்த வேதமும் உறுதிப்படுத்துகிறது. அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் … நமது நிமித்தம் தரித்திரரானார் (2கொரி.8:9). நம்முடைய பாவத்தைச் சுமக்கும்படியாகவே அடிமையின் ரூபமெடுத்து… மனுஷ சாயலானார். கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என இயேசுவினால் சாட்சி பெற்ற நாத்தான்வேல் அவரிடம், ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்று அறிக்கையிட்டான் (யோவா.1:49).
இயேசுகிறிஸ்து அடிமையின் ரூபமெடுத்து இவ்வுலகில் வந்தாலும் அவர் இராஜா என்பதையும், தேவனுடைய குமாரன் என்பதையும் மறுக்க இயலாது. இது அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும்போது பலமாய் நிரூபிக்கப்பட்டதென்று பவுல் ரோமர் 1:5இல் குறிப்பிடுகிறார். இவ்வுலகத்தின் ஆஸ்தி, செல்வம், செழுமையெல்லாம் அவருடையதாயிருக்கிறது. அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது… சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது (கொலோ.1:16,17). இவையெல்லாவற்றையும் ஆளுகை செய்யும் அதிகாரத்தை உடையவராயிருந்தாலும் அதற்காக அவர் இவ்வுலகத்திற்கு வரவில்லை. அதினால்தான் சாத்தான் இயேசுவிடம் உலகத்தின் சகல இராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து; நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னபோதும், அப்பாலே போ சாத்தானே என்று அவனைக் கடிந்துகொண்டார் (மத்.4:9,10).
யூதர்கள் பிலாத்துவிடம் கிறிஸ்து என்னப்பட்ட இராஜா என்று தன்னை சொல்லி கலகம் செய்ததாக இயேசுகிறிஸ்துவைக் குற்றஞ்சாட்டினார்கள். அப்பொழுது பிலாத்து இயேசுவை அழைத்து, நீ யூதருடைய இராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி தான் என்றார் (மத்.27:11). இந்த இடத்தில் இயேசு தம்மை ஒரு இராஜா என்பதை பிலாத்துவிடம் தைரியத்தோடு கூறியதோடு தம்முடைய ராஜ்ஜிய பாரத்தைக் குறித்தும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார் (யோவான் 18:36).
இவைகளுக்குப்பின்பு, பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள் (யோவான்.19:1,2,3). இவ்வாறு அவருடைய இராஜரீகத்தை அவமதித்து பரிகசித்தார்கள். மறுபடியும் பிலாத்து இயேசுவை அழைத்து நீர் எங்கேயிருந்து வந்தவன் என்று வினாவினான். …உன்னை சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலை பண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா? (யோவான் 19:10) என்று தன்னுடைய அதிகாரத்தை அவருக்கு முன்பாக எடுத்துக் காண்பித்தான். அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு அதிகாரமிராது என்று மேலான அதிகாரத்தை அவனுக்கு எடுத்துக்காட்டினார்.
பின்பு பிலாத்து யூதர்களிடம், இதோ, உங்கள் ராஜா என்று இயேசுவைக் காட்டினான். அதற்கு பிரதான ஆசாரியன் பிரதியுத்தரமாக, இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். இவ்வாறு அவர்கள் இயேசுவை வெறுத்து புறக்கணித்தனர். இறுதியில் பிலாத்து தன் கைகளைக் கழுவி இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கும்போது, ஒரு மேல்விலாசத்தை எழுதி சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. அப்போது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான். இவ்வாறு யூத மதத்தலைவர்கள் அவர் ஒரு மேசியா அல்லது அபிஷேகிக்கப்பட்ட இராஜா என்பதை கடைசிவரை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதினால் அவர் இராஜா என்ற தனித்தன்மையை இழந்துவிடவில்லை. அவர் பிலாத்துவின் முன்பாகவும் ஜனங்களின் மூப்பர்கள், பிரதான ஆசாரியர்கள், வேத பாரகர்கள் முன் தன்னை ஒரு இராஜா என்று அறிக்கையிடுவதற்கு பயப்படவில்லை (மத்.26: 63,64). இயேசு தன்னை மேசியா என்றும், தேவனுடைய குமாரன் என்றும் அழைக்கப்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார். அவரை கழுதையின்மேல் ஏற்றி பவனி வந்தபோது, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் (லூக்.19:38) என்று அவரை புகழ்ந்து பாடினபோது அவர்களுடைய வாழ்த்துதலை ஏற்றுக்கொண்டார்.
