• பேராசிரியர் S.C.எடிசன் •
(ஜனவரி-பிப்ரவரி 2023)

 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நானே வாசல், என்வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறமும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான் (யோவான் 10:7,9)

பேராசிரியர் S.C.எடிசன்

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசன வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மோசேயினிடத்தில் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று தன்னை வெளிப்படுத்தின தேவன், புதிய ஏற்பாட்டு காலத்திலே, இயேசுவை அனுப்பி தன்னுடைய பல குணங்களை இயேசு மூலமாய் ஜனங்களுக்கு வெளிப்படுத்தினார். இயேசு ஒரு காரியத்தைச் சொல்லுவார். நானே அந்த நானே என்கிற வார்த்தைக்கு தேவன் என்கிற ஒரு அர்த்தம் உண்டு. இயேசு இப்படி தன்னை நானே என்று சொல்லி தன்னை பிதாவுக்கு ஒப்பாக்கினதினாலே யூதர்கள் அவர் மேல் கோபங்கொண்டு நீ மனுஷனாய் இருக்க உன்னை தேவனென்று சொல்லுகிறபடியால், உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். அவர்கள் இயேசுவை தேவனென்று ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனாலும், இயேசு அவர் தன்னை அவர்களுக்கு வாசல் என்று அறிமுகப்படுத்துகிறார்.

யோவான் 10 ஆம் அதிகாரத்திலே அவர் சொல்கிறார்: ஜனங்களை ஆடுகளாகவும், தன்னை மேய்ப்பனாகவும், பரலோகத்தைத் தொழுவமாகவும் சித்தரித்து கூறுகிறார். தாவீதுக்கு தேவனை மேய்ப்பராக நினைப்பது அதிக சந்தோஷமாயிருந்தது.

சகோதரரே! நீங்கள் இயேசுவின் ஆடாய் இருந்தால் இயேசுவின் சத்தத்தை அறிவீர்கள், அவரையும் அறிவீர்கள், சந்தோஷமாக அவருக்குப் பின்செல்லுவீர்கள். இயேசு புதிய ஏற்பாட்டில் நானே வாசல் என்று சொல்லும்பொழுது, அந்த வாசல் பல காரியங்களுக்கு அது ஒரு அடையாளமாக இருக்கிறது. உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன், வாசல் இல்லாத ஒரு கட்டிடம் பார்த்திருக்கிறீர்களா? வாசலோ, ஜன்னலோ இல்லையென்றால் அது கல்லறையாகத்தான் இருக்கும். அப்படியென்றால் உங்களுடைய வீடு, உங்களுடைய இருதயம் இயேசு என்னும் வாசல் இல்லையென்றால் அது ஒரு கல்லறையாகத்தான் இருக்கிறது. ஆகவே, இயேசு நானே வாசல் என்று திட்டவட்டமாக சொல்லுகிறார். இயேசு எதற்கெல்லாம் வாசலாய் இருக்கிறார் என்பதை நாம் தியானிப்போம்.

முதலாவது, அவர் பாவமன்னிப்பிற்கு வாசலாக இருக்கிறார். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு கிடையாது. இது வேதாகமத்தின் சத்தியம். ஏனென்றால் பாவத்திற்கு ஒரு கிரயம் செலுத்தித்தான் நாம் பாவமன்னிப்பைப் பெற வேண்டும். அந்தக் காலத்தில் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைக் கொண்டுவர வேண்டும். அதில் ஒன்றைத் தெரிந்துகொண்டு தங்கள் பாவங்களையெல்லாம் அறிக்கை செய்து, அதைக் கொன்று அதினுடைய இரத்தத்தை எல்லா பலிபீடங்களிலும் தெளித்துவிட்டு அந்த இன்னொரு ஆட்டை போக்காடாக விட்டுவிடுவார்கள். இயேசு எனக்கு பதிலாக பலியாகி என்னை, தப்பித்துப்போக விட்டார். அவர்தான் என் இரட்சிப்பின் வாசல்!

அவர் என் இரட்சிப்பின் வாசலாய் இருப்பதினால்தான் என் பாவங்களையெல்லாம் அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார், 2கொரிந்தியர் 5:21 சொல்லுகிறது: பாவமே அறியாத அவர், நமக்காக பாவமாக்கப்பட்டார். அந்த இயேசுதான் என் இரட்சிப்பின் வாசல்!

சகோதரரே, இந்த வாசல்வழியாய் நீங்கள் பிரவேசித்திருக்கிறீர்களா? நீங்கள் அடிக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் இன்னமும் வாசலுக்கு வெளியேதான் நின்றுகொண்டிருக்கிறீர்களோ? வாசல் என்பது வீட்டிற்குள் உள்ள சுகத்தையும், வெளியில் உள்ள கேடுகளையும், பிரிக்கிற ஒன்று. அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று Indoor, இன்னொன்று Outdoor வாசலுக்கு உள்ளேயும் இருக்க முடியும், வெளியேயும் இருக்க முடியும். நீங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள். வீட்டிற்குள் இருப்பீர்களென்றால், இயேசுவோடு ஜக்கியமாய் இருப்பீர்கள், இயேசுவின் சகல பரிபூரணங்களையும் அனுபவித்து, ஒரு குறைவுமின்றி இருப்பீர்கள். வெளியில் இருப்பீர்களென்றால், சாத்தானின் சோதனைகளுக்கும், பாடுகளுக்கும் உட்பட்டு அவமானப்பட்டு, உலகத்திலே நாதி அற்றவர்களாய், திரிந்துகொண்டிருப்பீர்கள். இந்த வாசலைக் கண்டுபிடிப்பது அரிது. அநேகர் தேடினாலும் ஒருசிலரே இந்த வாசலை கண்டுபிடிக்க முடியும். அதனால்தான் இயேசு சொன்னார்: இடுக்கமான வாசல் வழியாய் பிரவேசியுங்கள். இடுக்கமான வாசல் என்பது கட்டுப்பாடுகள் உள்ள ஒரு வாசலாகும்.

அதுமட்டுமல்ல, இடுக்கமான வாசல் என்று சொல்லும்பொழுது, நல்ல உயரமான வாசல் நிமிர்ந்துகொண்டே போகலாம் என்று நினையாதிருங்கள். அது ஒரு குறுகிய வாசல், அதற்குள் போக வேண்டும் என்றால், குனிந்து முழங்காலில்தான் அந்த வாசல் வழியாய் போகமுடியும். தாழ்மை இருந்தால்தான் அந்த வாசலுக்குள் போகமுடியும்.

சகோதரனே, இயேசு அந்த வாசலாய் இருக்கிறார்; என்னிடத்திலே வா என்று சொல்லுகிறார். வருவீர்களா? வரவேண்டும் என்றால் அந்த இடுக்கமான வாசலுக்குள் பிரவேசிக்க பணம் ஒரு தடை, பாவம் ஒரு தடை, பெருமை ஒரு தடை, இவை எல்லாவற்றையும் கழற்றிவிட்டுதான் நீர் இந்த வாசலுக்குள் வரவேண்டும்.

சகோதரரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எல்லாவற்றையும் கழற்றிவிடுவேன் என்று சொல்கிறீர்களா? இது உங்களை கெடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வீர்களா? ஆகவே இயேசுவாகிய வாசலுக்குள் நீங்கள் பிரவேசிக்க வேண்டுமென்றால், பாவத்தை அறிக்கை செய்யுங்கள். உங்கள் பெருமையை அறிக்கை செய்யுங்கள். உங்கள் பணத்தை அவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள். அப்பொழுதுதான் வாசல்வழியாய் பிரவேசிப்பீர்கள். அவரது ஆடாய் இருப்பீர்கள். அப் பொழுதுதான் அவருடைய பாதுகாவல், பராமரிப்பு, போஷிப்பு ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும்.

நானே வாசல், என்வழியாய் ஒருவன் உட் பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறமும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான் (யோவான் 10:9). அப்படியென்றால் இயேசு எதற்கு வாசலாய் இருக்கிறார் என்றால், என் இரட்சிப்பிற்கு வாசல், இரட்சிக்கப்பட்டால் நான் பரலோகத்திற்கு பாத்திரன் ஆகிறேன். ஆகையால் நான் பரலோகத்திற்கு போவதற்கு இயேசுவே வாசல்!

இரண்டாவதாக, அவர் எதற்கு வாசலாய் இருக்கிறார் என்றால், அவர் உள்ளும், புறமும் சென்று நாம் மேய்ச்சலைக் கண்டடைவதற்கு அவர் வாசலாக இருக்கிறார். அதாவது, வாழ்க்கையில் திருப்தியடைய செய்கிறார், போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயமாகும் (1 தீமோத்தேயு 6:6) என்று பவுல் தனது அனுபவத்திலே அவன் அறிந்து சொல்லுகிறான். நாமும் ஒரு திருப்தியற்ற வாழ்க்கை வாழ்ந்து, இன்னும் இன்னும் நாம் அதிகமாக எதிர்பார்த்து விரிவாகிக்கொண்டே போகவேண்டும் என்று விரும்பினால், ஒருநாளும் திருப்தியடைய முடியாது. தேவனுக்குள் இருக்கிறவன் அவரை விசுவாசிக்கிறபடியால், அவர் அவனுடைய எல்லா காரியங்களையும் பார்த்துக்கொள்கிறார். அவரை யெகோவாயீரே என்று விசுவாசிக்கிறபடியால், அவன் எல்லாவற்றிலும் திருப்தியுள்ளவனாக இருப்பான். நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் அந்த திருப்தி வந்துவிடும். அருமையானவர்களே, உங்கள் வாழ்க்கையில் அந்த திருப்தி வேண்டுமென்றால், இயேசு உங்களுக்கும் வாசலாய் இருக்கவேண்டும். அவரது தொழுவத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க இயேசுதான் வாசலாய் இருக்கிறார். பிரவேசிப்பீர்களா?

மூன்றாவதாக, மேய்ப்பன் வாசலாய் இருப்பதினால் அவர் ஆடுகளுக்கு பாதுகாப்பாயிருக்கிறார். இஸ்ரவேல் தேசத்திலே தொழுவங்கள் எப்படியிருக்கும் என்பதை நாம் கொஞ்சம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு வாசல் இருக்கும். சுற்றிலும் பெரிய பெரிய கற்களை நான்கடி ஐந்தடி உயரத்திற்கு சுற்றிலும் வைத்திருப்பார்கள். அந்த கற்களின் மேலாக திருடர் தாண்டி வரமுடியாதபடி முட்செடிகளைப் போட்டு வைத்திருப்பார்கள். ஆடுகளும் தாண்டி வெளியேபோக முடியாது. அந்த தொழுவத்தின் வாசலில் மேய்ப்பன் படுத்துக்கொள்வான். யாரும் தொழுவத்திற்குள் வரவேண்டுமென்றால், மேய்ப்பனைத் தாண்டித்தான் உள்ளே வரவேண்டும். எனவே அந்த மேய்ப்பன் வாசலாய் இருப்பதினால் ஆடுகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறான்.

உங்களுடைய வாழ்க்கைக்கும் பாதுகாவல் இயேசுவே! உங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவர்களை தேவனிடத்தில் ஒப்புக்கொடுங்கள். திக்கற்றவர்களாய்ப் போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன் என்று தேவன் கேட்கிறார் (எரே.49:11). அவர்களுடைய பாதுகாப்பு தேவனிடத்தில் இருக்கிறது. நீங்கள் வாசல் வழியாய் பிரவேசித்தால் உங்களுடைய பிள்ளைகளும் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.

இன்றைக்கும் அநேக பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டிற்கு வரும்வரை, எவ்வளவு வேதனையோடு எவ்வளவு எதிர்பார்ப்போடு, பயத்தோடு இருக்கிறார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் வீட்டைவிட்டு போகும்போதும் இயேசுவே, இவர்களை உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்; பாதுகாத்துக்கொண்டு வாரும் என்று ஜெபித்து அனுப்பியிருப்பீர்கள் என்றால், அவர்கள் வரும்போது, தேவனே உமக்கு நன்றி என்று சொல்லி, உள்ளே சந்தோஷமாய் அழைப்பீர்கள். நமது பாதுகாவல் இயேசுவினிடத்தில் இருக்கின்றது.

பாபிலோன் மகா பாதுகாப்புள்ள இடமாகும், அங்கே ஒரு பெரிய குளம் உண்டு. தண்ணீர் நிரம்பிவிட்டால் இரண்டு வருடங்களுக்கு பாபிலோனுக்கு தண்ணீர் குறையே இராது. 317 அடி உயரமான சுவர்கள் இருந்தபடியால் யாருமே அதற்குள் வரமுடியாது. ஆனால் நேபுகாத்நேச்சார் பெருமை கொண்டபோது, ஆண்டவர் அவனைத் தள்ளினார். அவனுடைய பேரன் பெல்ஷாத்சார் மரத்தினாலும், கல்லினாலும், ஆன தேவர்களை புகழ்ந்து எருசலேம் தேவாலயத்தின் பாத்திரங்களை அவன் அசுசிப்படுத்தினதினால், தேவன் கோபங்கொண்டார். புகமுடியாத அந்த பாபிலோன் கோட்டைக்கு ஒருவழியை தரியுவிற்கு காட்டினார். தண்ணீர் போகிற ஓடையை அவன் திசை திருப்பி அந்த வழியாக உள்ளே போய் பாபிலோனை அழித்துப்போட்டான்.

அன்பானவர்களே, பாதுகாவல் உங்களுடைய கரத்தில் அல்ல, உங்களுடைய இன்சுரன்ஷில் அல்ல, உங்களுடைய சேமிப்பில் அல்ல, அது தேவனுடைய கரத்தில் இருக்கிறது. இன்றைக்கு அவர் நான் வாசலாய் இருக்கிறேன் எனக்குள் வா என்று அருமையாய் அழைக்கிறார். நான் உன்னை திருப்திப்படுத்துவேன், நான் உன்னை இரட்சிப்பேன், நான் உன்னை பாதுகாப்பேன். சகோதரனே, சகோதரியே நீங்கள் ஆண்டவரிடத்தில் வருவீர்களா!

நம் வாழ்க்கைக்கு நமது இருதயமே வாசல். இந்த வாசலை இயேசு தட்டிக்கொண்டே நிற்கிறார். மகனே கதவைத் திற, உன் இருதயத்தைத் திற. நான் உள்ளே வந்து எல்லா காரியங்களையும் சரிபடுத்துகிறேன் என்கிறார். ஒப்புக்கொடுப்பீர்களா? அவர் ஆசையாய் உங்கள் இருதயத்திற்குள் வரவிரும்புகிறார். அவர் சொல்லுகிறார்: உனக்கு ஆத்ம திருப்தியைத் தருவேன். உன் வாழ்க்கையைப் பாதுகாப்பேன். உனக்கு நான் அநேக கிருபைகளைத் தருவேன், ஒருவனும் அவைகளை என் கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது என்று சொல்லி உன்னை பாதுகாப்பார். இன்றைக்கு அவரிடத்தில் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, உங்கள் இருதயத்தை திறந்து இயேசுவே வாரும் என்று ஜெபிப்பீர்களா?

அன்பின் தகப்பனே, இன்றைக்கும் இந்த செய்தியை கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களை நீர் ஆசீர்வதித்தருளும். அவர்களுக்கு நீர் வாசலாய் இருந்தருளும், அவர்கள் உம்மண்டை வருவதற்கும் வாசலுக்குள் பிரவேசிப்பதற்கும் அவர்களுடைய கண்களை நீர் திறந்து, அவர்களுடைய மனதில் ஒருமாற்றத்தை உண்டு பண்ணும். மனந்திரும்பி உம்மை இரட்சகராக ஏற்று, உமக்குள் வர கிருபை செய்யும். அவர்களை இரட்சித்து, போஷித்து, பராமரித்து, பரலோகமாகிய தொழுவத்திற்குள்ளும் அவர்களை கொண்டு செல்லும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள பிதாவே! ஆமென்.