• திரு.ஜெகராஜ் பெர்ணான்டோ •
(மார்ச்-ஏப்ரல் 2023)

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (கொலோசெயர் 3:13).

நமது கிறிஸ்தவ வாழ்க்கை சவால்மிக்கது. அதிலும் பிரியமானவர்களே, நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலே, நாம் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்ளுவதுதான் மிகப்பெரிய சவாலாகக் காணப்படுகின்றது. ஏன் தெரியுமா? ஆண்டவரோடுகூட இருக்கக்கூடிய அந்த உறவானது அவரது திட்டமாயிருக்கிறது. அது அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அது மக்களால் பார்ப்பதற்கு முடியாத ஒன்று. மக்களோடு கொண்டிருக்கிற இந்த சம்பந்த ஐக்கியமானது, வெளியரங்கமாகத் தெரியக்கூடிய ஒன்று. ஆகவேதான் இது மிகவும் கடினமாகக் காணப்படுகின்றது.

எப்படி நாம் ஐக்கியம் கொள்ளக்கூடாது?

நாம் எப்படி ஐக்கியங்கொள்ளக்கூடாது என்பதற்கு சில குறிப்புக்களை சுருக்கமாகத் தருகின்றேன். முதலாவதாக, ஐக்கியத்தின் அத்தியாவசியத்தை அலட்சியம் பண்ணக்கூடாது. இரண்டாவதாக, சுயநோக்கங்களாலே ஆளப்படக்கூடாது. மூன்றாவதாக, அந்த அன்பிலே மாய்மாலம் உள்ளவர்களாக நாம் இருக்கக்கூடாது. நான்காவதாக, ஒப்புரவாகுதலை தள்ளிப்போடக்கூடாது. ஐந்தாவதாக, பட்சபாதம் உள்ளவர்களாய் இருக்கக்கூடாது. கடைசியாக, சீக்கிரத்திலே எவரையும் தட்டிக் கழித்துவிடக்கூடாது. இப்படி பல விஷயங்களைக் கூறலாம்.

ஏன் நல்லவர்களான நம்மிடத்தில்கூட அநேக கெட்டவைகள் இருக்கின்றது. அதேநேரம் கெட்டவர்கள் என்று நாம் நினைக்கும் மக்கள் பலரிடம் எண்ணற்ற நன்மையான குணாதிசயங்கள் எவ்வளவோ இருக்கும். அதேநேரத்தில் நாம் விரைவாக அவர்களை சீக்கிரத்தில் தட்டிக்கழித்து விடுகிறோம் அல்லவா! ஆம், சீக்கிரமாக விரைந்து நியாயந்தீர்ப்பதற்கு நாம் பெயர்போனவர்கள்தானே? இந்தக் காரியத்தில் வேதாகமம் நமக்கு என்னச் சொல்கின்றது? என்பதை சற்றுச் சிந்திப்போம்.

மலைப்பிரசங்கம்

பிரியமானவர்களே, நம்மிலே இருக்கிற குறைகளை நாம் அலட்சியப்படுத்தி, கண்டும் காணாமல் இருக்கிறபடியினாலே, மற்றவர்களிலே இருக்கக்கூடிய குறைகள் நமக்கு பெரிதாய் தெரிகிறது. அதனால்தான் இயேசு சொல்லும்போது, மத்தேயு 7:1-3 மலைப்பிரசங்கத்தில், நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? என்கிறார். காரணம் என்ன?

நாம் சரியாக இருக்கிறோம். மற்றவர்களே முற்றிலும் தவறு செய்துவிட்டார்கள் என்ற எண்ணம் இருக்கிறபடியினால்தான் நாம் விரைந்து நியாயந்தீர்க்கிறோம். மற்றவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்ட நிற்கக்கூடாது என்பதன் அர்த்தம் அல்ல இது.

இதற்கு அருமையான உதாரணம் யோனா. சக மக்களோடுள்ள ஐக்கியத்தின் அவசியத்தை அலட்சியப்படுத்தி உறவுகளைத் துண்டித்தும், ஒதுக்குவதிலும், சீக்கிரமாக உறவைத் தட்டிக் கழிக்க முயற்சி செய்தவனாக யோனாவின் செயல்கள் காணப்பட்டது.

யோனா 1:7-17ஐப் பார்க்கும்போது, அவன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், ஒரு தவறான கப்பலில் ஏறுகிறான். ஒரு கடும்புயல் வீசியபோது அது கப்பலை அலைக்கழித்தது. இதையும்கூட தேவன் அனுமதிக்கின்றார். உடனடியாக மாலுமிகள் சீட்டுப்போட்டனர். அந்தச் சீட்டு யோனாவின் மீது விழுந்தது. அந்த மாலுமிகள் என்னச் செய்தார்கள்? அவர்கள் உடனடியாக யோனாவைக் கப்பலிலிருந்து எறிந்துவிடவில்லை.

13ஆம் வசனத்தின்படி, அந்த மனுஷர் கரை சேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக் கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று. இன்னும் வேகமாய் முயற்சி செய்தார்கள்.

14ஆம் வசனத்தின்படி அவர்கள் என்ன செய்தனர் தெரியுமா? எல்லோரும் கர்த்தரை நோக்கி: ஆண்டவரே எங்களைக் காப்பாற்றும் என்று கதறினர். அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப் போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொன்னார்கள். அதைத் தொடர்ந்து, அவர்கள் எல்லாரும் கர்த்தரை நோக்கி கதறிய பின்பு, இறுதியில்தான் யோனாவை சமுத்திரத்தில் எறிந்துபோட்டனர்.

யோனாவைத் தூக்கி எறிந்த மாலுமிகள், “தொலைந்து போனான் நாம் தப்பித்துவிட்டோம், நமது பிரச்சனை தீர்ந்தது” என மகிழ்ச்சிக் கொள்ளவில்லை. அவர்கள் கர்த்தருக்குப் பயந்தார்கள். என்ன அருமையான செயல் இது? மாலுமிகளிடமிருந்து கற்றுக்கொள்வது என்ன? சீக்கிரத்திலே எவரையும் தட்டிக்கழித்து விடவோ புறக்கணிக்கவோ கூடாது என்பதே.

கிறிஸ்தவர்களாகிய நாம் லெந்து காலத்தினை நினைவுகூர்ந்துள்ளோம். கிறிஸ்து இயேசுவானவர் நம்மை தட்டிக்கழிக்காமல், பாவத்திலிருந்து நம்மை மீட்டெடுத்ததை நினைவு கூருகின்றோம். இன்று நம்மோடுள்ள சக உறவுகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றோமா? அல்லது சுயநலமாக, ஒப்புரவாகுதலை தள்ளிப்போட்டு, ஐக்கியத்தின் அவசியத்தை அலட்சியப்படுத்தி உறவுகளைத் துண்டித்தும், ஒதுக்குவதிலும், சீக்கிரமாக உறவைத் தட்டிக்கழிக்கவும் முயற்சிக்கிறோமா?

உறவைக் கட்டியெழுப்ப ஏன் நம்மால் முயற்சிக்க முடிவதில்லையென்பதைச் சிந்தித்துப்பாருங்கள். வசனம் 16ஐப் பாருங்கள்: அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள். நாமும் நல்ல பாடங்களை இதிலிருந்து கற்றுக்கொள்கின்றோம் அல்லவா!

ஆம், பிரியமானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்வில் நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளுவது மிகப் பெரிய சவாலாகக் காணப்படுகிறது. சில நேரம் சில கடினமானவர்களை நமது குடும்பத்தில், அயலகத்தில், சபையில் தேவனே திட்டமிட்டு நமக்கு அருகில் கடினமான நபர்களை வைத்திருக்கலாம். எனினும், தேவனுக்கு முன்பாக சகமனிதருக்கு ஆசீர்வாதமாக திகழ நாம் முயற்சிக்கவேண்டும்!

கிறிஸ்தவ வாழ்க்கையில் பிறருடனான ஐக்கியத்தை தொடர்ந்தும் நாம் பேணவேண்டும். கர்த்தர்தாமே உங்களை அப்படிப்பட்டவர்களாக மாற்றி அநேகருக்கு ஆசீர்வாதமாக உங்களை மாற்றுவாராக!