• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜனவரி – பிப்ரவரி 2025)

சகோதரி சாந்தி பொன்னு

கண்ணீர்! – இது மனிதனுக்குத் தேவன் அருளிய விலைமதிப்பற்ற பொக்கிஷம்! கண்ணிலிருந்து வடிகின்ற கண்ணீரின் அர்த்தம் என்ன, நோக்கம் என்ன, எப்படி வடிகிறது இதையெல்லாம் யார் சிந்திக்கிறோம்? ஆனால், சிலசமயங்களில் தாராளமாகவே கண்ணீர்விட்டு, நம்மைக் காப்பாற்றிக்கொள்கிறோம் அல்லது கண்ணீரோடு நமது சினத்தை வெளிப்படுத்தி நம்மை நியாயப்படுத்திவிடுகிறோம். இதற்காகவா தேவன் கண்ணீரை நமது கண்களில் வைத்தார்? நமது சரீரத்தில் அவயவமோ, உள் உறுப்போ, நுண்ணிய சுரப்புகளோ எதையுமே தேவன் ஒரு நோக்கமின்றி நமது சரீரத்தில் வைக்கவில்லை. இதை உணர்ந்தாலே எத்தனையோ வியாதிகளை நாம் தவிர்க்கலாம், பல தோல்விகளையும் மேற்கொள்ளலாம்.

எந்தவொரு ஆராய்ச்சியோ, வைத்திய விஞ்ஞானமோ, நவீன தொழில்நுட்பமோ, எந்தவொரு தனிமனிதனோ எதுவுமே இன்னமும் மனிதனுடைய சரீரத்தை முற்றுமுழுதாக ஆராய்ந்து அறிந்தாயிற்று என்று சொல்லவே முடியாது. எத்தனை ஆச்சரியங்கள், புரியாத புதிர்கள் நமது சரீரத்தில் உள்ளது. ஒரு பிடி மண்ணிலிருந்து இந்த சரீரத்தைப் படைத்த தேவனுடைய ஞானத்தையும் அறிவையும் யாரால் அளவிடமுடியும்? நாமும் பவுலுடன் சேர்ந்து, “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது” (ரோமர் 11:33-36) என்று தேவனைப் புகழ்ந்து பாடுவதைத் தவிர வேறு எதுவும் சொல்லவோ செய்யவோ முடியாது

கண்ணீரின் தேவை

கண்ணீர் என்பது ஒரு தெளிந்த, உப்புத்தன்மையுள்ள ஒரு திரவமாகும். இது கண்களி லுள்ள லக்றமல் என்கிற சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது. நாம் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறதினால் மாத்திரமல்ல, சாதாரணமாகவே நாம் இமை களை இமைக்கும்போது இந்தச் சுரப்பி நமது கண்களின் மேற்பரப்பை மாத்திரமல்லாமல், உட்புறத்தையும் சுத்தம்பண்ணி, ஈரத்தன்மையுடன் வைத்திருக்கிறது. கண் உலர்ந்துவிட்டால் அது பல விளைவுகளைத் தந்துவிடும். ஆக, கண்ணீர், அடிப்படையில் நமது கண்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் என்றால் மிகையாகாது.

இது மாத்திரமல்லாமல், கண்ணீர் மனித உணர்வுகளுடன் ஒன்றித்திருக்கிறது. சிரிக்கும் போதும் கண்ணீர் வரும், அழும்போதும் கண்ணீர் வரும், சிலர் ஆத்திரப்பட்டுப் பேசும்போதும் கண்ணீர் வரத்தான் செய்கிறது. சிலர் தங்கள் அபாத்திர நிலைமைகளை பாவநிலைமைகளை உணர்ந்து தனிமையில் கண்ணீர்விட்டு அழுவதும் உண்டு. ஆக, கண்ணீர், நமது கண்களின் சுத்திகரிப்பில் பங்களிப்புத் தருவதுடன், நமது உணர்வுகளின் வெளிப்பாடாக செயற்படுவதையும் மறுக்கமுடியாது. நாம் கண்ணீர்விட்டு அழும்போது நமது மனதுக்கு ஒருவித விடுதலை உணர்வைத் தருகிறது. நமது கண்ணீரைப் பிறர் காண நேரிட்டால் அவர்களின் ஆறுதலும் நமக்குக் கிடைக்கத்தான் செய்கிறது.

அதேசமயம் மாய்மாலக் கண்ணீரும் உண்டு. எப்படியோ உணர்வுகளைக் கூட்டி கண்ணீரை வரவழைத்து, நமது உண்மை நிலைகளை மறைத்துவிடுகின்ற சாதுரியம் நமக்குண்டு. இதை “நீலிக்கண்ணீர்” என்பார்கள்.

எதற்காக கண்ணீரைச் சிந்துகிறோம்?

மனிதன் பிறக்கும்போது அழுகிறான், அழ வேண்டும், அதுதான் அவனது முதல் மூச்சு. அழாவிட்டால் தலைகீழாகப் பிடித்து குழந்தையின் முதுகில் அடிப்பது கொடூரமாகத் தெரியும். ஆனால், குழந்தை அழுதே ஆகவேண்டும். குழந்தை பிறந்தவுடன் அழும்போது கண்ணீர் வருகிறதோ இல்லையோ, மனிதன் இறக்கும்போது உறவுகள் கண்ணீர்விட்டு அழுகின்றனர். அது அவர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. இறப்பில் மாத்திரமல்ல, பலவித நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நம்மால் கண்ணீரை அடக்கமுடியாது, ஆம், கண்ணீர் நமது உணர்வுகளுடன் ஒன்றித்திருக்கிறது. உணர்வு தூண்டப்படும்போது, கண்ணீர் சுரப்பி கண்ணீரைச் சுரக்கிறது, ஆக, இது நமது உணர்வு தொகுதியுடன் சம்மந்தப்பட்டிருக்கிறது.

ஒரு குழந்தை உணவுக்காக அழுகிறது, கண்ணீரும் வந்துவிடுகிறது. பிள்ளைகளோ தங்கள் தேவைகளைச் சாதிப்பதற்குக் கண்ணீர் விடுவார்கள், விழுந்துபோனால் நோவும் காயமும் இல்லாவிட்டாலும் பெற்றோரின் கவனத்தைக் கவருவதற்காகவும் ஓவென்று கதறி எப்படியோ கண்ணீரை வரவழைத்துவிடுவார்கள். இப்படியிருக்க பெரியவர்கள் நாம் எதற்காக, எந்த சந்தர்ப்பத்தில் கண்ணீர் விடுகிறோம் என்பதை சற்று நினைத்துப்பார்ப்போம். தேவன் தந்த பெரிய கொடையாகிய கண்ணீரை நாம் வீணாக விரய மாக்குகிறோமா? அல்லது நாம் சிந்துகின்ற ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அர்த்தம் உண்டா?

“என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது” (சங்.56:8). இது தாவீது, தேவன் தனது ஒவ்வொரு வேதனையையும் அறிந்திருக்கிறார் என்று அறிக்கை பண்ணிய சங்கீத வார்த்தையாகும்.

வேதாகமத்தில் சிந்தப்பட்ட கண்ணீர்!

வேதாகம பாத்திரங்களில் ஏராளமானவர்கள் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் கண்ணீர்விட்டு அழு ததைக் காண்கிறோம். சாராள் மரித்தபோது ஆபிரகாம் புலம்பி அழுதார். இது இழப்பின் கண்ணீர்! ஏசா, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்து, தன்னையும் ஆசீர்வதிக்கும்படி தகப்பனிடம் சத்தமிட்டு அழுதான். இது ஏமாற்றத்தின் கண்ணீர்! யோசேப்பின் கண்ணீரை விபரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு கட்டத்தில் எகிப்தியர் கேட்குமளவுக் குச் சத்தமிட்டு அழுதான் என்று வாசிக்கிறோம். தனது அப்பாவைக் கண்டபோது கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். இது பிரிந்து போன உறவுகள் ஒன்றுசேரும்போது பெருக்கெடுத்த உணர்ச்சியின் கண்ணீர்! எசேக்கியா ராஜா சுவர்ப்புறமாக தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுததையும் நாம் மறக்க முடியாது. இதை என்ன சொல்ல?˜ சேவல் மூன்று தடவைகள் கூவியதைக் கேட்ட பேதுரு மனங்கசந்து அழுதான். இது மன உறுத்தலின் கண்ணீர்! பாவியான ஸ்திரீ இயேசுவின் பாதங்களைத் தன் கண்ணீரினால் கழுவினாள். இது நன்றியில் பெருக்கெடுத்த கண்ணீர்! இயேசு, லாசருவின் மரணத்தின்போது, “கண்ணீர்விட்டார்” என்று காண்கிறோம். இது அன்பானவனை இழந்த வேதனைக் கண்ணீர்! அவர் நகரத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டழுதார். இது நடக்கப் போகும் அழிவை முன்னறிந்த கண்ணீர்! பவுலடியாரோ கர்த்தரைச் சேவித்த தன் வாழ்வுப்பாதை முழவதிலும் சிந்திய கண்ணீருக்கு அளவில்லை.

இரண்டு முக்கிய நபர்கள்

இன்று நானும் நீங்களும் எதற்காக, யாருக்காக, என்ன நோக்கத்திற்காக கண்ணீர் விடுகிறோம்? இழப்புகள், அன்பானவர்களின் மரணம், தாங்கொணாத வியாதியின் வேதனைகள் என்பன பலவேளைகளிலும் காரணமாக இருந்தாலும், அநேகமாக நமது கண்ணீரில் சுயநலமே காணப்படுகிறது என்பதை மறுக்கமுடியாது. வேதாகமத்தில் முக்கியமாக கண்ணீர்விட்டழுத இரண்டு பாத்திரங்களைக் குறித்துச் சிந்திப்போம்.

1. தாவீதின் கண்ணீர்

ஒன்று தாவீது. தாவீதின் வாழ்க்கை ஓட்டம் எப்படிப்பட்டதாய் இருந்தது என்பதை நாம் படித்திருக்கிறோம். கர்த்தரால் ராஜ அபிஷேகம் பெற்ற இவர், கோலியாத்தைக் கொன்று மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தவர். இதனால் சவுல் ராஜாவின் எரிச்சலுக்கு ஆளாகி, ராஜா மரிக்கும்வரைக்கும் தன் ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள காடுமேடு என்று ஒளித்து ஓடினார். பின்னர் ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொண்டு எபிரோனில் இருந்தார். யூதாவின் மனுஷர் தாவீதை தங்கள் வம்சத்தின்மீது ராஜாவாக்கினார்கள். பின்னர் சொந்த மகன் அப்சலோமினால் துரத்துண்டு மீண்டும் அலைந்து திரிந்தார். அவனும் இறந்த பிற்பாடு சமஸ்த இஸ்ரவேலின் மீதும் ராஜாவாகி தன் விருத்தாப்பியத்திலே மரித்தார். இவர் இத்தனை பாடுகளை அனுபவித்திருந்தாலும், “என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்” என்று கர்த்தரால் சாட்சிபெற்றவராக இருந்தார். இவருக்கு, “இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின தாவீது” என்று ஒரு பெயர் வேதாகமத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது (2 சாமுவேல் 23:1).

ஆனால், இவருடைய சங்கீதங்கள் உணர்வுகளின் ஒரு கூடம் என்று சொல்லலாம். தனது உணர்வுகள் எதையும் மறைக்காமல் கர்த்தரிடம் ஏறெடுத்த மனிதர் இவர். இவர் பாடிய ஏராளமான சங்கீதங்களில் துதிஸ்தோத்திரங்கள் நிறைந்திருந்தாலும், தேவநாமம் மகிமைப்படும்படியான சங்கீத வார்த்தைகள் ஏராளமாக இருந்தாலும், இவரது உடைந்த உள்ளமே அதிகப்படியாக வெளிப்படுத்தப் பட்டுள்ளதை மறுக்கமுடியாது. இதற்குக் காரணம் இவரது வாழ்க்கை அனுபவங்கள். இவை அத்தனையும் இன்றும் நமது வாழ்க்கை அனுபவங்களில் நம்மைத் தேற்றுவதை மறுக்கமுடியாது.

தாவீது கண்ணீர்விட்டு அழுத சம்பவங்கள் ஏராளம். “என் பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; இராமுழுதும் என் கண்ணீரால் என் படுத்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்” (சங்.6:6); “கர்த்தாவே, … என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும், என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்” (சங்.39:12); “உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று” (சங்.42:3); “உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன், ஆதலால் … என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்” (சங்.102: 9, 10). இவற்றிலும் மேலாக தாவீது பாவஞ்செய்து உணர்த்தப்பட்டபோது பாடிய 51ஆம் சங்கீதம் முழுவதிலுமே கண்ணீரின் கதறலே ஒலிக்கிறது. இன்னும், சவுலும், உற்ற நண்பன் யோனத்தானும் மரித்தபோது தாவீது புலம்பல் பாடியபோதும், உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண் பிள்ளை மரித்தபோது இராமுழுவதும் தரையிலே கிடந்தபோதும், தன் சொந்த மகன் அப்சலோம் கொல்லப்பட்டபோதும் தாவீது கண்ணீர் விடாமல் இருந்திருப்பாரா!

மொத்தத்தில் தாவீதின் கண்ணீர் எதுவும் வீணல்ல. அவர் விட்ட ஒவ்வொரு துளி கண்ணீரும் ஒரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வில் அவன் முகங்கொடுக்கக்கூடிய வேதனையின் வெளிப்பாடாகவே உள்ளது. அவருடைய அழுகையின் வார்த்தைகள் இன்றும் நமது வாழ்வுப் பாதையில் நம்மைப் பெலப்படுத்துகின்றன. நாம் ஒவ்வொருவரும் முகங்கொடுக்கின்ற ஏதோவொரு சந்தர்ப்பத்திலாகிலும், தாவீதின் சங்கீதங்கள் நம்மை தேற்றாமல் இல்லை. ஆக, தாவீது சொரிந்த ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் அவரது வேதனையின் வெளிப்பாடாக இருந்தாலும், அது இன்று நமது கண்ணீராகவே இருப்பதால் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.

2. எரேமியாவின் கண்ணீர்

ஆனால், எரேமியாவின் கண்கள் சொரிந்த கண்ணீரோ, கண்ணீரின் வேறொரு அர்த்தத்தையும் அழைப்பையும் நமக்குத் தருகிறது. எரேமியா பென்யமீன் கோத்திரத்தான், ஆன தோத் ஊரைச் சோந்த இல்க்கியா என்ற ஆசாரியனின் மகன். இளவயதிலேயே தீர்க்கதரிசியாக கர்த்தரால் அழைக்கப்பட்டிருந்தார். எருசலேம் முழுவதும் பாபிலோனிலே அழிக்கப்பட்டு, யாவரும் சிறைப்பட்டுப்போகும் காலம் வரைக்குமாக இறுதி ஐந்து ராஜாக்களின் காலப்பகுதியில் யூதாவுக்கு கர்த்தருடைய வார்த்தையைப் பயமின்றி எடுத்து ரைத்தவர் இந்த எரேமியா. 40 வருடங்கள் இவருடைய தீர்க்கதரிசன வாழ்வு நீடித்திருந்தாலும். ஒரு யூதன்கூட மனந்திரும்பவில்லை. அப்படியானால் இவருடைய ஊழியம் தோற்றுப்போன ஒன்றா? இல்லை. கர்த்தருடைய அழைப்பில் கடைசி வரைக்கும் நிலைத்து நின்று, ஒரு யூதன்கூட மனந்திரும்பாத போதிலும், கர்த்தருக்கு உண்மையாய் நின்றாரே, கர்த்தரும் தாம் உரைத்தபடியே, சகல எதிர்ப்புகள் மத்தியிலும் எரேமியாவுடனே இருந்தாரே, இதுதான் எரேமியாவின் ஊழிய வெற்றி!

இவருடைய தீர்க்கதரிசன ஊழியகாலத்திலே இவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம் ஏராளம். அவற்றை எரேமியா புத்தகத்தை வாசித்து அறிந்துகொள்ளுங்கள். சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் வார்த்தையளவில் மாத்திரமல்லாமல், செயல் முறையிலும் வெளிப்படுத்த கர்த்தர் இவரை நடத்தினார். எரேமியா கர்த்தருடைய வார்த்தையை வார்த்தையாகவே சொன்னதினால் அடிக்கப்பட்டார், காவலறையில் வைக்கப்பட்டார், காவற் கிடங்கில் போடப்பட்டார், காவற்சாலை முற்றத்தில் அடைக்கப்பட்டார், நீரில்லாத துரவிலே போடப்பட்டார். ஆனாலும் இவர் ஒருகணமும் பின்வாங்கவில்லை. இவ்வளவு கொடுமைகள் மத்தியிலும் கர்த்தருடைய வார்த்தையை யூதா கேட்கவில்லையே என்பதால் எரேமியா பட்ட வேதனை சொல்லில் அடங்காது. கர்த்தருடைய வார்த்தைப்படியே யூதா கலங்கடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டபோது எரேமியா உள்ளம் உடைந்தார். யூதாவுக்கு எதிரான கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை முன்னறிந்த எரேமியா விட்ட கண்ணீருக்கு அளவில்லை. எரேமியா, புலம்பல் புத்தகங்களில் இதை வாசிக்கும்போது நமது உள்ளமே உடைகிறது.

கர்த்தரால் கர்த்தருக்கென்றே தெரிந்தெடுக்கப்பட்ட ஜனம், கீழ்ப்படியாமைக்கு நேரிடக்கூடிய தீங்கை முன்னறிவித்தும் அதை அலட்சியம் பண்ணிய ஜனம், அலசடிபட்டு சிதறடிக்கப்பட்ட கொடூரத்தைப் பார்த்து எரேமியா கதறுவதை விசேஷமாக புலம்பல் புத்தகத்தில் நாம் வாசிக்கலாம். “ஐயோ” என்றே ஆரம்பிக்கிறது புலம்பல். “சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியள்ளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே. எழுந்திரு, இராத்திரியிலே முதற் சாமத்திலே கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றி விடு..” என்று எருசலேமுக்கு அழைப்பு விடுத்த எரேமியா, “என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க் கால்கள் பாய்கிறது. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது…. கர்த்தாவே, உம்மு டைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்” என்று எரேமியா கதறுகிறார். இவர் எதற்காக யாருக்காக கதறி அழுதார்? அவர் சிந்திய கண்ணீரின் பெறு மதிப்பு குறித்து நாம் சிந்தித்ததுண்டா?

எரேமியாவின் துக்கம் ஆழமானது. இவர் “கண்ணீரின் தீர்க்கதரிசி” என்று அறியப்படுகிறார். அவருடைய கண்ணீர் உடைந்த இருதயத்தின் ஊற்றாக இருந்தது. இது, அவரது சொந்த வாழ்வுக்காக, தனக்குண்டான வேதனைக்காக, தன் தேவைக்காகச் சிந்திய கண்ணீர் அல்ல. தேவனுடைய வாயாக இருந்த அவர், தனது தேசமாகிய யூதாவுக்கும், தேவனுடைய நகரமாகிய எருசலேமுக்கும் வரவிருந்த அழிவையும், நகரத்தின்மீது வரவிருந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கொடூரத்தையும் அறிந்திருந்தார். அதற்காகவே எரேமியா அழுதார். அவருடைய கண்ணீர் சுயத்தை மையமாகக் கொண்டதாகவோ, தான் அனுபவித்த பாடுகளுக்காகவோ சிந்தப்படவில்லை; அவர் தனக்காகக் கண்ணீர் சிந்தவில்லை. மாறாக, தங்களை நேசித்து, பராமரித்து, ஆசீர்வதித்து, பல தடவை அவர்களை மன்னித்துச் சேர்த்துக்கொண்ட தேவனை இந்த ஜனம் மறுதலித்து விட்டுவிலகியதைக் கண்டு எரேமியா அழுதார்; அவர்களுக்கு நேரிடப்போகிற துயரத்தை, தேசத்தைவிட்டு அவர்கள் துரத்தப்படப்போவதை, பாபிலோனுக்குச் சிறையாகிப் போகப்போவதை அறிந்தவராக எரேமியா கண்ணீர் விட்டார். மொத்தத்தில் தேவனுடைய இருதயம் எதற்காக நொறுங்கியதோ, அதற்காகவே எரேமியாவின் இருதயமும் நொறுங்குண்டிருந்தது. அந்த நொறுங்குண்ட இருதயத்தில் ஊற்றெடுத்த கண்ணீரையே எரேமியாவின் கண்கள் சொரிந்தது.

இன்று நாம் எதற்காகக் கண்ணீர் சிந்துகிறோம்?

நாம் சிந்தும் கண்ணீர் நாம் யார் என்பதை வெளிப்படுத்தும் என்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருப்போம்! தாவீதின் கண்ணீரையும் எரேமியாவின் கண்ணீரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இருவரும் தங்கள் நொறுங்குண்ட இருதயத்திலிருந்தே கண்ணீர் விட்டனர். தாவீது தனக்கு நேரிட்ட நெருக்கடியில் அதிகமாகவே கண்ணீர் விட்டார். இது இன்றும் நமது வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால், எரேமியாவின் கண்ணீர், தன் ஜனத்திற்காக உடைக்கப்பட்டதும், தேவனிடத்தில் கொண்டிருந்த பக்தியினால் கலங்கியதுமான இருதயத்திலிருந்து புறப்பட்டதை மறுக்கமுடியாது. இரண்டுபேரும் விட்ட கண்ணீர் வேறுபட்ட நொறுக்குதல்களின் காரணத்தால் சிந்தப்பட்டாலும், இரண்டுபேரின் கண்ணீரும் இன்று நமக்குச் சவாலாகவே அமைந்திருக்கிறது.

ஆனால், கடைசிக்காலத்தின் கடைசியில் நிற்கின்ற நாம் இன்று யாருக்காக எதற்காகக் கண்ணீர் விட்டழுகிறோம்?˜ நமது தேவைகளுக்காகவும், நமது காயங்களுக்காகவுமா கண்ணீர் விடுகிறோம்? இதில் தப்பில்லை. கண்ணீர் நமது உணர்வுகளின் வெளிப்பாடு. இருந்தாலும், அந்தக் கண்ணீரை தாவீதைப்போல தேவபாதத்தில் ஊற்றுகிறோமா? அல்லது மனிதர் முன்பாக வீணாக்குகிறோமா என்பதே கேள்வி. இங்கேதான் நமது கண்ணீரின் பெறுமதிப்பு விளங்குகிறது. தாவீது எப்போதும் தேவனை நோக்கியே கண்ணீர்விட்டு அழுதார். கர்த்தர் அதைக் கண்டார். பதில் கொடுத்தார். அவருடன் கூடவே கடைசிவரைக்கும் இருந்தார்.

ஆனால், இன்று நம்மைச் சூழ வாழ்கின்ற ஏராளமான மக்கள் தங்களுக்காக தம்மையே கொடுத்த ஆண்டவரை ஒதுக்கி, தமது பாவவாழ்வில் தொடருகிறார்களே, இதைக் குறித்த நமது உணர்வு என்ன? காலம் கிட்டிவிட்டது. மக்கள் மனந்திரும்பாமல் இருப்பது நமது இருதயத்தைக் கரைக்கவேண்டாமா? நாம் எதையோ தொலைத்துவிட்டோம் இழந்துவிட்டோம் என்று கண்ணீர் விடுகிறோமா? அல்லது நம்மைச் சுற்றிலும் இருக்கிற இழந்துபோனவர்கள் அழிவினின்று மீட்கப்பட வேண்டுமே என்று அழுகிறோமா?

இன்னமும் எவ்வளவு காலத்துக்கு நாம் நமக்காக நமது தேவைகளுக்காகக் கண்ணீர் விட்டுக்கொண்டு காலத்தை வீணாக்கப்போகிறோம்? நமது கண்ணீரை வீணாக்க வேண்டாமே! கர்த்தருடைய இருதய பாரத்தை உணர்ந்தவர்களாய் அழிவுக்கு நேராய் வேகமாய் நகருகிற மக்களுக்காக ஏன் நாம் கண்ணீர் விடக்கூடாது? எசேக்கியேல் 9ஆம் அதிகாரத்தை சற்று வாசித்துப்பாருங்கள். அதிலே தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனிடம், கர்த்தர்: “நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்” (வசனம் 4). பின்னர் சகலரையும் கொன்று போடும்படி சொன்ன கர்த்தர்: “அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள்” (வசனம் 6) என்கிறார்.

இன்று அடையாளம் போட ஒரு தூதன் வந்தால், நமது நெற்றிகளில் அந்த அடையாளம் இடப்படுமா? அக்கிரமம் பெருகிப்போயிருக்கிற இந்த நாட்களிலே அழிந்துபோகிற ஆத்துமாக்களின் மீட்புக்காக இரவு பகலாக கண்ணீர்விட்டு அழுகின்ற எரேமியாக்களைக் கர்த்தர் தேடுகிறார். எவ்வளவு காலத்துக்குத்தான் நமக்காக அழுது கொண்டு இருக்கப்போகிறோம்? விசாலமான வழியிலே நரகத்தை நோக்கி அழிவின் பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் நிமித்தம் தேவனுடன் சேர்ந்து துக்கப்பட கண்ணீர்விட நம்மில் யார் நம்மை அர்ப்பணிக்கப்போகிறோம்? எந்த நிலையிலும் நமது கருவிழிகள் தூங்கிவிட இடமளிக்காதிருப்போமாக. ஆமென்.