• Dr.உட்ரோ குரோல் •
(ஜனவரி – பிப்ரவரி 2025)
8. பெர்கமு – மோசமான சுற்றுப்புறத்தில் இருந்த சபை!

Dr.உட்ரோ குரோல்
ஒரு சிறிய ஒளியானது இருட்டில் அதிக பிரகாசமாகத் தெரியும் என்பது உண்மை. அதாவது, பகலைவிட இரவில் வெளிச்சம் நன்கு பிரகாசிக்கும். நீங்கள் ஒரு மோசமான சுற்றுப்புறத்தில் உள்ள சபையைச் சேர்ந்தவர்களாயிருந்தால், அதற்காக தேவனுக்கு நன்றிசொல்லுங்கள். ஏனெனில், அங்குதான் நீங்கள் மற்றவர்களுக்கு ஒளியாகப் பிரகாசிக்க முடியும். இதுதான் பெர்கமு சபைக்கு நடந்தது.
முதலில் அச்சபை இருந்த நகரத்தைப்பற்றி பேசுவோம். இது பெர்கமு என்று அழைக்கப்பட்டது. அது கடந்த இதழில் நாம் ஆராய்ந்த சிமிர்னா சபைக்கு சுமார் 70 மைல் வடக்கே இருந்தது. சிமிர்னா என்பது தற்கால இஸ்மிரின் நகரம். இது ஏஜியன் கடற்கரையிலிருந்து சுமார் 10 அல்லது 15 மைல் தொலையில் இருந்தது. இது ஒரு கடற்கரை நகரம் அல்ல, மிகப்பெரிய எபேசு சபைக்கு அருகாமையிலும் இல்லை.
இந்த நகரம் அநேக விக்கிரகங்களால் நிறைந்திருந்தது. எனவேதான் இது மோசமான சுற்றுப் புறத்தில் இருந்த ஒரு சபை எனக் குறிப்பிட்டேன். அங்கு அநேக மதக்குழுக்கள் காளான்களைப் போல வளர்ந்திருந்தன. சீயஸ் என்ற கிரேக்க கடவுளுக்கு ஒரு பெரிய பலிபீடம் இருந்தது. தற்பொழுது அது அகற்றப்பட்டு பெர்லினில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு அதீனா கடவுளுக்கும் ஒரு பெரிய ஆலயம் இருந்தது. டயோனீசியஸ் மற்றும் திமிடர் ஆகிய கடவுள்களையும் அங்குள்ள மக்கள் வழிபட்டனர். எனவே அது ஒரு பல்சமய வழிபாட்டு மையமாக இருந்தது. இச்சிறு நகரத்திலுள்ள சபை பல பயங்கரமான காரியங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அச்சபை அவ்விருண்ட இடத்தில் வெளிச்சமாகப் பிரகாசிக்க முயன்றது.
ஒரு சிறிய சமுதாயம், ஒரு பெரிய பல்கலைக் கழகம், ஒரு பெரிய நூலகம் இருந்தாலும் அங்கே ஒரு சிறிய சபையும் இருந்தது. அது மோசமான பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தது. ஆனாலும் அந்த இருண்ட இடத்தில் அது வெளிச்சமாய் பிரகாசிக்க முயற்சித்தது.
இவ்விதமான மோசமான சூழலில் இருக்கும் சபைக்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? ஒரு வேளை உங்கள் நகரத்திலும் இது போன்ற சூழ்நிலைகள் இருக்கலாம். அது விபசாரிகள், போதைப் பொருட்கள் விற்பனையாளர்கள், வன்முறை குழுக்களின் மோசமான செயல்கள் நடை பெறும் இடமாகத் திகழலாம். இவை மிகப்பெரிய நகரங்களில்மட்டுமே இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். நீங்கள் வாழும் சிறு நகரத்திலும் இவைகள் காணப்படலாம். இந்த சபைக்கு இயேசு என்ன சொல்லுகிறார் என்பதைக் காண்போம்.
“பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்” (வெளி.2:12-13). இவ்வசனத்தில் அநேக காரியங்கள் மறைந்துள்ளன. நாம் அவற்றைத் திறந்து பார்ப்போம். மோசமான சுற்றுப்புறத்தில் இருந்த இச்சபையைப் பற்றி இயேசு மூன்று குறிப்புகளைக் கூறுகிறார்.
முதலாவது, அவர்களைப் பாராட்ட விரும்பினார். “உன்னுடைய சுற்றுச்சூழலை நான் அறிவேன். சாத்தானுடைய சிங்காசனம் அங்கே இருக்கிறது. இது எதிரியின் பாளையம். எதிரியின் பிரதேசத்தில் நற்செய்தியை அறிவிக்க முயற்சிக்கிறீர்கள்.”
இரண்டாவதாக, அது அரசியல் அக்கிரமங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. ஆசியாவின் ஒரு மாகாணத்தின் தலைநகரம். அது மத அக்கிரமங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. சீயஸ் என்ற கடவுளின் பலிபீடமும் இருந்தது. மேலும் அது ஒரு சுகாதார மையமாகவும் திகழ்ந்தது. அஸ்கில் பியோஸ் என்பவரின் மருத்துவமனையும் அங்கு இருந்தது. ஆனாலும் இதனை இயேசு “சாத்தானுடைய சிங்காசனம் இருக்கும் இடம்” என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் இயேசு கூறுகிறார்: “உங்கள் சுற்றுப் புறத்தை நான் அறிவேன்; உங்களைப் பாராட்டுகிறேன். நீ என் நாமத்தை உறுதியாய்ப் பற்றிக்கொண்டதை அறிவேன். மற்றவர்கள் என் நாமத்தை மறுதலித்தாலும் நீ உன் விசுவாசத்தை மறுதலிக்கவில்லை என்பதை நான் அறிவேன்.”
இறுதியாக, அவர் அந்திப்பா என்ற ஒரு குறிப்பிட்ட மனிதரைப்பற்றி பேசுகிறார்; ரோம பேரரசர் டொமிஷீயனின் அடக்குமுறை ஆட்சியில் அவர் பித்தளை வாணலியில் வறுத்தெடுக்கப்பட்டார். அதிக இருண்ட சூழ்நிலையில் பிரகாசமான வெளிச்சமாக அவர் வாழ்ந்தார் என்பதை இயேசு இங்கு ஓர் அழகான உதாரணமாகக் காட்டுகிறார்.
இச்சபைக்கு இயேசுகிறிஸ்து சொல்லவேண்டிய மூன்று காரியங்கள் உண்டு.
“ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும், வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்” (வெளி. 2:14-16).
நீங்கள் கடினமான நெருக்கங்களின் மத்தியில் இருக்கிறீர்கள்; உங்களை நான் பாராட்டுகிறேன். ஆனாலும் உங்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். வசனம் 14 இல் “உங்களுடைய சபையில் பாலாமுக்கு போதனை செய்த பிலேயாமின் போதனைகள் ஊடுருவியுள்ளது”. எண்ணாகமம் 22 : 22- 25 இல் காணப்படும் இந்த பாலாக்கின் கதை நாம் யாவரும் அறிந்ததே. இந்த பாலாக் ஒரு மோவாபின் ராஜா. இஸ்ரவேலரை சபிப்பதற்காக பிலேயாமை பணம் கொடுத்து அழைப்பித்தான். ஆனால் பிலேயாம் என்பவனோ இஸ்ரவேலை ஆசீர்வதித்தான். அவன் இஸ்ரவேலரை மோவாபிய பெண்களுடன் வேசித்தனம் செய்வதற்கு ஆலோசனை கூறினான். அவன் இஸ்ரவேலை ஆசீர்வதித்தாலும், ஒழுக்கக்கேடான வாழ்வு நடத்தலாம் என்று கூறினான் (எண்.31:16). விக்கிர கங்களுக்குப் படைத்ததை புசிப்பதும், அவர்களது சடங்குகளைப் பின்பற்றுவதும் தவறல்ல என்றும் போதித்தான்.
பிலேயாம் தன் உதடுகளினால் தேவனைப் புகழ்ந்தான். ஆனால், பாலியல் தொடர்பில் ஞானமாய் இருப்பதும், ஒழக்கக்கேடாக வாழ்வதும் தவறல்ல என்றும் கூறினான். தேவனை ஆராதிப்பது நல்லது. நாம் பணிபுரியும் அலுவலகத்திலோ அண்டை வீட்டிலோ ஆலயத்திலோ பழகும் நண்பர் ஒருவருடன் பாலியல் உறவுகொள்வது தவறல்ல என்பது அதன் உட்பொருள். அதாவது, பிலேயாமின் போதனைகளால் ஊடுருவி இருந்த சபை, அப்போதனைகளால் ஊடுருவியிருந்த சமுதாயத்தை சந்திக்க முயன்றது. எனவேதான் முதலாவது உங்கள் சபை பிலேயாமின் போதகங்களால் ஊடுருவி இருப்பதை எச்சரிக்க விரும்புகிறேன் என்று இயேசு கூறினார்.
இரண்டாவதாக, “நிக்கொலாய் மதத்தினரின் போதகங்களைக் கைக்கொள்ளுகிறவர்களைப் பற்றியும் நான் உன்னை எச்சரிக்கிறேன்” (வசனம் – 15).
இந்த நிக்கொலாய் மதத்தினர்கள் மேய்ப்பர்களால் நடத்தப்பட்ட இயக்கத்தினர். இங்கே போதகரே அனைத்து அதிகாரம் பெற்ற சர்வாதிகாரியாக செயல்பட்டார். மக்களை ஆண்ட போதகரை அமைப்பாகக்கொண்டது. நிக்கொலாய் என்பதற்கு பாமர மக்களை வென்றவர் என்று பொருள்.
அநேகமாக இந்த சபையின் மக்கள், விசுவாசிகளாக தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தாது, அனைத்தையும் போதகரிடமே விட்டுவிட்டார்கள். போதகர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்தையும் தனது அதிகாரத்தில் வைத்துக்கொண்டார். இந்த சபை போதகர்கள், மூப்பர்கள் மற்றும் ஒரு சில மக்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
ஆனால் இயேசு, “நான் அதை வெறுக்கிறேன். இவ்விதமான சபை எனக்குத் தேவையில்லை” என்றார். ஆம், சபைக்கு ஒரு தலைவர் தேவை. ஆனால், அந்த தலைவர் பெரிய மேய்ப்பரான தேவனின் கீழ் அடங்கியிருக்கவேண்டும். அத்தலைவர் சர்வாதிகாரியல்ல; மற்றவர்களைப் போலவே அவரும் தேவனிடமிருந்து கட்டளையைப் பெறும் ஒரு நபர். ஒரு சிலரால் மட்டுமே அதிகாரம் செலுத்தப்படும் சபையாக இருக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதை நேர்மையாக நடத்தவேண்டும். நீ மனந் திரும்பவேண்டும் என்று எச்சரிக்கிறார். இல்லையெனில் நான் வந்து அதை சுத்திகரிப்பேன் என்கிறார். இவை கொஞ்சம் கடினமான சொற்கள்தான்.
உலகத்தைச் சந்திக்க செயல்படவேண்டிய திருச்சபையானது, துரதிர்ஷ்டவசமாக நற்செய்திப் பணியில் தன்னை உலகத்தோடு இணைத்துக்கொண்டது. எனவேதான் இயேசு, “நீ மனந்திரும்பு அல்லது நான் வந்து உன்னை சுத்திகரிப்பேன்” என்றார். “தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவரது ஆலயத்தில் துவங்கும்”.
21ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற சபைகளை இன்று நம்மால் காணமுடிகிறதா?˜ ஒழுக்கக் கேடுகளும், ஒருசில மக்கள்மட்டுமே சபையின் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனரா? சமுதாயத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அறிவித்துக்கொண்டு, தேவனுக்கு மறைவாகப் பதுங்கி மிருகங்களைப் போல வாழ்வது சாத்தியமா? இது சாத்தியம் மட்டுமல்ல, நடந்துகொண்டும் இருக்கிறது என்பதை நீங்களும் நானும் அறிந்துகொள்ள வேண்டும். இன்று அநேக இடங்களில் இது நடந்து வருவது வருத்தத்தைத் தரும் விஷயமாகும். உங்கள் சபைகளிலும்கூட இவ்வாறான சில காரியங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
பாவத்தைக் கண்டும் அதை எதிர்க்க நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும். இல்லை யெனில் தேவன் நடவடிக்கை எடுப்பார்.
இன்றைய சமுதாயத்தில் இதுபோன்ற காரியங்கள் அதிகமாகக் காணப்படுகிறது என்பதை நான் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். வாழ்த்து மடல்கள் நிறைந்த கடைகளுக்குச் சென்றால் அனைத்து காரியங்களுக்கும் அங்கு மடல் கிடைக்கும் காலம் ஒன்று இருந்தது. ஒருவர் போட்டியில்லாத ஒரு காரியத்தைக் கண்டார்.
இன்று “இரகசிய காதலர்களின் வாழ்த்து அட்டைகள்” என்ற மடல்கள் காணப்படுகின்றன. “இந்த மடல்கள் பரிவுடனும், புரிந்துகொள்ளுதலுடனும் வாழ்த்துக்களை அமைத்து வழங்கும் கொள்கையுடையது” என்று இதனை வடிவமைத்தவர் கூறுகின்றார். இந்த கடைக்கு நீங்கள் சென்றால் உங்களுடைய மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து மடலையும், உங்களது இரகசிய சிநேகிதிக்கு ஒரு வாழ்த்து மடலையும் வாங்க முடியும்.
“இவ்வித நண்பர்களுக்கென்று அட்டை தேவை என்பதை உணர்ந்து இதனை நான் உருவாக்கினேன்” என்று இதனை ஆரம்பித்த பெண்மணி கூறினார். விவாக உறவுகளுக்கு வெளியே உள்ள நண்பர்களுடன் தங்குவது பாவம் என்றாலும் இன்றைய வாழ்வு இதனை நோக்கியே செல்லுகிறது.
பெர்கமு சபைக்கு உள்ளேயும் வெளியேயும் சவால்கள் நிறைந்திருந்தன. எதிர்மறையான பிரச்சனைகளும் தாக்குதல்களும் சபைக்குள்ளே நுழைந்து அதனை பதட்டமடையச் செய்கிறது. இதற்கு அடிபணியாமல் நாம் எப்படி உலகை ஆதாயப்படுத்துவது?
இதற்கு இரண்டே இரண்டு வழிகள்தான் உள்ளன என நான் எண்ணுகிறேன். ஒன்று மிகவும் பிரபலமானதும் வெற்றிகரமானதுமாகும். ஆனால் அது மகத்தான தோல்வியாகும். அதாவது, அவர்களோடு ஒத்துப்போவதாகும். நாம் உலகத் துக்கு நற்செய்தியை அளிக்க எண்ணி அவர்களுக்கு இசைந்து இறுதியில் அவர்களை நம்மைப் போல் மாற்றுவதற்கு பதிலாக நாம் அவர்களைப் போலவே மாறிவிடுகிறோம்.
மற்றொரு வழி அதற்கான மாற்று ஏற்பாட்டை வழங்கவேண்டும். இந்த பெர்கமு சபை மக்கள் வாழ்வதற்கான மாற்று வழியைக் கொடுத்தார்கள். அவர்கள் நம்பிக்கையை அளித்தனர். மனிதருடைய ஒழுக்கத்தைக்காட்டிலும் மேலான தேவனுடைய ஒழுக்கத்தை அறிவித்தனர். “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு” என்று உபாகமம் 30இல் தேவன் கூறுகிறார். இன்று சபை இதனை மறைத்துவைக் கவோ அல்லது மறைத்துக்கொடுக்கவோ தேவையில்லை. மக்கள் இன்று வைத்திருப்பதற்கு ஓர் மாற்றை வழங்கவேண்டும்.
ஆனால் இன்று, சபை தன்னைச் சுற்றிலும் பாதுகாப்பான அரணைக் கட்டிக்கொண்டு எச்சரிக்கையாக உள்ளன. தங்களைத் திறம்பட தனிமைப் படுத்திக்கொள்ளுகின்றனர். இச்சபையானது ஒரு சில நிகழ்ச்சிகளைமட்டுமே கொண்டு மிகக் குறைவாகவே சாதிக்கின்றனர். அவர்கள் உலகத்தைப் பார்த்து அச்சப்படுகின்றனர்.
ஆனால், புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் சபையோ ஒன்றாகக்கூடி, ஜெபித்து ஐக்கியம் கொண்டு, தேவனுடைய வார்த்தையை அதிக அளவில் தியானித்து, உலகத்துக்குள் சென்று அவர்களைக் கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்துகின்றனர். இந்த சபைக்கு இயேசுகிறிஸ்து இறுதியாகக் கூறுவதை வெளி.2:17இல் காண்கிறோம். தனது செய்தியின் முடிவில் “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது” என்கிறார். அவர் கூறும் 3 காரியங்கள்:
1.சிறப்பான செயல்பாடு, 2.எச்சரிப்பு, 3.தைரியமாயிரு.
மோசமான சுற்றுப்புறத்தில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரச்சனைகளைச் சமாளிக்கிறீர்கள். நீங்கள் எனக்காக உண்மையாயிருந்து உங்கள் சபையின் பிரச்சனைகளை எதிர்கொள்ளுகிறீர்கள். பிரகாசமான இடத்தில் நீங்கள் ஒளியாக இருப்பீர்கள். இவ்வுலகம் அறியாத மறைவான மன்னாவையும் அப்பத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். பாலியல் அல்லது சமுக அழுத்தங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள். மாறாக “விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கும்படி உங்கள் உள்ளத்தில் உள்ள தேவனுடைய ஆவியின் வல்லமையால் பலப்படுங்கள்” என்று பவுல் எபேசியருக்குக் கூறியுள்ளார் (எபே.3:16-17).
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; தைரியமாயிருங்கள். வெற்றி பெறுவோருக்கு நான் மறைவான மன்னாவையும், ஒரு வெள்ளைக் கல்லையும் தருவேன்; அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தக் கல்லானது சாதாரணக்கல் அல்ல; ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தருவது போன்ற பொன், வெள்ளி அல்லது வெண்கலமும் அல்ல; ஏன் வெண்மையான கல்? இது வேதாகம மொழிநடையாகும். இது ஒலிம்பிக் பதக்கங்களை விட உயர்வானது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு அரியணைக்கு முன் ஒருநாள் நிற்கவேண்டும். அவர் நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ற தீர்ப்பினை அளிப்பார். “மோசமான சூழ்நிலையில் நீ செய்த உன் ஊழியங்களை மட்டுமல்ல, உன் சபையில் காணப் படும் பாவங்களையும் நான் நியாயந்தீர்ப்பேன்” என்று பெர்கமு சபைக்கு சிறப்பாகக் கூறியுள்ளார்.
பழங்காலத்தில் தீர்ப்புகள் வழங்குவதற்கு கற்களை ஒரு சாதனமாக பயன்படுத்தினர். பழி சுமத்தப்பட்டவன் குற்றமில்லாதவன் என நிரூபிக்கப்பட்டால் ஒரு பையில் வெள்ளை கற்களைப் போடுவார்கள். அவனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு பையில் கருப்பு கற்களைப் போடுவார்கள்.
எனவேதான் அவர், “நான் உனக்கு வெள்ளை கல்லைத் தருவேன்” என்று சொல்லும்பொழுது, உன்னுடைய சபையின் பாவத்தைக்குறித்து எச்சரிக்கையாயிரு. “கிறிஸ்துவின் நியாயாசனத்துக்குமுன் நீ நிற்கும்பொழுது, நான் உனக்கு வெண்மைநிறக் கல்லைத் தருவேன். நீ பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய். உன்னுடைய சபையின் பாவத்தை நீ நன்கு கையாண்டபடி யாலும், உன் சபையின் செயல்களுக்காகவும் உனக்கு வெகுமதிகள் உண்டு” என்றார்.
உன் சபை இப்பொழுது மிகப்பெரிய வெற்றி யடைந்திருந்தாலும், பாவத்தை நீங்கள் விலக்காவிட்டால், இயேசுகிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன் நிற்கும்பொழுது, நீதியரசர், “உனக்கு மோசமான செய்தியை வைத்திருக்கிறேன்; உன்னுடைய வாழ்வில் பாவம் இருந்ததால் உனக்கு வெகுமதிகள் கிடைக்காது. நீ அதை அறிந்திருந்தும் அதை விட்டு விலகவோ அதைக் கண்டுகொள்ளவோ இல்லை” என்பார்.
“மோசமான சூழ்நிலையில் இருக்கும்பொழுது பரிசுத்தமான வாழ்வு வாழ முடியாது” என்று கூறு பவர்களுக்கு தேவன் “பெர்கமு சபையைப் பாருங்கள். அதற்கு நிச்சயமாகவே அநேக பிரச்சனைகள் இருந்தன; ஆனாலும் அது தனது பாவத்தைக் குறித்து மனந்திரும்பியது. எனவே மோசமான சூழ்நிலையிலும் அது அதிகமாகப் பிரகாசித்தது.”
உங்கள் வாழ்விலும் பிரகாசிக்கும் ஒளியை எதுவும் மறைத்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஒளியை வேகமாகத் தடுப்பது பாவமே!
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை