• Dr.தியோடர் எச்.எஃப். •
(மார்ச்-ஏப்ரல் 2023)

Dr.தியோடர் எச்.எஃப்.

5. நியாயப்பிரமாணத்தின் காலம்

(கடந்த இதழின் தொடர்ச்சி)

நியாயப்பிரமாணம் பாவத்திலிருந்து விடுதலை கொடுக்க இயலாது (ரோமர் 8:3,4).

1. நியாயப்பிரமாணம் பெலவீனமானது.

a) மாம்சத்தினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற இயலாது (ரோமர் 8:3).

b) மனிதன் மாம்சத்திற்குரியவனாகவும் உலகத்திற்குரியவனாகவும் இருக்கிறான். நியாயப் பிரமாணத்தின் கட்டளைகளை அவனால் நிறைவேற்ற இயலாது (ரோமர் 7:17).

2. மனிதருக்கு கிறிஸ்து தேவையென்பதை வலியுறுத்துவதற்கு நியாயப்பிரமாணம் பயனுள்ளதாக உள்ளது. அது, மனிதனிடத்திலுள்ள குறை என்ன என்பதைக் காட்டும் ஒரு கண்ணாடியாக இருக்கிறது (ரோமர் 3:20; கலா.3:24).

3. நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற முயற்சிப்பதின் மூல மாக எந்தவொரு மனிதனாலும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது.

a) அவ்வாறு செய்வதால், நியாயப்பிர மாணத்தின் மிக உயர்ந்த ஒழுக்க நெறிகளை அங்கீகரித்தாக ஒப்புக்கொள்கிறான்.

b) மனிதன் தேவன்மேல் உள்ள அவனது விசுவாசத்தின் மூலமாக தேவனுக்குப் பிரியமாயிருக்கலாம் (எபி.11:6).

4. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக அவனது பாவங்கள் (மனிதனின்) கழுவப்படுகின்றன. மற்றபடி நியாயப் பிரமாணத்தின் மூலமாக அல்ல (1யோவான் 1:7).

5. தேவனுடைய நீதியை இலவசமாக மனிதன் ஏற்றுக்கொள்ளும் பொழுதுதான், தேவனுக்கு அவன் உகந்தவனாவான் (ரோமர் 3:21,22,28).

நியாயப் பிரமாணத்தில் எந்தத் தவறும் இல்லை. அது நன்மையானது, பரிசுத்தமானது, ஆவிக்கேற்றது, ஆனால் பாவியான மனிதன் அதனால் இரட்சிக்கப்பட இயலாது, ஏனெனில் நியாயப்பிர மாணத்தை நிறைவேற்ற அவனது மனஉறுதிமட்டும் போதாது, அதற்கும் மேலான வல்லமை தேவைப்படுகிறது. அவனுக்கு தேவனுடைய ஜீவன் தேவைப்படுகிறது. ஆனால், அந்த வல்லமை அவனிடம் இல்லை. நியாயப்பிரமாணம் மனிதனைக் குற்றப்படுத்தி, அவனது பாவத்திற்கு தண்டனை மரணம் என்றுதான் கூற இயலும்.

நியாயப்பிரமாணம் மனிதனை தேவனை விட்டுப் பிரிக்கிறது. ஆனால், கிருபை அவனை தேவனிடம் கொண்டுவருகிறது.

1. இஸ்ரவேலர் பாவமுள்ள ஜனங்களாக இருப்பதால், அவர்கள் தேவனிடம் நேரடியாக வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை (யாத்.20:18,19). அந்த நிலைமையில் தேவனிடம் வந்தால் மரணம் நிச்சயம்.

2. பாவம் தேவனையும் மனிதனையும் பிரிக்கிறது (ஏசா.59:2).

3. இரத்தம் சிந்துதலினால் அல்லது பாவநிவாரணத்தினாலும் முழுமையான ஒப்புரவாகுதலின் மூலமாகவும் மட்டுமே தேவனுடைய சமுகத்திற்கு மனிதன் வர இயலும் (எபே.2:13; எபி.10:19).

a) ஆட்டுக்கடாவின் இரத்தமோ மற்ற மிருகங்களின் இரத்தமோ மனிதனை தேவசமுகத்தில் கொண்டு வருவதற்கு போதுமானதாக இல்லை.

b) இயேசுகிறிஸ்துவே வழி (யோவான் 14:6)

i. அவருடைய ஜீவன் மூலம் அவர் நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றினார்.

ii. அவருடைய மரணத்தின் மூலமாக, நம்மேல் விழுந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

iii. அவர் மறுபடியும் வரும்பொழுது நம்மை தேவனிடம் கொண்டு வருவார்.

iv. தேவனால் அருளப்படுகிற இரட்சிப்பை முழுமையுமாக ஏற்றுக்கொண்டால்தான் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் அவருடைய முகத்தைக் காண முடியும் (1யோவான் 3:2).

