• Bro.கே.ப.ஆபிரகாம் •
(மார்ச் – ஏப்ரல் 2025)

கெத்செமனே தொடங்கி கல்வாரி வரைக்கும் இயேசுகிறிஸ்துவின் பாடுகளைக் குறித்து ஒவ்வொரு சுவிசேஷப் புத்தகத்திலும் படிப்படியாக எழுதப்பட்டுள்ளது. பாடுகளின்போது அவர் சித்திரவதை செய்யப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும், அவர்மேல் வன்முறை கட்டவிழ்த்தப்படுவதையும் பார்க்கிறோம். அவர் அவமானங்களைச் சகித்தார். அவர் வையப்பட்டு பரிகசிக்கப்பட்டார். இயேசுகிறிஸ்துவின் பாடுகளின் உச்சத்தை அவரது காயங்களினால் உண்டான தழும்புகளில் காணமுடியும். அந்தளவுக்கு இயேசு நமக்காக அவர் தமது சரீரத்தில் காயப்பட்டார். இவ்வளவு பாடுகளையும் காயங்களையும் இயேசு எதற்காக ஏற்றுக்கொண்டார்?

இதற்கான பதிலை ஏசாயா தீர்க்கதரிசனமாக, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்று ஏசாயா 53:5இல் கூறுகிறார். நம்முடைய மீறுதல் அக்கிரமங்களின் நிமித்தம்தான் இயேசு காயப்பட்டார்.

இயேசு காயப்பட்டதிற்கு இன்னுமொரு காரணம், பிதாவானவர் அவரை நொறுக்க சித்தமாகி அவரை பாடுகளுக்குட்படுத்தினார் என்று ஏசாயா 53:10இல் வாசிக்கிறோம். இயேசுகிறிஸ்து பிதாவின் சித்தம் நிறைவேற தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். ஆனபடியால், அவருக்கு அழகு மில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசாயா 53:2). அந்தளவிற்கு இயேசுகிறிஸ்துவின் உடல் முழுவதும் காயப்பட்டார்.

கிறிஸ்து நம்மேல் வைத்திருந்த அன்பினிமித்தமும் தமது பிதாவினிடத்தில் நம்மை சேர்க்கும்படியாகவும் அவர் நமது பாடுகளை ஏற்றுக்கொண்டார். இதைக் குறித்து பேதுரு அப்போஸ் தலன் தனது நிருபத்தில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார் (1 பேதுரு 3:18) என்று எழுதுகிறார்.

கல்வாரி சிலுவையில் இயேசு அடைந்த காயங்கள் இன்றும் நம்முடன் பேசுகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து சீஷர்களிடத்தில் வந்தபோது முதலாவது தம்முடைய கைகளிலும் விலாவிலும் இருந்த காயத்தினால் உண்டான தழும்புகளைத்தான் காண்பித்தார் (யோவான் 20:20). இயேசு பாடுபடும்போது அவர் சரீரத்தில் உண்டான ஐந்து பெரும் காயங்களைக் குறித்தும் அந்த காயங்கள் நம்மிடம் பேசும் சத்தியங்களையும் தியானிப்பது நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக அமையும்.

1. இயேசுவின் தலையில் ஏற்பட்ட காயம்:

இயேசு பிலாத்துவினிடத்தில் அழைத்து செல்லப்பட்டபோது யூத ஜனங்கள் அவனுக்குத் தந்த அழுத்தத்தினால் இயேசுவை பாடுபடுத்துவதற்கும் சிலுவையில் அறைவதற்கும் போர்சேவகர் கூட்டத்தினிடத்தில் ஒப்புவிக்கிறான். அவர்கள் அவருடைய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு சிவப்பான மேலங்கியை உடுத்தினார்கள். அதன்பிறகு முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள் (மத்27:27-30). இது எவ்வளவாக அவருக்கு வேதனையைத் தந்திருக்கும். நமது காலில் ஒரு சிறிய முள் குத்தினாலே நாம் எவ்வளவு வேதனைப்படுவோம். ஆனால் இயேசுவின் தலையில் முள்ளை முடியாக செய்து வைத்ததுமல்லாமல் அதை கோலினால் அடித்து அந்த முள்முடியைத் தலையில் பதியும்படி இறக்கினார்கள். இது இயேசுவின் தலையின்மேல் பெரிய காயத்தை ஏற்படுத்தியது.