பாவிகளான நம்முடைய பாவத்தை பரிகரிக்கும்படியாகவே பாவமறியாத அவர் பாவமானார். அவர் நமக்காகவே குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; குற்றவாளிக்கும் கொலைகாரனுக்கும், கள்ளர்களுக்கும் அளிக்கப்படும் சிலுவை மரணத்தை ராஜாவாகிய இயேசுவுக்கு அளித்தார்கள். அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டாலும் மரணத்திலும் அவருடைய தனித்தன்மையை இழந்துவிடவில்லை. நியாயப் பிரமாணத்தின்படி மரத்திலே தூக்கிப் போடப்பட்டவர்கள் தேவனால் சபிக்கப்பட்டவர்களாய் எண்ணப்பட்டனர். மேலும். மரத்திலே தூக்கிப் போடப்பட்டவர்களுடைய பிரேதம் இரவிலே தொங்கலாகாது (உபா.21:23). ஆகவே அவர்களுடைய கால் எலும்புகளை முறித்து அவர்களை உயிரிழக்கச் செய்வார்கள்.
அவ்வாறு போர்ச்சேவகர்கள் சிலுவையில் அறையப்பட்டவர்களின் கால்களை முறிக்கும்படியாக வந்தபோது அவர் மரித்திருந்தார். நீதிமானுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை (சங். 34:20) என்ற வேதவாக்கின்படியே நம்முடைய சாபத்தை சிலுவையில் சுமந்த பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் கால்கள் முறிக்கப்படவில்லை. அவரோடுகூட சிலுவையில் அறையப்பட்டவர்களின் கால்களோ முறிக்கப்பட்டது (யோவான் 19:32).
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காக சாபமானார். மரத்திலே தூக்கப்பட்டவர்களின் பிரேதங்களைத் தொடவோ, அதைப் பெற்றுச் செல்வதற்கோ அவர்களுடைய குடும்பத்தினரைத் தவிர ஒருவரும் முன்வர மாட்டார்கள். மேலும் சிலுவை மரணத்தை ஏற்றவர்களின் சடலங்களை மரண தண்டனை அடைந்த துன்மார்க்கர்களும் குற்றவாளிகளும் வைக்கப்படும் பிரேதக்குழியில்தான் அடக்கம் பண்ணுவர். பொது ஜனங்களை அடக்கம் செய்யும் கல்லறைகளில் அவர்கள் பிரேதங்கள் வைக்கப்படுவதில்லை. இவ்வாறு, அவர் சாபமான சிலுவை மரணத்தை அடைந்தபடியால், துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள் (ஏசா.53:9). ஆனாலும், அவரது அடக்கத்திலும் அவர் அபிஷேகிக்கப்பட்ட இராஜா என்ற மேன்மையை இழந்துவிடவில்லை.
அவருடைய அந்தரங்க சீஷனாயிருந்த யோசேப்பும், இராத்திரியிலே இயேசுவினிடத்தில் வந்த நிக்கொதேமும் அவருடைய சரீரத்தை அடக்கம் பண்ண முன்வந்தனர். இருவரும் சனகெரிப் சங்கத்தில் அங்கத்தினராயிருந்தனர். இருவரும் ஐசுவரியவான்களாயும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துள்ளவர்களாயுமிருந்தனர். யூதருக்குப் பயந்ததினால் இயேசுவைப் பகிரங்கமாய் பின்பற்றாதபடிக்கு அந்தரங்க சீஷர்களாய் இருந்தனர். இயேசுவைக் கொலை செய்யும்படிக்கு யூதருடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் இவர்கள் இருவரும் சம்மதம் தெரிவிக்கவில்லை (யோவா.7:50-53, லூக்.23:51). இந்த யோசேப்பு உத்தமனாயும் நீதிமானாயும் தேவனுடைய இராஜ்யத்திற்கு காத்திருந்தவனுமாயிருந்தான் (லூக்.23:50,51). அதேபோல பரிசேயனாகிய நிக்கொதேமு யூதருக்குள்ளே அதிகாரியாயும், இஸ்ரவேலிலே போதகனுமாயிருந்தான். தேவனுடைய இராஜ்ஜியத்தைக் குறித்தும், மறுபடியும் பிறப்பதைப் பற்றியும், சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டதைப் போல அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்திய ஜீவனை அடையும்படிக்கு மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டுமென்பதைப்பற்றியும் நிக்கொதேமுக்கு இயேசு போதித்திருந்தார். அவர் போதித்ததை விசுவாசித்தான். சரியான நேரத்தில் அவருக்காக செயல்பட துணிந்தான்.
