• Dr.வாரன் வியர்ஸ்பி •
(மார்ச் – ஏப்ரல் 2025)

பவுல் அப்போஸ்தலன் 1 தீமோத்தேயு 6:14இல் இயேசுகிறிஸ்து “பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணினார்” என்று குறிப்பிடுகிறார். பிலாத்துவின் முன்பதாக இயேசுகிறிஸ்து அளித்த இராஜாங்கத்தின் அறிக்கையை நான்கு சுவிசேஷங்களிலும் இடம்பெற்றிருக்கிறதை நாம் பார்க்கிறோம் (மத்.27:11, மாற்கு 15:2, லுக்.23:3, யோவான் 18:37). நான் ஒரு இராஜாவாக இருப்பேன் என்று அவர் சொல்லவில்லை. நான் இராஜாவாக இருக்கிறேன் என்று சொன்னார்.
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார் (யோவான் 18:37).
இயேசு, அவர் பிறக்கும்போதே ஒரு ராஜா வாகவே பிறந்தார்!
அன்றைக்கு, “யூதர்களின் ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று சாஸ்திரிகள் கேட்டனர் (மத்.2:2). அவர்கள் பெத்லகேமில் இயேசுவிடம் வழிநடத்திச் செல்லப்பட்டனர். தான் “பிறந்தேன்” (அவரது மனிதசாயல்) என்றும், “இந்த உலகத்திற்கு வந்தேன்” (அவரது தெய்வமாக) என்றும் இயேசு சொன்னபோது பிலாத்து குழப்பமடைந்திருக்க வேண்டும். மற்ற ஒவ்வொரு குழந்தையும் கருத்தரித்ததிலிருந்து “உலகத்தில்” இருக்கிறது; ஆனால், இயேசுவோ மரியாளின் வயிற்றில் கருத்தரிக்க “உலகிற்கு வர” வேண்டியிருந்தது. ஏனென்றால், அவர் மகிமையின் ராஜா (சங்.24:7-10), இஸ்ரவேலின் ராஜா (யோவான் 1:49), அவர் ராஜாதி ராஜா (1தீமோ.6:15; வெளி. 17:14), மற்றும் பரிசுத்தவான்களின் ராஜா (வெளி.15:3).
இயேசு, அவர் ஒரு ராஜாவாகவே செயல்பட்டார்.
அவர் தனது சிங்காசனத்தைவிட்டு இறங்கி ஊழியம் செய்யும்படியாக மாறியிருந்தாலும் இயேசு இன்னும் ராஜாவாகவே இருந்தார். மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அவர் விலங்குகள், மீன்கள், பறவைகள், மழை, காற்று மற்றும் அலைகளுக்கு தேவன் கட்டளையிட்டார்; அவர் பிசாசு, பேய்கள், நோய்கள், சரீர ஊனம் மற்றும் மரணம் ஆகியவற்றின்மேல் வெற்றிசிறந்தார். மிக முக்கியமானது என்னவென்றால் கிறிஸ்துவின் ராஜ்யம் சத்தியத்தின் ராஜ்யமாகும். சாத்தானின் பொய்களினால் ஆன ராஜ்யத்தை வென்று அவரால் மக்களை விடுவிக்க முடியும். உலகம் அவரையும் அவரது சத்தியத்தின் ராஜ்யத்தையும் நிராகரித்துவிட்டது. ஆனால் நீங்களும் நானும் அவருடைய ஊழியர்களாக இருக்கிறோம். நாம் எங்கிருந்தாலும் தேவனுடைய ராஜ்யம் நம் மத்தியில் வந்திருக்கிறது.
இயேசு, அவர் ஒரு ராஜாவாக மரித்தார்.
“நசரேயனாகிய இயேசு, யூதர்களின் ராஜா” என்று சிலுவையில் ஆணியடிக்கப்பட்டிருந்த மேல் விலாசத்தில் எழுதப்பட்டிருந்தது (யோவான் 19:19). போர் சேவகர்கள் அவரது அங்கியைப் பறித்து அதை சீட்டுப்போட்டு தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். அவரது கிரீடம் முள்ளால் ஆன கிரீடமாக இருந்தது. “தேவனே எங்கள் ராஜாவை காப்பாற்றும்” என்று கூச்சலிடுவதற்குப் பதிலாக, மக்கள் அவரை கேலி செய்தனர். ஆயினும் இயேசு சிலுவையில் இருந்தும் ஆட்சி செய்தார்! அவர் யூதத் தலைவர்களுக்காகவும் ரோமானிய வீரர்களுக்காகவும் ஜெபித்தார். மனந்திரும்பிய ஒரு குற்றவாளியை தனது ராஜ்யத்திற்குள் கொண்டு வந்தார். தனது தாயான மரியாளைப் பராமரிக்க யோவானுக்குக் கட்டளையிட்டார். அவர் சாத்தானையும் நரகத்தின் சேனைகளையும் தோற்கடித்தார், உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார். மூன்று மணி நேரம் பூமியெங்கும் அந்தகாரம் சூழ்ந்தது, பூகம்பம் உண்டானது, கல்லறைகளும் திறந்தது. மரித்தோர்கள் எழும்பினர். அவர் செய்யவந்த வேலையை நன்றாக செய்துமுடித்தார். எனவே, உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் சிலுவையைக் குறித்து மேன்மை பாராட்டுவதில் ஆச்சரியமில்லை (கலா.6:14).
இயேசு இன்றும் ஆளுகை செய்கிறார்!
பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து, இயேசு “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” நமது ஆசாரிய-ராஜாவாக அரியணை ஏறினார் (எபி.6:20; ஆதி.14:18-24ஐப் பார்க்கவும்). மெல்கிசேதேக் என்ற பெயரின் அர்த்தம் “நீதியின் ராஜா” என்பதாகும். வேதாகமத்தில் இயேசுவிடம்தவிர வேறு எங்கும் ராஜா மற்றும் ஆசாரியர் பதவிகள் ஒன்றிணைக்கப்படவில்லை. நாம் அவரை எளிதில் அணுகக்கூடிய கிருபையின் சிம்மாசனத்திலிருந்து ஆட்சிபுரிந்து வருகிறார் (எபி. 4:14-16).
மேலும் அவருக்கு பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது (மத்.28:18). நமது பிரதான ஆசாரியராக, அவர் நமது வேதனைகளை உணர்கிறார், நமது தேவைகளை அறிவார், மேலும் அவர் நமது ராஜாவாக, நமக்கு சிறந்ததைக் கொடுக்கவும், நமக்காக சிறந்ததைச் செய்யவும் வல்லவர்!
இயேசு திரும்பி வந்து பூமியில் ஆளுகை செய்வார்!
இயேசு வரும் நாளிலே, ஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிக்கையிடும் (பிலி.2:9-11). அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்பதை உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் (வெளி.19:16). அவரை நம்பியவர்கள் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்து, என்றென்றும் அவரைச் சேவிப்பார்கள் (22:5). அவரது அரசாட்சியில் நமக்குக் கொடுக்கும் பணிகள், இன்றைய நம் வாழ்வில் நாம் அவரை எவ்வாறு சேவித்தோம் என்பதைப் பொறுத்தது. நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருந்திருக்கிறோமா? அவரை மகிமைப்படுத்த முயன்றிருக்கிறோமா? அவரை நிராகரித்தவர்கள் என்றென்றும் துன்பப்படுவதற்கு புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள்.
உங்கள் வாழ்க்கையிலும் என் வாழ்க்கையிலும் இயேசு ராஜாவா? அவர் தம்முடைய சத்தியத்தால் நம்மை ஆளுகிறாரா? நாம் அவருக்கு ஊழியஞ் செய்து மற்றவர்களை ஆதாயப்படுத்த பிரயாசப் படுகிறோமா? இயேசு திரும்பும்போது நாம் ஆயத்தமாயிருக்க தேவன் நமக்கு உதவுவாராக!
பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியுமுமானவைகள் (வெளிப் படுத்துதல் 15:3).
மொழியாக்கம்: Mr.G.Wilson
சிந்தியுங்கள்!
அலைகள் இல்லாமல் கடல் இல்லை; பாடுகள் இல்லாமல் கிறிஸ்தவன் இல்லை!