• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(ஜனவரி-பிப்ரவரி 2023)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

இறைமகன் இயேசு, கானா ஊரில் நடை பெற்ற திருமண வைபவத்தில் தன்ணீரைத் திராட்ச ரசமாய் மாற்றி விருந்தினரை மகிழ்வித்து, தன் மகிமையை வெளிப்படுத்தியது அவர் செய்த முதலாவது அற்புதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயேசு அதன்பிறகு பல இடங்களிலும் தன் வார்த்தையினூடாகவும், செயல்களினூடாகவும், தனது அற்புத வல்லமையை மனுக் குலத்துக்குப் புலப்படுத்திய பின் மறுபடியுமாக தனது முதல் அற்புதம் நடைபெற்ற கானா ஊருக்கு வந்து, அவர் செய்த இரண்டாவது அற்புதம். வியாதியாயிருந்த இராஜாவின் மனிதனுடைய மகனைக் குணப்படுத்தியதேயாகும் (யோவான் 4:46-54). தனது வாயிலிருந்து உதிரும் அழகிய வார்த்தைகளுக்கும் அற்புத வல்லமையுண்டு என்பதனை இயேசு இதனூடாக நிரூபித்தார்.

இயேசுகிறிஸ்து நம்மைப்போல ஒரு மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவர் கானா ஊரில் பல அற்புதங்களைச் செய்தபோதிலும், இவ்விரண்டு அற்புதங்கள் மட்டுமே திருமறையில் எழுதப்பட்டிருப்பதில் இருந்து, இச்சம்பவங்கள் நமக்கு அரிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காகவே பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்டுள்ளதென்பதை எவராலும் மறுக்க முடியாது.

முதலாவதாக, இவ்விரண்டு அற்புதங்களுக்கும் இடையேயுள்ள அபூர்வமான ஒற்றுமைகளை நாம் பார்ப்போம். தேவனின் செயல்கள் யாவும் அதிசயமானவை என்பதற்கு இது ஓர் அரிய அத்தாட்சியாகும்.

இந்த இரண்டு அற்புதங்களுமே மூன்றாம் நாளில் நடைபெற்றவை. யோவான் 2:1இல் மூன்றாம் நாளிலே கலியேயாவிலுள்ள கானா ஊரில் ஒரு கலியாணம் நடந்தது எனக் காண்கிறோம். அதேபோல 4:43இல் “இரண்டு நாளைக்குப் பின்பு அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு கலிலேயாவுக்குப் போனார்” என வாசிக்கின்றோம்.

அடுத்து மரியாள். இயேசுவிடம் வந்து திராட்ச ரசம் தீர்ந்துவிட்டதென முறையிட்டபோது இயேசுவின் கடுமையான வார்த்தைகளைச் செவிமடுக்க வேண்டியவளானாள் (2:4). அதேபோல இங்கும் இராஜாவின் மனுஷன் இயேசுவைத் தன்னுடன் வரும்படி அழைத்தபோது இயேசுவின் கடுமையான வார்த்தைகளைக் கேட்டான் (4:48). இரண்டு அற்புதங்களிலும் இயேசுவின் கட்டளைக்கு மக்கள் கீழ்ப்படிந்ததைக் காண்கிறோம் (2:7,4:50). அத்தோடு இரண்டு அற்புதங்களிலும் இயேசுவின் கிரியைகளை நாம் காண்பதில்லை. மாறாக இயேசுவின் வார்த்தைகளே அற்புதங்களை நிகழ்த்தியதை அறித்துகொள்கிறோம் (2:9; 4: 51). கடைசியாக, இவ்விரண்டு அற்புதங்களிலும் அற்புதத்தைக் கண்ணாரக் கண்டவர்கள் விசுவாசித்தார்கள் (2:11, 4:53). இந்த அற்புத ஒற்றுமைகள் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு பாடத்தைக் கற்பிக்கின்றது. இவைகளை மனதில் வைத்துக்கொண்டு இயேசு இராஜாவின் மனுஷனுடைய மகனைக் குணமாக்கிய சம்பவத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

இயேசுகிறிஸ்து கலிலேயாவுக்கு இரண்டாம் முறையாக வந்தபோது, “இராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்” (4:46). இவன் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தபோதிலும்கூட சாதாரண மனிதரை வாட்டும் வருத்தமும் துயரமும், இவனது வாழ்விலும் காணப்பட்டது. இவனுடைய மகன் மரணத்தருவாயில் இருந்தான். வளமாக வாழ்ந்தாலும், வறுமையினால் தாழ்ந்தாலும் எல்லோருமே மரணத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. அது ஒரு வியாதியின் மூலமாகவோ அல்லது இயற்கையாகவோ வரலாம். எனவே ஆட்சியும், அந்தஸ்தும் மானிட உயிருக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த மனிதன் இச்சத்தியத்தை நன்கு அறித்திருந்தமையினால் “இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தார் என்று கேள்விப்பட்டபோது அவரிடம் சென்றான்” (4:46). இவன் இயேசுவைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்திருப்பான். அத்தோடு செல்வமும், செல்வாக்கும் தன் அன்பு மகனை மரணத்தின் பிடியிலிருந்து மீட்காது என்பதை நன்கு அறிந்திருப்பான். எனவேதான், தனது அந்தஸ்தையும் சுயகெளரவத்தையும் பாராமல் இயேசுவிடம் ஓடிச்சென்றான். இந்த மனிதனுடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இதில் உள்ளது.

இவன் ஏற்கனவே இயேசுவைப்பற்றியும். அவரது வல்லமைகளையும் அறிந்திருந்த போதிலும் கூட தனக்கொரு ஆபத்து நேரிட்டபோதே ஆண்டவரைத் தேடிவந்தான். அவனது மகனுக்கு வியாதி ஏற்படாமல் இருந்திருந்தால் அவன் இயேசுவிடம் வந்திருக்கவேமாட்டான். அதேபோலதான் நாமும்கூட ஆண்டவரண்டை நெருங்கி வருவதற்காகவே நமது வாழ்விலும் இக்கட்டுகள் வருகின்றன. அநேகர். தேவன் அன்புள்ளவரென்றால் ஏன் இப்படிச் செய்யவேண்டுமென வினவுகின்றனர். ஆனால், வாழ்வில் பிரச்சனைகள் வரும்போதே மக்கள் இயல்பாக தேவனைத் தேடத் தொடங்குகின்றனர் என்பதனை மறுப்பதற்கில்லை.

“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான் 6:44) என இயேசு தெய்வீக நியதியைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்த மனிதனை தன்னண்டைக்குக் கொண்டுவருவதற்காகவே தேவன் இவனுடைய மகனுக்கு வியாதி வருவதற்கு அனுமதித்தார். அவனது அபாத்திரமான, இயலாத நிலையை அவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்தது. தேவன் மக்களை தன்னண்டைக்குக் கொண்டுவருவதற்கு பல ஏதுக்களை உபயோகிக்கின்றார். அதில் இதுவும் ஒன்று என்பதனை மறுப்பதற்கில்லை.

நமது நிலையும்கூட அநேக தடவைகளில் இப்படித்தான் இருக்கின்றது. வாழ்க்கையில் அமைதி நிலவும்போது அநேகர் ஆண்டவரைத் தேடுவதேயில்லை. திடீரென ஒரு பிரச்சனை பூகம்பமாய்ப் புறப்பட்டு வரும்போதுதான், புண்பட்ட மனதுடன் தேவனிடம் வருகிறோம். 119ஆம் சங்கீதத்தை எழுதியவர். “நான் உபத்திரவப்படுவதற்குமுன் வழி தப்பி நடந்தேன்; இப்பொழுதோ உமது வார்த்தையைக் காத்து நடக்கிறேன்” (119:67) எனக் கூறுகிறார். நாம் ஒரு பிரச்சனையில் அகப்பட்டு வருந்திய பின்புதான் கடவுளின் வார்த்தையில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறோம். எனவே உபத்திரவங்கள் வருவது நன்மைக்கேயன்றி தீமைக்கல்ல.

அத்தோடு 119 ஆம் சங்கீதத்தில் 71ஆம் வசனம் “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன்” எனக் கூறுகிறது. நம் வாழ்வில் வரும் துன்ப துயரங்களினூடாக தேவனுடைய பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறோம். எனவே தேவன் நம்மைத் தன் பக்கமாக இழுக்க பிரச்சனைகள் பிரளயமாய் பிரவாகிப்பதற்கு இடங்கொடுக்கின்றார். “நம் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. அவைகளில் ஒன்றுகூட பிதாவின் சித்தமில்லாமல் கீழே விழாது” (மத்.10:30) என இயேசு கூறியது முற்றிலும் உண்மை. எனவே ஆபத்து நம்மை அணுகி வந்தால், பிரச்சனைகள் பிரளயமாய் பிரவாகித்தால் கவலைகள் கண்ணீரைக் கசியவைத்தால் அனைத்தும் நம்மை ஆண்டவரண்டை இழுக்கும் காரியங்கள் என்பதை மனதில் வைத்து. தேவனைவிட்டு இதனால் விலகிச்செல்லக் கூடாது என்பதை மறந்துவிடாமல் இருப்போம்.

இயேசுவிடம் உதவிக்காக வந்தவன் “மரண அவஸ்தையாயிருக்கும் தன் மகனைக் குணமாக்க வரவேண்டுமென்று வேண்டிக்கொண்டான் (4:47). இந்த மனிதன் இயேசுவிடம் வந்தது வரவேற்கக் கூடியதாயினும், இவனது விசுவாசம் பூரணமற்றதாயிருந்தது கவலைப்படக்கூடியதொன்றே. இயேசு தன்னுடன் கப்பர்நகூமுக்கு வந்தால்மட்டுமே தன் மகன் குணமடைவான். அவரால் கானா ஊரில் இருந்துகொண்டே குணப்படுத்த முடியாதென எண்ணியதாலேயே இயேசுவைத் தன்னுடன் வரும்படி அழைத்தான். இன்றும்கூட அநேகரது நம்பிக்கை இப்படித்தான் இருக்கிறது. இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்தபோது அற்புதங்கள் செய்தது உண்மைதான். ஆனால் அவர் இப்போது பரலோகத்தில் இருப்பதனால், அன்றுபோல இன்று அவரால் அற்புதம் செய்ய முடியாதென கூறுகின்றனர். நமது நிலை எப்படி? லாசரு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின் “ஆண்டவரே நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்” (யோவான் 11: 21). மார்த்தாள் இயேசுவிடம் கூறியதுபோலதான், இன்று அநேகர் இயேசு அருகில் இருந்தால் மட்டுமே அற்புதம் நிகழும் என நினைக்கின்றனர். ஆனால், அவர் தொலைவில் இருந்தாலும் அற்புதம் செய்யவல்லவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த மனிதனது அரைகுறை விசுவாசம் ஆண்டவருக்குக் கட்டளை பிறப்பிக்கக்கூடிய அளவுக்கு அவனுக்கு துணிவை ஏற்படுத்திவிட்டது. இயேசு கப்பர்நகூமுக்கு வரவேண்டுமென கட்டளையிடுகிறான். ஆனால், அவர் அன்றைய தினம் அங்கு செல்வது தேவனின் சித்தமாயிருக்கவில்லை. எனவேதான் இயேசு அவனைக் கடிந்து கொண்டார். நமது விசுவாசம் பூரணமற்றதாக இருக்குமாயின் நமது விண்ணப்பங்கள்கூட தேவனின் சித்தத்திற்கு முரணானவைகளாகவே இருக்கும். விண்ணப்பங்கள் தேவனின் சித்தத்தை மாற்றியமைக்கும் மாயவித்தைகள் அல்ல. மாறாக, அவரது சித்தத்திற்கு நாம் அடிபணிவதேயாகும், நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1 யோவான் 5:14). மாறாக, இந்த மனிதனைப்போல தேவசித்தத்திற்கு முரணாக அவர் செயற்பட வேண்டுமென நாம் விண்ணப்பித்தால், நாமும் கூட அவரால் கடிந்து கொள்ளப்படுவோம்.

