• பேராசிரியர் S.C.எடிசன் •
(மார்ச்-ஏப்ரல் 2023)
நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11).

பேராசிரியர் S.C.எடிசன்
இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் சத்திய வசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். பிதாவானவர் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேக்கு தன்னை வெளிப்படுத்தினதை இயேசுகிறிஸ்து வாழ்ந்துகாட்டி, பிதா மாறவில்லை, நானும் மாறவில்லை. நானும் பிதாவும் ஒன்று, நாங்கள் மாறவில்லை. எங்கள் அன்பில் மாறவில்லை, எங்கள் மனதுருக்கத்தில் நாங்கள் மாறவில்லை என்று சொல்லி, மக்களுக்கு பிதாவின் அன்பையும், அவருடைய கரிசனையையும் சொல்லி, அவரை விசுவாசிக்கத் தூண்டினார்.
நமக்கும் தேவனுக்கும் இடையிலுள்ள உறவை அவர் பலவழிகளில் சொல்லியிருக்கிறார். நானே திராட்சச்செடி; நீங்கள் கொடிகள், என்னாலேயன்றி உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லியிருக்கிறார். தகப்பன் பிள்ளையைச் சிட்சிக்கிறதுபோல, நான் உங்களை சிட்சிக்கிறேன் என்று சொல்லும்பொழுது, நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை, தகப்பனுக்கும் பிள்ளைக்குமுள்ள உறவாகச் சொல்லுகிறார். இந்த யோவான் சுவிசேஷத்தில் நமக்கும் அவருக்குமுள்ள உறவை, மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளோடு ஒப்பிட்டுச்சொல்லுகிறார். அவர் ஆடுகளை பெயர் சொல்லி அழைக்கிறார்.
அவர் நமக்கு நல்ல மேய்ப்பனாக இருந்து செய்யப்போகிற காரியம் என்னவென்பதை நாம் அறியவேண்டுமென்றால், எசேக்கியேல் 34:11 முதல் 16ஆம் வசனம் வரைக்கும், வாசித்துப் பார்த்தால் அத்தனை ஆச்சரியமாக இருக்கும்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான்நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி … (வச.11-12).
நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார்.
தன்னுடைய ஆடுகளின் தன்மை என்ன, எப்பொழுது அவைகள் வழிதவறிப்போகும், எப்பொழுது வேலியைத் தாண்டும், எப்பொழுது அது ஓடப் பார்க்கும் என்பதெல்லாம் அந்த மேய்ப்பனுக்குத் தெரியும். அந்த ஆடுகளைக் குறித்து அதிக கவனமாயிருந்து, அவைகள் தொழுவத்தைவிட்டு வெளியே போகாதபடிக்கு அவன் அவைகளைப் பாதுகாத்துக்கொள்கிறான். இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப் பார்ப்பேன் (வச.11) என்கிறார். தனது ஆடுகளை விசாரித்து அறிகிறான். எந்த ஆடு பெலவீனமாய் இருக்கிறதோ, அதைப் பெலப்படுத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அதற்குக் கொடுத்து, அவன் அதைப் பெலப்படுத்துவான். எங்கேயாவது மலையிலிருந்து கீழே விழுந்து கால் முறிந்திருந்தால், அந்த காயத்தைக் கட்டி, எண்ணெய் வார்த்து அந்தக் காயத்தை ஆற்றுவான். இதுதான் ஒரு நல்ல மேய்ப்பன் செய்கிற ஒரு செயல். ஆண்டவராகிய இயேசுவும் நமக்கு இதையேச் சொல்லுகிறார். அவர் ஆச்சரியமான வாக்குத்தத்தங்களை நமக்குத் தருகிறார். நாம் மட்டும் அவருடைய ஆடாக இருக்கவேண்டும்.
நல்ல மேய்ப்பன் ஆடுகளோடு இருப்பார்
அடுத்ததாக, நல்லமேய்ப்பன் தனது ஆடுகளோடு இருப்பான். அவற்றை தேடிப்பார்ப்பார். முட் புதரில் எங்காவது சிக்கிக்கொண்டிருந்தால், அவைகளைத் தப்பிவரப்பண்ணுவார். அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும், தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுய தேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து … மேய்ப்பேன் (எசேக்.34:13). எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். பாபிலோனிலிருந்து எருசலேமிற்குக் கொண்டுவந்தார். அவர்கள் மறுபடியுமாக ஆலயத்தைக் கட்டினார்கள். அவர்கள் மறுபடியுமாக ஒரு தேசமாக அமைந்தார்கள். 1948இல் இஸ்ரவேல் ஒரு தேசமாகி உலக வரைபடத்திலே தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நல்ல மேய்ச்சலிலே மேய்க்கிறார்
இஸ்ரவேல் மலைகள்மேலும், ஆறுகளண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன். அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன் … (வச.13-14). நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை நல்ல மேய்ச்சலிலே மேய்க்கிறான். இதன் அர்த்தம் என்னவென்றால், கள்ளப் போதனைகளால் கலங்கியிருக்கிற சபைக்கு அவர் நல்ல மேய்ச்சலைத் தருகிறார். அதாவது, சரியான உபதேசத்தைத் தந்து, அவர்கள் பாவத்தைவிட்டுத் மனந்திரும்பி பிழைப்பதையே விரும்பி, அவர்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைக் குறித்துப் போதிக்கிறார். இதைத்தான் அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன் என்கிறார். சரியான போதகர்களைத் தந்து அவர் தமது சபையை மேய்க்கிறார்.
நல்ல தொழுவத்தில் வைத்து பராமரித்துப் பாதுகாக்கிறார்.
அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும் (வசனம் 14).
இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளிலே அவைகளுடைய தொழுவம் இருக்கும். இதைச் சற்று ஆழமாக நீங்கள் சிந்திக்கவேண்டும். இஸ்ரவேலிலே உயர்ந்த மலை சீயோன் மலையாகும். சீயோன் என்பது தேவன் வசிக்கும் இடமாகும். பரலோகத்திலும் தேவன் இருக்கும் இடத்தை சீயோன் என்றுதான் அழைப்பார்கள். ஆகவே உயர்ந்த மலைகளில் அவர்கள் தொழுவம் இருக்குமென்றால், அவர் சிதறுண்டதைத் தேடி அதைத் தப்புவித்து, நல்ல மேய்ச்சலைக் கொடுத்து, அவைகளை உயர்ந்த பரலோகத்தின் தொழுவத்தில் அதாவது, பரலோகத்திற்கு பாத்திரவான்களாக அவர்களை மாற்றுகிறார்.
சகோதரனே, சகோதரியே நீங்கள் எப்படிப்பட்டவர்களோ எனக்குத் தெரியாது, உங்களுடைய இருதயத்திற்குள் என்ன அசிங்கமான காரியங்கள் போராடி உங்களை சீரழித்துக் கொண்டிருக்கிறதோ எனக்குத் தெரியாது, எந்த கெட்ட பழக்கத்தினால் நீங்கள் உங்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ அல்லது சாத்தானின் வலைக்குள் சிக்கி நீங்கள் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை நேசிக்கிற ஒரு இயேசு உண்டு. அவர் இன்றைக்கும் ஜீவிக்கிறவர், அவர் இவ்வாறு சொல்லுகிறார்: “நான் தேடிப்பார்ப்பேன், அவைகளைத் தப்புவித்து, சுயதேசத்திற்கு கொண்டுவருவேன். நல்ல மேய்ச்சலைக் கொடுப்பேன். சரியான உபதேசத்தினால் அவர்களை இரட்சிப்பின் வாழ்க்கையில் திடப்படுத்துவேன். எருசலேம் மலைகளில் உயர்ந்த சீயோன் பர்வதத்திலே அவைகளின் தொழுவம் இருக்கும். அதாவது பரலோகத்தில் அவைகளின் தொழுவம் இருக்கும். அங்கே ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன்” என்று. நான் இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை அழைத்துக்கொண்டு செல்வேன் என்று சொல்லியிருக்கிறார். அவர்தான் நல்ல மேய்ப்பன்!
உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும், அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும். மோட்சத்தைப் பற்றி நமக்குத் தெரியும். அங்கே மரணம் இல்லை, அலறுதலில்லை, கண்ணீர் இல்லை, சாபமில்லை, வியாதியில்லை, துக்கமில்லை, ஓயாத சந்தோஷம். அதுதான் நல்ல தொழுவம்.
சகோதரரே, அந்த தொழுவத்திற்குள் வர உங்களுக்கு ஆசையில்லையா? அப்படிப்பட்ட ஒரு இடம் வேண்டும், நான் இங்கே படுகிற பாடுகள் எல்லா வற்றினின்றும் தப்பி நான் இயேசுவோடு சேர்ந்து, பரலோகத்திற்கு போய் நல்ல மேய்ச்சலைக் கண்டடைந்து நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ள எனக்கு ஆசையாயிருக்கிறது என்று இந்த நேரத்தில் இயேசுவினிடத்தில் சொல்லுங்கள், அவர் உங்கள் ஆவலைக் கேட்பார். உங்கள் உள்ளத்தைப் பார்ப்பார், நீங்கள் உள்ளம் உடைந்து, மனம் வருந்தி, நான் வாழ்கிற வாழ்க்கை சரியில்லை, எனக்கு ஒரு மாற்றம் வேண்டுமென்று நீங்கள் தேவனிடத்தில் அழுது, புலம்பி, அறிக்கை செய்து, கேட்பீர்களென்றால், உங்களை அந்த நல்ல தொழுவத்தில் வைத்து பராமரித்துப் பாதுகாப்பார்.