மூன்றரை ஆண்டுகள் அவருடன் இருந்தவர்களும் அவரிடத்தில் பலவிதமான நன்மைகள் பெற்றவர்களும் தூரத்திலே இருந்து அழுதவர்களும் இப்பொழுது அவரோடு இல்லை. அவர்கள் யாவரும் கடந்து சென்றுவிட்டனர். பூமி அந்தகாரப் பட்டது, சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இவைகளுக்குப் பின்பு…. யோசேப்பு துணிந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான். பிலாத்து உத்தரவு கொடுத்தான் (யோவா.19:38). பிறகு அவருடைய சரீரத்தை சிலுவையிலிருந்து இறக்கினார்கள். ஐசுவரியவானான நிக்கொதேமு வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய 100 இராத்தல் கொண்டுவந்தான். இவன் இயேசுவை அபிஷேகிக்கப்பட்ட இராஜாவாய் கண்டான். ஆகவே மிகவும் விலையேறப் பெற்ற வாசனை பொருள்களினால் அவருடைய சரீரத்தில் சுகந்த வர்க்கமிட்டு அவரை மேன்மைப் படுத்தினான். ஒரு இராஜாவுக்கு கொடுக்கிற கனத்தைக் கொடுத்தான்.
ஐசுவரியவானான அரிமத்தியா யோசேப்பு தன்னுடைய தோட்டத்திலே கன்மலையில் புதிய கல்லறையை வெட்டி வைத்திருந்தான் (மத்.27: 60, யோவா.19:41). அந்நாட்களில் இராஜாக்களையும் ஐசுவரியவான்களையும் அவர்களுடைய தோட்டத்திலுள்ள சொந்த கல்லறைகளில் அடக்கம் செய்யும் பழக்கமிருந்தது. அதில் வேறு எவரையும் அடக்கம் செய்யமாட்டார்கள். இஸ்ரவேலை ஆண்ட இராஜாக்களும் தங்கள் தோட்டத்திலிருந்த சொந்த கல்லறைகளிலே அடக்கம் பண்ணப்பட்டு வந்தனர் (2இராஜா. 21:18,26). இவ்வாறே யோசேப்பும் தனக்காக கன்மலையில் கல்லறையை வெட்டி வைத்திருக்கும் அளவிற்கு இராஜ மேன்மை உடையவனாயிருந்தான். இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்ய முன்வந்த யோசேப்பு துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமிக்கவில்லை. அவர் யூதருடைய இராஜா என்ற முறையிலே தன்னுடைய தோட்டத்திலே தனக்காக வெட்டியிருந்த புதிய கல்லறையிலே அவருடைய சரீரத்தை வைப்பதற்கு மனமுவந்து இடங்கொடுத்தான். இன்றைக்கும் அந்த திறந்த கல்லறை பேசுகிறது.
இதை வாசிக்கும் அருமையானவர்களே, நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்; நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். இந்த இராஜா நம்முடைய மீட்புக்காக தம்முடைய சொந்த இரத்தத்தையே கிரயமாக செலுத்தினார். இவ்வாறாக தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி… நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார் (வெளி.1:6). இராஜாவாய் இவ்வுலகில் வந்தவர் நம்மையும் தம்மைப் போல் மாற்றியிருக்கிறார். நம்முடைய ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, இவ்விடத்திற்குரியதுமல்ல (யோவான் 18:36).
நாமும் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல, இவ்விடத்திற்குரியவர்களுமல்ல. ஆகவே, தேவ இராஜ்ஜியத்தின் பிள்ளைகளாகிய நாம் இவ்வுல கத்திற்குரிய மேன்மையையும் ஐசுவரியத்தையும் அல்ல, கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுவோம் (கொலோ.3:1). தேவனுடைய இராஜ்யத்திற்கு காத்திருந்த யோசேப்பும் நிக்கொதேமுவும் தங்கள் ஐசுவரியத்தையும், தங்களது உரிமைகளையும் தங்களுடைய இராஜாவுக்காய் அர்ப்பணிக்க முன் வந்தனர். நாமும் அவ்வாறே முன்வருவோமா?
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும், அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார் (ஏசாயா 53:9).
உங்களுக்குத் தெரியுமா?
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமது சாவிற்குப் பின்பு நமக்கொரு வாழ்வு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது!