சுவி. சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2022)

சுவி. சுசி பிரபாகரதாஸ்
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவானவர் பரமேறும்போது, “இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் (மத்.28:20)” என்ற அருமையாக வாக்குத்தத்தத்தை சொல்லிவிட்டு போனார். ஆம், உயிர்த்தெழுந்த நமது ஆண்டவர் ஜீவிக்கிறவராக நம்மோடு கூடஇருக்கிறார்.
மத்தேயு 28ஆம் அதிகாரம் 5ஆம் வசனத் திலே ‘பயப்படாதேயுங்கள்’ என்று ஸ்திரீகளிடத்திலே தூதன் சொல்லுகிறான், அதேபோல 10ஆம் வசனத்தில் அந்த பெண்களிடத்திலே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “பயப்படாதிருங்கள்” என்று கூறுவதைப் பார்க்கிறோம். உயிர்த்தெழுதலின் செய்தியில், உண்மையான செய்தி என்னவென்றால், “பயப்படாதே!” என்பதாகும். ஆம், நம் ஆண்டவர் உயிர்த்தெழுந்தார்! ஆகவே, இனி நாம் பயப்படவேண்டிய அவசியமே இல்லை.
அன்பானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலே ஏராளமான பயங்கள் இருக்கிறது. மனிதர்களைக் குறித்த பயங்கள், மரணத்தைக் குறித்த பயம், வியாதிகளைக் குறித்த பயம், தொற்று வியாதிகளைக் குறித்த பயம், விபத்துக்களைக் குறித்த பயம், யுத்தங்களைக் குறித்த பயம், இனக்கலவரங்களைக் குறித்த பயம் இவ்வாறு பலவிதமான பயங்களோடு இருக்கிற மனுகுலத்திற்கு உயிர்த்தெழுந்த ஆண்டவர் சொல்லுகிற வார்த்தை என்னவென்றால் “பயப்படாதே” என்பதே. அவர் “பயப்படாதே” என்று சொல்லுகிறதற்கு வல்லமையுள்ளவர். ஏனென்றால்,
- அவர் நமக்காக பாடுபட்டார்,
- நமக்காக மரணத்தை ருசி பார்த்தார்,
- நமக்காக உயிரோடெழுந்தார்.
- இன்றைக்கு ஜீவித்திருக்கிறார்.
ஆகவே, அவர் நமக்கு சொல்லுகிறார்: பயப்படாதே! என்று. ஒருமுறை அமெரிக்க நாட்டில் ஒரு பள்ளிக்கூடத்திலே, ஒரு ஆசிரியை தனது பிள்ளைகளுக்கு ஆபிரகாம் லிங்கன் மிக தைரியமான மனிதன் என்று சொல்லிக் கொடுத்தார்: அப்பொழுது அந்த முதலாம் வகுப்பிலே படிக்கிற பையன் எழுந்து, நான் ஆபிரகாம் லிங்கனைக் காணக்கூடிய பாக்கியம் கிடைத்தால் ஆபிரகாம் லிங்கனிடத்திலே ஒரேயொரு கேள்வி கேட்பேன் என்று சொன்னானாம். என்ன கேள்வி என்று ஆசையாய் அந்த சிறுவனிடம் கேட்டபோது, ஆபிரகாம் லிங்கன் முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு என்ன பயம் இருந்திருக்கும் என்பதை நான் கேட்பேன் என்று சொன்னான். ஏனென்று சொன்னால்; மனிதர்களாக தைரியமாக இருக்கிற நாமும்கூட பல சமயங்களில் பல சூழ்நிலைகளில் பயத்தோடு வாழ்கிறோம்.
இந்த பயத்தினாலே நமது உடல்நலம் பாதிக்கிறது. பயத்தினாலே நம் மனநிலை பாதிக்கிறது. பயத்தினாலே நமது உணர்ச்சிகள் குன்றிப்போக ஆரம்பித்துவிடுகிறது. அநேகர் பயத்தினுடைய உந்துதலினாலே தற்கொலைக்கு ஓடிவிடுவதுண்டு.
அருமையான என் சகோதர, சகோதரியே! இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற உன் வாழ்க்கையிலே பல்வேறுவிதமான பயத்தோடு நீ வாழ்வாயானால் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்றைக்கு உனக்குச் சொல்வது: ‘பயப்படாதே’. உயிர்த்தெழுந்த ஆண்டவரின் செய்தியிலிருந்து மூன்று காரியங்களை நாம் கற்றுக்கொள்வோம்.
1. எதிர்காலத்தைக் குறித்து இனி நாம் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை!
அவர் உயிர்த்தெழுந்த செய்தியானது, எதிர் காலத்தைக் குறித்து இனி நாம் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. ஏனென்றால் மனுக்குலத்திலே இருக்கிற ஒரு பெரிய பயம் மரணபயமாகும். ஆனால், அந்த மரணபயத்தையே இயேசுவானவர் சந்தித்து அவர் அந்த மரணத்தை வென்று வெற்றி வாகை சூடினார். ஆகவேதான் அவர் உயிர்த்தெழுந்ததினாலே, எதிர்காலத்தை குறித்து பயப்படவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மனுக்குலத்தினுடைய மகாபிரதானமான எதிரி யாரென்றால்; அது மரணந்தான். ஆகவே எவ்வளவு பெரிய அரசியல்வாதியோ, பெரிய தலைவர்களோ, எவ்வளவு பெரிய செல்வந்தர்களோ அவர்கள் எதற்கும் பயப்படாதிருந்தாலும் மரணத்திற்கு பயப்படுவார்கள். ஆனால், நம் ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்ததினாலே எதிர்காலத்தைக் குறித்தும் மரணத்தைக் குறித்தும் நமக்கு ஏற்படுகிற பயத்திலிருந்தும் கவலையிலிருந்தும் நாம் விடுதலை பெறக்கூடிய கிருபையைத் தருகிறார்.
2. கடந்த காலத்தைக்குறித்து இனி நாம் கலங்கவோ பயப்படவோ அவசியமில்லை.
கடந்த காலத்திலே நாம் ஏறெடுத்த தீர்மானங்கள், கடந்த காலத்திலே நாம் செய்த தவறுகள், கடந்த காலத்திலே நாம் செய்த பாவங்கள், கடந்த காலத்திலே தேவனுக்கு விரோதமாக மனிதனுக்கு விரோதமாக செய்த மீறுதல்கள், கடந்த காலத்திலே வெளிப்படையாக, அந்தரங்கத்தில் செய்த தவறுகள், இவைகளெல்லாம் நமது வாழ்க்கையிலே அடிக்கடி நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவர் உயிர்தெழுந்ததினாலே நீ கடந்த காலத்தை குறித்து பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில் உன் வாழ்க்கையிலே கடந்த கால வீழ்ச்சி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் உன் ஆண்டவராகிய இயேசுவினிடத்திலே நீ அறிக்கைச் செய்வாயானால், அதை விட்டுவிட தீர்மானிப்பாயானால் ஆண்டவர் மன்னித்து உன்னை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார். அவரால் மன்னிக்கப்படாத பாவம் ஒன்றும் இல்லை. அவர் எப்படிப்பட்ட மனிதனையும் அவர் மன்னிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். அவன் கொடூரனாயிருக்கலாம், கொலைகாரனாக இருக்கலாம்.
மன்னிக்கப்படாத அல்லது சமுதாயத்திலே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலே நீங்கள் வாழலாம். ஆனால், உங்களுடைய கடந்த காலத்திற்காக நீங்கள் மனம் வருந்தி உயிர்த்தெழுந்த ஆண்டவருடைய கரத்திலே உங்களை ஒப்புக்கொடுத்து அவரிடத்திலே இரக்கத்திற்காக கெஞ்சுவீர்களானால் நிச்சயமாக அவர் மன்னிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும் (ஏசா.1:18) என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். ஆகவே, கடந்த காலத்தை குறித்த பயத்திலிருந்து ஆண்டவர் உன்னை விடுவிக்க தயாராக இருக்கிறார்.
3. இயேசு உயிர்த்தெழுந்ததினாலே இனி நம்பிக் கையோடு நிகழ்காலத்தை நாம் சந்திக்கவேண்டும்:
வாழ்க்கை என்பதே போராட்டங்களும் பிரச்சனைகளும் நிறைந்த ஒன்றாகும். வாழ்க்கையிலே கஷ்டங்களும் எதிர்ப்புக்களும் ஏமாற்றங்களும் நிந்தைகளும் உண்டு. இவைகளின் மத்தியிலும் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவர்மேல் இருக்கிற நம்பிக்கையோடு அவைகளை சந்திக்கவேண்டும். அருமையானவர்களே, உயிர்த்தெழுந்த இயேசு நமது எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் உயிர்த்தெழுந்தவராக இருக்கிறார். அவரது கையிலே உங்களை ஒப்புக்கொடுங்கள். மிக ஆச்சரியமாய் அவர் வழிநடத்துவார்.