சத்திய வசனம் பங்காளர் மடல்

(மார்ச் – ஏப்ரல் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்கள்.

இந்த மாத சத்தியவசன சஞ்சிகை வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியத்திற்கு தாங்கள் அளித்துவரும் நல்ஆதரவிற்காகவும் ஜெபங்களுக்காகவும் நன்றி கூறுகிறோம். சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியம், இணைய தளம், சோஷியல் மீடியாக்கள் ஆகியனவற்றின் வாயிலாக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும் சத்தியத்தைப் பகிர்ந்துகொடுக்கவும் கர்த்தர் கிருபை செய்து வருகிறார்.

இவ்வூழியத்திற்கு தேவன் தந்த அன்பு பங்காளர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். பங்காளர்கள் அனுப்பி தரும் தியாகமான காணிக்கையாலே ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட்டு வருகின்றன. உங்களுடைய ஆவிக்குரிய நண்பர்கள், விசுவாசிகள், உறவினர்களுக்கு இவ்வூழியத்தை அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம். அவர்களது முகவரிகளை எங்களுக்கு எழுதினால் புத்தகவெளியீடுகளின் மாதிரிபிரதிகளை அவர்களுக்கு அனுப்பிவைப்போம். தேவன் இவ்வூழியத்திற்கு தந்த தரிசனம் நிறைவேற தொடர்ந்து வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள அன்போடு உங்களை அழைக்கிறோம். கடந்த இதழில் நாங்கள் அறிவித்திருந்தபடி மார்ச் 14-16 வரை கவுந்தம்பாடி சி.எஸ்.ஐ ஆலயத்தில் நடைபெற்ற லெந்துகால சிறப்புக்கூட்டத்தில் முன்னேற்றப்பணி செய்ய கர்த்தர் கிருபை செய்தார்.

இவ்விதழில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் மூன்று சிலுவைகளைப் பற்றி அளித்த செய்தியும், இயேசு தமது சரீரத்தில்பட்ட காயங்கள் என்ற தலைப்பில் சகோ.K.P.ஆபிரகாம் அவர்கள் எழுதியுள்ள செய்தியும், பிலாத்து முன்பாக இயேசு விளங்கப்பண்ணின அறிக்கை என்ற தலைப்பில் சகோ.Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதியுள்ள செய்தியும், தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த உன்னத உறவு என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள சிறப்புச்செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார் என்ற தலைப்பில் Prof.S.C.எடிசன் அவர்கள் வழங்கிய உயிர்த்தெழுதல் செய்தியும், Dr. தியோடர் எச்.எஃப் அவர்கள் வழங்கிய மூன்றாம் தேவாலயம் என்ற செய்தியின் தொடர் வேதபாடமும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோகுரோல் அவர்கள் எழுதியுள்ள தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது.

லெந்துநாட்களுக்கான அனைத்து செய்திகளும் தங்களது ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். தேவகிருபை நம் அனைவரோடுங்கூட என்றென்றும் இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசாயா 53:5).