• பழைய ஏற்பாட்டு வேதபாடம்
• Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2023)
தானியேல்
10 ஆம் அதிகாரம்

Dr.உட்ரோ குரோல்
தேவனுடைய வெளிப்படுத்தலுக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு காத்திருந்த தானியேலைப்பற்றி நாம் ஆராய இருக்கிறோம். தன்னுடைய மக்களுக்காக அவருடைய இருதயம் உடைந்தது. அதிக எதிர்பார்ப்புடன் அவர் ஜெபித்தார். தேவன் தமது ஜனங்களுக்கு ஒரு செய்தியை வைத்திருக்கிறார் என அவர் அறிந்திருந்தார். ஆனால், அது வந்துசேர ஆகும் காலத்தை அவர் அறியவில்லை.
தானியேல் 10ஆம் அதிகாரத்தில் தேவனுடைய உயர்ந்த பதவியிலிருக்கும் வான்தூதர் மூலமாக தானியேல் ஒரு தரிசனத்தைப் பெற்றுக்கொண்டார். அந்த செய்திக்காக அவர் ஆயத்தமாகியிருந்தார். தேவனிடமிருந்து உன்னதமான காரியங்களைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாக நமக்கு சில பாடங்கள் தேவைப்படுகின்றன. தானியேலைப் போல நம்மை எவ்வாறு ஆயத்தமாக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
முதலாவது, தானியேல் தனது பாவத்தை அறிக்கையிட்டார். அவர் தேவனுக்கு விரோதமான அதிகமான பாவங்கள் செய்யவில்லை. நமது பாவத்தை நாம் அறிக்கையிடாவிட்டால் நமது நாட்டின் பாவத்தை நாம் அறிக்கையிட முடியாது. ஏனெனில், அவை திரளானது. அடுத்தது ஜெபமும் உபவாசமும் அவசியம். மேலும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கவேண்டும். தேவனிடமிருந்து நாம் பதிலைப் பெற்றுக்கொள்வதற்கு இவை சில அடிப்படையான காரியங்களாகும்.
தானியேல் ஓர் ஆவிக்குரிய போராட்டத்தை மேற்கொண்டார். ஒவ்வொரு புதரிலும் சாத்தான் ஒளித்துக்கொண்டிருப்பான் என நாம் எதிர்பார்க்க வேண்டும். இதில் நாம் ஆழ்ந்து நோக்கவேண்டிய காரியம் உள்ளது. நம்முடைய அனுதின வாழ்வில் சாத்தான் அடிக்கடி இடையூறு செய்வான். ஆனால், யுத்தம் கர்த்தருடையது! எனவே நாம் வல்லமையான நமது பிரதான தளபதியின் கட்டளைக்குக் கீழ்ப்படியவேண்டும்.
தானியேல் 10ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்தில், “பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது” என்றும், 7ஆம் அதிகாரத்தில், “பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான்” என்றும், 8ஆம் அதிகாரத்தில் “ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம் பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது” எனவும், 10ஆம் அதிகாரத்தில் “கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.மு 539ஆம் ஆண்டு கோரேஸ் அரசர் தன் நாட்டிலிருந்த யூதர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம் என்ற ஒரு கட்டளையை வெளியிட்டதாக வரலாறு நமக்குக் கூறுகிறது. இது கோரேஸ் அரசாண்ட மூன்றாம் ஆண்டு. எனவே பாபிலோனிய சிறையிருப்பிலிருந்த அநேகர் இஸ்ரவேல் தேசத்துக்கு திரும்பிச் சென்றனர். அநேக யூதர்கள் தானியேலை பாபிலோனிலேயே விட்டுவிட்டுச் சென்றனர். அவர்களில் பலர் எருசலேமுக்குச் சென்றுவிட்டனர். உலகில் சமாதானம் நிலவியது. ஆனால், 10ஆம் அதிகாரத்தில் தானியேலின் தரிசனம் அனைத்து அமைதியையும் சிதறடித்தது.
10ஆம் அதிகாரம் முதலாம் வசனத்தில் “அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது” என்று வாசிக்கிறோம். இஸ்ரவேலர் ஒன்றாகச் சேரும் காலத்தில், தழைத்துவரும் காலத்தில் – தங்களுடைய சொந்த தேசத்தில் யாவும் நலமானதாகக் கண்டபொழுது, தானியேல் யுத்தத்தைப்பற்றிய செய்தியைப் பெற்றுக்கொண்டார்.
வசனம் 2,3இல் அந்த தரிசனத்தை நாமும் ஆராய்வோம். “அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக் கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்ச ரசமும் என் வாய்க்குள் போகவுமில்ல, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை” என்று எழுதியுள்ளார்.
தானியேல் தேவனிடமிருந்து செய்தியைக் கேட்க ஆயத்தமாகியிருந்தார். தேவனை நோக்கி ஜெபிக்கவும் அவர் தரும் பதிலை அறிந்துகொள்ளவும் ஆயத்தமானார். தேவனுக்கு செவிசாய்க்க தானியேல் ஆயத்தமானார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் ஆச்சரியமானது!
அநேக நேரங்களில் நீங்களும் நானும் தேவனை ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா போன்று நடத்துகிறோம். அவருடைய சமுகத்துக்கு விரைந்து வந்து தேவையானவைகளை பட்டியலிட்டுவிட்டு உடனே விரைந்து வெளியேறிவிடுகிறோம். ஆனால் தானியேல், “நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்ச ரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமள தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.” நமக்கு ருசிகரமான உணவு மற்றும் ஆசைப்படும் உணவு வகைகளான சாக்லேட் கேக், சாக்லேட் காபி, மற்றும் சாக்லேட் ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவில்லை. நல்ல உணவு மாத்திரமல்ல, ருசிகரமான அப்பத்தையும் சுவையான இறைச்சியும் திராட்சரசமும் அவர் புசிக்கவில்லை. உணவைவிட தேவனுடன் உரையாடுவதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். தனது நாட்டுக்காகவும் நாட்டிலிருந்த பாவங்களுக்காகவும் அவர் அதிகக் கவலைப்பட்டார்.
தன்னுடைய தேசத்தின் பாவங்களுக்காக தீவிர கரிசனையுடைய ஒவ்வொருவரும் இதேபோல நடந்துகொள்கின்றனர். என்னுடைய வாழ்க்கையில் – எனது தேசத்துக்காக ஜெபிக்க – இதே போல நானும் கரிசனையுடன் ஜெபிக்க வேண்டும். ஏனெனில் என் நாட்டுக்கு தேவன் அவசியம்.
18ஆம் நூற்றாண்டில் எழுப்புதலைக் கொண்டுவந்த யோனத்தான் எட்வர்ட் என்பவர் ஒருமுறை “சினமடைந்த ஆண்டவரின் கரங்களில் பாவிகள்” என்ற பிரசங்கத்தைச் செய்தார். அது சிறப்பான முக்கியமானதொரு பிரசங்கம். அப்பிரசங்கத்தையும் எட்வர்ட் செய்த மற்ற காரியங்களையும் தேவன் அமெரிக்காவில் எழுப்புதலைக் கொண்டுவர உபயோகித்தார். ஆனால், அப்பிரசங்கத்தைச் செய்ய அவர் ஆயத்தம் பண்ணிய விதம் தானியேல் செய்த ஆயத்தத்துக்கு ஒப்பாயிருந்தது.
யோனத்தான் எட்வர்ட் சரிதையை எழுதின ஜாண் சாப்மன் என்பவர் இவ்வாறு எழுதியுள்ளார். “மூன்று நாட்கள் எட்வர்ட் நிறைவான உணவை உட்கொள்ளவில்லை. தன் கண்களை மூடவும் இல்லை. ஆண்டவரே, எனக்கு புது இங்கிலாந்தைத் தாரும் என்றே திரும்பத்திரும்ப ஜெபிப்பதைக் கேட்க முடிந்தது”. பின்னர் எழுந்து அவர் பிரசங்கபீடத்துக்குச் சென்றார். அவர் பேசு முன்பதாகவே அங்கு குழுமியிருந்தவர்களுக்கு பாவ உணர்வு எழுந்தது. இதுதான் தேவனைச் சந்திக்கும் ஆயத்தமாகும்.
தானியேல் இதனையே செய்தார். வசனம் 4,5 “முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக் கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.” இங்கு தானியேல் ஒரு மனிதரை வர்ணிக்கிறார். இது ஆவலைத் தூண்டும் பகுதி. ஏனெனில் ஒரு தேவதூதன் எவ்வாறு இருப்பார் என்பதை விளக்கும் வேதாகமத்தின் ஒரே பகுதியாகும். ஒரு சில நிகழ்வுகளில் தேவ தூதர்கள் மனித உருவில் காட்சியளித்துள்ளனர். வசனம் 5இல் ஒரு புருஷன் சணல் வஸ்திரம் தரித்திருந்தார் – மின்னலடிக்கும் வெண்மையான பிரகாசமான வஸ்திரம். இது லூக்கா 24:4 இல் விவரிக்கப்பட்டதை ஒத்துள்ளது. இயேசு வைக்கப்பட்ட கல்லறைக்குச் சில ஸ்திரீகள் வந்தனர். அவர்கள் பிரகாசமுள்ள வெண்வஸ்திரம் தரித்த இரு வான்தூதர்களைக் கண்டனர்.
வசனம் 5 இல், அம்மனிதர் தமது இடையில் மிகத்தூய்மையான தங்கக்கச்சையைக் கட்டியிருந்தார். வசனம் 6 இல், அவருடைய உடல் படிகப்பச்சைப் போலிருந்தது. அதாவது, படிகப்பச்சை என்பது மஞ்சள் நிறமுள்ள மாணிக்கக்கல் ஆகும். அது அதிகப் பிரகாசமான நவ இரத்தினங்களில் ஒன்று. அவருடைய முகம் ஒளிவிடும் மின்னலைப் போன்றிருந்தது. அவருடைய கண்கள் பொறிபறக்கும் தீப்பந்தம்போல் இருந்தது என்று வசனம்-6 கூறுகிறது.
வெளி.1:15-ஆம் வசனமும் இக்காட்சியையே விவரிக்கிறது. அவருடைய கரங்களும் கால்களும் வலிமை மிக்க துலக்கப்பட்ட வெண்கலம் போலிருந்தது. அவருடைய குரல் மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் போலிருந்தது. இதனையே வெளி 10:1-3 இல் வாசிக்கிறோம். நமக்குத் தோன்றும் ஒவ்வொரு வான்தூதரும் இவ்விதமாகவே இருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஆனால், நமக்குத் தென்படும் அனைத்து வான்தூதர்களுக்கும் மனித உருவும், அவர்களைச் சுற்றி ஒரு ஆரா ஒளிவட்டமும் இருக்கும். எனவே நாம் அவர்களது பிரசன்னத்தை உணராமல் இருக்கமுடியாது.
இந்த 21ஆம் நூற்றாண்டு சமுதாயத்தில் நாம் அநேக தூதர்களின் உருவங்களைப் பற்றி அறிந்திருக்கிறோம். அவர்கள் நம் மத்தியில் நடப்பார்கள். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வான் தூதர்களையும் இப்போது தொலைக்காட்சிகளில் பார்க்கிற தேவதூதர்களையும் நாம் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. எனவே நண்பர்களே வேதாகமம் கூறுவதை நம்புங்கள். தொலைக்காட்சியின் வர்ணனைகளை நம்பாதீர்கள்.
தேவதூதர்களின் வர்ணனைக்குப் பிறகு 10ஆம் வசனத்தில் “ஒரு கரம் என்னைத் தொட்டது”, இது சரீரத்தொடுதல் ஆகும். இதற்கு தானியேலின் பிரதி செயலைக் கவனியுங்கள். “என் முழங்கால்களும் உள்ளங்கைகளும் தரையை ஊன்றி நிற்கச் செய்தது.” வான்தூதரின் பிரசன்னம் எப்பொழுதும் பயத்தையும் நடுக்கத்தையுமே நமக்குத் தரும்.
அடுத்த வசனத்தில், தானியேலுக்குப் “பயப்பட வேண்டாம்” என்று கூறப்பட்டது. வேதாகமத்தில் தேவதூதர்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து “பயப்படாதேயுங்கள்” என்று அவர்களைத் தைரியப்படுத்தினர். ஆதியாகமம் 21ஆம் அதிகாரத்தில் வனாந்தரத்தில் அலைந்த ஆகாரிடம் தேவ தூதன் வானத்திலிருந்து கூப்பிட்டு “பயப்படாதே” என்றார். மரியாளின் கணவனாகிய யோசேப்பிடம் தேவதூதன் தோன்றி “பயப்படாதே” என்றார். கல்லறைக்கு வந்த பெண்களிடம் “பயப்படாதேயுங்கள்” (மத்.28) என்றும், சகரியாவை நோக்கி, “பயப்படாதே” (லூக்.1;13), மரியாளிடம் “பயப்படாதே” என்றும் (லூக்.1:30), மேய்ப்பர்களை நோக்கி, “பயப்படாதிருங்கள்” (லூக்,2:10) என்றும் கூறியதாக நாம் வாசிக்கிறோம்.
தேவனுடைய வார்த்தையில் எங்கெல்லாம் தேவதூதர்கள் மனிதர்களைச் சந்திக்கிறார்களோ, அங்கெல்லாம் அம்மனிதர்கள் பயப்படுவதும், அவர்களை தேவன் அமைதிப்படுத்துவதும் வழக்கமாக இருந்தது. இத்தூதர்களின் தோற்றம் நட்புடையதாக மனிதர்களுக்குத் தோன்றாது. தேவனுடைய படைப்பில் இவர்கள் அவரது முகவர்கள். வான்தூதர்கள் கடவுளின் ஆச்சரியமான படைப்புகள். நம்முடன் இருந்து நமது ஏவல்களை கவனிக்கும் நண்பர்கள் அல்லர். அவர்கள் தேவனின் எரிந்து பிரகாசிக்கும் நற்செய்தியாளர்கள்!
“பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்” என்று வசனம் 13இல் வாசிக்கிறோம். தானியேல் 21 நாட்கள் உபவாசம் பண்ணி தேவனுடைய செய்திக்காக காத்திருந்தான். தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். ஆனால், அவரிடமிருந்து பதில் வரவில்லை. தனக்கு பதில் வராததற்கான காரணத்தை அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை.
தானியேலிடம் வந்த தேவதூதன் அவரிடம், உன் ஜெபம் கேட்கப்படாததற்குக் காரணம், ‘பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி எனக்கு எதிர்த்து நின்றான்’ என்கிறார். வானத்திலிருந்து காபிரியேல் தூதன் தேவனுடைய பதிலை தானியேலிடம் கூற எடுத்து வந்தார். தானியேலின் ஜெபம் நேரடியாக தேவ சமுகத்துக்குச் சென்றது. தேவனும் உடனடியாக பதிலளித்தார். காபிரியேல் அந்த பதிலை தானியேலிடம் கூறவேண்டும். ஆனால், இந்த பதிலை அவர் கொண்டுவரும் வழியில் 21 நாட்கள் கால தாமதம் ஆனது.
இது நமக்கு வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆனால், தானியேலின் புத்தகத்தில் இவ்வாறு தான் உள்ளது. தாமதத்திற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்: “பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான். அவனோடு நான் தங்க வேண்டியதாயிற்று. ஆதலால் பிரதான அதிபதியாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்” என்று கூறினார்.
மிகவும் வலிமைமிக்க பிரதான தூதனாகிய காபிரியேலை சாத்தானின் எதிர்ப்பு தடை செய்தது. எனவே தானியேலின் ஜெபத்துக்கான பதிலைக் கொண்டுவர காபிரியேல் மற்றும் மிகாவேல் ஆகிய இரு பிரதான தூதர்களின் உதவி தேவைப்பட்டது.
இந்த பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி யார்? அவர் உலகத்தின் ராஜ்யமான பெர்சியாவின் அதிபதியல்ல. பெர்சியாவிலிருந்து செல்லும் அனைத்தையும் தடுக்க பெர்சியாவுக்கு நியமிக்கப்பட்ட ஒரு சாத்தானின் தூதுவன். சாத்தான் தேவனைப்போல் வாழ நினைப்பவன்; அவன் பொய்யன்; ஏமாற்றுக்காரன்; மதியற்றவன்; வேஷதாரி.
தேவன் செய்யும் அனைத்துக் காரியங்களையும் அவன் போலியாக்குபவன். தேவன் நமக்கு இரட்சகராகிய கிறிஸ்துவைத் தந்தருளினார். ஆனால் சாத்தானோ, அந்திக்கிறிஸ்துவை ஏற்படுத்தினான். தேவன் நமக்கு உண்மையான தீர்க்கதரிசிகளைத் தருகிறார். ஆனால் பிசாசோ, வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறியுள்ளபடி கள்ளத்தீர்க்க தரிசிகளைத் தருகிறான். தேவன் ஒருவரே; சாத்தான் தானே தேவனாக விரும்புகிறான். தேவன் தமது உன்னத தூதர்களின் சேனைகளைத் தர வரிசையாக அமைத்துள்ளார். சாத்தானும் தனது பிசாசின் தூதர்களைத் தரவரிசைப்படுத்தியுள்ளான். பெர்சியா சாம்ராஜ்யத்துக்கு குறிக்கப்பட்ட பிசாசான வன் காபிரியேல் தூதனைத் தடுத்தான். அவருக்கு உதவி செய்ய மிகாவேல் தூதன் வர வேண்டியதாயிற்று. தானியேலின் ஜெபத்துக்கு பதில் வருவதற்காக பெர்சியா ராஜ்யத்துக்கு மேலேயிருந்த வான மண்டலத்தில் 21 நாட்கள் போர் நடந்தது.
நீங்கள் தேவனிடம் ஏறெடுத்த விண்ணப்பங்களுக்கு ஏன் பதில் வரவில்லை என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஒருவேளை இவ்விதமான பொல்லாத பிசாசுகளுக்கும் தேவதூதர்களுக்கும் இடையே ஒவ்வொரு நாளும் நமது கண்களுக்குப் புலப்படாத ஒரு யுத்தம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்விதமான சாத்தானின் எதிர்ப்பினால் நம்முடைய ஜெபத்துக்கு தேவன் பதில் தரவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தேவன் பதிலளித்து விட்டார். ஆனால், அந்த பதிலை தானியேல் பெற்றுக்கொள்ள சாத்தான் தடை செய்தான்.
பழைய ஏற்பாட்டின் இந்த வானத்தின் யுத்தம் “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடு மல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட் டம் உண்டு” என்ற எபேசியர் 6:12ஐ விளங்கிக்கொள்ள ஏதுவாயிருக்கிறது.
இன்றும் வானமண்டலத்தில் ஓர் ஆவிக்குரிய யுத்தம் நடந்தவண்ணமே உள்ளது. அது நமது கண்களுக்குப் புலப்படாது. நமது வாழ்வின் ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் அது நடந்த வண்ணம் உள்ளது. தானியேலின் ஜெபத்துக்கு பதிலைக் கொண்டுவருவதற்கு சாத்தானின் தடைகளை உடைத்தெறிய இரண்டு வலிமை வாய்ந்த வான்தூதர்கள் ஈடுபட்டனர் என்றால் அந்த யுத்தம் எத்தனை மும்முரமாயிருந்திருக்க வேண்டும்! ஆயினும், 21 நாட்கள் கழித்து பதில் வந்து சேர்ந்ததற்கு நாம் மகிழ்ச்சியடையவேண்டும்.
உங்களுடைய ஜெபத்துக்கும் தேவனிடமிருந்து பதில்வர நீங்கள் அநேக நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அது தாமதிப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். எனவே பொறுமையாயிருங்கள். ஆவிக்குரிய இந்த யுத்தத்தில் வெற்றியடைவது யாரென்று நமக்குத் தெரியும் அல்லவா? எந்தவொரு ஐயமின்றி நீங்கள்தான்! தேவதூதன் உங்களிடம் வந்து உங்களைத் தொட்டு, பதில் வந்துகொண்டிருக்கிறது என்று சொல்லும்பொழுது நீங்கள் அதனை நம்பவேண்டும். தானியேலும் இதைத்தான் செய்தார். ஆவிக்குரிய யுத்தம் நடந்து கொண்டிருப்பது அவருக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால், அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வானத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்ததை அவர் அறியாதிருந்தார்.
மீண்டுமாக வான்தூதர் அவரைத் தொட்டார். “அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலை கவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப் போனேன் (வசனம்-15).” தானியேலுக்கு பெலனில்லை. பின்வரும் வசனங்களில் அவரது மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனார், அவரில் மூச்சுமில்லை என்று வாசிக்கிறோம்.
உங்களுடைய வாழ்விலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறதால் நீங்கள் இரட்சகரோடு எப்பொழுதும் நெருங்கி ஜீவிக்கவேண்டியது அவசியமாகும். சிறந்த தேவ மனிதராகிய தானியேலின் வாழ்க்கையில் நடந்த இப்போராட்டத்தில் அவருக்கு தேவனிடமிருந்து பதிலைக் கொண்டுவந்த காபிரியேலுக்கு மிகாவேல் தூதரின் உதவி தேவைப்பட்டால் அது எவ்வளவு மும்முரமானது என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இத்தகைய ஆவிக்குரிய போராட்டத்தை நம் கண்களால் காணமுடியாததால் நாம் அவற்றை நம்புவதில்லை.
வசனம் 20இல் அவர், “நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம் பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்க தேசத்தின் அதிபதி வருவான்” என்று உரைத்தார். பெர்சியாவின் அதிபதி என்பவர் பெர்சியாவின் அரசர் அல்லர். அது அந்த நாட்டுக்கென்று ஒதுக்கப்பட்ட பிசாசின் தூதன். பெர்சியாவின் அதிபதி போரிட்ட பின்பு கிரேக்க தேசத்தின் அதிபதி வருவான். இவன் மகா அலெக்சாந்தர் அல்லர்; கிரேக்க நாட்டின் அரசரும் அல்லர். இது கிரேக்க நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பிசாசின் தலைவன். காபிரியேல் தூதன் தனக்கு உதவி செய்ய மிகாவேல் தூதரை நாடியது போலவே பெர்சியாவின் அதிபதிக்கு உதவி செய்ய அவன் கிரேக்க நாட்டு அதிபதியை நாடினான். இவ்வாறே சாத்தான் தேவனுடைய செயல்முறைகளைப் பின்பற்றுகிறான். “ஆனாலும் உங்களில் இருக்கிறவர் உலகத்தில் இருக்கிறவனைப் பார்க்கிலும் பெரியவர்” என்பதை நாம் எச்சமயத்திலும் நினைவில் கொள்ளவேண்டும்.
என் நண்பர்களே, உங்களது ஜெபத்துக்கான பதில் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும் ஜெபத்தை விட்டுவிடாதிருங்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு போராட்டம் இந்த பிரபஞ்சத்தில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆயினும், இதில் தேவனே வெற்றி பெறுவார். கண்ணுக்குத் தெரியாத அதிகாரங்களோடு நீங்கள் போராடும்பொழுது நமக்கு பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசை மட்டுமல்ல; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிந்துபேசுதலும், நமக்கு தேவனுடைய வல்லமையும் உண்டு என்பதை மறவாதீர். மேலும் தேவன், “தேவைப்பட்டால் நான் மிகாவேலையும் காபிரியேலையும் உனக்கு உதவ அனுப்புவேன்” என்று நம்மை தைரியப்படுத்துகிறார்.
உங்களுக்குத் தம்முடன் உள்ள ஐக்கியத்தை அழிப்பதற்கு சாத்தானுக்கும் அவனுடைய கூட்டாளிகளுக்கும் தேவன் அனுமதி தருவதில்லை. தானியேல் 21 நாட்கள் தேவனிடமிருந்து பதில்வர காத்திருந்தார். உலகத்திலிருக்கிறவனிலும் தேவன் பெரியவராயிருந்தபடியால் அவருக்கு பதில் கிடைத்தது. நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்தில் பரலோகத்தின் தூதசேனைகள் அனைத்தும் நமக்கு உதவும். இயேசுகிறிஸ்து ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நினைவில்கொள்ள நமக்குக் கடினமாக இருக்கலாம். காபிரியேலும் மிகாவேலும் சாத்தானுடைய வல்லமைகளுடன் போராடியது போல் மற்ற தூதர்களுக்கும் இப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என நீங்கள் வினவலாம்.
பொதுவாக வான்தூதர்கள் தேவனிடமிருந்து மனிதர்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வருபவர்கள்; அவர்கள் ஆறுதலளிப்பார்கள்; பாதுகாப்பார்கள். சங்கீதம் 91 “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்”. அவர்கள் சமரசம் பண்ணுவார்கள்; ஆனாலும், அவர்கள் மூர்க்கமான போராளிகள். அடிப்படையில் அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள், தேவன் தங்களுக்குக் கட்டளையிடும் காரியங்களைக் கச்சிதமாகச் செய்துமுடிப்பவர்கள்.
அதற்காக நாம் தேவனைவிட தூதர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. ஏனெனில் ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கருத்தின்படி நாம் எஜமானுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தேவதூதர்கள் வெறும் ஊழியக்காரர்களே. நாம் பரலோக எஜமானை கனப்படுத்த வேண்டும். தேவனுடன் மட்டுமே நாம் நெருங்கிய உறவுகொள்ள வேண்டும்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை