• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(ஜனவரி – பிப்ரவரி 2025)

சுவி. சுசி பிரபாகரதாஸ்

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இந்தப் புத்தாண்டிலே உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவர்தாமே இந்தப் புத்தாண்டிலே உங்கள் குடும்பத்தை உங்களுடைய கையின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கும்படி நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். ஜீவன் உள்ள தேவன் உங்களோடுகூட இருப்பாராக!

“உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்” (வெளி.3:8).

வெளிப்படுத்தின விசேஷம் மூன்றாவது அதிகாரத்தின் எட்டாவது வாக்கியத்தை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அதை ஒருவனும் பூட்டமாட்டான். அருமையானவர்களே, இந்த அருமையான வாக்குத்தத்தம் பிலதெல்பியா என்கிற சபைக்கு ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தமாக காணப்படுகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 1ஆம் அதிகாரத்திலிருந்து 3ஆம் அதிகாரம்வரை வாசிப்பீர்களென்றால் ஏழு சபைகளைக் குறித்து அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. 7 சபைகளுடைய நிறை, குறைகளை ஆவியானவர் சொல்கிறார். ஆனால், அந்த பிலதெல்பியா சபையைக் குறித்து மட்டும் எந்தவொரு குறையையும் ஆண்டவர் சொல்லவில்லை. அந்தச் சபையைப் பற்றிச் சொல்லும்பொழுது, இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அதை ஒருவனும் பூட்டமாட்டான் என்று சொல்கிறார். இதுவொரு ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் ஆகும்.

அநேகர் என்னிடத்தில் இந்தப் புத்தாண்டு எப்படி இருக்குமோ என்று கேட்பதுண்டு. புத்தாண்டு எப்படி இருக்கும் என்று நம்மாலே கணிக்கமுடியாது. ஆனால், ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்: நீங்கள் புத்தாண்டிலே ஆண்டவரோடு இருந்தால் ஆண்டவர் உங்களோடு இருப்பார்; ஆண்டவர் நம்மோடு கூடஇருந்தால், திருமறையிலே சொல்லப்பட்ட அத்தனை வாக்குத்தத்தங்களையும் நாம் சுதந்தரித்துக்கொள்ளலாம்.

பிலதெல்பியா சபைக்கு தேவன் தந்த வாக்குத் தத்தமான, “திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; ஒருவனும் அதை பூட்டமாட்டான்” என்பதைக் குறித்து தியானிப்போம். நம்முடைய வாழ்க்கையிலே கடந்த ஆண்டிலே எத்தனையோ வேதனைகள் இழப்புகள், துன்பங்கள், நெருக்கங்கள், கைவிடப்பட்ட சூழ்நிலைகள், அழுத்தங்கள், விபத்துகள் என எல்லாம் காணப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் புத்தாண்டிலே ஆண்டவர் நமக்குத் தருகிற ஒரு அருமையான ஜீவனுள்ள வாக்குத்தத்தம் என்னவென்றால், திறந்த வாசலை அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுக்கிறார்.

அருமையான என் சகோதர சகோதரிகளே, இந்த பிலதெல்பியா சபை என்றால் ஆங்கிலத்தில் பொருள் என்ன? சகோதரர்களின் அன்பு (Brothers Love) என்று சொல்வார்கள். சகோதரத்துவ அன்பினாலே நிரப்பப்பட்ட ஒரு அருமையான சபை என சொல்லலாம்.

அருமையானவர்களே, இந்தத் திருச்சபைக்கு ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நானும் நீங்களும் சுதந்தரித்துக் கொள்ளத்தக்கதாக ஆண்டவர் நம்மை நிச்சயமாகவே தகுதிப்படுத்துவாராக! எனக்கு ஒரு வாலிபனைத் தெரியும்! அந்த வாலிபன் வெளிநாட்டிலே தங்கி பல ஆண்டுகள் உயர்கல்வி படித்துவந்தார். படித்துமுடித்த பிற்பாடு பல மாதங்களாக வேலைக்காக முயற்சித்தார். இன்றுவரையிலும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அடிக்கடி என்னோடு தொடர்புகொள்ளும்போது எப்போது எனக்கு திறந்த வாசல்வரும்? எப்போது என் வாழ்க்கையினுடைய வனாந்தர வாழ்க்கை முடிவடையும்? என்று சொல்லி கண்ணீரோடு பேசுகிறதை நான் கேட்டிருக்கிறேன்.

இதையொத்த அனுபவத்திலே உங்கள் வாழ்க்கையும் இருக்கலாம். நமது வாழ்க்கையிலே எல்லா பக்கமும் பூட்டப்பட்டிருக்கலாம். யோபுவைப்போல நாலாபக்கமும் நான் பூட்டப்பட்ட நிலையிலே, என் வாழ்க்கையில் திறந்த வாசல் வருமா என்று சொல்லி பலர் கேட்பதுண்டு. திறந்த வாசல் என்பதை தேவன் நமக்குத் தரும் வாய்ப்புகள் (Opportunities) என்றுகூட சொல்லலாம். அருமையான என் சகோதர சகோதரிகளே, வெளிப்படுத்தின விசேஷம் 3:7ஆம் வசனத்தைப் பாருங்கள்: தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடித் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்; அப்படியானால், நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் பூட்டினால் யாரும் திறக்கமுடியாது. அவர் திறந்தால் யாராலும் பூட்டமுடியாது. இதுதான் இந்த வசனத்தினுடைய உண்மையாகும். திறந்த வாசலை உனக்கு தருகிறேன் என்றால் அதனுடைய பொருள் என்ன? அநேக கதவுகள் ஏற்கனவே பூட்டப்பட்டிருக்கிறது. பூட்டப்பட்டிருக்கிற அந்த கதவுகளை ஆண்டவர் திறந்துத் தருகிறவராக இருக்கிறார்.

அருமையானவர்களே, முதல் காரியம் தனிப்பட்ட மனிதனுடைய வாழ்விலே ஆண்டவர் திறந்த வாசலைத் தருகிறார். ஏன் உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட அளவிலே தருகிறார்?

வெளிப்படுத்தின விசேஷம் 3:20ம் வசனத்தை வாசித்து பாருங்கள்: இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன்; அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் என்று சொல்கிறார். இது லவோதிக்கேயா சபையோடு ஆண்டவர் சொன்ன வார்த்தையாகும். இந்த வார்த்தையின் வழியாக என்னோடும் உங்களோடும் ஆண்டவர் பேசுகிறார். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாதபடி ஆண்டவரை மறுத்து அவரை உள்ளே விடாதபடி, ஒரு கடினமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிற சகோதர சகோதரியே, இந்த நாளிலே ஆண்டவர் உங்கள் இருதயகதவைத் தட்டுகிறார். நீங்கள் உட்பக்கமாக பூட்டி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் திறந்துகொடுத்தால் அவர் உங்களுக்குள்ளே பிரவேசித்து, அவர் உங்களோடே போஜனம் பண்ணுவார். நாம் யாரோடு போஜனம் பண்ணுவோம்? நம்மை நேசிப்பவர்கள், நம்மோடு ஐக்கியம் உள்ளவர்க ளோடு போஜனம் பண்ணுவோம். ஆண்டவர் சொல்லுகிற வார்த்தை இதுதான்! அவருக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவரை ஏற்றுக்கொண்டால் அவர் நம்மோடுகூட ஐக்கியம் கொள்வார்.

அருமையானவர்களே, இயேசுவுக்கு உங்கள் வாழ்க்கையைத் திறந்து கொடுத்துபாருங்கள். அவரே நமக்கு வாசலாய் மாறிவிடுகிறார். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் (யோவான் 1:12). நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலை கண்டடைவான் (யோவான் 10:9). உங்கள் இருதய வாசலை ஆண்டவருக்கு திறந்து கொடுத்தால் அவரே உங்களுக்கு வாசலாக இருந்து எல்லா பக்கமும் பூட்டி இருக்கிற கதவுகளை அவர் திறந்து. திறந்த வாசலை தருவார். எனவே, ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஆண்ட வருக்காக வாழ முற்படுங்கள். யாக்கோபு தன் மாமன் வீட்டிலிருந்து திரும்பி தனது சொந்த பூமிக்கு வருகிறார். அதாவது தன் சகோதரனை சந்திக்க வருகிறார். லாபானின் பிரச்சனையை கர்த்தர் தீர்த்துவிட்டார். இப்பொழுது யாக்கோபுக்கு பிரச்சனையாக இருப்பது ஏசா. அவனிடத்தில் யாக்கோபு ஆட்களை அனுப்பி வெகுமதிகளைக் கொடுத்து அநேக உபசரிப்பான வார்த்தைகளைச் சொல்லி பேசவைக்கிறார். ஆனால், ஏசா நானூறு பேரோடு வருகிறான் என்றவுடனே யாக்கோபு பயந்துவிட்டார். ஏசாவைக் குறித்த பயம் அவனைப் பிடித்துக்கொண்டது. யாப்போக்கு என்கிற ஆற்றங்கரையில் உட்கார்ந்து தனித்துப் போராடுகிறார். கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடுவதில்லை என்று சொல்லி அவன் அழுது ஜெபித்தான் என்று ஓசியா 12:4ஆம் வசனத்தில் வாசிக்கமுடிகிறது. ஆனால் இந்த ஏசாவின் இருதயம் அங்கு பூட்டப்பட்டிருந்தது. ஏசாவோடு உள்ள உறவு அங்கு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் தன்னை அர்ப்பணித்து ஜெபித்தபொழுது அந்த இடத்திலே அவனை ஆசீர்வதித்தார். 20 ஆண்டுகள் கழித்து ஏசாவும் யாக்கோபும் சந்திக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் கண்டபோது அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு அழுகிறதை நாம் பார்க்கமுடிகிறது. இருவருடைய உறவுகளிலும் பூட்டப்பட்ட அந்த கதவைத் திறந்து அவர்களுக்கு ஒரு புதிய திறந்த வாசலைத் தந்தார். அருமையானவர்களே, ஆண்டவருக்கென்று உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து பாருங்கள். அவர் உங்களுக்கு திறந்த வாசலைத் தருவார்.

இரண்டாவதாக, இஸ்ரவேல் மக்களுக்கு ஆண்டவர் திறந்த வாசலை தந்தார். இதுவொரு தேசத்திற்கு ஆண்டவர் கொடுத்த திறந்த வாசல் ஆகும். யோசுவா 6:1ஆம் வசனத்தைப் பாருங்கள். எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து ஆண்டவர் வழிநடத்தி கானானுக்கு கொண்டுவருகிறார். இப்போது மோசே இல்லை; மோசேக்கு பதிலாக யோசுவா வழிநடத்துகிறார். ஆகவே, அவர்கள் யோர்தானை கடந்து அவர்கள் கானான் தேசத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். நுழைந்தவுடனே மன்னா பெய்வது அங்கு நின்றுவிட்டது. யோசுவாவுக்கு மோசே இருக்கும்வரை பிரச்சனை இல்லை. மோசே மரித்த பிறகு எல்லா பொறுப்புகளும் அவன் தலையில் விழுகிறது. இஸ்ரவேல் ஜனங்களை நிர்வாகம் பண்ணவேண்டும். அத்தனை பேருக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், மன்னா பெய்யவில்லை;

அங்கு இருக்கிற அந்த கானான் என்கிற அந்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலே ஏழு ஜாதிகள் இருந்தார்கள். அந்த ஏழு ஜாதிகள் உள்ள அந்த மக்களை ஜெயித்து சுதந்தரித்து அந்த தேசத்தை பங்கிட வேண்டும். அந்த சமயத்திலே அந்த கானானுக்குள் நுழைவதற்குரிய முதல் வாசல் எது தெரியுமா? அது எரிகோவின் வாசல். எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை (யோசுவா 6:1).

யோசுவாவும் இஸ்ரவேலரும் குழம்பி போய் பயந்திருந்தனர். அப்பொழுது ஒருவர் உருவின பட்டயத்தோடு அங்கு வந்து நிற்கிறார். உடனே யோசுவா, “நீர் எங்களை சார்ந்தவரா? எங்கள் விரோதியை சார்ந்தவரா என்று கேட்டபொழுது அவர் சொல்லுகிறார்: நான் கர்த்தரின் சேனாதிபதியாய் வந்தேன். உடனே யோசுவா தன்னை தாழ்த்தி பணிந்துகொண்டு அவருக்கு அர்ப்பணிக்கிறதைப் பார்க்கமுடிகிறது. நம்முடைய வாழ்க்கையிலே நாம்தான் ஃபர்ஸ்ட் கமெண்டர் என்று எண்ணுகிறோம். இல்லவே இல்லை. நமக்கு மேலாக ஆண்டவர்தான் ஃபர்ஸ்ட் கமெண்ட்ராக இருக்கிறார். நாமெல்லாம் அவருக்குக் கீழ் இயங்கும் செகண்ட் கமெண்டர்தான். ஃபர்ஸ்ட் கமெண்டர்தான் திட்டமிடுவார், அவர் திட்டமிட்டதை செயல் படுத்துவார். எப்படி பிடிப்பது? எந்த விதமாய் பிடிப்பது? எப்படி நடந்துகொள்வது? என்று ஆண்டவர் கற்றுக்கொடுத்தார். ஆறு நாட்கள் எரிகோவை சுற்றவேண்டும். பின்பு ஏழாவது நாளிலே ஏழு முறை சுற்றவேண்டும். மெளனமாய் இருக்க வேண்டும். ஏழாவது நாளிலே ஆர்ப்பரிக்க வேண்டும். உடனே எரிகோ கோட்டை விழுந்தது. அவர்கள் நுழைந்தார்கள். அருமையானவர்களே, முழு இஸ்ரவேல் தேசத்திற்கும் அங்கே பூட்டப்பட்ட அந்த கதவை ஆண்டவர் உடைத்து திறந்த வாசலை கொடுத்தார். இந்த எரிகோவின் வழியாக அவர்கள் நுழைந்து ஒவ்வொரு பகுதிகளாக போய் யுத்தம் செய்து பிடித்துக்கொண்டார்கள்.

மூன்றாவதாக, நம்முடைய ஆண்டவர் ஆன்மீக வாழ்க்கையிலே ஊழியத்தின் பாதையிலே சபை வளர்ச்சியிலே அவர் உண்மையாகவே திறந்த வாசலைத் தர வல்மையுள்ளவராயிருக்கிறார். பவுல் முதல் நூற்றாண்டினுடைய தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலன் ஆவார். கொலோசெயர் 4:4ஆம் வசனத்தில், “திருவசனம் செல்லும்படியான வாசலைத் திறந்து தரும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். பவுலை ஆண்டவர் ஊழியத்துக்கு அழைக்கும்போதே, கர்த்தர் அனனியாவினிடத்திலே, “பவுலை புற ஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்டேன் (அப்.9:15) என்று சொல்கிறார். அதுமாத்திரமல்ல; அவன் ஒரு பாடுபடுகிற பாத்திரம் என்று சொன்னார். அப்படியானால் அந்த வசனத்தின்படி பவுலினுடைய ஊழியம் யூதர்கள் மத்தியிலேயும் புறஜாதிகள் மத்தியிலும் இருந்தது. ராஜாக்களுக்கு முன்பாக சுவிசேஷத்தை அறிவிக்கிற அப்போஸ்தலனாக இருந்தார். அந்த மனிதன் சொல்கிறார்: திறந்த வாசலை எங்களுக்கு தரும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

அருமையானவர்களே, நமது ஊழியத்தின் பாதையிலே சபை வளர்ச்சியிலே அல்லது நம்முடைய ஆன்மீக வாழ்க்கையிலே திறந்த வாசல் தரப்பட வேண்டுமானால், அதை சுதந்தரிக்க வேண்டுமானால் ஒன்றைச் செய்யவேண்டும். அப்போஸ்தலர்களைப்போன்று நாம் ஜெபிக்கத் தொடங்கவேண்டும்.

மற்றவர்களை வேண்டிக்கொள்ள நாம் கேட்டுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பவுல் ஒரு சிறந்த ஜெப வீரன். ஆனாலும் மற்றவர்களுடைய ஜெபத்தை வாஞ்சிக்கிற மனிதனாக அவர் காணப்படுகிறார். ஜெபம் என்பது நம்முடைய வாழ்க்கையிலே திறந்த வாசலை தரக்கூடிய வல்லமை படைத்ததாக இருக்கிறது. 1கொரி.16:9ஆம் வசனத்தில், ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ் செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். எபேசு பட்டணத்தில் பணிசெய்வது கடினமான காரியம்தான். ஆனால், இங்கே பெரிதும் அனுகூலமான திறந்த வாசலை ஆண்டவர் தந்திருக்கிறார் என பவுல் எழுதுகிறார். ஆனால், துரோகம் செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். சில சமயங்களிலே திறந்த வாசல்போல எழுப்புதல் ஆரம்பிக்கும் பொழுது அதைத் தொடர்ந்து பாடுகளும் உபத்திரங்களும் எழும்பிவிடுகிறது. யானை வருவதற்கு முன்பதாக மணி ஓசை கேட்பதுபோல எழுப்புதலுக்கு முன்னாலே விரோதமும், விரோதத்துக்கு முன்னாலே எழுப்புதலும் இவ்வாறு மாறிமாறி வந்துவிடுகிறது.

அருமையானவர்களே, பவுல் எபேசு பட்டணத்திலே திறந்த வாசல் என்று எதைக் குறிப்பிடுகிறார்? ஆண்டவர் ஊழியத்திற்குத் தந்த வாய்ப்புகளையும் எழுப்புதலையும் அங்கு ஏற்பட்ட மனந்திரும்புதலையும்தான் அவர் “திறந்த வாசல்” என்று இங்கு குறிப்பிடுகிறார். உங்கள் ஆன்மீக வாழ்க்கையிலே, சபை வளர்ச்சியிலே, மிஷனரி அமைப்புகளிலே எழுப்புதல் என்கிற திறந்த வாசல் வர வேண்டுமா? முதலாவதாக, நீங்கள் ஜெபம் பண்ணுங்கள். இரண்டாவதாக, விரோதத்தைக் கண்டு நீங்கள் பயந்து விடாதீர்கள். ஆண்டவர் நம் அனைவரோடுங்கூட இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் ஜெயம்கொண்டவர். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரை எந்த வல்லமையும் ஜெயிக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள அழைக்கப்படுகிறீர்கள். ஆகவே, எழுப்புதல் வரும்போது அங்கு எதிர்ப்பு வரலாம்; எதிர்ப்புகள் வரும்போது அங்கே எழுப்புதலும் காணப்படலாம். 2 கொரிந்தியர் 2:12ஆம் வசனத்தில், பவுல் துரோவா பட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார். அப்போஸ்தலர் 14:27ஆம் வசனத்தில், “சபையைக் கூடி வரச்செய்து புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததை அங்கு அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.”

அப்போஸ்தலர் 16:14 ஆம் வசனத்தில் “லீதியாளுடைய இருதயத்தைக் கர்த்தர் திறந்தார்” என்று சொல்லப்படுகிறது. அப்.16:9ஆம் வசனத்தில் மக்கெதோனியர் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக பவுலுக்கு தரிசனம் உண்டாயிற்று. மக்கெதோனியா பகுதியில் போய் தான் ஊழியம் செய்ய அழைக்கப்படுவதை நிச்சயித்துக்கொண்டு அங்குபோய் ஊழியத்தைத் தொடங்குகிறார். முதலாவதாக, லீதியாள் சந்திக்கப்படுகிறார். அடுத்து, குறி சொல்லுகிற பெண்மணி விடுவிக்கப்படுகிறார். பின்பு, சிறைச்சாலை அதிகாரியும் அவனுடைய குடும்பமும் மீட்கப்படுகிறது. ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி நம்முடைய ஊழியத்தை நாம் செய்யும்பொழுது ஆண்டவர் பூட்டப்பட்ட கதவுகளையெல்லாம் திறந்து, திறந்த வாசலைத் தருவார். இதற்காக நாம் ஜெபிக்கவேண்டும். உபத்திரவங்கள், பாடுகளைக் கண்டு பயந்துவிடக்கூடாது.

இந்தச் செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிற சகோதர சகோதரிகளே, இந்தப் புத்தாண்டிலே தனிப்பட்ட நமக்கும் நமது குடும்பத்திற்கும் மாத்திரமல்ல, நமது தேசத்திற்கும் நமது ஊழியத்தின் பாதையிலேயும் மிஷனெரி பணிகளிலேயும் அவர் திறந்த வாசலை தருகிறார். அதைச் சுதந்தரிக்க ஆயுசையும், சுகத்தையும் பெலனையும் கிருபையையும் உங்கள் வாழ்க்கையில் அருளி ஆண்டவர் உங்களைப் பயன்படுத்துவராக!