• Dr.தியோடர் எச்.எஃப். •
(ஜனவரி – பிப்ரவரி 2025)

1. தீர்க்கதரிசனத்தில் அதின் முக்கியத்துவம்

Dr.தியோடர் எச்.எஃப்.

பழங்காலத்தில் இருந்த இரண்டு தேவாலயங்களைக் குறித்து வேதாகமம் விவரித்து நமக்குச் சொல்கிறது.

சாலொமோன் கட்டின தேவாலயம் கி.மு.959 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டு கி.மு.586ல் பாபிலோனியரால் அழிக்கப்பட்டது.

எழுபது ஆண்டுகளுக்குப் பிற்பாடு அதாவது கி.மு.516ல், இஸ்ரவேலர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து செருபாபேலின் தலைமையின் கீழ் திரும்பி வந்து ஆலயத்தை மறுபடியும் கட்டினர்.

இந்த இரண்டாவது தேவாலயத்திற்கு முந்தின திற்கிருந்த கெம்பீரத் தோற்றம் இருக்கவில்லை. மகா ஏரோது கி.மு.20இல் இந்த ஆலயத்தைப் புதுப்பிக்க ஆரம்பித்தான். இந்தப் புதுப்பித்தல் கிறிஸ்துவின் காலம் முழுவதும் நீடித்தது. “ஏரோதின் தேவாலயம்”, என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவ்வாலயம், கி.பி.70இல் ரோம சேனைகளால் அழிக்கப்பட்டது. ஆனால், வேதம், மற்றொரு தேவாலயம் கட்டப்படும் என்று போதிக்கிறது. ஒருவேளை அது வெகுசீக்கிரத்தில் இருக்கும்.

உபத்திரவக்காலத்தில் பூமியில் வெளிப்படவிருக்கும் அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லும்போது வேதாகமத்தில் அவன் இப்படியாய் விவரிக்கப்படுகிறான்: “அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ. ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தானே தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்” (2 தெச.2:4). இந்தத் தீர்க்கதரிசனம் நிறை வேறும்பொருட்டு மற்றொரு தேவாலயம் கட்டப்பட வேண்டும். உபத்திரவகாலத்தில் இந்த ஆலயம் பயன்படப்போகிறபடியால், சிலசமயம் அதை “உபத்திரவகால தேவாலயம்” எனக் குறிப்பிடுவது முண்டு.

தேவனுடைய திட்டத்தில், உபத்திரவ சம்பவங்கள் இதர சம்பவங்களுடன் தொடர்புடையதாய் எப்படிப் பொருந்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு, மத்தேயு 24ஆம் அதிகாரம் திறவுகோலான வேதபகுதியாய் அமைகிறது. இயேசுவின் சீஷர்கள், மூன்று குறிப்பிட்ட கேள்விகளை அவரிடம் கேட்டனர்:

(1) இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?˜

(2) உம்முடைய வருகைக்கும்,

(3) உலகத்தின் முடிவுக்கும், அடையாளம் என்ன?˜ (வசனம் 3).

காலவரையறையில் மூன்று கால அளவுகள் (Three Periods).

சீஷர்களின் கேள்விகளுக்கு இயேசு பதிலளிக்கும்போது, அவர் கூறிய சம்பவங்கள் எப்பொழுது சம்பவிக்கும் என்பதற்கு மூன்று கால அளவுகளைக் குறிப்பாகச் சொன்னார்.

முதலாவது கால அளவு, மத்தேயு 24:4-6இல் கொடுக்கப்பட்டிருக்கிறது: “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. வேதாகமத்தில் “முடிவு” என்று குறிப்பிட்டிருக்கும்போது பேசப்படுகிற காரியம், சபையின் கால முடிவா, இஸ்ரவேலரைக் குறித்த திட்டத்தின் முடிவா, அல்லது உலகத்தின் முடிவா, என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும்.

தேவன் தங்கள் தேசத்தைக் குறித்து வைத்திருக்கும் திட்டத்தைப்பற்றி அக்கறை உள்ளவர்களாய் இருந்த யூதக்கிறிஸ்தவர்களுக்குத்தான் மத்தேயு பிரதானமாகத் தன் சுவிசேஷ நூலை எழுதினார். “முடிவு” என்பதைப்பற்றி அவர்கள் கரிசனைப்பட்டது தேவனுடைய ராஜ்யகாலத்திற்கு முன் வரவிருந்த உபத்திரவம். இயேசு தன் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், தங்களை மேசியா (கிறிஸ்து) என்று சொல்லிக்கொள்ளும் அநேகரைப்பற்றித் தொடர்ந்து கேள்விப்படுகிறவர்களாயிருந்தாலும் இவ்வித நிகழ்ச்சிகள் முடிவு வந்துவிட்டது என்பதை நிரூபிக்காது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இப்படி, “நான் கிறிஸ்து” என்று சொல்லி அநேகர் எழும்பினாலும் அது உபத்திரவம் ஆரம்பமாகிவிட்டது என்பதை நிரூபிக்காது.

உபத்திரவகாலம் இரண்டு பிரிவுகள் கொண்டது.

ஏழுவருட உபத்திரவகாலம் மூன்றரை வருடங்களைக் கொண்ட இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 24:9-14 ஆகிய வசனங்கள், முதல் மூன்றரை வருடப் பிரிவு எவ்வாறிருக்கும் என்று விவரிக்கிறது. இரண்டாவது மூன்றரை வருடப் பிரிவு, “பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே அதை (மக்கள்) பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது” (மத்.24:15). தெளிவாகத் தெரியும். “பாழாக்குகிற அருவருப்பு”, மகாப் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. 2 தெசலோனிக்கேயர் 2:4இல் கூறியிருக்கிறபடி “தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று” வணங்க வேண்டுமென்று அந்திக்கிறிஸ்து அதிகாரத்துடன் கேட்பதுவே தேவாலயத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குவது அல்லது “பாழாக்குகிற அருவருப்பு” ஆகும்.

உபத்திரவ காலத்தின் பிற்பகுதி எவ்வளவு கொடியதாய் இருக்குமென்பதை இயேசு மத்தேயு 24:16-26-ல் விவரித்துச் சொல்கிறார். ஆனால், இந்த உபத்திரவகால முடிவில், புறஜாதிகளை நியாயந் தீர்க்கவும், தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும் இயேசுதாமே இப்பூமிக்குத் திரும்பவருவார். “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்” (வசனம் 29-31).

தானியேல் கடைசிகால சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார். தானியேல் புத்தகத்திலும் உபத்திரவக் காலச் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தானியேல் 9:24-27 வசனங்களில், தானியேல் 70 வாரங்களைப் பற்றிக் கூறிய தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாய் இத்தீர்க்கதரிசனத்தைப் படிப்போமானால் இந்த வாரங்களின் கால அளவு ஒவ்வொன்றும் ஏழு ஆண்டுகள் என்று காட்டுகிறது. இவ்விதமாக அறுபத்தொன்பது ஏழு வார ஆண்டுகள் (483 வருடங்கள்) ஏற்கனவே முடிந்துவிட்டன. எழுபதாவது வாரம், முடிவு காலத்தில் இஸ்ரவேல் மேலும், உலகம் முழுவதிலும் வரும் ஏழு ஆண்டு உபத்திரவம் ஆகும்.

தானியேல் கூறியிருக்கும் எழுபதாவது வாரத்தில் எவ்வாறு அந்திக்கிறிஸ்து பொருந்துகிறான் என்பதை வசனம் 27-ல் காண்கிறோம். “அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப் பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்”.

ஆகையால். உபத்திரவத்தின் ஆரம்பத்தில் அந்திக்கிறிஸ்து என்று சொல்லப்பட்டிருக்கும் நபர் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்வான். ஆனால், ஏழாண்டு காலத்தின் பாதி கழிந்தபின்பு (மூன்றரை வருடம் கழிந்த பின்பு), இஸ்ரவேல் ஜனத்தோடு செய்த உடன்படிக்கையை முறிப்பான். இவ்விதம் நடப்பது உபத்திரவ காலத்தின் மத்தியில் அந்திக்கிறிஸ்து தேவாலயத்தில் தன்னை அமர்ந்திருக்க வைத்து தேவனை வணங்குவது போல தன்னை வணங்கச் செய்வான் என்று கூறப்பட்டிருக்கும் மற்றைய தீர்க்கதரிசனங்களுடன் ஒத்துப்போகிறது. இந்தத் தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறுவதற்கு மூன்றாம் ஆலயம் கட்டப்பட்டுத் தீரவேண்டும் என்பதை விசுவாசிகளுக்குத் திரும்பவும் ஞாபகப்படுத்துவது நல்லது.

(தொடரும்)

மொழியாக்கம்: Bro. A.Manuel

நினைவுகூருங்கள்! 

நீங்கள் தேவனின் ஆவியால் வழிநடத்தப்பட விரும்பினால், தேவனுடைய வார்த்தைக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

 உங்களுக்குத் தெரியுமா?

பணத்தை நாம் செலவழிக்கும் முறை தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு எத்தகையது என்பதை வெளிப்படுத்துகின்றது!