• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜனவரி-பிப்ரவரி 2023)
ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம் பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? (கலா.3:2,3).

சகோதரி சாந்தி பொன்னு
ஒரு ஆரம்பம் இருக்குமானால், அதற்கு ஒரு முடிவும் இருக்கும்; இது உலக நியதி. பிறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும், தோற்றுவிக்கப்படுகின்ற ஒவ்வொரு உயிரற்றதும்கூட ஒரு கால வரையறைக்குள் அடங்கியிருக்கிறது. ஆனால், படைப்பின் போது, தேவசாயலில் படைக்கப்பட்ட மனுக்குலம், காலவரையறைக்குள் அடக்கப்படவில்லை; மாறாக, தனது சிருஷ்டிகருடன் நித்தியமாக வாழக்கூடியதாக படைப்பாளரின் சாயலிலும் ரூபத்திலுமே அது படைக்கப்பட்டது; ஆனால், மனிதன் தன் வாழ்வில் பாவம் நுழைய இடமளித்ததன் விளைவாக, அவன் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டான்; கூடவே அவன் வாழ் நாளுக்கும் ஒரு முடிவு வந்தது. ஆக, உலக ரீதியான இந்த வாழ்வில், நாம் விரும்பி நுழையவும் முடியாது; விரும்பியபடி இவ்வுலகைவிட்டு நீங்கிப் போகவும் முடியாது. மனித வாழ்வின் ஆரம்பமும் முடிவும் நம்மைப் படைத்தவர் கரங்களிலே அவருடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது.
ஆனால், தேவன் தாம் மனிதனைப் படைத்த நோக்கத்தின்படி அவன் தம்முடன் நித்தியமாக வாழவேண்டும் என்பதற்காக, அவர் செய்த மகத்தான கிரியையின் பலனாக, இயேசுவின் பிறப்பு, உலக வாழ்வு, சிலுவை மரணம், உயிர்ப்பு, பரமேறுதல் இவற்றினூடாக கர்த்தருக்குள் நமக்கொரு புதிய ஆரம்பம் கிருபையாக அருளப்பட்டுள்ளது. இந்த ஆரம்பம் நித்தியம் வரைக்கும் நீடிக்கின்ற கிருபையையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆதலால், மாம்ச இச்சையில் அகப்பட்டு, போராடி பாவத்துள் சிக்கித் தவித்திருந்தாலும், தன் பாவத்திற்கான பலியாகிய இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்து, பழைய வாழ்வை ஒழித்து, ஒரு புதிய சிருஷ்டியாக, கர்த்தருக்குள், ஆவிக்குரிய ஒரு அற்புதமான வாழ்வுக்குள் பிரவேசிக்கிற ஒருவன், சரீரத்தில் மரித்தாலும், அவன் ஆத்துமா என்றும் கிறிஸ்துவுக்குள் வாழுகின்ற கிருபையைப் பெற்றுக்கொள்கிறது.
இப்படியாக ஆவியிலே தன் புதிய வாழ்வை ஆரம்பிக்கிற ஒருவன், மறுபடியும் தன் பழைய மாம்ச இச்சைக்குள் விழுந்து, தேவன் அருளிய ஆவிக்குரிய வாழ்வைக் கறைப்படுத்தி, தன் வாழ்வை மாம்சத்தில் முடிப்பது எப்படி? இன்னும் சொன்னால், கர்த்தரின் இரக்கத்தால் அருளப்பட்ட இந்த ஆவிக்குரிய வாழ்வை, தேவகிருபையால், அவர் நமக்குள் வைத்த விசுவாசத்தில் பெற்றுக்கொண்ட நாம், அதை இழந்து, நமது வாழ்வை நன்றாக சீராக முடிக்க முடியாதிருப்போமானால் நம்மைப்போல பரிதாபத்திற்குரியவர்கள் யாரும் இருக்கமுடியாது.
சீராக முடித்தல்
“வாழ்வில் நேரிடுகின்ற தவிர்க்கமுடியாத மாற்றங்களை நாம் எவ்வளவு நன்றாக கையாளுகிறோம் என்பதிலேயே, நமது பூமிக்குரிய நாட்களை நாம் எவ்வளவு நன்றாக முடிக்கிறோம் என்பது பெரும்பாலும் தங்கியிருக்கிறது”, ஹர்ப் வென்டர் லூங்ட் என்ற ஒரு எழுத்தாளர் எழுதிய “நன்றாக முடித்தல்” என்ற தனது கைநூலை அவர் இந்த வாசகத்துடனேயே ஆரம்பித்திருக்கிறார். கிறிஸ்துவுக்குள் நமது வாழ்வு எப்படி ஆரம்பிக்கிறதோ, அப்படியே கிறிஸ்துவுக்குள்ளே முடிவடையவேண்டும்; அதுவே தேவனுக்கு மகிமை, நமக்கு ஆசீர்வாதம். ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்வை எப்படி முடிக்கிறான் என்பது, அவனுடைய விசுவாச வாழ்வை சாட்சியாக அறிவிக்கக்கூடிய ஒரு பெரிய விஷயம் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். நாம் விட்டுச்செல்லும் அன்பானவர்கள் குடும்பத்தார் மாத்திரமல்ல, நாம் வாழும்போது நம்மை எதிரிகளாகப் பார்த்தவர்களுக்குக்கூட அது ஒரு சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
“மரிப்பதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும்” என்ற ஒரு ஆங்கிலப் புத்தகம்; அநேக ஆண்டுகளின் முன்னர் இதை வாசித்தது இன்றும் என் மனதில் தேங்கியிருக்கிறது. அதாவது, “நீ நன்றாக மரிக்க வேண்டுமென்றால், வாழும்போதே அதைக் கற்றுக்கொள்” என்பதே அப்புத்தகத்தின் சாராம்சம். இது வெறும் சரீர மரணத்தைக் குறித்தது அல்ல, அது நமது கைகளில் இல்லை; ஆனால், வாழுகின்ற சுதந்திரத்தைக் கர்த்தர் நமது கைகளில் தந்திருக்கிறார். அந்த சுதந்திரத்தை நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதே, நமது சரீரம் மரித்தாலும், அதன் பின்னான நமது நித்திய வாழ்வை நிர்ணயிக்கிறது என்பது நம்மை எச்சரிக்கட்டும். நாம் விட்டுப்போகப்போகிற நம்முடையவர்களுக்கு நாம் எதை விட்டுப்போகப் போகிறோம்.
கலாத்திய சபை
“ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்திலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா” (கலா.3: 1-5வரை வாசிக்கவும்). பவுலின் கடுமையானதும், கட்டளையிடுகின்ற போக்கையுடையதுமான நிருபங்களில் கலாத்தியருக்கு எழுதிய நிருபம் முக்கிய இடத்தை வகிக்கிறது. கலாத்தியா ரோம அரசாட்சிக்கு உட்பட்டதும் சின்ன ஆசியாவைச் சேர்ந்ததுமான பட்டணமாகும். பவுலும் பர்னபாவும் இணைந்து புறப்பட்ட முதலாவது மிஷனெரி பயணத்தின்போது, கலாத்தியாவைச் சேர்ந்த பட்டணங்களாகிய பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா, இக்கோனியா, லிக்கவோனியாவிலுள்ள லீஸ்திரா தெர்பை பட்டணங்களிலும் சுவிசேஷத்தை அறிவித்தார்கள். ஆக, கலாத்திய நிருபம் இந்தப் பகுதிகளிலுள்ள அனைவருக்கும் உரியதாகும்.
கலாத்திய சபையில் யூத கிறிஸ்தவர்களும், புறவின கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். இந்த யூத கிறிஸ்தவர்களில் சிலர் பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் இருந்தவர்களும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றவர்களுமாவர். தாங்கள் பரிசுத்தாவியானவரைப் பெற்றுக் கொண்டது, யூதபிரமாணங்களைக் கைக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்ததினால் அல்ல என்பதை இவர்கள் நன்கு அறிந்திருந்தனர். கிறிஸ்துவுக்குள்ளான கிறிஸ்தவ வாழ்வைத் தாங்கள் ஆரம்பித்தது தேவஆவியின் பலத்தினால் என்பதையும் அறிந்திருந்த இவர்கள், கிறிஸ்தவ வாழ்வையும் அதே ஆவியானவர் பலத்தில் வாழ்ந்து வளரவேண்டும் என்பதை மறந்துவிடுமளவுக்கு புத்திகெட்டுப்போய்விட்டனர். நியாயப் பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டும், விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் என்ற யூத கிறிஸ்தவர்களின் போதனையால் சபை குழம்பி, நிலை குலைந்து நின்றது.
