• திரு.ஜெயமணி பால் •
(ஜனவரி – பிப்ரவரி 2025)

அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவான் 4:8). ஆம், நம்முடைய தேவன் இன்றும் அன்பாகவே இருக்கின்றார். அவர் மனிதன்மீது வைத்த அந்த தீராத அன்பினால்தான் தன்னைத்தானே பலிக்கொடுத்து ஜீவன் ஈந்தார்.

ஒருவர் நமக்காக தன்னுடைய உயிரையே கொடுத்து நம்மை மீட்பதென்றால் அது எவ்வளவு பெரிதான அன்பாயிருக்கும்! இப்படி உண்மையிலே ஒரு தியாகம் செய்வதென்றால் அவர் எவ்வளவு பரிசுத்தமானவராக இருக்கவேண்டும் !

உண்மையிலேயே, அன்பு இல்லாத ஒருவ னும் தேவனை அறியமாட்டான். அவரை அறிந்த வர்கள்தான் அவரை நேசிக்க முடியும். அதேவண்ணமாக சக மனிதர்களையும் நேசிக்கமுடியும்.

“அன்பு” என்று மூன்றெழுத்தால் சுலபமாக சொல்லிவிடுகிறோம். அதைப்பற்றி என்னவெல்லாமோ விளக்கம் சொல்வோம். ஆனால், அந்த அன்பு முதலில் நம்மிடம் உண்டாவென சிந்தித்துப்பார்ப்பது குறைவு. நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமானவர்களிடம் உண்மையாக மற்றவர்களை நேசிக்கும் அன்பு இருக்குமாயின் நிச்சயமாக நமது நாட்டில் யுத்தம்போன்ற இன மத மொழி பிரச்சனைகள் ஒருபோதும் எழுந்திருக்கவே செய்யாது. இந்த குழப்பத்திற்குக் காரணம் என்னவென்பதைச் சிந்திப்போம்.

முதலாவது, ஏன் நம்மிடம் அன்பில்லை? ஏன் நம் வீட்டில் அன்பில்லை? ஆலயத்தில் சுற்றுபுறங்களில் ஏன் அன்பில்லை? இப்படியிருக்கும்போது, எப்படி நமது நாட்டில் சமாதானம் இருக்க முடியும்?

ஆம், முதலில் தேவனிடத்தில் நாம் அன்பாயிருக்கவேண்டும். நாம் அவரில் சார்ந்திருந்தோமானால் அவரை நேசித்தோமானால், நிச்சயமாக நம் உள்ளத்தில், இல்லத்தில், சமுதாயத்தில் அன்புண்டாகும். எங்கும் அமைதி நிலவும்.

அன்பென்று சொல்லும்போது அது மிகவும் சக்திவாய்ந்ததொன்றாகும். அதற்கு எல்லையே கிடையாது. அது எதையும் தாங்கும் மலை. அதை எப்பொழுதும் நம்மால் கண்டுகொள்ளமுடியாது. அதைப் பற்றி அறிந்தால்போதாது. அன்பை அனுபவித்தால்தான் அதன் மெய் வல்லமை எப்படியென உணர்ந்து கொள்ளமுடியும்.

கிறிஸ்து நமக்காக தேவனுக்கு தம்மை சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து. நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியரின் நிருபத்தில் (எபேசியர் 5:2) கூறுகிறார். கிறிஸ்து நமக்காக தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாக பலியாக அர்ப்பணித்தார். அவரது அன்பு எவ்வளவு சுகந்தமுள்ளது! இவ்விதமான அன்பு நம்மிடம் உண்டா? நாம் மற்றவர்களுக்கு சுகந்த வாசனையுள்ளவர்களாக இராவிட்டால், தீங்கு விளைவித்து துர்நாற்றத்தை உண்டுபண்ணும் மக்களாக காணப்படுவோம்.

ஒருவரது மனதில் அன்பு இருக்க வேண்டுமாயின் அந்த நபரின் உள்ளம் தெளிவானதாயும், களங்கமில்லாமலும் இருக்கவேண்டும். முதலாவதாக, அவன் மனந்திரும்பியவனாக இருத்தல் அவசியம். இல்லையேல், அவனது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அசுத்தங்கள் நீங்காது. எவன் ஒருவன் தன்னைத்தானே சோதித்தறிந்து பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுவானோ அவன்தான் உண்மையான அன்பை அனுபவிக்க முடியும். அதேவண்ணமாக தேவனிடத்திலும் மக்களிடத்திலும் அன்பு என்னும் புதிய பிறப்பை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

உள்ளத்திலிருக்கும் கிறிஸ்துவின் அன்பு பூவின் நறுமணத்தைப் போன்றது. அதை யாராலும் மணக்கமுடியாது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணரக்கூடியதாக இருக்கும்.

தேவனுடைய அன்பு மாத்திரம் இல்லாவிட்டால் உலகமும் இருந்திருக்காது. மனிதர்களும் இருந்திருக்கமுடியாது. அவரது வல்லமை அன்பினால் மாத்திரமே காணப்படுகிறது. அது சக்திவாய்ந்தது. அவர் எங்களில் கொண்டுள்ள அன்பே அவரை இவ்வுலகத்துக்கு பாடுபட ஏவியது. தேவஞானத்தின் ஈவே அன்பாகும். இப்புனிதமான களங்கமற்ற அன்பைத்தான் அவர் திரும்பவும் மனிதரிடம் எதிர் பார்க்கிறார். அவருக்கு தேவை நமது முதல் அன்பு. அதில் களங்கமில்லாதிருக்க வேண்டுமென்பதே அவரது ஆசையும்கூட.

தேவன் நமக்காக எவ்வளவு பாடுபட்டாரென ஒருகணம் அந்தக் கல்வாரி காட்சியை மனக்கண் முன் நிறுத்திபார்த்து சிந்திப்போமாயின், நாம் வெறும் குப்பையும் அற்பமுமென்பதை உணருவோம். அவர் காட்டிய அன்பில் ஒருத்துளிக்கூட நம்மிடம் உண்டா? எவ்வளவாய் அவர் எங்களுக்காக பாடுபட்டார். இரத்த வியர்வை நிலத்தில் சிந்த பரிதாபமாக அவலட்சண கோலம் பூண்டவராய் பாரசிலுவையைச் சுமக்கமுடியாமல் தரையில் விழுந்தெழுந்த வண்ணம் தோளில் சுமந்துச்சென்றாரே. இவையெல்லாம் யாருக்காக? எதற்காக அப்படி அவர் நிந்தை அவமானம்பட்டிருக்க வேண்டும்?

ஆம், பாவச் சேற்றினில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த நமக்காகத்தான், இத்தனை தியாகம் செய்த தூயரிடம் நாம் எவ்வளவு அன்பு வைத்திருக்கவேண்டும்?

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு, வேதனையோடு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர் எல்லோராலும் கைவிடப்பட்டவராக காட்சியளித்தார். இருந்தும் மனிதர் தன்னை அடித்து மிதித்து ஆணி அறைந்த போதும் சிலுவையில் தொங்கியவராக, அவர் பிதாவிடம் என்ன வேண்டினார்? “பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றார்கள். ஆகையால் இவர்களை மன்னியும்” என்று திருவாய் மொழிந்தார். எத்தனை அன்பு! எத்தனை இரக்கம்! நமக்கு யாராயினும் தீமை செய்தால் அவர்களை மன்னிக்கும் குணம் உண்டா? இல்லை, அதற்கு மாறாக, அவர்களை அவமதிப்போம், திட்டுவோம். நமது பரம பிதா, நம்மிடம் இப்படிப்பட்ட தீய குணாதிசயங்களை எதிர்பார்க்கவில்லை. நாம் பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்கிறவர்களாக இருப்பதையே தேவன் விரும்புகிறார்.

தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்யும்படியாகவே தேவன் நமக்குக் கட்டளையிட்டுள்ளார். தேவஅன்பு நம்மிடமிருந்தால் நிச்சயமாக நாம் பிறரை நேசிக்கும் மக்களாக, அவர்களுக்கு முன்பாக நற்சாட்சியுள்ள ஜீவியம் ஜீவிக்கலாம்.

இயேசுவானவர் நம்மைப் பார்த்து “உனக்காக நான் மரித்தேனே! எனக்காக நீ என்ன செய்தாய்?” என்று கேட்டால், நாம் என்ன சொல்லுவோம்? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரி காட்சியை கண்ட பின்னும் என்னை நேசியாமல் இருப்பாயா என வாஞ்சையோடு கேட்கின்றார்?

பிரியமானவர்களே, நமது தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நேசிக்கின்றார். அவர் நம் எல்லோரையும் நேசிக்கின்றார். அவர் தமது அன்பை உதறித் தள்ளிய மனிதரையும் நேசிக்கின்றார். நம்மை எவ்வளவாய் நேசிப்பார்? ஆகையால் இன்றே நாம் அவருக்குப் பயந்து அவருடைய கற்பனைகளுக்கும். கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து தேவனின் சித்தப்படி நடப்போமாக.