இந்த மனிதனின் வேண்டுகோளை செவி மடுத்த இயேசு, “நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்க மாட்டீர்கள் என்றார்” (4:48). இயேசுவுக்கு அவன் என்ன வேண்டுமென கூறியதனாலேயே இத்தகைய கடுமையான வார்த்தைகளைச் செவிமடுக்க வேண்டியவனாயிருந்தான். இயேசுவைப்பற்றி அறிந்து அவரண்டை வந்தவனின் விசுவாசம் அற்பமாகவே இருந்தது. அவனது நம்பிக்கை அடையாளங்களில் ஆதாரத்தைத் தேடியது. அவரது வார்த்தையே அற்புதமானது என்பதனை அறியத் தவறிவிட்டான். நமது விசுவாசம் இந்த மனிதனுடையதைப் போலிருக்கின்றதா?˜ தேவ வார்த்தையான திருமறையை விசுவாசிக்க அடையாளங்களைத் தேடுகின்றோமா? ஆனால், இறைவன் இயேசுவோ “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” (யோவா.10:29) என தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

இயேசு அநியாயமாக இந்த மனிதனை கடிந்துகொண்டார் என சிலர் கூறுகின்றனர். இவன் இயேசுவை நம்பி அவரிடம் உதவிக்காகத்தானே வந்தான் என வாதிடுகின்றனர். உண்மைதான். ஆனால், அவனது நடவடிக்கைகள் அதாவது அவன் உதவிக்காக இயேசுவிடம் வந்தது நமக்கு அவனது வெளிப்படையான செயல்களை மட்டுமே புலப்படுத்துகிறது. மாறாக, அவனது உள்ளத்தின் நிலையை நம்மால் உண்மையாக அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது. ஆனால். இயேசுவுக்கோ மக்கள் என்ன நோக்கத்திற்காகத் தன்னிடம் வருகிறார்கள் என்று நன்கு தெரியும். அவன் உண்மையாய் அற்புதங்களையும், அடையாளங்களையும் தேடியே வந்திருப்பான். அதனால்தான் இயேசு அவனை கடிந்துகொண்டார்.

மனுஷருள்ளத்தில் இருப்பதை அறியக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு (யோவான் 2:25). ஏனெனில் மனுஷர் பார்க்கிறபடி அவர் பார்க்கமாட்டார். மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1சாமு.16:7). இந்த மனிதனைப்போலதான் நாமும் ஆண்டவரிடம் உதவிக்காக வருகிறோம். தவறான நோக்குடன் வந்தால், நம் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தையே சந்திக்கும். ஆண்டவருடைய வல்லமையை நம்பி அவரண்டை வந்தும்கூட நமது பெருமைக்காக அற்புத அடையாளங்களைத் தேடினால் நாமும் கூட கடிந்துகொள்ளப்படுவோம். அநேகர் ஆலயத்தில்தான் சாட்சி சொல்லவேண்டும். என் ஜெபத்திற்கு தேவன் பதில் அளிப்பதனால் மற்றவர்கள் என்னை உயர்வாக மதிக்கவேண்டும் எனும் எண்ணங்களுடன் ஜெபிக்கின்றனர். இத்தகு மனப்பாங்குகள் குறித்து நாம் எச்சரிப்பாயிருக்கவேண்டும்.

இயேசுவின் கண்டனக் குரலைக் கேட்டு இவன் ஆத்திரப்படவில்லை. மாறாக, கவலைப்பட்டான். தன்னையே நொந்துகொண்டான். கோபமடைந் திருந்தால் இயேசுவிடம் மறுபடியும் உதவிக்காக கெஞ்சியிருக்கமாட்டான் அல்லவா? ஆனால் நாம், சில சமயம் ஆண்டவரின் கடுமையான வார்த்தைகளைக் கேட்கையில் அவரைவிட்டு விலகிச் செல்ல முயற்சிக்கிறோம். தேவனின் அன்பைப் பற்றிய பிரசங்கங்களை மட்டுமே கேட்க விரும்புகிறோம். தேவனின் சிட்சையைப்பற்றி பிரசங்கம் என்றால் ஆலயத்துக்குப்போகாமல் இருந்து விடுகிறோம். ஆனால், இந்த மனிதனைப்போல நாம் நம் தவறுகளை உணர்ந்து ஆண்டவரிடம் சரணடைய வேண்டியவர்களாயுள்ளோம்.

இந்த மனிதன் மறுபடியுமாக இயேசுவிடம் “என் பிள்ளை சாகிறதற்கு முன்னே வரவேண்டும்” (4:49) என வேண்டினான். இவன் மறுபடியுமாக இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து அவரின் உதவியை நாடினாலும், அவனது வார்த்தைகள் அவனது உள்ளத்தின் தன்மையை வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக உள்ளது. பொதுவாக ஒரு மனிதனுடைய ஜெபத்தைக் கொண்டு, அவன் தேவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அறிந்து கொள்ளக்கூடியதாயுள்ளது. இவன் தன் மகன் “சாகிறதற்கு முன்னே” இயேசுவை வரும்படி அழைத்ததிலிருந்து இயேசுவின் வல்லமை மரணத்துக்கு அப்பால் செயற்படாது என்றே நினைத்தான். தன் மகன் மரித்துப்போனால் அதன்பிறகு இயேசு வந்தும்கூட எவ்வித பயனும் இல்லையென்றே எண்ணினான். அதனால்தான் “சாகிறதற்கு முன்னே” வரும்படி அழைத்தான். நாமும்கூட நமது ஜெபங்களில் கடவுளின் வல்லமையை மட்டுப்படுத்திக் காட்டும் வார்த்தைகளை உபயோகிக்கின்றோம். ஜெபத்தில் மட்டுமல்ல; மற்ற நேரங்களிலும்கூட நம் வார்த்தைகளினால் தேவனுடைய மகிமைக்கும், மகத்துவத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா எண்ணம் நடந்துகொள்ள வேண்டியது தமது தலையாய கடமையாகும்.

அடுத்து இச்சம்பவத்தில், நாம் மற்றுமொரு முக்கியமான பாடத்தையும் கற்றுக்கொள்ளக் கூடியதாயுள்ளது. பொதுவாக மனிதர்கள் மரணத்தை வயோதிப காலத்திலேயே எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சிறுவயதினருக்கும் மரணம் சம்பவிக்க இடமுண்டு என்பதனை இதனூடாகக் காணக் கூடியதாயுள்ளது. எனவே வாலிப காலத்தில் மனம்போல நடந்துவிட்டு வயோதிப காலத்தில் ஆறுதலாக ஆண்டவரண்டை வருவோம் என எண்ணுதல் தவறானதாகும். உண்மையில் உலகில் முதல் புதைகுழி தோண்டப்பட்டது ஒரு வாலிபனுக்கேயன்றி வயோதிபனுக்கல்ல (ஆதாமுக்கல்ல; காயீனுக்கு). எனவே விவேகமுடையவர்கள் நீண்ட ஆயுள்மீது நம்பிக்கை வைக்குமுன்பதாக ஆண்டவரண்டை வரவேண்டியது அவசியமாயுள்ளது. “இது இன்றைய கிறிஸ்தவப் பெற்றோர் மனதில் வைத்திருக்கவேண்டிய முக்கியமான விஷயமாகும்.” ஏனெனில் இன்று அநேகக் கிறிஸ்தவப் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் வயதுக்கு வந்தபின் அவர்களாகவே ஆண்டவரை அறிந்துகொள்ளட்டும் என தம் கடமையில் அசட்டையாய் இருக்கின்றனர். ஆனால், தம் பிள்ளைகளின் மரணம் எப்போது சம்பவிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாதிருப்பதனால் சிறுவயதிலிருந்தே இயேசுவைப்பற்றி போதிக்கவேண்டியது அவசியமாயுள்ளது.

தன் மகனைக் குணப்படுத்த வரும்படி மன்றாடி நின்றவனிடம் இயேசு, “நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” என்றார் (4:50). தன்னை உண்மையாய்த் தேடிவருபவர்களைக் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒருநாளும் புறம்பே தள்ளுவதில்லை (யோவான் 6: 37). அத்தோடு இயேசு வெகுதொலைவில் இருந்தபோதிலும் இராஜாவினுடைய மனிதனின் மகனைக் குணப்படுத்தினார். இயேசுவின் வார்த்தைக்கு அற்புத வல்லமை இருந்ததினாலேயே இது சாத்தியமாயிற்று. அந்த மனிதன் இயேசுவின் வார்த்தையை நம்பிப்போனான் (4:50). இந்த இடத்தில் ஆண்டவருடைய வார்த்தையின் வல்லமைமிகுந்த செயற்பாட்டை நாம் காண்கிறோம். இயேசு கப்பர்நகூமுக்குச் சென்று அவன்மீது தன் கைகளை வைத்து ஜெபித்து குணமாக்கவில்லை. மாறாக, இயேசு கானா ஊரில் இருந்தவாறே· “உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” என கூறியவுடன் கப்பர்நகூமில் இருந்தவன் குணமடைந்தான். ஏனெனில், கர்த்தருடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுமுடையது (எபிரெயர் 4:13). அது ஒருபோதும் வெறுமையாய் திரும்பாது. அது தேவன் விரும்புகிறதை செய்து. அவர் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (ஏசாயா 55:11). மரணத்தருவாயில் இருந்தவனுக்கு தொலைவிலிருந்தே இயேசுவால் ஜீவனைக் கொடுக்கமுடியுமாயின், பரலோகத்திலிருந்தே இன்று மக்களுக்கு நித்திய ஜீவனையும் அவரால் கொடுக்கமுடியும்.

இயேசுவின் வார்த்தை மரணத்தருவாயில் இருந்தவனைக் குணப்படுத்தியது மாத்திரமல்ல, இராஜாவின் மனுஷனிடம் விசுவாசத்தையும் தோற்றுவித்தது. “அவன் நம்பிப்போனான்” என்பதாக யோவான் கூறுகிறார். ஏனெனில் “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வார்த்தையினாலே வரும்” (ரோம.10:17). இயேசுவின் ஜீவனுள்ள வார்த்தையைக் கேட்ட மனிதனிடம் விசுவாசம் ஏற்பட்டது.

ஏனெனில் இயேசுவே விசுவாசத்தைத் துவக்கு கிறவராயிருக்கிறார் (எபிரெயர்12:1). இந்த மனிதனைப்போல விசுவாசிப்பவர்கள் நம்மிடையே மிகவும் அரிதாகவேயுள்ளனர். தேவவார்த்தையை வாசிக்கும்போது அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்விலும் அற்புதமான காரியங்கள் நடைபெறும். இம்மனிதன் அற்புதத்தைக் கண்டபின் விசுவாசிக்கத் தொடங்கவில்லை. மாறாக, இயேசுவின் வார்த்தையைக் கேட்டவுடனே விசுவாசித்தான். முன்பிருந்த அரை குறையான விசுவாசம் இயேசுவின் வார்த்தை கேட்டவுடன் முழுமையடைந்தது. விசுவாசத்திற்கு ஆதாரமாய் அமைய அடையாளங்கள் அவசியமில்லை. ஏனெனில், “விசுவாசமென்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கின்றது” (எபி.11:1). காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களே பாக்கியவான்கள் (யோவான் 10:29).

அவன் இயேசுவின் வார்த்தையை நம்பி தன் வீட்டுக்குத் திரும்பிப் போகையில், “அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான்'” என்று அறிவித்தார்கள் (4:51). நாமும்கூட இந்த மனிதனைப் போல இயேசுவினுடைய வார்த்தையை நம்பி அதன்படி செய்யும்போது அந்த வார்த்தையின்படியே நமது வாழ்க்கையிலும் அற்புதங்கள் நடைபெறுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அத்தோடு மனத்துயரத்தோடு வந்தவன் இயேசுவின் வார்த்தையை நம்பியபடியால் மகிழ்வுடன் திரும்பிப்போனான். நாமும்கூட கவலையின் மத்தியில் கண்ணீருடன் கலங்கித் தவிக்கையில், தேவ வார்த்தையை வாஞ்சையுடன் வாசித்து. அதை உண்மையான உள்ளத்துடன் விசுவாசித்தால் நாமே வியப்படையும் வண்ணம் நமது மனக்கவலைகள் மறைந்து. மனதில் மகிழ்ச்சி வெள்ளம் நிறையும்.

தன் மகன் குணமடைந்த செய்தியைக் கொண்டுவந்த வேலைக்காரனிடம் எந்த மணி நேரத்தில் குணமுண்டாயிற்று என்று விசாரித்தான். அவர்கள் நேற்று ஏழாம் மணிநேரத்தில் ஜுரம் அவனைவிட்டது என்றார்கள். உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று அறிந்து அவனும், அவன் வீட்டார் அனைவரும் விசுவாசித்தார்கள் (4:53). இயேசுவின் வாயிலிருந்து வார்த்தை புறப்பட்ட நேரமே அது செய்யவேண்டிய காரியத்தை நிறைவேற்றியது.

ஒரு சிறுவனுடைய வியாதி முழுக்குடும்பத்தையுமே இரட்சிப்புக்குள் கொண்டுவந்தது. நம்மில் அநேகர், தங்களுக்கு ஏற்படும் இக்கட்டுகளின்போது ஆண்டவரிடம் சென்று அவர் மூலமாக, அற்புதமான முறையில் மனித முயற்சிக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட விதத்தில் பரிகாரம் காணாமல் இருப்பதினால்தான் முழுக்குடும்பத்தினரது விசுவாசம்கூடக் குன்றிப்போய் விடுகின்றது.

நாமும்கூட இந்த இராஜாவினுடைய மனிதனைப்போல நமது அந்தஸ்து. அகம்பாவம் அனைத்தையும்விட்டு, நமது அபாத்திரமான நிலையை அப்படியே ஒப்புக்கொண்டு, ஆண்டவரை நம்பி வந்தால், அவருடைய வார்த்தையை நம்பி அதின்படி வாழ்ந்தால், நம் வீட்டார் அனை வரினதும் விசுவாசம் வளர்ச்சியுறுவதற்கும், அயலகத்தார் இரட்சிக்கப்படுவதற்கும் ஏற்றதொரு சாட்சியாகத் திகழ்வோம்.

தேவனுடைய வார்த்தை வல்லமையுடையது. நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கு அதுவே போதுமானது.

நினைவுகூருங்கள்!

இயேசுவைத்தவிர வேறெதுவும் நம்மிடம் இல்லாதபோது, அவரே நமக்குப் போதுமானவர் என்பதைக் கண்டுகொள்வோம்!