(மார்ச்-ஏப்ரல் 2023)
நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள் (லூக்கா 24:39).
இன்று நாம் இயேசுவின் சரீர கைகளைப் பார்க்கமுடியாது. ஆனால், நமது விசுவாச கண்களின் மூலமாக பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்தால் அவரது கரங்களை இன்றும் பார்க்கலாம்.
அவருடைய கரங்கள் எப்படிப்பட்ட கரங்கள் என்பதை இப்பொழுது ஆராய்ந்து பார்ப்போம்.
1. காயப்பட்டக் கரங்கள்.
அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் (காயங்கள்) ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான் (சகரி.13:6). நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு … (ஏசா.53:5).
இயேசுகிறிஸ்துவின் கரங்களை ஏன் காயப் படுத்தினார்கள்? ஏன் அவருடைய கரங்கள் சிலுவையில் அடிக்கப்பட்டது. அவர் பாவம் அறியாதவர். பரிசுத்த தேவன்! நீங்களும் நானும் நம் கரங்களினால் செய்த பாவங்களுக்காக, அவருடைய மாசற்ற பரிசுத்த கரங்கள் ஆணியடிக்கப்பட்டன. இதுதான் தேவஅன்பு! நாம் தனிப்பட்ட முறையில் அவரை நம் இரட்சகராகவும், ஆண்டவராகவும் உள்ளத்திற்குள் ஏற்றுக்கொள்ளும்பொழுது, தம்முடைய இரத்தத்தால் நம்முடைய பாவங்களை கழுவி, பரிசுத்தப்படுத்துவார். அப்பொழுது நாம் நம்முடைய கரங்களை அவருடைய மகத்துவமான சேவைக்கு உபயோகிக்கலாம்.
2. அன்புக் கரங்கள்
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார் (மாற்கு 1:41). குஷ்டரோகம் பயங்கர வியாதி, யாருமே ஒரு குஷ்டரோகியைத் தொடமாட்டார்கள். சாதாரணமாக ஒரு குஷ்டரோகியை கண்டால் மக்கள் கல்லெறிவார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து இந்த குஷ்டரோகியை கண்டதும், மனதுருகி, அவன் மீது கை வைத்து, குணமாக்கினார். ஆம்! அவர் கரங்கள் அன்பு நிறைந்த கரங்கள். அவரது கிரியைகள் அன்பினால் ஏவப்பட்ட கிரியைகள். இன்று அவர் உன்னை தம் கரங்களால் தொட காத்திருக்கின்றார். இடங்கொடுப்பாயா?
3. குணமாக்கும் கரங்கள்
அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பல வீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள் (லூக்.13:11-13).
இயேசு எந்த வியாதியையும் சுகமாக்க வல்லவர். இந்த ஸ்திரீக்கு கொடுத்த சுகத்தை உனக்கும் கொடுக்க காத்திருக்கிறார். அவரது குணமாக்கும் கரங்களினால் உன்னைத் தொட இடங்கொடு.
4. இரட்சிக்கும் கரங்கள்
அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசு வினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில், ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார் (மத்.14:29-31).
ஆம், அமிழ்ந்து கொண்டிருந்த பேதுருவை இரட்சித்த கரங்கள், பயங்கர சூழ்நிலைகளில் சிக்கியிருக்கும் உன்னை இப்பொழுது இரட்சித்து விடுவிக்கக்கூடிய இயேசுவின் கரங்கள். பாவக்கடலில் அமிழ்ந்துகொண்டிருக்கும் உன்னை தூக்கியெடுக்கக்கூடிய கரங்கள்- இயேசுவின் கரங்கள். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிபடுத்தினார் (சங்.40:2) என்று சங்கீதக்காரனோடு சேர்ந்து கூறலாம்.
5. வல்லமையுள்ள கரங்கள்
இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக் கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? (மாற்கு 6:2).
அவரது கரங்கள் வல்லமையான கிரியைகளை செய்யும் கரங்கள். அவரது கரங்களின் வல்லமையை படைப்பில் காணலாம். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவான் 1:3).
உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலது கரம் உன்னதமானது (சங்.89:13). அவரது கரங்களின் வல்லமை இன்றும் குறையவில்லை.
6. காக்கும் கரங்கள்
ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதில்லை என்று இயேசு, யோவான் 10:28இல் கூறினார். உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1பேதுரு 5:8).
ஆம், பிசாசானவன் நம்மை இயேசுவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள முயற்சிசெய்வான். ஆனால், நாம் பயப்பட அவசியமில்லை. ஏனெனில் இயேசுவின் கரங்கள் நம்மை காக்கும் கரங்கள்.
7. ஜெபிக்கும் கரங்கள்
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள் (மத்.19:14). இயேசுவின் ஜீவியம் முழுவதும் ஜெபத்தினால் நிறைந்திருந்தது. அதிகாலையில் ஜெபித்தார் (மாற்கு 1:35).
முழு இரவும் ஜெபம் செய்தார் (லூக்.6:12). எதிரிகளுக்காக ஜெபம் செய்யுமாறு கற்றுக் கொடுத்த அவர் (மத்.5:44) சிலுவையில் தம்முடைய எதிரிகளுக்காக ஜெபித்தார். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் (லூக்.23:34).
பேதுருவின் வீழ்ச்சியை முன்னறிந்த இயேசு அவனுக்காக ஜெபித்தார். பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, … சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார் (லூக்.22:31,32). இன்று இயேசுகிறிஸ்து பரலோகத்தில் உனக்காகவும் எனக்காகவும் ஜெபித்துக்கொண்டிருக்கிறார். அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே (ரோமர் 8:34).
உன்னுடைய என்னுடைய ஜெபஜீவியம், எப்படி இருக்கின்றது? நாம் விசுவாசத்தோடு உபவாசத்தோடு ஊக்கமாக, கண்ணீரோடு இடைவிடாமல் ஜெபம் செய்கிறோமா? இப்படிப்பட்ட ஜெபம்தான் வெற்றிகரமான ஜெபம். சோர்வடையாமல் ஜெபம் செய்வோமாக.
8. ஆசீர்வதிக்கும் கரங்கள்
பின்பு இயேசு பெத்தானியா வரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார் (லூக்.24:50).
ஆம், இயேசுவின் கரங்கள் உன்னையும் என்னையும் ஆசீர்வதிக்க காத்திருக்கின்றன. நாம் முற்றிலும் நம்முடைய ஜீவியத்தை அவர் கையில் ஒப்புக்கொடுத்தால் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். முதலாவதாக அவரிடம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கேட்க வேண்டும். அதற்கு பிறகு மற்ற ஆசீர்வாதங்களை கேட்கலாம். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி.10:22). உன் ஜீவியம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவியமா அல்லது ஆசீர்வாதமற்ற ஜீவியமா?
9. தட்டும் கரங்கள்
இயேசு கூறுகின்றார்: இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன்; அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் (வெளி.3:20).
இயேசு உன்னுடைய உள்ளத்தின் கதவை அன்போடு தட்டிக்கொண்டிருக்கிறார். நீயோ அவர் சத்தத்தைக் கேட்காமல், உன் உள்ளத்தை கடினப்படுத்தி, கதவை திறவாமல் பிடிவாதமாய் இருக்கின்றாய். இப்பொழுதாவது தாழ்மையோடு உன் உள்ளத்தின் கதவை திறக்கமாட்டாயா? ஆண்டவரே, என் உள்ளத்திற்குள் வாரும். என் பாவத்தையெல்லாம் உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவும்; என்னை ஒரு புதுமனிதனாக மாற்றியமையும் என்ற ஜெபத்தோடு உன் உள் ளத்தை அவருக்காக திறந்துவிடு. அவர் நிச்சயமாக, அவர் வாக்கின்படி, உன் உள்ளத்தில் குடியிருக்க வருவார். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று இயேசு யோவான் 5:37ஆம் வசனத்தில் கூறியிருக்கிறார்.
10. நியாயந்தீர்க்கும் கரங்கள்
அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று (தானி.5:5).
பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் (யோவான் 5:22).
நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும் (யோவான் 12:48) என்று இயேசு சொன்னார்.
உங்களுக்குத் தெரியுமா?
நாம் தேவனுடைய அநாதித்திட்டத்தின் பங்குதாரர்கள்! இந்த அறிவை நாம் பரிசுத்த ஆவியானவருடைய ஆளுகைக்குள் வரும்வரை அறிந்திட முடியாது.