நம்மேல் விழுந்த குற்றத்தையோ, சாபத்தையோ நியாயப்பிரமாணத்தால் நீக்க இயலாது.

1. தேவனுடைய சாயலாக மனிதன் முதலாவது சிருஷ்டிக்கப்பட்டான்.

2. மனிதன் ஆதியில் இருந்த குற்றமற்ற, பாவமற்ற நிலைமையில் தொடர்ந்து இருக்கவில்லை. பாவஞ் செய்து தேவமகிமை அற்றவனானான் (ரோ.3:23). பாவத்தின் சம்பளம் மரணம் (ரோ.6:23, எசே.18:4).

3. மனிதனுடைய ஆவிக்கேற்ற நிலைமையில் குற்றஞ்சாட்டப்பட்டவனாகவே இருந்தான். தேவனைவிட்டு நித்தியகாலமாய் பிரிக்கப்பட்டான் (சங். 51:5; ரோமர் 5:19). எல்லோரும் பாவம் செய்தோம் (ரோமர் 3:23) ஆகவே மரணதண்டனை எல்லா மனிதர்கள் மேலும் விழுந்தது (ரோமர் 5:12).

4. நியாயப் பிரமாணம் ஜீவன் கொடுக்க இயலாததால், அந்த சாபத்தை அதினால் நீக்க இயலவில்லை.

a) நியாயப் பிரமாணத்தினால் மனிதன்மேல் சாபத்தை வைக்கத்தான் முடிந்தது (கலா.3:10).

b) மாம்சம் பெலவீனமானதாகையால், நியாயப் பிரமாணமும் பெலவீனமாகவும் மனிதனுக்கு ஜீவனை கொடுக்க இயலாததாகவும் இருந்தது (ரோமர் 8:3).

c) சுயமாக மனிதன் நீதிமானாக இயலாது (ரோ.3:10).

5. தேவன், கிறிஸ்துவின் மூலமாக, மரணத்தினின்றும் நியாயத்தீர்ப்பினின்றும் தப்பித்துக்கொள்ள வழி வகுத்துள்ளார்.

a) நாம் செய்த பாவங்கள், நம்மைக் குற்றவாளியாகத் தீர்ப்பதில்லை.

b) தேவனுடைய பரிகாரத்தை நாம் நிராகரிக்கும் போது நாம் ஆக்கினைத் தீர்ப்படைவோம் (யோவான் 3:16,36)

6. தேவன்மேல் வைக்கும் விசுவாசத்தால் (கிறிஸ்துவின் மூலமாக, தேவன் அருளும் இரட்சிப்பினால்) மனிதன் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் (யோவான் 5:24; 2கொரி.5:21).

நியாயப் பிரமாணம், நீதியையும் முழுமையுமாக குற்றமற்ற தன்மையையும் நம்மிடம் எதிர்பார்க்கிறது. கிறிஸ்துவின் மூலமாக, கிருபை அவற்றை நமக்கு அளிக்கிறது.

1. நியாயப் பிரமாணத்தைக் கொடுத்த கர்த்தர் பரிபூரணமானவரும், பரிசுத்தரும், நீதியுள்ளவருமாக இருக்கிறார்.

a) மனிதனுடைய பாவத்தன்மையினால், தேவனு டைய பரிசுத்தத்தை மாசுபடுத்த இயலாது.

b) மனிதன் தேவனுடைய பிரசன்னத்தில் நிற்க வேண்டுமென்றால் தேவனைப்போல அவன் குற்றமற்றவனாக இருக்கவேண்டும் (மத்.5:48). “எனக்கு குறைகள் உண்டு, அவற்றை நீக்க என்னால் இயலாது. நான் செய்வதை உண்மையாய்ச் செய்கிறேன்” என்று மனிதன் கூறுகிறான். அரைகுறையான கீழ்ப்படிதலுக்கு நியாயப் பிரமாணத்தினால் கூடுதலாக ஏதும் செய்ய இயலாது. நியாயப்பிரமாணம் முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

2. நியாயப் பிரமாணம் முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அதை அவ்வாறு நிறைவேற்ற ஏதும் அதனால் செய்ய இயலாது (கலா.3:21).

3. மனிதனுடைய நீதிகள் தேவ பார்வையில் அழுக்கான கந்தையாக இருக்கிறது (ஏசா. 64:6).

தேவனுடைய பிரசன்னத்தில் நிற்க பரிசுத்தமான, நீதியுள்ள ஆடை தேவை. மனிதன் பாவத்திலே உருவானதால் (சங்.51:5) பரிபூரணமான நீதியை உருவாக்க ஆவிக்கேற்ற திறமை உடையவனாக இல்லை (ஏசா.64:6). அவன் முற்றிலுமாக வழிதவறிப் போய்விட்டான். அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப் பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும் படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப் பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார் (ரோமர் 8:3,4). கிறிஸ்துவின் நீதியை விசுவாசத்தின் மூலம் ஏற்றுக்கொள்வதின் மூலமாக மனிதன் நீதிமானாக்கப்படுகிறான்.

a) தேவன் தமது நீதியை மனிதருக்குத் தருகிறார்.

b) தேவன் மனிதனின் பாவத்தை நீக்கிப்போடு கிறார் (2கொரி.5:21; கொலோ 1:28).

நியாயப்பிரமாணத்தினால் ஒரு பாவியை நீதிமானாக்க முடியாது (அப்.13:39).

கிரியைகளில்லாமல் கிருபை பாவியை நீதிமானாக்குகிறது.

1. நியாயப்பிரமாணத்தால் பாவத்தை நீக்க இயலாது. தேவனைச் சந்திக்க ஒருவர் நீதிமானாக இருக்கவேண்டுமென்று கூறுகிறது.

2. மனிதன் நீதிமானாக்கப்படுவதற்கு அவனுடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தினுடைய பாவங்கள் நீக்கப்படுகின்றன. இயற்கையில் அவன் பிறப்பிலேயே பெற்றுக்கொண்ட பாவக் குணங்கள் நீக்கப்படுகின்றன.

3. நியாயப்பிரமாணம் பாவத்தைக்குறித்த ஞாபகங்களை அழித்துவிடவோ, அல்லது தடுத்துவிடவோ இயலாது (எபி.10:3).

4. நமது பாவங்களின் நினைவுகளை எல்லாம், எடுத்துப்போடக்கூடிய கிறிஸ்துவண்டை நாம் திரும்ப வேண்டும் (எபி.10:10,17).

5. நமது கடந்த காலப்பாவங்களின் பதிவுகளை நீக்கிப்போடுவதற்கு நியாயப் பிரமாணத்திற்கு வல்லமை கிடையாது.

6. கிறிஸ்துவிற்குள்ளாக நமது கடந்தகால பாவ வாழ்க்கை முழுவதுமாக நீக்கப்படுகிறது. நியாயப் பிரமாணத்தினால், நீதிமானாக்கப்பட இயலாத நாம், இப்பொழுது கிறிஸ்துவிற்குள்ளாக நீதிமான்களாக்கப்படுகிறோம் (அப்.13:39).

7. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக, மனிதன் தேவனோடு சமாதானமாகிறான்.

நியாயப் பிரமாணம் ஜீவன் கொடுக்க இயலாது, ஆனால், கிருபை மனிதருக்கு ஜீவனைக் கொடுக்கும்.

1. ஜீவன் கொடுப்பதற்கு நியாயப் பிரமாணத்திற்கு ஜீவன் இல்லை. அது மரணத்தைமட்டுமே கொடுக்க இயலும் (எசே.18:4; கலா.3:10).

2.நியாயப் பிரமாணம் தண்டனையை சம்பளமாகக் கொடுக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23).

3. நியாயப் பிரமாணத்திற்கு இரக்கம் இல்லை, அது குற்றப்படுத்தத்தான் செய்யும் (ரோமர் 3:19; கலா.3:21).

4. ஜீவனையுடைய தேவனால்மட்டுமே ஜீவனை அருள முடியும், அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் ஜீவனைக் கொடுக்கிறார் (யோவா.10:28).

5. நியாயப்பிரமாணம் எல்லோரையும் குற்றப்படுத்துகிறது. தங்களது வாழ்க்கையில் நேர்மையாய் நடக்கிறவர்களைக்கூட குற்றப்படுத்துகிறது (பிரசங்கி 7:20; ஏசாயா 64:6; ரோமர் 3:23).

6. தேவன் அருளும் ஜீவனோ நித்தியமானது (ரோமர் 6:23).

7. பிதாவாகிய தேவன் தம்மில்தாமே ஜீவன் உள்ளவராய் இருக்கிறார். அந்த ஜீவனை அவர் குமாரனுக்குக் கொடுத்துள்ளார். ஆகவே குமாரனும் ஜீவனுள்ளவராக இருக்கிறார். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் (1யோவான் 5:12).

8. குமாரனை ஏற்றுக்கொள்வதன் மூலமாக அந்த நித்திய ஜீவனைப் பெறலாம் (வெளி.3:20).

9. இந்தப் புதிய ஜீவன், நாம் நமது இஷ்டம்போல வாழ்வதற்குரியதல்ல. அது நமக்குச் சொந்தமானதல்ல. அது நமக்குள் இருக்கும் கிறிஸ்துவுக்குச் சொந்தமானது (கொலோ.3:3,4).

10. மிக மோசமான பாவியைக்கூட கிருபை இரட்சிக்கும் (1தீமோ.1:15).

பாவிக்காக இயேசு மரித்ததினாலே தேவன் மனிதனை மன்னிக்கவும், அவனை முழுவதுமாக நீதிமானாக்கவும் இயலுகிறது (ரோமர் 3:21-26). தேவன் அருளும் இந்த நீதியை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கிற அனைவருக்கும் இந்த நீதி சொந்தமானது (4:5).

(தொடரும்)

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan