• சகோதரி சுதா •
(ஜனவரி – பிப்ரவரி 2025)

காலமெனும் கடலினிலே, கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என மூன்று கட்டங்களை மனிதன் சந்திக்கின்றான். இக்கடலினிலே அவனது வாழ்க்கைப் படகு சந்திக்கும் பிரச்சனைகள்தான் எத்தனை! எத்தனை!

கடந்தகாலத்தை எண்ணி வருந்துவோர் பலர். அதை எண்ணி மகிழுவோர் சிலர். ஒருவனது வாழ்க்கையில் அழுகை, இன்னொருவனின் வாழ்க்கையில் இனிமை. இது உண்மையிலேயே காலத்தின் கோலம்தானே?

நிகழ்காலத்தை எடுத்துக்கொண்டால், அது சீக்கிரம் கடந்துபோய் விடவேண்டும் என்றென்ணுவோர் பலர். அது போய்விடக்கூடாது என்றென்ணுவோர் சிலர். ஒருவனுக்கு கவலை. மற்றவனுக்கு இன்பம்! இதுவும் காலத்தின் விளையாட்டுதானே?

வருங்காலம்! இது வரவேண்டும் என எதிர்பார்ப்பார் பலர்! வரக்கூடாதென்பார் சிலர். இது நிகழ்காலத்தின் மறுதாக்கம். வேண்டாம் என்பவன் இன்பத்தில் சஞ்சரிக்கிறான். வேண்டுமென்பவன் கவலையில் ஆழ்ந்திருக்கிறான். இதையும் அதே கோலம் என்றுதான் அழைக்கின்றோமா?

கடலையும் படகையும் முறையே காலத்திற்கும், வாழ்க்கைக்கும் ஒப்பிட்டோம். அதாவது, காலத்திற்கும் கரையுண்டு, வரையுமுண்டு. அதாவது, வாழ்வுக்கு ஒரு முடிவும் தொடக்கமும் உண்டு. எனவே கரையிலிருந்த படகு நகர்ந்து செல்லுகின்றது. படகை அவிழ்த்து கடலில் விட்டால், அது தானாகவே நகர்ந்து சென்றுவிடுமா? அதற்கு திக்கும் திசையும் தெரியாதே! எங்குபோய் என்னதான் செய்யும்? கடலில் கொந்தளிப்பும், புயலும் உண்டு. அதையெல்லாம் எதிர்த்து கட்டுப்படுத்த முடியாமல் புரண்டு மூழ்கி படகானது அழிந்துவிடாதா?

அதுதானே! நமது வாழ்க்கை வெறும்படகு என்பது இப்போது அல்லவா புரிகிறது! காலத்தின் மீது குற்றத்தை சுமத்திவிட்டு, அதனையல்லவா குறைகூறிக்கொண்டு இருக்கிறோம்! கடலின் கொந்தளிப்புக்கு முன், படகு வெறும் துரும்பாயிற்றே! அப்படியே கடல்தான் அமைதி பெற்றுவிடும் என நம்பி படகு தனியே முன்னேறிவிட முடியுமா? கட லைப் படைத்தது யார்? படகைப் படைத்தது யார்?

கடலைப் படைத்தது வேறு எந்த சக்தியுமல்ல, அது தேவன்தான்! ஆகவே, படகை உருவாக்கியது யார்? தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன்! ஆதியில் தன் தூய தேவசாயலை மாசுபடுத்தி, நித்தியமற்ற ஒரு நிலையை, தானாகவே ஏற்படுத்திக் கொண்டான் அவன். தேவனின் கிரியையோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது, வெறும் தூசியான மனிதன், அவரில்லாமல் இயங்க வேண்டுமென் றால் அது முடிகின்ற காரியமா?

காலங்களையும் முக்காலங்களையும் ஆளுபவர் தேவன்! அதிலும், வாழ்க்கை முழுவதையும் அனுபவிப்பவன் மனிதன்! கடலிலே, படகு தனியாய் இயங்கிச்செல்ல முடியாததுபோலவே, ஓடிக் கொண்டேயிருக்கும் காலத்தில், நமது வாழ்க்கை தனியாக இயங்கிச் செல்லமுடியாது. காலத்தை தம் கரத்தில் வைத்துக்கொண்டிருக்கும் ஆண்டவர், நமது வாழ்க்கையையும் அவரே பிடித்து வைத்திருக்கிறார். ஆக, இரண்டுமே அவரது சித்தப்படியே நடக்கிறது. அவரது சித்தத்திலேயே தங்கியிருக்கிறது. கடலிலே படகு முன்னேறிச் செல்ல வேண்டுமானால் ஒரு படகோட்டி தேவை. அது உண்மையென்றால், நமது வாழ்க்கையென்னும் படகை ஆண்டு நகர்த்திச் செல்லும் பொறுப்பு இயேசு என்னும் படகோட்டிக்கே உரியதாகவேண்டும் அல்லவா?

கடல், படகு, படகோட்டி! இதுதான் கடல் பிரயாணத்தின் மூன்று முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ஆகவே காலம், வாழ்க்கை, இயேசு இம்மூன்றும் நம்முடைய முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அப்படி இருக்கவேண்டும்.

படகோட்டியான இயேசுவின் ஆளுகைக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நமது கடந்த கால வாழ்க்கைக்கும், நிகழ்கால வாழ்க்கைக்கும், வருங்கால வாழ்க்கைக்கும் அவரே பொறுப்பாளி யாகின்றார்.

கடந்தகால பாவங்களை மன்னிக்கிறார்! நிகழ் கால வாழ்வினை ஆசீர்வதிக்கிறார்!! வருங்காலத்தில் நற்பலனை அளிப்பார்!!! காரணம், அவர் காலத்தை தம் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

அவர் ஆதிமுதல் இருந்தார். இப்போதும் நம் மோடு இருக்கிறார்! இனியும் நமக்காக இருப்பார்! காலங்கள் உருவாகுமுன்னேயே தான் இருந்ததாகக் கூறினார். சதாகாலங்களிலும் நம்மோடு இருப்பதாக கூறினார். காலத்தைக் குறித்து இனி நியாயந்தீர்க்கும் நீதிபதியாக தாம் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

ஆதியில் பாவம் செய்த மனிதனுக்காக இந்த மண்ணிலே வந்து பிறந்து, நம் பாவத்தை தம் இரத்தத்தால் கழுவும்படியாக மரித்த அவர், அதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளுகிற தமது மக்களின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார். இனி நாம் இவ்வுலகில் செய்த கிரியைக்குத்தக்கதாக நல்ல பலனளிக்க அவர் காத்திருக்கிறார்.

இந்த நிச்சயத்தை அறிந்தவன் ஒருபொழுதும் காலத்தைக் குற்றப்படுத்தமாட்டான்! கடந்தகாலப் பாவங்கள் இயேசுவால் மன்னிக்கப்பட்டு விட்டமையினால், அவன் என்றும் மகிழ்ச்சியடைகின்றான். நிகழ்காலமும் அவர் கையிலேயே ஒப்புக் கொடுக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியால் நிறைகிறான். இனி வருங்காலமும் அவர் மூலமாய்க் கிடைக்கப்போவதால் மகிழ்ச்சி நிறைந்து வாழ்வில் நம்பிக்கை கொள்கிறான்.

காலத்தின் கோலத்தில் மனிதன் அழிந்துவிடப் போவதில்லை. காலத்தை தன் கையில் வைத்திருக்கும் அவரை மறந்துவிடுபவனே அழிவுக்குள்ளாவான். எனவே, கடந்தகாலத்தைப் பற்றி எண்ணிக்கொண்டிராதே! கவலைப்படாதே! உன் கடந்தகால நிகழ்ச்சியை ஆண்டவர் இயேசுவிடம் வந்து ஒப்புவி! நிகழ்கால துன்பத்திலே தளர்ந்து விடாதே! அதையும் ஆண்டவரது சமுகத்தண்டை கொண்டுவா! வருங்காலத்தைக் குறித்த திகிலும் கலக்கமும் உனக்கு வேண்டாம். ஆண்டவர் இயேசுவிடம் இன்றே வா!

காலத்தைத் தள்ளிப்போடாதே! அது வேகமாக ஓடிக்கொண்டிருப்பது உண்மை! … இதோ, இப்பொழுதே அநுக்கிரகக்காலம்; இப்பொழுதே இரட்சணிய நாள் (2 கொரி.6:2). எனவே இப்பொழுதே ஆண்டவர் அநுக்கிரகஞ்செய்யும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். இன்றே காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (கொலோ. 4:5). ஏனென்றால், காலம் சமீபமாயிருக்கிறது (வெளி.1:3). இன்றோ நாளையோ, உன் உயிர் இருப்பது நிச்சயம் அல்ல! எந்த நிமிஷத்தில் உன் படகு கவிழுமோ தெரியாது. ஓராண்டு முடிந்து. இன்னொரு ஆண்டிற்குள் வந்திருக்கிறோம். நம் நிலை என்ன?

இயேசு என்னும் படகோட்டி இப்புதிய ஆண்டில் உன்னை ஆண்டு வழிநடத்திச் செல்வாரானால், காலமென்னும் கடலிலே உன் வாழ்க்கையென்னும் படகு, சலனமின்றி போய்க் கொண்டிருக்கும். நீ எதிர்நோக்கப்போகும் கொந்தளிப்புக்களை அவரே அமர்த்த வல்லவராயிருக்கிறார்! எந்த சக்தியும் அவருக்கு முன்னால் அடங்கியே தீரவேண்டும்.