முள் என்பது சாபத்தைக் குறிக்கிறது. ஆதாம் தேவனுடைய கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைப் புசித்தபோது, தேவன் ஆதாமிடம், “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்” என்றார் (ஆதி.3:17,18). மேலும், முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது என்று எபிரெயர் 6:8இல் வாசிக்கிறோம். முள் முடியை இயேசு தன் தலையில் ஏற்றதினிமித்தம் அவர் நமது சாபங்களை சுமந்து தீர்த்தார். எனவே சகல சாபங்களிலிருந்தும் நம்மை விடுவித்திருக்கிறார். இன்று சாபத்தை எத்தனையோ விதத்தில் வகைப்படுத்துகின்றனர். பரம்பரை சாபம் என்றும், சங்கிலி தொடர்போல் தலைமுறை தலைமுறையாக நம்மை தொடர்ந்து வரும் சாபம் என்றும் மனிதன் சபித்ததினால் உண்டாகும் சாபம் என்றும் பலவிதங்களில் சாபத்தைக் குறித்து சொல்லப்பட்டாலும் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் இவை எல்லாவற்றிலுமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் சத்தியம். இயேசு நமக்காக சாபமான முள்முடியை தமது தலையில் ஏற்றதினால் இவையெல்லாவற்றின் மேலும் வெற்றி சிறந்தார். இதை பவுல் அப்போஸ்தலன், கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என்று கலாத்தியர் 3:13இல் எழுதுகிறார். இனி சாபத்தைக் குறித்த பயமும் மனவுறுத்தலும் நமக்கு வருமாயின், “கிறிஸ்து எனக்காக சாபமாகி அவர் சிரசில் என் சாபத்தையெல்லாம் சுமந்தார்” என்ற விசுவாசத்தோடு நாம் அறிக்கையிட வேண்டும்.

2. இயேசு தமது முதுகில் பட்ட காயம்:

பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான் (யோவான் 19:1). எபிரெய சட்டத்தின்படி வாரினால் 39 அடிகள் அடிக்கப்படுவர். பவுல் அப்போஸ்தலன் இதே மாதிரிதான் ஐந்து முறை அடிக்கப்பட்டதாக எழுதுகிறார் (2 கொரி.11:24) ரோமசட்டம் இதைவிட கொடுமையானது. ரோமருடைய தண்டனையோ அவ்விதம் கணக்கிற்கு அடங்கினதல்ல. சிலுவையில் அறையப்படப் போகும் கைதி இறந்துவிடக்கூடாது என்ற நிபந்தனைதான் அடிக்கிறவனுக்கு உண்டு என Rev.C.M.வார்டு என்ற வேத அறிஞர் குறிப்பிடுகிறார். ஆகையினால் அவன் தான் தீர்மானித்தபடி அடிப்பான். மேலும் கொடிய காயங்கள் ஏற்படும் வண்ணம் அந்த சவுக்கின் நுனியில் பலவிதமான பொருட்களை பொருத்தியிருப்பர்.

இதைக் குறித்து சங்கீதம் 129:3 இல், உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள் என்று சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக எழுதுகிறார். உழுகிறவன் கலப்பையினால் நிலத்தை உழும்போது ஆழமாகவும் அகலமாகவும் உழுவதைப்போல வாரினால் அடிக்கப்படும்போது இயேசுவின் முதுகும் உழப்பட்டு சதைகள் கிழிக்கப்பட்டது. மேலும் ஏசாயா 50:6இல் அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடை மயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன் என்று கர்த்தர் விளம்புகிறதைப் பார்க்கிறோம்.

வாரினால் அடிக்கப்பட்டபோது இயேசுவின் முதுகில் ஏற்பட்ட காயமானது அவர் நமது பாவத்தையும் நோயையும் சுமந்ததைக் குறிக்கிறது. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1 பேதுரு 2:24). அவர் நமது பாவத்தை தமது முதுகில் சுமந்தபடியால் நாம் பாவத்திலிருந்து விடுதலையாகி அவருடைய பிள்ளைகளானோம். இதற்காகவே இயேசு இவ்வுலகில் வெளிப்பட்டார். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை (1யோவான் 3:5). நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரி.5:21). அவருடைய முதுகில் உண்டான காயம் பாவமன்னிப்பைப் பேசுகிறது. அவர் பாவத்தை மாத்திரமல்ல, நமது நோய்களையும் தமது சரீரத்திலே சுமந்தார். அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று மத்தேயு 8:17இல் வாசிக்கிறோம். பாவத்தினாலும் நோயினாலும் வேதனை அடைந்து திகைக்கிறவர்களாக நாம் காணப்படுகிறோமா! அவர் தமது முதுகில்பட்ட அந்த பெருங்காயத்தை நோக்கிப்பார்ப்போம். அவர் நமது பாவங்களை மன்னித்து நமது நோய்களையெல்லாம் குணமாக்குவார்.

3. இயேசு தமது கைகளில் பட்ட காயம்:

இயேசுவின் கைகளை சிலுவையில் ஆணிகளினால் அறையும்போது அவரது கைகளில் பெருங்காயம் ஏற்பட்டது. என் கைகளையும் என் கால்களையும் உருவக்குத்தினார்கள் என்று சங்கீதம் 22:16இல் ஆண்டவருடைய குரலை நாம் கேட்கிறோம். அவரது கைகள் ஆணிகளினால் கடாவப்பட்டபோது அவர் சிந்தின இரத்தம் நமது கைகளினால் செய்த பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டது. அதினால் நாம் பயத்திலிருந்து விடுதலை அடைந்தோம். முதன்முதலாக உயிர்த்தெழுந்த ஆண்டவர் சீஷர்களை சந்தித்தபோது ஆணி கடாவப்பட்ட தமது கரத்தை அவர்களுக்கு காட்டி உங்களுக்கு சமாதானம் என்றார். ஏனென்றால் அவர்கள் பயந்துபோய் பூட்டப்பட்ட அறையில் அடைப்பட்டிருந்தனர். அந்த வேளையில் தோமா அங்கு இல்லாததினால் அவரது கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவரது விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். ஆனாலும் ஆண்டவர் தோமாவைத் தேடிவந்தார். அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார் (யோவான் 20:24-29). அவரது காயங்களின் தழும்பைப் பார்த்த சீஷர்கள் பயத்திலிருந்து விடுதலையடைந்தவர்களாக இயேசுகிறிஸ்துவுக்காக தைரியமாக உலகமெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தனர். அந்தக் கரம் அவர்களை நடத்தியது.

பிரியமானவர்களே, பயத்தினாலும் அவிசுவாசத் தினாலும் நிறைந்தவர்களாக சமாதானமின்றி தவிக்கின்றோமா? அவரது கரங்களில் உள்ள காயங்கள் நமது வாழ்க்கையிலுள்ள சகல பயத்தினின்றும் நம்மை விடுதலையாக்கி தேற்றுகிறது. எனவே ஆணி கடாவப்பட்ட அவரது கரத்தை நோக்கிப் பார்ப்போம். அந்த கரம் ஒருபோதும் நம்மை கை விடாது. அவருடைய கரம் இறுதிவரைக்கும் நம்மை வழிநடத்தும்.

4. இயேசு தமது கால்களில் பட்ட காயம்:

சிலுவையில் அறையும்போது அவரது கால்களை உருவக்குத்தினார்கள். இது எவ்வளவு வேதனையான அனுபவமாகும். அவரது கால்களிலிருந்து வடிந்த இரத்தம் நம்மை சாத்தானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறது. தேவன் சர்ப்பத்திடம் “உன் தலையை அவர் நசுக்குவார்” என்று சொன்னார். அந்த வாக்கு கல்வாரியில் நிறைவேறியது. ஆம், நம் ஆண்டவர் நம்மை பாவம், சாபம், ரோகம், வியாதி, பயம் ஆகியவற்றினால் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த சாத்தானை அவரது பாதங்கள் நசுக்கிப்போட்டதினால் நாம் இன்று விடுதலையடைந்தோம். எனவே சாத்தானின்மீது இயேசு சம்பாதித்த வெற்றியை நமது வாழ்க்கையிலும் சுதந்தரித்துக் கொள்வோம். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் (1 யோவான் 3:8).

எனவே, நமக்காக அவரது பாதங்களில் பட்ட காயங்களை நோக்கிப்பார்ப்போம். அவர் சகல சத்துருவின் கட்டுகளிலிருந்தும் நம்மை விடுதலையாக்குவார். எனவே, தலைநசுக்கப்பட்ட சாத்தானை எதிர்த்து நிற்போம். அவன் நம்மைவிட்டு ஓடிப் போவான்.

5. இயேசு தமது விலாவில் பட்ட காயம்:

இறுதியாக, போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது என்று யோவான் 19:34இல் பார்க்கிறோம். ஈட்டியினால் அவருடைய விலா பிளக்கப்பட்டபடியினால் அவர் சரீரத்தில் காயம் உண்டானது. அந்த விலாவிலிருந்த காயத்தின் தழும்பை உயிர்த்தெழுந்த ஆண்டவர் தமது சீஷர்களுக்குக் காட்டினார். தோமாவிடம் அவனது கையை தமது விலாவில் போடும்படி அழைத்தார்.

அன்றைக்கு ஆதாமின் விலாவிலிருந்து எடுத்த எலும்பினாலே ஏவாளை படைத்ததுபோல, ஆண்டவராகிய இயேசு தமது விலாவை பிளப்பதற்கு ஒப்புக்கொடுத்தபடியால் நமக்காக தமது மணவாட்டியாகிய சபையை இவ்வுலகில் படைத்தார். தேவன் தம்முடைய சுயரத்தத்தினால் சம்பாதித்தக்கொண்ட சபை என்று அப்போஸ்தலர் 20: 28இல் வாசிக்கிறோம். அவரது விலாவில் ஏற்பட்ட காயம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே சபைகூடிவருதலை விட்டுவிடாமல் நிலைத்திருப்போம்.

இயேசுகிறிஸ்துவின் பாடு மரணங்களை தியானிக்கும் இந்நாட்களில் நமக்காய் விபரீதங்களைச் சகித்த அவரையே நாம் நினைத்துக்கொள்வோம். ஒருநாளிலே அவரை முகமுகமாய் சந்திப்போம். அந்நாளிலே அவரது காயங்களின் தழும்புகளை முத்தம் செய்யும் பாக்கியத்தைப் பெறுவோம்.