இப்படியே, பவுலின் பயணங்களின்போது உருவாக்கப்பட்ட ஆரம்பகால புதிய சபைகளில், புறவின கிறிஸ்தவர்களுக்கும், யூத கிறிஸ்தவர்களுக்குமான உறவு சற்றே முரண்பட்டதாகவே இருந்தது. இதனால் புறவினத்தார் மிகவும் குழம்பிப்போயிருந்தனர். மாத்திரமல்லாமல், சில மாய வித்தைக்காரரும் இவர்களை மயக்கிப் போடக் கூடிய ஆபத்தும் இருந்தது. ஆக, பிரமாணங்களைக் கைக்கொள்ளத்தான் வேண்டுமோ என்ற கேள்வியில் இந்த சபை ஒரு அடி பின்னெடுத்து வைக்க வகை தேடியது. அப்போதுதான் பவுல், “புத்தியில்லாத கலாத்தியரே” என்று அவர்களை விளித்து, ‘ஆவியிலே ஆரம்பம் பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப் போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா’ என்று கண்டித்துள்ளார்.
இன்று நாம்
இன்று நமது தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்வில், சபை வாழ்வில் பிரமாணத்துக்கு அடுத்ததான பிரச்சனையோ குழப்பங்களோ கிடையாது. ஆனால், இதைப்பார்க்கிலும் ஆபத்தான நிலைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதைக்கூட உணரமுடியாத அளவுக்கு நமது புத்தி மந்தமாகி விட்டதோ என்பதே ஆபத்தான விஷயமாகும். சபை வாழ்வோ அல்லது தனிப்பட்ட வாழ்வோ எதுவானாலும், நமது கிறிஸ்தவ ஓட்டத்தில் ஆவியிலே ஆரம்பித்த நாம் ஆவியிலேயே நமது ஓட்டத்தை முடிக்காதபடிக்கு வஞ்சகனான சத்துரு, பிரமாணங்களைக் கொண்டு அல்லாமல், கிறிஸ்து வைவிட்டு நம்மைப் பிரித்து விடுவதற்கு ஏதுவாக உலத்தையே நமக்குள் திணித்துவிட்டான் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த செய்தியில் தனிப்பட்ட இரு நபருடைய வாழ்வைக் குறித்து சிந்திப்போம்.
தாவீது
இவருடைய இளம்பிராயம் இன்பமானது. வயல்வெளியில் பிடில் வாசித்து, பாடல்பாடி மகிழ்ந்திருந்தவர்தான் தாவீது. இவர் இளையவராகையால் தமையன்மாரால் அலட்சியமாக எண்ணப்பட்ட ஒருவர். இவரது ஆரம்பம் மிகவும் அற்புதம். அந்தப் பருவத்திலேயே கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ராஜா இவர்; சாமுவேலினாலே தைலக்கொம்பிலிருந்த அபிஷேக தைலத்தால் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவர். அதற்காக உடனடியாக ராஜசிம்மாசனம் அவருக்குக் கிடைக்கவில்லை. ராஜ அரண்மனையில் பணி செய்தது, கோலியாத்தைக் கொன்றது, சவுலின் எரிச்சலுக்கும் கொலை வெறிக்கும் ஆளானது, காடு மேடு என்று ஒளித்து ஓடியது, சவுல் மரித்த பிற்பாடு ராஜாவாக பதவியேற்றும், பின்னர் மகன் அப்சலோமினிமித்தம் திரும்பவும் அரியணையைவிட்டு ஓடி மறைந்தது, அப்சலோமும் மரித்த பிற்பாடு சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவானது சகலமும் நாம் அறிந்ததே. தாவீது பாடிவைத்த சங்கீதங்கள் யாவும் மனித உணர்வலைகள் என்றே சொல்லவேண்டும். கர்த்தர் தாவீதை அவருடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தபோது பாடிய சங்கீதம் (2சாமு.22, சங்கீதம் 18) நமது உணர்வுகளைத் தட்டியெழுப்பக்கூடிய ஒன்றாகும்.
ஆனால், தனது வாழ்வை அருமையாக அழகாக ஆரம்பித்து ஓடிய தாவீது தன் வாழ்வை அப்படியே நன்றாக முடித்தாரா என்பது கேள்விக் குறிதான். பத்சேபாளின் விஷயத்தில் மகா பெரிய தவறுவிட்டவர் தாவீது. கண்களின் இச்சை, மாம் சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்று சகலத்திலும் விழுந்தார்; காமவிகாரம், விபசாரம், தந்திர யோசனை, கொலை என்று அடுக்கிக் கொண்டு போனவர், ஒரு விதவைக்கு வாழ்வளித்த வள்ளலாக தன்னை போலியாகக் காட்டிக்கொண்டு அமைதலாக இருந்தாரே! இதன் பலன் மகா கொடிதாக இருந்தது.
முதலாவது, குடும்பத்தில் பெரிய குழப்பங்கள் நேரிட்டது. பத்சேபாளுக்குப் பிறந்த மகன் செத்தான்; மகன் அம்னோன், மகன் அப்சலோமின் தங்கை அதாவது அம்னோனுக்கும் அவள் தங்கை, அவள்மீது மோகம்கொண்டு கெடுத்தான்; அப்போது தாவீது கோபப்பட்டாலும் அம்னோனை கண்டிக்கவுமில்லை. வஞ்சந்தீர்க்க வகைபார்த்திருந்த அப்சலோம் தந்திரமாக அம்னோனைக் கொன்றுவிட்டான்.
தாவீதின் ராஜ்யபாரத்துக்குள்ளும் கேடு விளைந்தது. அப்சலோம் தன்னை ராஜாவாக பிரகடனப்படுத்த, தாவீது, திரும்பவும் காடுமேடு என்று ஓடினார். அப்பொழுது வீட்டைக் காக்க தாவீது பின்வைத்துப்போன அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில், உப்பரிக்கையின்மேல் கூடாரம்போட்டு, சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக அவர்களிடத்தில் பிரவேசித்தான் மகன் அப்சலோம். எத்தனை கலக்கங்கள் தாவீதுக்கு. ராஜாவாக அமர்ந்து, ராஜ்யபாரத்தை நன்றாக நடத்தியபோது, கர்த்தருடைய வாக்குக்கு எதிராக இஸ்ரவேலைத் தொகை பார்ப்பதற்கு சாத்தான் தாவீதை ஏவிவிடுமளவுக்கு தாவீதுக்கு என்னதான் நேரிட்டது? சேனாதிபதி தடுத்தும் கேளாத தாவீதின் செயலினால், இஸ்ரவேலின் மீது தேவனுக்குக் கோபம் மூண்டு, ஒரே சமயத்தில் எழுபதினாயிரம் பேர் செத்துமடிந்தார்கள்.
பாவம் செய்தபோதும் தேவமன்னிப்பைப் பெற்றிருந்த தாவீது, தன்னுடைய இறுதி நேரத்தில், தன் மகன் சாலொமோனிடம், “நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக” (1இராஜா.2: 4) என்று சொன்னபோது, இந்த வரிகளில் தாவீது தான் செய்த தவறை உணர்ந்து பேசினாரா என்று சிந்திக்கத் தோன்றுகிறது. என்றாலும், திரும்பவும், சேனாபதியாகிய யோவாப், சீமேயி என்பவர்களை, அதாவது தன் மனதுக்குத் தீங்கு செய்தவர்களைக் கொன்றுபோடும்படி தாவீது தன் மகனிடம் கட்டளையிட்டது ஒரு பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. இயல்பாக மன்னிக்கின்ற பண்பைக்கொண்ட ஒரு மனிதனாக (தன் உயிரைக் குடிக்கத் துரத்தி வந்த சவுலை இரண்டுதரம் தப்பவிட்டவரும் இந்த தாவீதுதான்) ஆரம்பித்த தாவீது, தேவமன்னிப்பை பெற்று, ஒரு அற்புதமான வாழ்வை வாழ்ந்த தாவீது, இறுதி சமயத்திலே, மரிக்கும் தருவாயிலே மன்னிக்கும் சிந்தையை இழந்தது என்ன?
பவுல்
மறுபக்கத்தில், மாம்சத்திலே ஆரம்பித்து ஆவியிலே முடித்த ஒரு அற்புதமான மனுஷனை வேதாகமம் நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. அவர்தான் பவுல். இவர் தன்னைக் குறித்து தானே பிலிப்பியருக்கு எழுதியபோது, “மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்” என்று சொல்லி தன்னைக் குறித்த விபரத்தை எழுதியுள்ளார். “நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தியவன், நியாயப் பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்” (பிலி.3:5-6). இத்தனையும் அவரது மாம்சீக தகுதிகள்!
மேலும், இவர் யூதனாயிருந்தும் ரோம குடியுரிமையையும் பெற்றிருந்தார். சனகெரிப் சங்கத்தின் இளைய அங்கத்தினர். யூத மத வைராக்கியமுள்ள ஒருவர். கமாலியேலின் பாதத்தில் அமர்ந்து கல்வி கற்றவர் என்பதால் சமூகத்தில் ஒரு உயர்வான மதிப்பு இவருக்கு உண்டாயிருந்தது. இவர் இயேசுவைக் கண்டதில்லை. தனது யூதமத வைராக்கியத்தின் நிமித்தம், மக்கள் வேறொருவரைப் பின்பற்றி ஒரு புதிய மதத்தை உருவாக்குகிறார்கள் என்று நினைத்து, பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களை வெறுத்தார்; அவர்களைப் பிடித்துக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவருகின்ற பணியை மேற்கொண்டார். அப்படியே தமஸ்குவுக்குப் பயணப்பட்டபோதுதான், அவர் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டானது என்பதை நாம் அறிவோம். ‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே’ என்ற சத்தம் அவருடைய இருதயத்தை ஊடுருவிச் சென்று உடைத்து நொருக்கியது. அன்று, கிறிஸ்துவுக்காகப் பிடிக்கப்பட்ட அவர் மரணம் வரைக்கும் பின்வாங்கவேயில்லை.
இப்போது அவர் தன்னைப்பற்றி இப்படியாக எழுதுகிறார்: “ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். …நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாச மூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்…… அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலி. 3:7-11) என்கிறார். மாத்திரமல்ல, “இனி நானல்ல கிறிஸ்துவே எனக்குள் வாழுகிறார்” என்கிறார். அதாவது மாம்சத்தில் மரித்துவிட்ட இவர், கிறிஸ்துவுக்குள் தன்னை முழுதாக அர்ப்பணித்திருந்தார். இவர் ஏறத்தாழ 30 வருடகாலமாக பின் வாங்கிப் போகாமல், பக்கம் சாயாமல், இயேசுவுக்கென்று பிடிக்கப்பட்ட நாள்முதல், அடைந்த உபத்திரவங்கள், சிறை அகோரங்கள் யாவையும் கடந்து, ரோம அரசாங்கத்தால் தலை வெட்டப்பட்டு மரிக்கும்வரைக்கும் அவர் கர்த்தருக்குள் திடமாகவே நின்றார்.
இதனால், இறுதியில் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்” என்ற அவருடைய வரிகள் அவர் தனது வாழ்வை மாம்சத்திலே ஆரம்பித்திருந்தாலும், ஆவிக்குரியதாய் செம்மையாய் நல்லதாய் முடித்தார் என்பதற்கு சாட்சியாய் இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் எப்படி முடிக்கப்போகிறோம்!
நாம் எல்லோரும் பிறக்கும்போது ஜென்ம பாவசுபாவத்துடனேதான் பிறந்தோம். ஆனால், ஆண்டவர் நம்மை இரட்சித்து, நமது மாம்சத்துக்குரிய வாழ்வுக்கு சிலுவையில் ஒரு முடிவைக் கொண்டுவந்து ஒரு புதிய வாழ்வைத் தந்தார்! அவருக்குள் ஆரம்பித்த நமது கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வை நாம் எப்படி முடிக்கப் போகிறோம்? நாம் விட்டுப் போகிறவர்களுக்கு நாம் எதை வைத்துப்போகப் போகிறோம்?
“மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள்..” (பிலி.3:3) நமது ஜீவன் உள்ளவரைக்கும் நிலைத்திருந்து, நித்திய வாழ்வுக்குள் பிரவேசிக்க பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மை நடத்துவாராக. ஆமென்.