சத்திய வசனம் பங்காளர் மடல்

(ஜனவரி – பிப்ரவரி 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்க கிருபைசெய்த தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் சத்தியவசன ஊழியத்தை அன்பு பங்காளர் காணிக்கையாலே தாங்கி வந்தீர்கள். யாவருக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். 2025ஆம் ஆண்டிலும் சத்திய வசன தொலைக்காட்சி ஊழியம், இலக்கிய ஊழியம் மேலும் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக நடைபெறும் அனைத்து ஊழியங்களின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கவும், அநேகர் சத்தியத்தை அறிந்துகொண்டு கர்த்தரைப்பற்றி அறிகிற அறிவில் வளரவும் நாங்கள் வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஆதரவாளர் திட்டத்திலும் தாங்கள் இணைந்து தொடர்ந்து இவ்வூழியத்தை ஜெபத்தினாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

ஆன்லைன் மூலமாக எமது வங்கிக்கணக்கிற்கு காணிக்கை அனுப்பும் பங்காளர்கள் தயவு செய்து பணம் அனுப்பியபின், பணம் செலுத்திய விபரங்களை Phone / Whatsapp / SMS / Email வாயிலாக எங்களுக்குத் தெரிவிக்க மறவாதீர்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு சரியானபடி ரசீதுகளை அனுப்பித்தர முடியும். கடந்த ஆண்டு இவ்வாறு பணம் அனுப்பியபின் அந்த விபரங்களை எங்களுக்குத் தெரிவிக்காததினால் அநேகருக்கு ரசீதுக்களை அனுப்பிவைக்க முடியாமலும், அவர்களது கணக்கில் வரவு வைக்க இயலாமலும் உள்ளது. ஆகவே கடந்த ஆண்டில் தாங்கள் பணம் அனுப்பிய விபரங்கள் இருக்குமானால் எங்களுக்கு உடனேத் தெரியப்படுத்துவீர்களென்றால் உங்களுக்கு அதற்கான இரசீதுகளை அனுப்பிவைப்போம்.

இவ்விதழில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்ற தலைப்பில் அளித்த புதுவருட வாக்குத்தத்த செய்தியும், காலமெனும் கடலினிலே நமது வாழ்க்கைப் படகு என்ற தலைப்பில் சகோதரி சுதா அவர்கள் எழுதியுள்ள செய்தியும், மூன்றாம் தேவாலயம் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் வழங்கிய செய்தியின் புதிய தொடர் வேதபாடமும் இடம் பெற்றுள்ளது. தினமும் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கும் மக்களுக்காக நாம் எவ்வளவு கண்ணீருடன் ஜெபிக்கிறோம் என்பதை விளக்கி கண்கள் சொரியும் கண்ணீர் வீணாகலாமா? என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள சிறப்புச்செய்தியும், திருவசன ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள் என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவத்தை விளக்கி Dr.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோகுரோல் அவர்கள் எழுதியுள்ள தொடர் வேதபாடமும், தேவனின் அன்பு எத்துணை பெரியது என்பதை விளக்கி திரு.ஜெயமணி பால் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

அனைத்து செய்திகளும் தங்களது ஆவிக்குரிய வாழ்விற்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். தேவ கிருபை நம் அனைவரோடுங்கூட இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்

என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? (சங்கீதம் 56:8).