• சகோதரி சாந்தி பொன்னு •
(மார்ச்-ஏப்ரல் 2023)

அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார் (1பேதுரு 1:20).

சகோதரி சாந்தி பொன்னு

தேவன் அளவிடமுடியாத அன்புள்ளவர், கருணைமிகுந்தவர், இரக்கமுள்ளவர்; தம்மையே மனுக்குலத்துக்காகத் தந்தவர். இப்படிப்பட்ட தேவன், துருக்கியில் நடந்த கோர நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தது என்ன?

மூத்த சகோதரி ஒருவர் இப்படியொரு கேள்வியை எழுப்பினார். காலத்துக்குக் காலம் பயங்கரங்கள் சம்பவிக்கும்போது இப்படிப்பட்ட கேள்விகள் எழத்தான் செய்கின்றன. பதில் கிடைக்கிறதோ இல்லையோ அடுத்த சம்பவத்தை நோக்கி மக்கள் நகர்ந்துவிடுகின்றனர். நமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போதும், யுத்த அழிவின்போதும் எண்ணுக்கணக்கற்ற கேள்விகளை, கிறிஸ்தவர்கள்கூட கேட்கத்தான் செய்தனர். சமீபத்திலே ஒரு குடும்பத்தில் சம்பவித்த வேதனைமிகுந்த மரணத்தின்போதுகூட, “ஒரு நிம்மதியான வாழ்வைத்தவிர நான் வேறு எதைக் கேட்டேன்” என்று மரித்தவரின் சகோதரன் வலி தாங்கமுடியாமல் கதறினார். இவற்றுக்கெல்லாம் என்ன பதில்?

கேள்விகள் எழும்புவது தவறல்ல; நாம் மனிதர், நமக்குள் உணர்வுகளை வைத்தவரே தேவன்தான். தாவீது, ஆசாப் மற்றும் சங்கீதக்காரர்கள்கூட தங்கள் மன உணர்வுகள் எதையும் மறைக்காமல் தங்கள் சங்கீதங்களில் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். நமது வேதனைகளை, மனதின் வலியை கர்த்தர் முற்றிலும் அறிவார். ஏனெனில் அவரே சிலுவையில் அந்த வலியை அனுபவித்தவர். அதனால் நாம் எழுப்புகின்ற கேள்விகளே நமக்கு விசுவாச சோதனையாக மாறுவதற்கு நாம் அனுமதித்துவிடக்கூடாது; அதாவது, தேவனையே சந்தேகித்து வெறுப்படைகின்ற நிலைக்கு நாம் சென்றுவிடக்கூடாது. அது, தேவனுடைய நீதியை நாமே நியாயம் விசாரிக்கிறதற்குச் சமமாகிவிடும்.

நமக்கு நேரிடுகின்ற பாடுகள், வேதனைகள், ஜீரணிக்கவே முடியாத நிகழ்வுகள் யாவும் நாளை மாறிப்போய் வேறு காரியங்கள் தோன்றும்; நாளை மாறிப்போகின்ற இந்த உணர்வலைகளுக்கும் துக்கங்களுக்கும் மேலான ஒன்றுண்டு; அதுதான் “தேவனுடைய நீதி”. இதனைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போதுதான் நாம் தடுமாறிப்போகிறோம். “குற்றஞ்சாட்டப்படுகின்ற தேவநீதியை எந்தவொரு மனித அனுபவத்தினாலும் முழுதாக முற்றிலுமாக விளங்கிக்கொள்ளவும் முடியாது, விளக்கவும் முடியாது; ஏனெனில். இது தேவனுடைய அநாதி அன்பிலிருந்து பிறப்பிக்கப்பட்டது.” ஒரு தேவமனிதர் எழுதி வைத்திருக்கின்ற பெறுமதிவாய்ந்த இந்த வரிகள்தான் இந்த செய்தியை எழுதும்படி என்னை உந்தித்தள்ளியது. தேவனுடைய அநாதி அன்பு, அதிலிருந்து எழுந்த தேவநீதி ஆகிய இவைகள் மனிதனால் கிரகிக்கமுடியாத, விவரிக்கமுடியாத அற்புத அதிசய இரகசியம். இதை அளவிடவும் முடியாது; இது இல்லாமல் நம்மால் வாழவும் முடியாது.

அன்பில் உதித்த தேவநீதி

தேவனுடைய நீதியைக் குறித்த இந்த இரகசியத்தை பவுலடியார் “உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானம்” (1கொரி.2:7) என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மறைக்கப்பட்ட இரகசிய ஞானம் என்பது எது? அதுவே மனுக்குலத்திற்கு அவர் அளித்த இரட்சிப்பு – மீட்பு!

அதாவது, பாவத்தில் விழுந்து தேவனைவிட்டும், அவருடைய அநாதி திட்டத்திலிருந்தும் விலகிப் போன மனுக்குலத்தை மறுபடியும் தேவனுடன் ஒப்புரவாக்குவதற்காக, மகாபரிசுத்த தேவன்தாமே, ஒரு மனிதனாக உலகில் வந்து பிறந்து, முழு மனிதனாகவே வாழ்ந்து, மனுக்குலத்தின் பாவம் முழுவதையும் தாமே ஏற்று, பாவமே இல்லாத அவர் நமக்காகப் பாவமாக்கப்பட்டு, சிலுவை மரணத்தைத் தழுவிக்கொண்டார். இதுவே பிதாவின் சித்தமாயிருந்தது. ஆக, பாவமே இல்லாதவரும், தமது ஒரேபேறான குமாரனுமாகிய இயேசுவின்மீது நமது பாவம் யாவையும் சுமத்தி, அவரைப் பாவமாக்கி, அக்கிரமக்காரரில் ஒருவராக சிலுவையில் தொங்கவிட்டாரே தேவன்! பாவம் செய்தவனுக்குத்தான் தண்டனை, அது நியாயம். பாவமில்லாதவர் கொடிய தண்டனைக்குட்பட்டது நீதியா? இந்த நீதியை நாம் என்ன சொல்லுவோம்? இதுதான் பரிசுத்த அன்பு நிறைந்த தேவநீதி! இந்த தேவன் நமக்கு அநீதி செய்வாரா?

ஆரம்பத்தில் மனுக்குலம் அறியாதிருந்த இந்த தேவதிட்டமானது, இயேசுகிறிஸ்து மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தபோது தெளிவாயிற்று. இந்த உயிர்த்தெழுதலானது, பாவத்தின்மீதும், மரணத்தின்மீதும் அதிகாரம் உள்ள ஒருவர் கிறிஸ்துவே என்பதை நமக்கு உறுதிப்படுத்தியது. இவரே நமது ஆண்டவர்! இந்த இரகசியம் இன்னமும் ஆண்டவரைக் குறித்துக் கேட்காத, ஏற்றுக்கொள்ளாத, மறுக்கின்ற யாவருக்கும் மறைவாகவே இருக்கிறது.

உலகத்தோற்றத்திற்கு முன்னான அன்பு

பவுலின் 1 கொரிந்தியர் 2:7ஆம் வசனத்தின் ஆரம்பத்தைக் கவனித்தீர்களா? “உலகத்தோற்றத்திற்கு முன்னே” என்று ஆணித்தரமாகவே பவுல் குறிப்பிட்டுள்ளார். இதையே பேதுருவும், “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்” (1 பேதுரு 1:20) என்கிறார். பவுல் எபேசியருக்கு எழுதியபோது, “தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே… நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபே.1:4-7) என்கிறார். ஆக, இரட்சிப்பு உட்பட சகலமும் நமக்காக அன்பின் தேவனால் “உலகத்தோற்றத்திற்கு முன்னரே” அன்பாக ஆயத்தப்படுத்தப்பட்ட ஒன்று.

“இவ்விதமாக மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும்” என்ற பிரசங்கியின் வார்த்தையிலிருந்து நமது ஆவி அநாதியாய் எங்கிருந்தது என்பது நமக்கு விளங்குகிறது. ஆக, அநாதியாய் தமக்குள் இருந்த நமது ஆவிக்கு ஏற்றகாலத்தில் ஒரு சரீரத்தை, ஒரு மனதை ஆத்துமாவைத் தந்து, ஏற்றகாலத்தில் நம்மை இந்த உலகில் வாழ வைத்து, ஆதாமிலிருந்து மனுக்குலத்துக்குள் கடத்தப்பட்ட ஜென்ம பாவசுபாவத்துடன் பிறந்த நமக்கு ஏற்றகாலத்தில், “உலகத்தோற்றத்தின் முன்னர்” ஆயத்தப்படுத்தப்பட்ட மீட்பை அருளி, தமது புத்திரர் என்ற உரிமையை அதிகாரத்தை கிருபையாய் அருளிய தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்திருக்கிறார் என்பதை இன்னொருவர் சொல்லி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை. இந்த தேவன் அநீதி செய்வாரா?

பிரமிப்பான படைப்பில் வெளிப்பட்ட அன்பு!

ஆம், அந்த அநாதி அன்பினால்தான் நாம் இன்றும் நாசியில் சுவாசத்துடன் வாழுகிறோம். தேவன், தமது படைப்பின் ஆறாம் நாளில், மண்ணினால் மிருகங்களைப் படைத்துவிட்டு (ஆதி. 2:19), மனிதனைப் படைத்தார். மனிதனுடைய படைப்பு ஆச்சரியமானது! விசேஷித்தது! பிரமிக்கத்தக்கது! “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதி.2:7) என்று வாசிக்கிறோம். இவ்விதம் மனுஷனைப் படைப்பதற்கு முன்னர், தேவன், “நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்று பேசுகிறார். அப்படியே தேவன் “தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” (ஆதி.1:26, 27) என்றும் காண்கிறோம். இந்த சிருஷ்டிப்பின் விபரத்தையே 2ஆம் அதிகாரத்தில் காண்கிறோம்.

ஆக, தேவசாயலாக நாம் படைக்கப்பட்டோம் என்பதற்காக, தேவன் முழுவதும் தம்மைப்போல நம்மைப் படைக்கவில்லை; ஏனெனில் அவருக்குச் சரீரம் இல்லை. நித்தியராகிய தேவன் ஆவியாகவே இருக்கிறார் என்பது வேதசத்தியம். அப்படியானால் அவரது சாயல் என்பது என்ன? ஆம், தமது மகிமையின் பிரதிபலிப்புகளாகவே தேவன் மனுஷனைப் படைத்தார். நாம் தேவனை உலகிற்குப் பிரதிபலிப்பதற்காகத் தேவனால் தேவனுக்கென்று படைக்கப்பட்டவர்கள் என்றால் நமது பெறுமதி எத்தகையது என்பதை நாம் உணர வேண்டும். மனிதனிடம் காணப்படுகின்ற அறிவுத்திறன், படைப்புத்திறன், செயற்திறன், தீர்மானங்கள் யாவும் தேவனுடைய பிரதிபலிப்பாகவே இருந்தது. மற்றும் அவருக்குள்ளிருந்த அவருடைய சுதந்திரமும் நமக்குள் வைக்கப்பட்டுள்ளது. தேவன் நமக்கு மேலான படைப்பாளி என்பதால், ஒருபோதும் நாம் முழுமையும் தேவனைப்போல இருக்கமுடியாது. ஆனால், நம்மில் வெளிப்படும் அன்பில் பொறுமையில் தயவில் உண்மைத்துவத்தில் எல்லாம் அவருடைய குணாதிசயங்களை நம்மால் பிரதிபலிக்க முடியும்; அதுவே தேவசித்தம். அதற்காக அவர் நம்மைப் பொம்மைகளாகவோ, ரோபோக்களாகவே படைக்கவில்லை. சுயசித்தத்துடன் தேவனை நாம் பிரதிபலிக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். ஆம், தேவனுடைய அநாதி அன்பு ஒன்றே, மனிதன் இவ்விதமாகப் படைக்கப்படக் காரணமாயிற்று. ஆம், தேவன் மனிதனை அன்பாகவே படைத்தார். இவர் நமக்கு அநீதி செய்வாரா?

பெறுமதி அருளிய அநாதி அன்பு

ஆக, நமது பெறுமதிப்பு இந்த உலக காரியங்கள், செல்வச்செழிப்புகள், கல்வித்தகமைகளில் தங்கியில்லை; மாறாக, நாம் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டோம், இன்று அவர் நமக்குள் வாழுகிறார் என்பதிலேயே தங்கியிருக்கிறது. இந்த மகாமேன்மையான பெறுமதிப்பைக் கொண்டுள்ள நாம் இதனை உணராது வாழுவது எப்படி? தேவ சாயலில், தேவனையே பிரதிபலிக்கின்ற ஆற்றலுடன் படைக்கப்பட்ட மனிதன் இன்று ஏன் தடுமாறி நிற்கிறான்? ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் நடந்த சம்பவம் நமக்கு மிகவும் பரிச்சயமானது. தேவனுடைய நியமங்களை விட்டுவிலகி, தோட்டத்துள் வேறு சத்தம் ஒலிப்பதற்கு இடமளித்து, அந்தக் குரல் சொன்னதைக் கேட்டு, தனக்குத்தானே கடவுளாகி, தனக்கு நன்மை எது? தீமை எது? என்பதை தேவன் அருளிய சுதந்திரத்தைப் பாவித்து, சுயதீர்மானம் செய்து, மனிதன் பாவத்தில் விழுந்தபோது, அவனில் இருந்த தேவசாயல் மாசுபட்டது; அவனில் பிரதிபலித்திருந்த தேவ மகிமையும் இழக்கப்பட்டுப்போயிற்று.

அதற்காக, அன்புள்ள தேவன் மனிதனை அழித்துவிடவில்லை; மாறாக, அவனை மீட்டெடுத்து, இழந்துபோன மகிமையை மீண்டும் பெற்றுக் கொடுத்து, அவன் தம்முடன் நித்தியமாக வாழ்வதற்காக, தமது அநாதித் திட்டத்தை தமது அநாதி அன்பினிமித்தம் நிறைவேற்றுவதாக அந்த ஏதேன் தோட்டத்திலேயே தமது வாக்குறுதியை தீர்க்கதரிசனமாகவே உரைத்தார். உரைத்ததை உரைத்தபடி யே நிறைவேற்றியவர் நமக்கு அநீதி செய்வாரா?

அநாதி அன்பும் தாவீதின் பிரமிப்பும்

சந்ததிப்பெருக்கம் தேவனுடைய தனித்துவமான திட்டமாகும். அந்த வகையில் ஒரு ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து ஒரு கருவின் உருவாக்கமும், தாயின் கருவறையில் அந்தக் கரு வளர்ந்து உருவேற்படுவது எல்லாம் நாம் அறிந்த விஷயங்கள். கருவின் வளர்ச்சியை வைத்திய விஞ்ஞானம் படம் பிடித்துக்காட்டுவதால், இன்று நமக்கு இதைக் குறித்த அறிவு அதிகமாகவே உண்டு. ஆனால் அன்று, தாவீதின் காலத்தில் எந்தவித ஸ்கேன் முறைமைகளும் இருக்கவில்லை. ஆனாலும், சகலவற்றையும் காண்கிறவரும், அறிந்திருக்கிறவரும், சர்வவல்லவரும், எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறவருமாகிய தேவன், நம்மை அறிந்திருக்கிறவர், நம்முடன் இருக்கிறவர், தம்மை அறிந்துகொள்ளும் அதிமேன்மையான கிருபையை நமக்கு அளித்தவருமானவர் என்பதையும் உணர்ந்தவராய், “என் தாயின் கருவறையில் நீர் என்னைக் காப்பாற்றினீர், ஒன்றிணைத்து உருவாக்கினீர், பிரமிக்கத்தக்கதாகவும் அற்புதமாகவும் நான் உருவாக்கப்பட்டதால் நான் உம்மைத் துதிப்பேன்” என்று பாடியுள்ளார். மேலும், “பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை” என்கிறார். “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” (சங்.139:13-16) என்று தாவீது பாடியதிலிருந்து, தேவனுடைய புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தபடியே நாம் உருவாக்கப்பட்டோம் என்றால், அநாதியாய் தேவன் நம்மைக் குறித்து வைத்திருந்தார் என்பதும், அவரது அநாதி அன்புதான் இன்று வாழக் காரணம் என்பதும் புரிகிறதல்லவா? இந்த தேவன் அநீதி செய்வாரா?

நம்மைத் தேவ புத்திரராக்கிய அநாதி அன்பு

மேலும், தேவனால் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் சரீரத்தின் முழுமையையும் எந்தவொரு விஞ்ஞானமும் இன்னமும் முழுமையாகக் கண்டுகொள்ளவில்லை என்றால் அது மிகையாகாது. நாளை மண்ணுக்குள் போகப் போகின்ற இந்த சரீரத்திற்குக் கர்த்தர் இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்றால், நமது ஆவி ஆத்துமாவின் பெறுமதிப்பு என்ன?

ஆதாமிலிருந்து வந்த ஜென்ம பாவத்துடன்தான் நாம் பிறந்தோம். ஆனால், தேவ அன்பு தமது குமாரன் மூலமாக நம்மை மீட்டுக்கொண்டு, மாசுபட்ட தேவசாயலை மறுபடியும் புதுப்பித்து, நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்கியது; இழந்துபோன தேவமகிமையை நமக்கு மீட்டுத்தந்தது. இந்த இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ, தங்கள் முந்திய பாவவாழ்வைவிட்டு மனந்திரும்பி இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு புதிய வாழ்வுக்குள் வருகிறவர்கள் எவர்களோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொள்கிறார்கள்; கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தால் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (கலா.3: 26-28); தமது பிள்ளைகள் என்ற அதிகாரத்தைக் கொடுத்தார். இன்று நமக்கு அந்த உரிமை உண்டு, ஆம், தம்முடன் உறவாடும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்த தேவன் நமக்கு அநீதி செய்வாரா?

நன்மை அருளிய அநாதி அன்பு

பாவத்தின் சம்பளமாகிய மரணத்துடன் இயேசுவின் வாழ்வு முடிந்திருந்தால் நமக்கு இன்று இந்த நம்பிக்கை உண்டாயிருக்காது. மரணத்தை ஜெயித்து, பாதாளத்தை வென்று இயேசு உயிரோடே எழுந்ததால், இன்றும் அவர் ஜீவித்திருப்பதால், பிதாவின் வலது பாரிசத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறவராக இருப்பதால், இன்று நாம் தைரியமாக அவருடைய கிருபாசனத்தண்டை சேருகின்ற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

அன்றியும், ரோமர் 8:28ல் பவுல் குறிப்பிடுகின்ற நன்மை எதுவென்று அறிய 29ம் வசனத்தைப் படிக்கவேண்டும். “அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.” எவ்வளவு பெரிய பாக்கியம் இது! ஆம், தேவசாயலை உலகில் பிரதிபலிக்கின்ற பாக்கியத்தைத் திரும்பவும் கிருபையாய் பெற்றிருக்கிற நாம், அநாதி அன்பினால் தேவனுடைய பிள்ளைகள் என்ற பாக்கியத்தையும் உரிமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிற நாம், அநாதியாய் தேவன் நம்மில் வைத்திருக்கிற நோக்கத்தையும் திட்டத்தையும் கனப்படுத்தி, தேவனுடைய அநாதி அன்புக்கு ஏற்றபிள்ளைகளாக நாம் வாழவேண்டாமா? பாவமும் அக்கிரமமும் நிறைந்ததாய் அழிவை நோக்கி வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகில், அந்த அநாதி அன்பில் திளைத்தவர்களாக, தேவசாயலைப் பிரதிபலிக்கிற பிள்ளைகளாக நாம் வாழுவோமாக. நமக்காக அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்ட இயேசுவை நமது பெறுமதியாகக் கொண்டிருக்கிற நாம், அவருக்கு மாத்திரமே பிரியமாக வாழுவோமாக. அவருடைய அநாதி அன்பு நம்மை நெருக்கி ஏவட்டும்!

‘அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன்; ஆதலால் காருண்யத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்’ என்று வாக்களித்த தேவனுடைய அநாதி அன்புக்குப் பாத்திரமாக அவருக்கே மகிமையாக ஜீவிக்க, மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஆண்டவர் தாமே நம்மைத் திடப்படுத்துவாராக. ஆமென்.