காணாமற்போனதைத் தேடிக்கொண்டு வருவார்
மேலும் ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, ..நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுள்ளவைகளை அழிப்பேன் என்றார் (வச.15,16).
காணாமற் போனதைத் தேடி … சகேயு ஒரு காணாமற்போன ஆடு, அவனைத் தேடிவந்து, சகேயுவே நான் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்லி, அவனோடு சென்றார். சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்று சொன்னபொழுது, இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றார். அவனும் இயேசுவின் ஆடாக மாறினான். இதே காரியத்தை உங்களுக்கும் செய்ய தேவன் ஆசையாய் இருக்கிறார். இன்றும் அவருடைய அழைப்பு, உங்களை நோக்கி, இப்பொழுதும் இந்த நிமிஷத்திலும் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அவர் பாடுகளின் வழியாய் அழைத்தாலும், பாடுகளுக்காக அவர் உம்மை அழைக்கவில்லை. அவர் என்ன சொல்லுகிறார்: அவைகளைப் புறப்படவும் தேசங்களிலிருந்து வரவும் பண்ணி, சுயதேசத்திலே அவைகளை வைப்பேன், இஸ்ரவேலின் உயர்ந்த மலைகளிலே அவைகளுக்குத் தொழுவம் அமைத்து, அவைகளைப் போஷிப்பேன் என்று சொல்லுகிறார். அவைகளை நல்ல மேய்ச்சலில் மேய்ப்பேன், இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும், அதாவது, பரலோகத்திலே அவைகள் அங்கே நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
ஆண்டவர் சொல்லுகிறார்: காணாமற் போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பகொண்டு வந்து, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன். பேதுரு ஒரு பெலவீனமான ஆடு, அவன் இயேசுவை மறுதலித்தான், ஆனால், அவனை மறுபடியும் அழைத்துவந்து, என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லி, அவனை ஒரு நல்ல மேய்ப்பனாக மாற்றி, பரிசுத்த ஆவியினால் அவனை நிறைத்து பெலப்படுத்தினார். அவன் அதற்குப்பின்பாக, ஒருநாளும் பிரதான ஆசாரியர்களுக்கோ, சங்கத்திற்கோ பயந்ததில்லை. ஜீவாதிபதியை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று அவர்களிடமே எத்தனை தைரியமாக அவன் பேசினதைப் பார்க்கிறோம், நசல்கொண்ட பெலவீனமான ஒரு ஆட்டைப்போல இருந்த அவனைப் பெலப்படுத்தி, கல்லாகவும், தூணாகவும் சபைக்கு நிறுத்தினார். சகோதரரே, உங்களையும் அவ்வாறே அவர் பெலப்படுத்துவார். அது நிச்சயம். நான் அதை நம்பவேண்டும், பவுல் அதை நம்பினபடியினால்தான் பிலி.4:13இல் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு என்று சொல்வதைப் பார்க்கிறோம்.
நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுப்பான்.
நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா.10:11) என்று இயேசு கூறினார். சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறதிலும் அதிகமான அன்பு வேறில்லை. இயேசுவோ, பாவிகளுக்காகவும், சத்துருக்களுக்காகவும், தன் ஜீவனைக் கொடுத்து, பிதாவினிடத்தில், பிதாவே: இவர்களுக்கு மன்னியும் என்றார். ஒரு ஆட்டையும் இழந்துபோக விரும்பாத நல்ல மேய்ப்பன் நம்முடைய இயேசு. பிரியமானவர்களே, அவர் உங்களை இழந்துபோக விரும்பவில்லை,
நீங்க யாராயிருந்தாலும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாக இருந்தாலும், உங்களை இயேசு நேசிக்கிறார். நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டு, அவரண்டை வரும்போது, உங்களையும் அவர் நல்ல தொழுவத்தில், படுத்துக்கொள்ள வைத்து, நல்ல போதனைகளாகிய மேய்ச்சலைக் கொடுத்து உங்களை அவர் பாதுகாக்கிறார். உங்களிலும் பெலவான்களாய் இருக்கிறவர்களின் கைகளுக்கு உங்களைப் பாதுகாத்து, நீங்கள் சமாதானத்தோடு வாழ, உங்களுக்கு கிருபை செய்கிறார். அதற்காகத் தான் சிலுவையிலே தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார். இப்பொழுது அதை விசுவாசித்து உங்கள் பாவங்களினால், கசந்துபோன உங்கள் வாழ்க்கையை இயேசுவினிடத்தில் சொல்லுவீர்களென்றால், இந்த நிமிஷத்திலேயே, உங்களுக்கு ஒரு நல்ல தொழுவம் கிடைக்கும்.
நினைவுகூருங்கள்!
எல்லாம் கைவிட்டுப்போனதுபோல தெரிந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தையும் தேவன் ஆளுகை செய்கிறார் என்ற விசுவாசத்தில் தளர்ந்திடாமல் அமைதலாய் காத்திருப்போருக்கு நிச்சயம் விடியல் உண்டு!