• Dr.தியோடர் எச்.எஃப். •
(மார்ச் – ஏப்ரல் 2025)
1. தேவாலயம் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்தலம்

இஸ்ரவேலின் மார்க்க வரலாறு இரண்டு தேவாலயங்களைச் சுற்றி வந்தது என்று பார்க்கிறோம். உபத்திரவ காலத்தில் மூன்றாவது தேவாலயம் ஒன்று இருக்குமென்று வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது. மூன்றாவது தேவாலயத்தைப் பற்றிய யோசனைக்குரிய பிரதான காரியம், அது எங்கே கட்டப்படும் என்பதே.
இஸ்ரவேலின் வரலாற்றைத் தொடர்ந்து கவனிக்கும்போது, கிறிஸ்துவுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு குறிப்பிட்ட இடம் விசேஷ முக்கியத்துவம் கொண்டதாயிருந்தது என அறிவது கவனத்தைக் கவருகிறதாய் இருக்கிறது. இந்த இடத்தில்தான் தேவன் ஆபிரகாமிடம், “உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப்போய் அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” (ஆதி. 22:2) என்று சொன்னார். தேவன் ஆபிரகாமுக்குக் காண்பித்த மலை மோரியா மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலையில்தான் சில முக்கிய சம்பவங்கள் பிற்காலத்தில் நிகழும்படி இருந்தது.
கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியிடுவதற்காக தாவீது மோரியா மலையின்மேல் ஒரு போரடிக்கிற களத்தை, ஒர்னான் என்று அழைக்கப்படும் அர்வனாவினிடமிருந்து விலைக்கு வாங்கினான் (2 சாமு.24:18-25).
2 நாளாகமம் 3:1 ஆம் வசனம் சாலொமோன் பிற்காலத்தில் இதே இடத்தில் தேவாலயத்தைக் கட்டினான் என்று காண்பிக்கிறது:
“பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஓர்னானின் களம் என்னும் தாவீதுக் குறித்து வைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவங்கினான்”.
பாபிலோனியரால் சாலொமோனுடைய தேவாலயம் அழிக்கப்பட்டபின் அதே இடத்தில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அது திரும்பவும் கட்டப்பட்டது. கிறிஸ்துவின் காலத்திற்கு சில வருடங்கள் முன்பான ஆலயம் ஏரோதினால் மாற்றி அமைக்கப்பட்டது (Remodelled).
இன்று “புலம்பலின் சுவர்” (Wailing Wall) என்று அழைக்கப்படுவது ஏரோதின் தேவாலயத்தின் மேற்பக்கத்துச் சுவரின் அழிந்து மீந்த பகுதி என்று ஒரு சிலர் சொல்லுகின்றனர். அது என்ன வாயிருந்தாலும் சரி, இஸ்ரவேலரின் வரலாற்றில், கடந்த ஏறக்குறைய 4000 ஆண்டுகளாக தேவாலயம் இருந்த இடம் விசேஷ முக்கியத்துவம் கொண்டதாய் இருந்தது. என்று தெளிவாய்த் தெரிகிறது. இன்றைக்கு இஸ்லாமியரின் “கன்மலை குவிமண்டபம்” (Dome of the Rock) சரியாக அதே இடத்தில் அமைந்துள்ளது என்று நம்பப்படுகிறது.
எருசலேம் ஒப்பற்ற ஸ்தானத்தை வகிக்கிறது:
எருசலேம் பட்டணம், இஸ்ரவேலைக் குறித்த தேவனுடைய திட்டத்தில் ஒரு ஒப்பற்ற ஸ்தானத்தை வகித்து வந்திருக்கிறது. வருங்காலத்திலும் எருசலேம் தொடர்ந்து இஸ்ரவேலரின் வரலாற்றில் மிக முக்கிய பாகம் வகிக்கும். சாலொமோனின் தேவாலயத்தின் பிரதிஷ்டை ஆராதனையின்போது கர்த்தர் சாலமோன் மூலமாக உரைத்ததாவது:
“நான் என் ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளாமலும், என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்” (2 நாளா. 6:5, 6).
எருசலேம் பட்டணத்தின் வரலாறு அது அடிக்கடி வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தது எனக் காட்டுகிறது. வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசனத்தின்படி எதிர்காலத்திலும் மிகவும் கடினமான அனுபவத்திற்குள் கடந்துசெல்ல வேண்டியதிருக்கும் என்று அறிகிறோம். எருசலேமின் கடந்தகாலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப்பற்றியும் சுவிசேஷங்களில் கூறப்பட்டுள்ளது.
லூக்கா 21:20இல் ஆண்டவர், “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்” என்று கூறியுள்ளார். அழிவிற்கு முக்கிய அடையாளம் சேனைகள் பட்டணத்தை சூழ்ந்திருப்பது என்பதைக் கவனியுங்கள். இந்த அடையாளம் வெளிப்பட்டபோது, அவர்கள் கடைபிடிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளைகள் யாதெனில், “அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகவும், எருசலேமில் இருக்கிறவர்கள் வெளியே புறப்படவும். நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்” (வச.21-23).
இந்த வார்த்தைகள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் கூறப்பட்டவை என்று எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. முடிவுரையாக, இவைகளுக்கு “பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புற ஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப் போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” (வச. 24) என்றும் கூறினார். இவ்விதம் முன்னறிவிக் கப்பட்ட துக்ககரமான நிகழ்ச்சி ரோம சேனைகளின் தலைவன் தீத்து கி.பி.70இல் எருசலேமை அழித்து தேசங்கள் பலவற்றில் சிதறடித்தபோது நிறைவேறியது. “புறஜாதிகளின் காலம் நிறைவேறும்வரை” இஸ்ரவேல் ஜனங்கள் சிதறடிக்கப்பட்டவர்களாகவே இருப்பர்.
இஸ்ரவேலரை எருசலேமைப் பற்றிய மற்றொரு தீர்க்கதரிசனம் மத்தேயு 24இல் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து இங்கு கூறியிருப்பது: “மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக்காணும் போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக் கடவர்கள்” (வச.15,16). எருசலேமின் அழிவிற்கு அடையாளமாக இங்கு சொல்லப்பட்டிருப்பது, “பாழாக்கும் அருவருப்பு” பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது என்பதைக் கவனியுங்கள். இது உபத்திரவ காலத்தில் மூன்றாவது தேவாலயத்தில் நின்று தன்னை வணங்கும்படி கோரும் அந்திக் கிறிஸ்துவைக் குறிக்கிறது.
லூக்கா 21 மற்றும் மத்தேயு 24ஆம் அதிகாரங் களில் குறிப்பிட்டிருப்பவைகளில் அநேக ஒற்றுமைகள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க அநேக வித்தியாசங்களும் இருக்கின்றன. லூக்கா21இல் சொல்லப்பட்டிருக்கும் அடையாளமானது பட்டணம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதையும் மத்தேயு 24இல் சொல்லப்பட்டிருக்கும் அடையாளமானது பரிசுத்த ஸ்தலத்தில் பாழாக்கும் அருவருப்பையும் லூக்கா 21இல் ரோம சேனைகளால் எருசலேம் கி.பி.70ல் அழிக்கப்படுவதையும் குறிப்பிடுகிறது. வருங்காலத்தில் சேனைகளால் எருசலேம் சூழப்படுவதை நிழலாட்டமாய்க் கூறுகிறது. மத்தேயு 24ஆம் அதிகாரம் எதிரிகள் பட்டணத்திற்குள் வருவதைக் குறித்தாலும் அது முற்றிலுமாக அழிக்கப்படவில்லை.
மத்தேயு 24:27-31 வேதபகுதியானது ஏழு வருட உபத்திரவகாலம் முடியும்போது என்ன நடக்கும் என்பதைக் எடுத்துக்கூறுகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமிக்குத் திரும்பவருவார். சபை எடுத்துக்கொள்ளப்படுவதைப் பற்றி விவரிக்கும் 1 தெசலோனிக்கேயர் 4:13-18 வசனங்களில் ஆண்டவர் விசுவாசிகளை பூமியிலிருந்து எடுத்துக்கொள்வதற்காக மேகங்கள்மேல் வருவதை மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், உபத்திரவ காலத்தில் முடிவில் கிறிஸ்து பூமிக்கே திரும்பிவருவார் (சகரியா 14:1-5 பார்க்கவும்).
இதைக் குறித்து முக்கியமாக மேற்கூறிய பகுதி யின் நான்காம் ஐந்தாம் வசனங்களைக் கவனியுங்கள்: “அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவ மலையின் மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவ மலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப் போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்”.
மூன்று கால கட்டங்கள்
லூக்கா 21ஆம் அதிகாரம் ரோம சேனைகளால் கி.பி.70இல் எருசலேம் அழிக்கப்படுவதை முக்கியமாகக் குறிப்பிடுவதாக இருந்தாலும் சரியாகப் பார்த்தால் மூன்று காலக்கட்டங்கள் இவ்வதி காரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முதலாவது காலக்கட்டம், கி.பி.70இல் நிகழ்ந்த அழிவைக் குறிக்கிறது. “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதில் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். பட்டயக் கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்” (வச.20,24).
இரண்டாவது காலக்கட்டம், புறஜாதிகளின் காலத்தைக் குறித்துப் பேசுகிறது, “புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” (வச.24).
மூன்றாவது காலகட்டம், கிறிஸ்து உபத்திரவ காலத்தின் முடிவில் பூமிக்குத் திரும்பிவருவதைக் குறிக்கிறது. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்: சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின் மேல் வருகிறதைக் காண்பார்கள்” (வச.25, 27).
முதலாவது காலகட்டம் ஏற்கனவே நடந்தேறிவிட்டது. இரண்டாவது காலகட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அநேகமாக முடிந்ததுபோல் தோன்றுகிறது. மூன்றாவது காலகட்டம் இன்னும் வரவிருக்கிறது. தேவன் என்ன நடக்கப்போகிறதென்பதைக் குறித்த எல்லா விபரங்களையும் தெரிவிக்காவிட்டாலும் நிகழவிருக்கிற சம்பவங்களைக் குறித்த பரவலான வருணனையைக் கொடுத்திருக்கிறார்.
காலம் இன்னும் இருக்கும்போதே கிறிஸ்தவர்கள் அவருக்கு உண்மையுள்ள சாட்சிகளாக இருக்கவேண்டியது மிகவும் ஒரு முக்கியமான காரியமாகும்.
(தொடரும்)
மொழியாக்கம்: Bro. A.Manuel