• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(ஜனவரி – பிப்ரவரி 2025)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

பிதாவாகிய தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்விலும் தேவனுடைய வார்த்தைக்கு இருக்கும் பங்கு அளப்பரியது. இதனது இன்றியமையாததும் இணையற்றதுமான தன்மையினை நாம் இலகுவில் விளங்கிக்கொள்ளுமுகமாக, தேவனுடைய வார்த்தையானது வேதாகமத்தில் பலவகைப்பட்ட உவமைகளினால் உவமிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் முதன்மையானதும் முக்கியமானதும் என்ன வென்றால் நம்முடைய ஆத்மீக வாழ்வுக்கான ஆகாரமாக தேவனுடைய வார்த்தையானது உவமிக்கப்பட்டிருப்பதேயாகும். “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (உபா.8:3; மத்.4:4)” என்பது அர்த்தமற்ற வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல. மனிதன் சரீரப் பிரகாரமாக வளர்ச்சியடைய உணவு அவசியமாயிருப்பது போல, அவன் ஆத்மீகப்பிரகாரமாக வளர்ச்சியடைவதற்கான உணவாக தேவனுடைய வார்த்தை உள்ளது. எனவே நாமும் எரேமியா தீர்க்கதரிசியைப் போல “தேவனுடைய வார்த்தைகள் கிடைத்தவுடன் அவைகளை உட்கொள்ளவேண்டும்.”

தேவனுடைய வார்த்தையானது ஆத்மீக வாழ்வுக்கான ஆகாரம் என்பதினால், அதை நாம் உட்கொள்ள வேண்டுமாயின், வேதப்புத்தகத்தின் பக்கங்களை ஒவ்வொன்றாக கிழித்து அதை புசிக்கவேண்டும் என கருதலாகாது. தேவனுடைய வார்த்தை ஆகாரமாக உவமிக்கப்பட்டுள்ளதே தவிர, புசிப்பதற்கான உணவு அது அல்ல. தேவனுடைய வார்த்தையை ஆகாரமாக உட்கொள்வதென்றால் அதன் உண்மையான அர்த்தம், தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிப்பதன் மூலமாக நாம் ஆத்மீகப்பிரகாரம் போஷிக்கப்படுவதேயாகும். ஆத்மீக வாழ்வின் ஆகாரமாக தேவனுடைய வார்த்தை இருப்பதை நமக்கு உணர்த்தி, நாம் அதை உட்கொண்டு வளர்ச்சியடைய வேண்டும் என்பதனை நமக்கறிவிக்கும் அப்போஸ்தலனாகிய பேதுரு. “நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேதுரு 2:3) என அறிவுறுத்துகிறார்.

கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கும் நாம் (கலா.3:26) ஆவிக்குரிய பிரகாரம் குழந்தைகளாகவே இருக்கிறோம் (1 கொரி.3:1. எபி.5:12). எனவே நாம் வளர்ச்சியடைய வேண்டியவர்க ளாய் இருக்கிறோம். இதனால்தான் “நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல…” என குறிப்பிடுகின்றார். குழந்தையின் வளர்ச்சிக்கு பாலே அவசியமான ஆகாரமாயிருப்பதனால், ஆவிக்குரிய குழந்தைகளான நம் வளர்ச்சிக்கான ஆகாரமாக தேவவசனமானது களங்கமில்லாத ஞானப்பாலாயுள்ளது என பேதுரு அறியத்தருகிறார். புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வளர்ச்சியடைய வேண்டுமாயின் அதற்கு நாம் பாலைக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால், அது வளர்ச்சியடையாதது மட்டுமல்ல. அது மரித்தும்விடும். அதேபோலதான் நம் ஆத்மீக வாழ்வு வளர்ச்சியடைவதற்கு நாம் தேவவசனப் பாலை பருகவேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பக்தர் ஒருவர். “பழைய புதிய ஏற்பாடுகளிரண்டும், ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தையும் பாலுண்ண வேண்டிய இரண்டு மார்பகங்களாகும்” என்று கூறினார். இவரது கூற்று மிகவும் அர்த்தம் நிறைந்தது. தாயின் மார்பகத்தில் பாலுண்பதால் குழந்தை வளர்ச்சியடைவது போல, நாமும் பழைய புதிய ஏற்பாடுகளிரண்டிலும் தேவவசனப் பாலை பருகி ஆத்மீக பிரகாரமாக வளர்ச்சியடையவேண்டும்.

மேலும், குழந்தைகள் வளர்ச்சியடைய வேண்டுமானால் வாரத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ தடவைகள் மட்டும் அதற்குப் பால் கொடுத்தால் போதாது. அனுதினமும் குறிப்பிட்ட நேரங்களில் அதற்கு பால் கொடுக்க வேண்டும். அப்போதுமட்டுமே அது சரியான விதத்தில் வளர்ச்சியடையும். அதேபோலதான் ஆத்மீக வளர்ச்சிக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்தில் கிடைக்கும் தேவவசனப் பால்மட்டும் போதாது. நாம் அனுதினமும் காலையும் மாலையும் தேவவசனப் பாலை உட்கொண்டாலேயே சரியானவிதத்தில் வளர்ச்சியடைவோம்.”

உண்மையில் புதிதாய்ப் பிறந்த குழந்தைகட்கு பாலைமட்டுமே ஆகாரமாய் கொடுக்க முடியும். அதனது வளர்ச்சிக்கு வேறு ஆகாரங்கள் உதவாது. அதேபோல், ஆவிக்குரிய நம் வாழ்வு வளர்ச்சியடைய தேவனுடைய வசனத்தைத்தவிர வேறு எந்த ஆகாரங்களும் உதவாது. எவ்வளவுதான் புட்டிப்பால் வகைகள் இருந்தபோதிலும், தாய்ப்பாலைப் போன்ற போஷாக்கும் சக்தியும் வளர்ச்சியும் கொடுக்கக்கூடிய பால் இல்லையென்றே சொல்லலாம். அதேபோல ஆவிக்குரிய வளர்ச்சியிலும் ஆரோக்கியமளிக்கக்கூடிய ஆகாரம் தேவவசனப் பாலைவிட வேறெதுவும் இல்லை என்பதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பும் தாய்மார் கலப்பற்ற தூய்மையான பாலையே கொடுப்பார்கள். இல்லையென்றால் குழந்தை ஆரோக்கியமற்றதாகிவிடும் என்பது அவர்கட்கு தெரியும். இதனால்தான் ஆத்மீக வளர்ச்சியிலும் நாம் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை நமக்கு விளக்குமுகமாக, பேதுரு வெறுமனே திருவசனமாகிய பால் என்று கூறாமல் “திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பால்” என்று கூறுகிறார். எனவே திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலை களங்கப்படுத்தும்வண்ணம் அதனுடன் மனிதர்களுடைய அனுபவ ரீதியான அபிப்பிராயங்களைக் கலந்து உட்கொள்ளாமல் தேவவசனத்தை அப்படியே பருகவேண்டும். இல்லை யென்றால் நாம் ஆரோக்கியமற்ற கிறிஸ்தவர்களாகவே இருப்போம் என்பதனை மறுப்பதற்கில்லை.

தேவவசனமே நம் வளர்ச்சிக்கான ஆகாரமாயிருப்பதனால், அந்த களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் “வாஞ்சையாயிருங்கள்” என பேதுரு அறிவுறுத்துகிறார். சிலகுழந்தைகள் பாலை விரும்புவதேயில்லை. வேண்டாவெறுப்புடன் மற்றவர்களுடைய கட்டாயத்தின் காரணமாகவே குடிக்கும். இவ்வாறு வளர்ச்சிக்கான ஆகாரத்தை வாஞ்சிக்கா திருப்பதனால் குழந்தைகள் பெலனற்றவைகளாகவே இருக்கின்றன. இதேபோல்தான் நாம் கடமைக்காகவும், கட்டாயத்துக்காகவும் தேவ வசனப்பால் பருகினால், வல்லமையற்ற கிறிஸ்தவர்களாகவே இருப்போம். எனவே பேதுரு கட்டளையிட்டதன்படி, நம் ஆத்மீக வளர்ச்சிக்கான ஆகாரமான திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருந்து பக்தன் யோபுவைப்போல “தேவனுடைய வாயின் வார்த்தைகளை நமக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டு” (யோபு 23: 12) சங்கீதக்காரனைப்போல “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (119:103) என்பதை அனுபவித்தவர்களாயிருக்கவேண்டும். ஏனெனில், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதில் தியானமாயிருக்கிற மனுஷனே பாக்கியவான் (சங்.1:2). சத்தியவசன வாசகர்கள் அனைவரும் திருவசன ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருக்க வேண்டுமென்பதே என் எண்ணமும் எதிர்பார்ப்புமுமாகும். தேவகிருபை உங்களை வழிநடத்துவதாக.